சிறப்பு கட்டுரை
தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

ஒரு நாள்... ஓர் இடம்... ஓர் அனுபவம்!

அறுபத்துமூவர் திருவிழா! எஸ்.கண்ணன்கோபாலன்

வ்வொருநாளும் ஒவ்வொரு விதமான அனுபவம். அது, ஒருவருக்கு மகிழ்ச்சியைத் தரும்; வேறொருவருக்கு கசப்பான அனுபவத்தைத் தரலாம். ஒருவருக்கு நிம்மதியாக இருக்கும்; மற்றவருக்கோ மனக் கொந்தளிப்புடன் செல்லும். இப்படியான பேதங்கள் எதுவுமின்றி, எல்லா தரப்பு மக்களும் ஒரு நாளில்- ஓரிடத்தில் சங்கமித்து சந்தோஷமும் நிம்மதியும் பொங்கும் பேரானந்த அனுபவத்தைப் பெறுவதற்காகவே, ஆலயத்தில் திருவிழாக்களையும், ஆன்மிகம் சார்ந்த பல வைபவங்களையும்  குடும்பம் சார்ந்த பல விழாக்களையும் ஏற்படுத்தித் தந்திருக்கின்றனர் நம் முன்னோர்.

குறிப்பாக, ஆன்மிகம் தொடர்பான விழாக்களும் வைபவங்களும் மக்களுக்குத் தரும் மகிழ்ச்சியைப் போல் வேறெதுவும் இல்லை எனலாம். இத்தகைய விழாக்களால் சிறப்புப்பெற்ற திருத்தலங்கள் பல உண்டு. குறிப்பாக... திருவாரூர்-ஆழித் தேர், மதுரை- மீனாக்ஷி திருக்கல்யாணம், காஞ்சி- கருடசேவை, குலசேகரப் பட்டினம்- தசராப் பெருவிழா, பழநி- பங்குனித் தேரோட்டம், திருப்பதி பிரம்மோத்ஸவம் முதலான பல விழாக்களைச் சொல்லலாம். இந்த வரிசையில், 'கயிலையே மயிலை; மயிலையே கயிலை’ என்று போற்றப்படும் சென்னை- மயிலாப்பூர் ஸ்ரீகபாலீஸ்வரர் அறுபத்துமூவர் திருவிழாவுக்குச் சிறப்பிடம் உண்டு.

இந்தப் பெருவிழாவையே நாம் இப்போது தரிசிக்கப் போகிறோம்.

மார்ச் மாதம் 14-ம் தேதி வெள்ளி அன்று காலை எட்டு மணிக்கெல்லாம் நாம் கோயிலுக்குச் சென்றுவிட்டோம். எங்கு பார்த்தாலும், எந்தத் திசையில் பார்த்தாலும் திரளான மக்கள் கூட்டத்தைக் காணமுடிந்தது.

ஒரு நாள்... ஓர் இடம்... ஓர் அனுபவம்!

அறுபத்துமூவர் விழா, பல சிவாலயங்களில் நடைபெற்றாலும், மயிலையில் நடைபெறும் அறுபத்துமூவர் விழாவுக்கு மட்டும் அப்படி என்ன தனிச்சிறப்பு?

அதைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன் கோயிலுக்குள் ஒருமுறை வலம் வந்துவிடுவோமே!

கிழக்குப் பார்த்து அமைந்திருக்கும் ராஜகோபுரத்தின் வழியாக ஆலயத்துக்குள் செல்கிறோம். முதலில் விநாயகரையும் தொடர்ந்து உண்ணாமலை அம்மன் சமேத, அண்ணாமலையாரையும் தரிசித்துவிட்டு மேற்கு பிராகாரத்துக்கு வருகிறோம். இரண்டு கொடிமரங்களை நாம் பார்க்கிறோம். ஒரு கொடிமரத்தின் எதிரில் அருள்மிகு சிங்கார வேலவர் சந்நிதியும், மற்றொரு கொடிமரத்தின் எதிரில் அருள்மிகு கபாலீஸ்வரர் சந்நிதியும் அமைந்திருப்பதைக் காண்கிறோம்.

முதலில் இங்கே சிங்காரவேலவர் கோயில் மட்டுமே இருந்ததாம். கபாலீஸ்வரர் கோயில் கடலோரத்தில்தான் இருந்ததாம். சில நூறு வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட கடல் கொந்தளிப்பின்போது கோயில் மூழ்கிவிட்டதாகவும், அங்கிருந்த தெய்வ மூர்த்தங்களை எடுத்து வந்து இங்கே பிரதிஷ்டை செய்து கோயில் கட்டியதாகவும் சொல்லப்படுகிறது.

63 நாயன்மார்களில் ஒருவரான வாயிலார் நாயனார் மயிலாப்பூரில் தோன்றியவர். பல்லவர்கள் காலத்தில் கடற்கரைக்கு அருகில் ஆலயம் கட்டப்பட்டதில், வாயிலார் நாயனார் பெரும் துணையாக இருந்திருக் கிறார். அதற்குச் சாட்சியாக கற்பகாம்பிகை சந்நிதிக்கு நேராக அவருடைய திருவுருவம் இருப்பதைத் தரிசிக்கலாம்.

நாம் மேற்குப் பிராகாரத்தில் வலம் வந்துகொண்டிருந்தபோது மேளதாளங்கள் ஒலிப்பதைக் கேட்டு, அந்தத் திசையில் பார்க்கிறோம். அங்கே அலங்கரிக்கப்பட்ட முத்துச் சிவிகையில் ஞானசம்பந்தர் எழுந்தருளி இருப்பதையும், மற்றொரு பல்லக்கில் கூப்பிய கரங்களுடன் சிவநேசச் செட்டியார் இருப்பதையும் காண்கிறோம். பக்கத்திலேயே பட்டுத் துணியால் மூடப் பட்டிருந்த ஒரு பல்லக்கையும் காண்கி றோம். உள்ளே என்ன இருக்கிறது என்று  தெரியவில்லை.

அருகில் இருந்த ஒரு பக்தர், 'அங்கம் பூம்பாவை நிகழ்ச்சி தொடங்கிவிட்டது’ என்கிறார்.

அப்போது காலை 10 மணி இருக்கும். வாத்திய இசையுடன்  ஊர்வலம் தொடங்கியது. நாமும் செல்கிறோம். பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருக்கும் சிவனடியார்கள், ஞானசம்பந்தப் பெருமானின் சிறப்புக்களை முழங்கியபடி பின்தொடர, தெற்குமாடவீதி வழியாக வந்த ஊர்வலம் மேற்குமாடவீதிக்கு வந்து, தெப்பக்குளத்தின் படித்துறையில் அமைந்தி ருக்கும் மண்டபம் ஒன்றை அடைகிறது.

அங்கே, ஞானசம்பந்தரின் விக்கிரகத்தை சிவாச்சார்யர் ஒருவர் எடுத்து திருக்குளத்தில் நீராட்டுகிறார். பின்னர் ஒரு பீடத்தில் வைத்து ஞானசம்பந்தருக்கு விமரிசையாக அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. குன்றக்குடி ஆதீனம் சார்பில் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றதும் முத்துச்சிவிகையில் எழுந்தருளிய ஞானசம்பந்தர் கோயிலுக்குச் சென்று இறைவனைத் தரிசித்துவிட்டு மீண்டும் ஊர்வலமாகக்  குளக்கரை மண்டபத்துக்கு வருகிறார். அவரைத் தொடர்ந்து ஒரு சிவாச்சார்யர் மஞ்சள் துணியால் மூடப்பட்ட பானையை எடுத்து வருகிறார். அதனுள்ளேதான் பூம்பாவையின் அஸ்தி இருப்பதாக ஐதீகம். மண்டபத்தை அடைந்ததும் ஓதுவார் ஒருவர் தம்மை ஞானசம்பந்தராக பாவனை செய்துகொண்டு பூம்பாவையை உயிர்த்தெழச் செய்ய பதிகம் பாடுகிறார்.

மட்டிட்ட புன்னையங்கானல் மடமயிலைக்
கட்டிட்டங்கொண்டான் கபாலீச்சரமமர்ந்தான்
ஒட்டிட்டபண்பினுருத்திர பல்கணத்தார்க்கு
அட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்!
 

என்று தொடங்கும் பதிகத்தைப் பாடத் தொடங்குகிறார். ஒவ்வொரு பாடல் முடிந்ததும் திரிசங்கு முழங்க தீபாராதனை நடைபெறுகிறது. பாராயணப் பலனுடன் 11 பாடல்கள் கொண்ட பதிகம் பாடி முடிந்ததும், பட்டுத் துணியால் மூடப்பட்டிருந்த பல்லக்கின் திரை விலக, அதனுள் சர்வாலங்காரத்துடன் பூம்பாவையின் விக்கிரகம் காட்சி தருகிறது. அப்போது பக்தர்களின் சந்தோஷ ஆரவாரம் விண்ணைத் தொட்டது என்று சொன்னால் அது மிகையல்ல. ஞானசம்பந்தப் பெருமானின் புகழ் பாடியபடி பக்தர்கள் பின்தொடர, ஞானசம்பந்தர், சிவநேசர், பூம்பாவை ஆகியோர் திருக்கோயிலுக்கு எழுந்தருளுகின்றனர்.

ஒரு நாள்... ஓர் இடம்... ஓர் அனுபவம்!

இத்துடன் அங்கம்பூம்பாவை நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது. இனி பிற்பகல் மூன்றுமணி அளவில்தான் அறுபத்துமூவர் திருவிழா தொடங்க இருப்பதாகத் தெரியவரவே, மயிலாப்பூரைச் சுற்றிப்பார்த்தோம்.

அட்டிட்டல் விழா என்று சம்பந்தப் பெருமான் பாடியது சற்றும் மிகையல்ல என்று நிரூபிப்பதுபோல், பத்தடிக்கு ஒன்றாக அன்னதானப் பந்தல் அமைக்கப் பட்டு அன்னதானம் நடைபெற்றதைக் காணமுடிந்தது. கோயிலைச் சுற்றிதான் என்று இல்லாமல், கிழக்கே திருவல்லிக்கேணி, வடக்கே ராயப்பேட்டை,தெற்கே மந்தைவெளி, மேற்கே தேனாம்பேட்டை என்று பல இடங்களில் அன்னதானமும், பானகம், நீர்மோர், குளிர்பானங்கள், இனிப்பு வகைகள், சாக்லேட் என இன்னதுதான் என்று இல்லாமல் பலவகையான தானங்கள் நடைபெற்றதையும், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் சந்தோஷமாகச் சுற்றிவந்ததையும் காணும்போது, திருவிழாக்களின் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் நம்மால் நன்றாகப் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால், பக்தர்கள் சாப்பிட்ட தட்டுகளையும், பேப்பர் கப்புகளையும் சாலையிலேயே போட்டுச் செல்லவே, மயிலாப்பூரைச் சுற்றியிருந்த சாலைகள் மட்டுமல்லாமல், சுவாமி ஊர்வலம் வரும் மாடவீதிகள்கூட சகதியாக மாறி காலை வைக்கவே கூசியது. பக்தர்கள் இதைத் தவிர்த்திருக்கலாம்.

பிற்பகல் மணி இரண்டுக்கு மேல் ஆகிவிடவே திரும்பவும் கோயிலுக்குச் செல்கிறோம். செல்லும் வழியில், பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பாக ஓர் அன்னதானப் பந்தல் அமைக்கப்பட்டு அன்னதானம் நடைபெற்றதையும் கண்டோம். அதேபோல அறுபத்துமூவர் விழாவினைத் தரிசிக்கவரும் அன்பர்கள் தங்கள் சட்டைப் பையிலும் மணிபர்ஸிலும் வைத்துக்கொள்ளும் வகையில் மதுரை ஸ்ரீமீனாட்சி, முருகப்பெருமான் திருவுருவப் படங்கள் சக்திவிகடன் சார்பாக ஆங்காங்கே வழங்கப்பட்டுக்கொண்டிருந்தன.

நாம் கோயில் வாசலை அடையவும் விழா தொடங்கவும் சரியாக இருந்தது. முதலில் கோயிலுக்கு முன்னால் உள்ள மண்டபத்துக்கு வருகிறார் விநாயகப் பெருமான். அவருக்கு தீபாராதனை நடைபெறுகிறது.

தொடர்ந்து, வெள்ளி விமானத்தில் பல்வகை வாத்தியங்கள் முழங்க மண்டபத்துக்கு விஜயம் செய்கிறார் ஸ்ரீகபாலீஸ்வரர். அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்களின், 'தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!’ என்ற முழக்கமானது நானாதிசைகளிலும் எதிரொலித்து கயிலையே மயிலைக்கு இடம்பெயர்ந்து விட்டதோ என்று நினைக்கும்படி செய்துவிட்டது.

கபாலீஸ்வரரைத் தொடர்ந்து கற்பகாம்பிகையும் முருகப்பெருமானும் மண்டபத்துக்கு எழுந்தருளுகின்றனர்.

ஒரு நாள்... ஓர் இடம்... ஓர் அனுபவம்!

தொடர்ந்து சமயக் குரவர்கள் நால்வரும் தனித்தனி பல்லக்குகளிலும், நாயன்மார்கள் ஒவ்வொரு பல்லக்குக்கும் மூவர் அல்லது நால்வராக அவரவர் திருப்பெயர்களுடன் எழுந்தருளி, கபாலீஸ்வரை வலம் வந்து தீபாராதனையை ஏற்று, முன்னே செல்கின்றனர். அதேநேரத்தில் கோலவிழிஅம்மன், வாலீஸ்வரர் போன்ற கோயில்களில் இருந்தும் தெய்வ மூர்த்தங்கள் விழாவில் பங்கேற்க விஜயம் செய்கின்றனர்.

கிராமதேவதை என்பதால், கோலவிழி அம்மனுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. இங்கு ஸ்ரீகபாலீஸ்வரர் கோயிலில் உற்ஸவம் தொடங்குவதற்கு முன்னதாக, கோலவிழி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது தொன்றுதொட்டு வரும் மரபு என்கிறார்கள்.

மாலை 4 மணியளவில், அறுபத்துமூவர் ஊர்வலம் தொடங்குகிறது. எங்கெங்கு பார்த் தாலும் திரள்திரளான மக்கள் கூட்டம். பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடும் விழா என்பதால், கோயிலைச் சுற்றிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. பக்தர்கள் தங்கள் குழந்தைகளையும், நகைகளையும், உடைமை களையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும்படி காவல்துறையினர் ஒலிபெருக்கியின் மூலம் எச்சரித்துக்கொண்டே இருந்தனர். பக்தர்கள் யாரேனும் காணாமல் போனால், தகவல் தெரிந் ததுமே ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்ததும்,  கிடைத்துவிட்டால், அதை நன்றியுடன் தெரிவித்ததும் பக்தர்களால் போற்றப்பட்டது.

இதோ... அறுபத்துமூவர் ஊர்வலம் கிழக்கு மாடவீதியும் தெற்குமாடவீதியும் சந்திக்கும் இடத்தை நெருங்குகிறது. சித்திரக்குளத்தைச் சுற்றியிருக்கும் வீடுகளும் தெருக்களும் மக்கள் கூட்டம்தான்.

முதல் பந்தலில், முதலாவதாக கோலவிழி அம்மன் எழுந்தருளுகிறாள். தீபாராதனையைத் தரிசிக்க பக்தர்கள் நெருக்குகின்றனர். காவல் துறையினர் பக்குவமாக அவர்களைக் கட்டுப் படுத்துகின்றனர். பக்தர்கள் தங்களுடைய குழந்தைகளை அம்மனின் மடியில் வைத்துத் தரும்படி கேட்க குருக்களும் சளைக்காமல் சலிக்காமல் குழந்தைகளை வாங்கி கோலவிழி அம்மன் மடியில் வைத்துத் தருகின்றனர். நூற்றுக்கணக்கான பக்தர்கள் இப்படிக் கேட்ட தால் ஒரு பந்தலைவிட்டு புறப்பட, அரைமணி நேரத்துக்கும் மேல் ஆனது.

கோலவிழிஅம்மனைத் தொடர்ந்து விநாயகரும், அடுத்து சமயக்குரவர்கள் நால்வரும், தொடர்ந்து நாயன்மார்களும் வருகின்றனர்.

நால்வரும் நாயன்மார்களும், செல்லும் வழி நோக்காமல்  தொடர்ந்துவரும் கபாலீஸ்வரரை நோக்கியபடி செல்கின்றனர். அவர்களைத் தொடர்ந்து ஸ்ரீகபாலீஸ்வரர், ஸ்ரீகற்பகாம்பாள்,  முருகப்பெருமான் ஆகியோர் வருகின்றனர். சுமார் 5 மணிக்குத் தொடங்கிய ஊர்வலம் நான்கு மாடவீதிகளையும் வலம்வந்து திரும்பவும் கோயிலை அடைய இரவு 10 மணிக்கு மேல் ஆகிவிட்டது.

சரி... மயிலையில் நடைபெறும் அறுபத்துமூவர் திருவிழாவுக்கு மட்டும் தனிச்சிறப்பு எதற்காக?

அறுபத்துமூவர் விழா என்பது சித்தமெல்லாம் சிவமே நிறைந்திருக்க, சிவத்தொண்டிலேயே தங்களை ஈடுபடுத்திக் கொண்டு அதன்பொருட்டு பல சோதனைகளுக்கு ஆட்பட்டு, நிறைவில் சிவபெருமானின் அருள் பெற்ற சிவத்தொண்டர்களுக்கான விழா அல்லவா?

திருத்தொண்டர்களின் பெருமை இறைவனை விடவும் பெரிது என்று அந்தச் சிவப் பரம் பொருளுக்கே அன்னை உணர்த்திய அற்புதம் நிகழ்ந்த திருத்தலம் மயிலாப்பூர்.

அந்தச் சம்பவத்தைப் பார்ப்போமா?

கயிலையில் ஒருநாள் சிவபெருமான் அன்னை உமையவளுக்கு வேதப் பொருளை விளக்கிக்

கொண்டிருந்தார். அந்தவேளையில் அழகான மயில் ஒன்று, அன்னையின் எதிரில் வந்து தோகை விரித்து ஆடியது. அதன் ஆட்டம், ஜகன்மாதாவின் சிந்தையைச் சிதறச் செய்தது. மயூரத்தின் ஆட்டத்தில் லயித்துப்போனாள்.

சிவபிரான் சினம் கொண்டார். ''தேவி, நான் வேதப்பொருள் பற்றி கூறுகையில் நீ மயிலின் ஆட்டத்தை ரசிக்கிறாயே'' என்று கேட்கிறார். அதற்கு இறைவி, ''மயில், நம் குழந்தை முருகனின் வாகனம் அல்லவா? முருகனுக்குத் தொண்டு செய்கிறது அல்லவா? அதைப் பார்த்ததுமே எனக்கு முருகனின் நினைவு வந்துவிட்டது.அதனால்தான் நான் மயிலைப் பார்த்துக் கொண்டிருந்தேன்’ என்று கூறினாள்.  

'அப்படியானால் என்னை விடவும் அந்த மயில் உனக்கு உயர்வா கத் தெரிகிறதா?’ என்று ஈசன் கேட்டார்.

ஒரு நாள்... ஓர் இடம்... ஓர் அனுபவம்!

'சுவாமி! தொண்டர்கள்தான் பெரியவர்கள் என்பது சத்தியம் அல்லவா?’ - இது இறைவியின் கேள்வி.

'அதை உன்னால் நிரூபிக்க முடியுமா?’

'முடியும்!’

'எப்போது?’

'இதோ, இப்போதே’

உடனே அன்னை உமையவள், எந்த மயிலின் காரணமாக இந்த விவாதம் தொடங்கியதோ அந்த மயிலின் வடிவம் கொண்டு இதோ இப்போது நாம் தரிசித்துக் கொண்டிருக்கும் தலத்தை அடைகிறாள்.

தேவி மயிலாக உலவிக் கொண்டிருக்கும் அந்த மயிலாப்பூரிலேயே இறைவியின் பிரிவைத் தாங்கமாட்டாமல் ஈசனும் அங்கிருந்த புன்னைமரத்தின் அடியில் லிங்க வடிவில் எழுந்தருளுகிறார்.

அவருக்கு பூஜை செய்து நைவேத்தியம் செய்ய அங்கு யாரும் இல்லையே! தொண்டர்கள் இல்லாமல் ஈசன் தவித்திருப்பது கண்டு மயில் உருவம் கொண்டிருந்த அன்னை, அருகில் இருந்த பொய்கையில் நீராடி, தன் அலகினால் மலர்களையும் கனிகளையும் எடுத்துவந்து சிவலிங்கத்திற்கு அர்ப்பணிக்கிறாள். அன்னையின் தொண்டில் மகிழ்ந்த சிவபெருமான் அன்னைக்குத் தரிசனம் தந்தார். அன்னை சுய உருவம் ஏற்றாள்.

'தேவி! தொண்டர்களின் பெருமையை உலகத்தவர் உணர்ந்திடவே நாம் இந்த நாடகத்தை நடத்தினோம். உனக்கு என்ன வரம்வேண்டுமோ கேள்’ என்றார். கருணையே வடிவானவள் அல்லவா இறைவி!

'ஐயனே! தொண்டர்தம் பெருமையை உலகறியச் செய்ய தாங்கள் எழுந்தருளிய இத்தலத்திலேயே தங்கள் சாந்நித்யம் நிலைத்திருக்க வேண்டும்.’ என வேண்டினாள். அப்படியே வரம் தந்த சிவபெருமான், 'தேவி! நீயும் இங்கே வேண்டுவோர்க்கு வேண்டுவன எல்லாம் தரும் கற்பகமாக நிலைத்திருப்பாயாக'' என அருளினார். இன்றளவும் இங்கே இருந்தபடி அருளிக் கொண்டிருக்கிறார்.

மயிலையின் தலவரலாறே தொண்டர்தம் பெருமையை உலகத்தவர்க்கு உணர்த்தியதன் காரணமாகத்தான், மயிலையில் அறுபத்துமூவர் விழா தனிச்சிறப்பு பெறுகிறது.

மனம்குளிர இறைவனின் தரிசனமும் வயிறுகுளிர அறுசுவை உணவும் கிடைத்த சந்தோஷமானது பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் முகங்களில் பளிச்சிட்டதை அந்த இரவுப் பொழுதிலும் நம்மால் தெரிந்துகொள்ள முடிந்தது. காலைமுதல் இரவுவரை மயிலாப்பூரிலேயே சுற்றி வலம் வந்துகொண்டிருந்த நமக்கும்கூட, சோர்வும் களைப்பும் சற்றும் தெரியாதிருந்தது, வியப்புதான்!

அறுபத்துமூவர் விழாவைத் தரிசிக்கச் சென்ற அந்த ஒருநாள் நமக்கு மட்டுமல்ல, பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கும் சந்தோஷத்துடன் இறைவனின் அருளையும் சேர்த்து வழங்கிய திருநாள் என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை.

படங்கள்: வீ.நாகமணி, சொ.பாலசுப்ரமணியன்