சிறப்பு கட்டுரை
தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

பாபா விரும்பிய ராமர் காசு..!

திவ்ய தரிசனம்... பிரேமா நாராயணன்

ஒரு கப்னியும் வேட்டியும் தவிர, வேறு எதையுமே தனக்கென வைத்துக்கொள்ளாத எளிமையும் பேரருளும் கொண்ட மகான் ஸ்ரீஷீர்டிசாயிபாபா. ஆனால், அவர் ஆசை ஆசையாக, மிகுந்த பிரியத்துடனும் பக்தியுடனும் தன் சட்டைப் பைக்குள் ஒரு பொருளைப் பத்திரப்படுத்தி வைத்திருந்தார் என்றால், நம்ப முடிகிறதா? ஆம்... அப்படி அவர் பத்திரப்படுத்தி வைத்திருந்தது ஒரு செப்பு நாணயம்.

அது சாதாரண நாணயமல்ல! நாணயத்தின் ஒருபக்கம் ஸ்ரீராமர், ஸ்ரீசீதாதேவி மற்றும் ஸ்ரீலட்சுமணர் ஆகியோரின் திருவுருவங்களும், மற்றொரு பக்கம் ஸ்ரீஆஞ்சநேயரின் திருவுருவமும் பொறிக்கப்பட்டிருந்த அபூர்வ நாணயம்.

இதுகுறித்த தகவல்கள், ஸ்ரீசாயி ராமாயணம் என அழைக்கப்படும் சாயி சரிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

பாபாவின் மீது அளவற்ற பிரேமை கொண்ட வாமன் ராவ் நார்வேகர் என்ற பக்தர், பாபாவுக்கு பக்தியுடன் அர்ப்பணம் செய்வதற்காக, அழகான செப்பு நாணயம் ஒன்றைக் கொண்டுவந்தார். அந்த நாணயத்தில்தான் ஸ்ரீராமர், ஸ்ரீலட்சுமணர், ஸ்ரீசீதை, ஸ்ரீஆஞ்சநேயர் ஆகியோரின் திருவுருவங்கள் பொறிக்கப்பட்டிருந்தன.

பாபா விரும்பிய ராமர் காசு..!

பாபாவின் திருக்கரத்தால் தொடப்பட்டு, 'உதீ’ பிரசாதத் துடன் அதைத் திரும்பப் பெறவேண்டும் என்கிற நோக்கத்திலேயே அந்த பக்தர் அந்த நாணயத்தை பாபாவுக்கு அர்ப்பணம் செய்தார். ஆயினும், நாணயம் கையில் விழுந்ததுமே அதைத் தன் அங்கியில் இருந்த (கப்னி) பாக்கெட்டில் போட்டுக்கொண்டார் பாபா.  

ஸ்ரீசாயிநாதனின் அன்புத் தொண்டரான ஷாமா என்ற மாதவராவ் தேஷ்பாண்டே, வாமன்ராவின் விருப்பத்தை பாபாவிடம் தெரிவித்து, நாணயத்தைத் திருப்பிக் கொடுத்துவிடும்படி வேண்டினார். ''ஏன் திருப்பிக் கொடுக்கவேண்டும்? இதை நாமே வைத்துக்கொள்வோம்!'' என்று தீர்மானமாக மறுத்துச் சொல்லிவிட்டார் பாபா. பாபாவின் கை பட்ட அந்த நாணயத்தை மீண்டும் பெறுவதில் முனைப்பாக இருந்தார் வாமன்ராவ்.

''சரி, அவர் இதற்கு விலையாக ரூ.25/- கொடுப்பாரானால், நான் இந்த நாணயத்தைத் திரும்பத் தருகிறேன்'' என்றார் பாபா (அந்தக் காலத்தில் ரூ.25 என்பது, கிட்டத்தட்ட இப்போதைய 25 சவரனுக்குச் சமம்). உடனே வாமன்ராவ் விரைந்து சென்று, பல இடங்களிலிருந்தும் கடனோ உடனோ வாங்கி, எப்படியோ சேகரித்துக்கொண்டு வந்து ரூ.25/-ஐ பாபாவிடம் கொடுத்தார்.

ஆனாலும் பாபா, ''மூட்டை மூட்டையாக ரூபாயைக் கொண்டுவந்து கொடுத்தாலும், இந்த ஒரு நாணயத்துக்கு ஈடாகாது. அவற்றின் மதிப்பு இந்த நாணயத்தின் மதிப்பைவிட மிக மிகக் குறைவே!'' என்று சொல்லி, வாமன்ராவிடமிருந்து வாங்கிய ரூ.25/-ஐயும் தன் பாக்கெட்டில் போட்டுக்கொண்டார். பிறகு ஷாமாவிடம் அந்த அபூர்வ நாணயத்தைக் கொடுத்து, ''இது இனி உன் சேகரிப்பில் இருக்கட்டும். இதைப் பூஜையறையில் வைத்து தினமும் வழிபடு!'' என்றார்.

எதற்கும் ஆசைப்படாத பகவானே மிகவும் விரும்பி, ''இதை நாமே வைத்துக்கொள்வோம். இதை பூஜையறையில் வைத்து தினமும் வழிபடு!'' என்று கூறி, ஷாமாவிடம் அளித்த அந்த நாணயம், பாபாவின் மறைவுக்குப் பிறகு, ஷாமாவின் பாதுகாப்பில்தான் பல காலம் இருந்தது. ஷாமாவின் மறைவுக்குப் பின்னர், அவரின் ஒரே மகன் உத்தவ் ராவ், அந்த நாணயத்துக்கு தினசரி பூஜை செய்து வந்தார். அவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி இறந்துவிட்டார். இரண்டாவது மனைவி குஸும் தற்போது ஷீர்டியில் வசித்துவருகிறார். இவர்தான் அந்த நாணயத்தை பெட்டகத்தில் வைத்துப் பாதுகாத்து வருகிறார். தவிர, பாபா ஷாமாவுக்கு அளித்த பிள்ளையார் விக்கிரகம் ஒன்றும் இவருடைய பாதுகாப்பில் இருக்கிறது. ஷோலாப்பூரிலிருந்து வந்த பக்தர் ஒருவர் பாபாவுக்கு வழங்கிய விக்கிரகம் அது.

பாபா விரும்பிய ராமர் காசு..!

பாபா மறைந்து இந்த 96 ஆண்டுகளில் ஷாமா குடும்பத்தாரைத் தவிர, வெளியுலகில் யாருமே அந்த நாணயத்தைப் பார்த்ததில்லை. உத்தவ்ராவுக்குப் பிறகு பூஜைகளும் செய்யப்படவில்லை. பாபாவின் கை பட்ட பெருமைக்குரிய அந்த நாணயமும், பாபா பூஜை செய்த அந்தப் பிள்ளையார் விக்கிரகமும், சென்னை தி.நகரில் இயங்கி வரும் 'ஸ்ரீஷீர்டி சாயிபாபா பிரார்த்தனை மையத்துக்கு’ அண்மையில் எடுத்து வரப்பட்டன.

தி.நகர் மையத்தின் நிர்வாக அறங்காவலரும், ஓய்வுபெற்ற பேராசிரியருமான திருவள்ளுவன் நெகிழ்ச்சியுடன் பேசத் துவங்கினார்...

''12 ஆண்டுகளாக பாபா என் வாழ்வில் இரண்டறக் கலந்து, பல்வேறு உயர்வுகளையும் முன்னேற்றங்களையும் எனக்கு அருளி வருகிறார். இந்த 12 ஆண்டுகளில் சாயி அருளால் நான் 60 தடவை ஷீர்டி போயிருக்கிறேன். பலப்பல முறை அவரின் சத்சரிதம் படித்திருக்கிறேன். அந்த நாணயத்தைப் பற்றியும், விநாயகரைப் பற்றியும் படித்திருந்தாலும், கடந்த வருடம்தான் திடீரென அந்த யோசனை தோன்றியது. பாபாவின் அருள் கடாட்சம் பெற்ற அந்த இரண்டையும் நமது பிரார்த்தனை மையத்துக்கு ஒரே ஒரு நாள் மட்டும் எடுத்து வந்து பூஜை செய்தால் என்ன என்று பெரு விருப்பம் எழுந்தது. அதுவும் பாபாவின் வேலை, விருப்பம் என்பதாகவே நினைக்கிறேன்.

அதன்பின் ஒருநாள், நானும் சாயி அன்பர் ஒருவருமாக ஷீர்டியில், குஸும் அம்மா வீட்டுக்குப் போனோம். உத்தவ் ராவின் நண்பர் கோபிதான் எங்களை அவரிடம் அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தி வைத்தார். அந்த அம்மாவிடம் நமது தியான மையத்தைப் பற்றிக் கூறி, ஒரே ஒரு நாள் மட்டும் பூஜைக்கு அந்தப் பிள்ளையார் விக்கிரகத்தைத் தந்து உதவ முடியுமா என்று கேட்டேன். அந்தப் பிள்ளையார் விக்கிரகம் இதற்கு முன் ஒரு முறை விசாகப்பட்டினம் எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது.

அந்த அம்மா பிள்ளையாருடன் ஓரிடத்தில் பத்திரமாக வைத்திருந்த அந்த  நாணயத்தையும் எடுத்து வந்து எங்களிடம் தந்தார். இதற்கு முன் பலர் விரும்பிக் கேட்டும், அந்த நாணயத்தை அவர் யாரிடமும் காண்பித்ததுகூட இல்லையாம். அவ்வளவு ஏன்... ''இங்கே 25 வருடங்களாக வந்து போய்க்கொண்டிருக்கிறேன். ஆனால், நானே இதுவரை இந்த நாணயத்தைப் பார்த்தது இல்லை. இப்போதுதான் முதன் முதலாகப் பார்க்கிறேன்!'' என்று, உத்தவ் ராவின் நண்பர் கோபியே ஆச்சர்யத்தில் மெய்ம்மறந்தார். பாபாவே தன் கையால் வாங்கி, மிகுந்த விருப்பத்துடன் தன் பையில் போட்டுக்கொண்ட பேறு பெற்ற அந்தப் புனிதமிகு நாணயத்தைக் கையில் வாங்கியதும், பரவசத்தில் எங்களுக்கு வார்த்தைகளே வரவில்லை. கண்கள் நிறைந்து, நெஞ்சம் ஆனந்தத்தில் நெகிழ்ந்தது.

பாபா விரும்பிய ராமர் காசு..!

பிறகு, அந்த விநாயகரையும் நாணயத்தையும் நம் பிரார்த்தனை மையத்துக்கு குஸும் அம்மையாரே எடுத்து வந்தார். அவற்றுடன், பாபா புகை பிடிக்கும் குழல் (சிலிம்), ஷாமாவுக்கு பாபா கொடுத்த அவரது வேஷ்டி (பாலகங்காதர திலகர் பாபாவுக்குக் கொடுத்த வேஷ்டி அது) போன்றவற்றையும் எடுத்துவந்தார்.

கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டுக்குப் பிறகு, முதன்முறையாக அந்த நாணயத்துக்குப் பூஜை செய்யும் பாக்கியம் எங்களுக்குக் கிடைத்தது. இது பாபாவின் ஆசிர்வாதம் இல்லாமல் வேறு எதுவும் இல்லை.

கடந்த ஜனவரி 19 அன்று, நம் தி.நகர் பிரார்த்தனை மையத்துக்கு வந்த அவை இரண்டுக்கும் முறைப்படி பூஜைகள் செய்து வழிபட்டோம். பின்னர் அவற்றை சாயி பக்தர்களின் தரிசனத்துக்காக அருகிலிருந்த பள்ளி மைதானத்தில் வைத்திருந்தோம். அநேகம் பேர் வந்து தரிசித்து, பாபாவின் அருளையும் ஆசியையும் பெற்றுச் சென்றார்கள். மீண்டும் அவற்றை அந்த அம்மையார் எடுத்துச் சென்று, பாதுகாப்புப் பெட்டகத்தில் வைத்துவிட்டார்.

'இதை பூஜை அறையில் வைத்து தினமும் வழிபடு என்று பாபாவே கூறிய அந்தப் புனித நாணயத்தை நாம் தினமும் பூஜித்தால் என்ன?’ என்று தோன்றவே, மீண்டும் ஷீர்டி சென்று, அவர்களிடம் முறைப்படி அனுமதி பெற்று, அந்த நாணயத்தைப் புகைப்படம் எடுத்து வந்தோம். எப்படி பாபாவின் புகைப்படத்தை வைத்து பூஜைகள் செய்து வணங்குகிறோமோ, அதேபோல அந்த நாணயத்தின் புகைப்படத்தை நம் பிரார்த்தனை மையத்தில் வைத்து, பாபா சொன்னதுபோலவே நித்திய பூஜைகள் செய்யப் போகிறோம்.

வரும் ஏப்ரல் 8-ம் தேதி, ஸ்ரீராமநவமி நாளில், இந்த பூஜையைத் தொடங்க உள்ளோம். அன்று முழுதும் தி.நகர் சரோஜினி தெருவில் உள்ள எங்கள் மையம் திறந்திருக்கும். பக்தர்கள் வந்து, பூஜையில் கலந்துகொண்டு, ஸ்ரீசாயிநாதனின் அருளைப் பெறவேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள்!'' என்று தெரிவித்தார் திருவள்ளுவன்.

பாபா விரும்பிய ராமர் காசு..!

ஸ்ரீஷீர்டி சாயிபாபா பிரார்த்தனை மையம்

சென்னை, தி.நகர் வாசன் தெருவில், ஒரு வீட்டின் சிறிய அறையில் 11 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த மையம், தற்போது 6, சரோஜினி தெருவில் இயங்கி வருகிறது. இங்கே, சாஸ்திர சம்பிரதாயம் ஏதுமின்றி, முழுக்க முழுக்க ஆத்ம நிவேதனத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுகிறது. தினமும் காலையில், பக்தர்கள் தங்களின் கர்மாக்களை மனத்தாலேயே தீயிலிட்டு எரிக்கும் 'துனி பூஜை’ நடைபெறுகிறது. 'லோகா சமஸ்தா சுகினோ பவந்து’ (உலகத்தில் எல்லோரும் நன்றாக இருக்கவேண்டும்) என்ற மந்திரம்தான் இங்கே ஒலிக்கிறது. எப்போதும் பூரண அமைதி நிலவும் இந்த மையத்தில், பக்தர்கள் தங்களுக்குக் கிடைத்திருக்கும் நல்ல விஷயங்களுக்காக பாபாவுக்கு நன்றி கூறுதல், தங்கள் பாவங்களுக்கு மன்னிப்பு கேட்டல், அடுத்தவருக்காகப் பிரார்த்தித்தல், தங்களின் வேண்டுதல்களை பாபாவிடம் சமர்ப்பித்தல் என நான்கு நிலைகளில் பிரார்த்தனை செய்கின்றனர்.

இங்கே இன்னொரு சிறப்பம்சம்... தினமும் மூன்று வேளையும் நடைபெறும் கூட்டுப் பிரார்த்தனை. அன்பர்கள் தங்கள் பிரச்னைகளையும் இன்னல்களையும் 'ஸ்ரீ சாயி நாமம்’ எழுதப்பட்ட சங்கல்ப படிவத்தில் எழுதி, அவர் பாதங்களில் சமர்ப்பித்துவிட வேண்டும். கூட்டுப் பிரார்த்தனை நேரத்தில் அவை வாசிக்கப்பட்டு, அனைவரும் அவர்களுக்காகப் பிரார்த்திக்கின்றனர். இந்தக் கூட்டுப் பிரார்த்தனை மூலமாக எத்தனையோ அதிசயங்கள் தினமும் நடைபெறுவதாக, அனுபவபூர்வமாக உணர்ந்த பக்தர்கள் கூறுகின்றனர். உலக க்ஷேமம், உடல் நலமின்மை, தீராத நோய்கள், வேலை, விவாகம், குழந்தை பாக்கியம், கடன் தொல்லை எனப் பல பிரச்னைகளுக்காகவும் இங்கே அனுதினமும் கூட்டுப் பிரார்த்தனை நடைபெறுகிறது.

மேலும், இந்த மையத்தின் மூலம் ஏழை மாணவர்களுக்குக் கல்வி உதவி, முதிய பக்தர்களை ஷீர்டிக்கு அழைத்துச் செல்லுதல், ஊனமுற்றோருக்கு உதவி, அன்னதானம் போன்ற பல நற்காரியங்களைத் தொடர்ந்து நடத்திவருகின்றனர். இதற்காக இவர்கள் யாரிடமும் ஒரு பைசாகூட நன்கொடையோ கட்டணமோ வசூலிப்பது கிடையாது.

ஆய்வு தந்த பக்தி!

ச்சையப்பன் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற திருவள்ளுவன், 2002-ல் தன் பிஹெச்.டி. பட்ட ஆய்வுக்காக எடுத்துக்கொண்ட தலைப்பு 'பயோகிராஃபி ஆஃப் சாயி’ என்பது. அதற்கான தகவல்கள், புத்தகங்கள் மற்றும் படங்களைத் திரட்டுவதற்காக ஷீர்டி சென்ற அவருக்குப் பல சிலிர்ப்பான அனுபவங்கள் ஏற்பட, அன்று முதல் அவருக்கு சாயிபாபா மேல் அதீத பக்தியும் நம்பிக்கையும் உண்டாக, 'சாயியே வாழ்வு’ என்றாகிவிட்டது.