லக அளவில் இரண்டே இரண்டு குறியீடுகள் மட்டுமே அதிக அளவில் பேசப்பட்டுள்ளன.  ஒன்று யானை; மற்றொன்று தாமரை. இலக்கியம், காப்பியம், புராணம், இதிகாசம், கல்வெட்டு, ஓவியம் எனப் பல்வேறு வகைகளிலும் இந்த இரண்டும் அதிக அளவில் இடம்பெற்றிருக்கின்றன.

பாடல் சொல்லும் பாடம்!

அழகு, அசைவு, கம்பீரம், பிரமாண்டம், பலம் எனப் பன்முக ஆற்றல் கொண்ட யானையிடம் தன் மனத்தைப் பறிகொடுக்காதவரும் உண்டா?!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெள்ளுதமிழ்ப் பாடல்களால் நம் மனத்தையெல்லாம் கொள்ளை கொண்ட அடியவர் ஒருவரும் யானையிடம் தன் மனத்தைப் பறிகொடுத்தார். அது மட்டுமல்ல... அந்த யானையைக் கட்டிப்போடவும் ஆசை உண்டானது அவருக்கு.

என்ன ஐயா இது? யானையைக் கட்டிப்போடுவது என்பது எளிதான காரியமா?

ஒரு பெரிய கூடம். அதில் பலம் வாய்ந்த தூண். அந்தத் தூணில் கனமான சங்கிலியால் யானையைக் கட்டிப்போட வேண்டும். பின்பு அந்த யானைக்குக் கரும்பு, அரிசி, வெல்லம் எனப் பலவிதமாகவும் உணவு போட வேண்டும். யானை கட்டித் தீனி போடுவது என்றால் சும்மாவா? அப்பப்பா... நினைக்கும்போதே மூச்சு வாங்குகிறது இல்லையா?!

சாதாரண யானையைக் கட்டிப்போடுவதே இவ்வளவு அசாதாரணமானது எனில், அடியவர் வசப்படுத்த ஆசைப்பட்டதோ, அதி வல்லமை பொருந்திய ஒரு யானையை!

அந்த யானையை வசப்படுத்த ஓர் அருமையான வழியையும் சொல்லிக்கொடுத்துவிட்டார் அவர்.

உள்ளம் என்னும் கூடத்தில்
ஊக்கம் எனும் தறி நிறுவி உறுதியாகத்
தள்ளரிய அன்பென்னும் தொடர்பூட்டி
இடைப்படுத்தித் தறுகண் பாசக்
கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக்
களித்துண்டு கருணை என்னும்
வெள்ளமதம் பொழி சித்தி வேழத்தை
நினைத்து வருவினைகள் தீர்ப்பாம்

கருத்து: உள்ளம் எனும் கூடத்தில், ஊக்கம் எனும் தூணை நட்டு, அதில் நீங்காத பக்தி எனும் சங்கிலியால், யானைமுகக் கடவுளைக் கட்ட வேண்டும். அவரிடம் நம் வினைகளைச் செம்மையாகச் சமர்ப்பிக்க வேண்டும். அதை ஏற்று, கஜமுகனார் கருணை என்னும் வெள்ளத்தைப் பொழிவார். அப்படிப்பட்ட விநாயகரை நினைத்து நாம் நல்வாழ்வை அடையலாம்.

பாடல் சொல்லும் பாடம்!

ஆமாம்! அந்த அடியவர் கட்ட நினைத்த அதிவல்லமையான அந்த யானை, பிள்ளையார் பெருமான்தான். அவரை பக்தி எனும் சங்கிலியால் கட்டும் முறையை இவ்வளவு அழகாக, எளிமையாகச் சொல்லித் தரும் அந்த அடியவர் பரஞ்சோதியார்.

இன்னும் ஆழ்ந்து நோக்கினால், இப்பாடலின் உள்ளார்ந்த தத்துவப் போதனைகள் நன்கு வெளிப்படும்.

இந்தப் பாடலில்... அசையாதது, அதாவது நிலையானது - உள்ளம் (கூடம்) மற்றும் ஊக்கம் (தூண்).

அடுத்தது அசையும்; ஆனால், அறுக்காது; பலவிதமான இணைப்புகள் கொண்டது - அன்பு (சங்கிலி).

அதாவது, உள்ளத்தைக் கூடமாகவும், ஊக்கத்தைத் தூணாகவும் சொல்கிறார். உள்ளம் அலைபாயவே கூடாது; ஊக்கமும் ஸ்திரமாக இருக்க வேண்டும். 'ஆறு வாரம் வர்றேன்னு  வேண்டிக்கிட்டேன். மூணு வாரம் ஆச்சு! இன்னும் என் வேண்டுதல் எதுவும் பலிக்கக் காணோம்’ என்று சலித்துக்கொள்ளக் கூடாது.

அடுத்து, அன்பைச் சங்கிலியாகச் சொன்னதில் ஆழ்ந்த பொருள் உண்டு. சங்கிலி எப்படிப் பலவிதமான இணைப்புகளோடு கூடி, பலம் வாய்ந்ததாக அமைந்து, யானையைக் கட்டிப் போடுகிறதோ, அதுபோன்று அர்ச்சனை, துதிப்பாடல்கள், விரதம் எனப் பலவிதமான வழிமுறைகளால் விநாயகரை நாம் அன்போடும் பக்தியோடும் வழிபட, அவர் நம் வசப்படுவார். அத்துடன், பாச- மயக்க உணர்வுகளை முழுமையாக அவரிடத்தில் சமர்ப்பித்துவிட வேண்டும் (போத - செவ்வையாக).

பாடல் சொல்லும் பாடம்!

இங்கே, இன்னொரு விஷயத்தையும் கவனிக்கவேண்டும். பிள்ளையாரை அன்புச் சங்கிலியால் வசப்படுத்த வேண்டுமே தவிர, அவரிடம் ஆசைச் சங்கிலியை நீட்டக்கூடாது. அதாவது, 'அதைக் கொடு! இதைக் கொடு!’ என்று ஆசைச் சங்கிலியை நீட்டக்கூடாது. அருணகிரிநாதரும் 'ஆசா நிகளம்’ என ஓரிடத்தில் குறிப்பிடுகிறார். அன்புச் சங்கிலியால் கட்டவேண்டிய இறைவனை, ஆசைச் சங்கிலியால் கட்டக்கூடாது என்பது இதன் பொருள்.

சிவஞான சுவாமிகள் அமுதாம்பிகை பிள்ளைத் தமிழ் காப்புச் செய்யுளில் சொன்னதைப் போல... தந்தம் உள்ள பகுதி ஆண் பகுதி, தந்தம் இல்லாப் பகுதி பெண் பகுதி, யானைத் தலை, தேவ உடல், பூதக் கால்கள் என அனைத்தும் இணைந்த ஒரே வடிவம்- கஜமுகன்!

இதன் காரணமாகவே, எல்லோரும் நலம் காண, எல்லாமுமாய் திகழும் கஜமுகனை முதல் வழிபாட்டு நாயகராக வைத்தார்கள். நாமும் உமையாள் மைந்தனை உள்ளத்தில் நிலைநிறுத்தி, தூய அன்புடன் வழிபடுவோம்; இப (யானை) மாமுகன் இன்னல்களைத் தீர்த்து இன்பம் அருள்வார்.

- இன்னும் படிப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism