Published:Updated:

சித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

காலக் கணிதத்தின் சூத்திரம்!சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

சித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

காலக் கணிதத்தின் சூத்திரம்!சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:

மிதுனம், கன்னி ஆகிய ராசிகளில் ஒன்றில்... பிறந்தவேளை (லக்னம்) சந்திரன் (நட்சத்திர பாதம்) ஆகியவை இருக்கும்போது, அந்த ராசியின் செவ்வாயின் த்ரிம்சாம்சகத்தில் பிறந்தவள், கபடத்துடன் திகழ்வாள். அவளுடைய அணுகுமுறையில் உண்மை இருக்காது. திறந்த மனத்துடன் அணுகும் பாங்கு அறவே இல்லாமல் இருக்கும். சுயநலம் முழுமை அடைய, அவளுடைய இயல்பு ஒத்துழைக்கும்.

உடல் உறவில், இருமனமும் இன்பத்தைச் சமமாகப் பரிமாறிக்கொள்ளும் நிலையில் அதன் இன்பம் உயர்வை எட்டும். ஆனால், ஒருதலைப்பட்சமான விருப்பத்தில், தரம் தாழ்ந்த இன்பத் தைச் சுவைப்பவராக மாறிவிடுவார்கள். மனைவி இருந்தும் விலைமாதைத் தேடுபவரும், கணவன் இருந்தும் திரைமறைவில் வேறொருவரைத் தேடுபவரும் ஒருதலைப்பட்சமாக சுயநலத்தை முழுமையாக்க நினைப்பவர்கள் ஆவார்கள். 'கபடம்’ என்ற சொல்லில் இவர்களும் அடங்குவர்.

சித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பொய்யை மூலதனமாக வைத்து வாழ்க்கை வியாபாரத்தைத் துவக்கினால், வாழ்க்கை கபட நாடகமாக மாறிவிடும். திருமணத்துக்கு முன் நிகழும் அவர்களது நேர்காணலில் கபடம் கலந்திருப்பதால், திருமணத்தில் இணைந்தாலும் விவாகரத்தைச் சந்திக்கும் கட்டாயம் ஏற்பட்டுவிடுகிறது. அவளது கபட இயல்பு அவளது பெருமைக்கே இழுக்கு ஏற்படுத்திவிடுகிறது. பிரபலமான ஜோதிடர்கள் சேவை மனப்பான்மையுடனும், மனத் தெளிவுடனும் முனைப்புடன் அலசி ஆராய்ந்து, இணையைச் சேர்த்துவைப்பதில் ஈடுபட்டால், பல விவாகரத்துகளை முளையிலேயே கிள்ளியெறிய முடியும். நாம் விரும்பும்போது விவாகரத்து கிடைத்துவிடுகிறது என்பதற்காக, அதை அணுகவேண்டிய அவசியம் இல்லையே! இன்பமயமான வாழ்வுக்கு விவாகரத்து  முட்டுக்கட்டை என்பதை உணர்ந்து, நாம் அதை நிராகரிக்கவேண்டும்.

'கபட’ எண்ணத்தை தோன்றவிடாமல் தடுப்பதால், தன்னையே தரம் தாழ்த்தும் செயல்பாட்டில், சிந்தனையே வெற்றி பெறும். வாழ்க்கையில் தடுமாறும் பாமரர்களுக்கு வழிகாட்டும் ஆசானாகத் திகழ்ந்த ஜோதிடம், தற்போது கபடத்தில் சிக்கி தனது தரத்தைத் தாழ்த்திக்கொண்டிருக்கிறது. உலகின் மாசு, சூரிய வெப்பத்தால் அழியும். அடைமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்காலும் மாசுக்கள் மறையும். வெப்ப-தட்பத்தை அளிக்கும் சூரிய-சந்திரரை ஆதாரமாகக் கொண்ட ஜோதிடமானது மாசற்ற வாழ்க்கையைப் பரிந்துரைக்கிறது. நமது அறியாமை விலகினால் ஜோதிடம் மிளிரும். உலகுக்குப் பரிசாக அளித்த ஜோதிட ஆசார்யர்களின் பெருமையை அறிந்துணர வேண்டும். ஜோதிடத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை நாம் நிராகரிக்கக் கூடாது.

மனம் படைத்த மனிதர்கள் இருக்கும்வரை, ஜோதிடத்துக்கு இடம் உண்டு. உடல், உடல் உறுப்புகள், புலன்கள் ஆகியவற்றுடன் தங்களது சிந்தனையோட்டத்தை முடித்துக் கொள்பவருக்கு ஜோதிடம் எட்டாக்கனியாகவே திகழும். மனம், அதன் வளர்ச்சி, செயல்பாடு, உடல், உடலுறுப்புகள், புலன்கள் ஆகியவற்றின் தொடர்பு, சுற்றுச்சூழல் மாறுபாட்டில் அதன் போக்கு, அதில் சேமிக்கப்பட்டிருக்கும் ஆசைகள், அதை ஆராயும் புத்தி ஆகிய அத்தனையும் வாழ்வின் அமைதிக்கு அடித்தளம் என்பதை ஆராய விருப்பம் இல்லாதவர்களுக்கு ஜோதிடம் ஒத்துழைக்காது.

ஆன்மா, மனம் போன்றவற்றில் சிந்தனை எட்டிப்பார்க்காமல் இருந்தால், அதைப் பற்றிய தகவல்கள் அவனுக்குக் கிடைக்காது.  இப்படியானவர்கள், தங்களுக்கு ஏற்படும் தாழ்வு மனப்பான்மையை மறைக்க, 'ஜோதிடம் தேவையற்றது’ என்று வாதிடுவது,  ஒரு போர்வையாக வேண்டுமானால் பயன்படும். குள்ளநரி ஒன்று விபத்தில் சிக்கி வாலை இழந்தது. 'எதிரியிடம் இருந்து தப்பித்து ஓடும்போது எனது வால் சுமையாக இருந்தது. அதை இழந்தபிறகு நிம்மதியாக இருக்கிறேன்’ என்று தனது கூட்டத்திடம் விளக்கம் அளித்தது. அதைக் கேட்ட அத்தனை குள்ளநரிகளும் வாலை இழக்கத் துணிந்தன. ஆக, முதலில் வாலை இழந்த அந்தக் குள்ள நரியின் தாழ்வுமனப்பான்மைக்கு முதலுதவி கிடைத்தது; அது நிம்மதி அடைந்தது என்றொரு கதை உண்டு.

சித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

மருத்துவரும் விஞ்ஞானி ஒருவரும் சேர்ந்து ஜோதிடனை வாதாட அழைத்தார்கள்.  முதலிருவருக்கு ஜோதிடத்தின் வாடை தெரியாது. ஜோதிடனுக்கோ மருத்துவமும் விஞ்ஞானமும் தெரியாது. ஜோதிடன் சொன்ன பலனை அவர்கள் இருவரும் தங்கள் வாழ்க்கையில் சந்திக்கவில்லை என்று சொல்லி ஜோதிடனைத் தோற்கடித்தனர். இதைக் கண்ணுற்ற பாமரர்கள், ஜோதிடம் தேவையற்றது எனும் கூற்றை ஏற்பார்கள். இதுவும் குள்ளநரியின் கதை போன்றதுதான்.

சிந்தனை வளம் பெற்ற முனிவர்களின் தகவல்களை, தனிப்பட்ட மனித அனுபவத்தைக் கொண்டு நிராகரிப்பது கேலிக்கூத்து. பத்து வயதுச் சிறுவனில் தோன்றிய புற்றுநோயில், அதற்கு அடிப்படைக் காரணங்கள் தென்படவில்லையே என்று கேள்வி எழுப்பினால், 'அப்படியான காரணங்கள் இல்லாமலும் அந்த நோய் தோன்றலாம்’ என்று மருத்துவம் பதிலளிக்கும். 'புயல் வருமென்று சொல்லப்பட்டது. ஆனால் வரவில்லையே?’ என்று கேட்டால், 'காற்று திசை திரும்பிவிட்டது’ எனப் பதில் தரும் விஞ்ஞானம். ஆக, மருத்துவமும் விஞ்ஞானமும் நடந்ததை வைத்து காரணத்தை ஒட்டவைக்கும். ஜோதிடமோ நடக்க இருப்பதை வரையறுக்கும். முதல் இருவரின் மன இயல்பானது கபடத்துடன் ஒட்டியிருப்பதை உணர்ந்தால், உண்மையை எட்டிவிடலாம். தான் விரும்பிய இலக்கை எட்டிப்பிடிக்க முடியாமல் போனால், அந்த இலக்கில் குறை காண முனைவது மனிதனின் இயல்பு (அசக்த: தத்பதம் கந்தும் தத்ரநிந்தாம்ப்ரகுர்வதே).

ஒற்றைப்படை ராசியில் முதல் ஐந்து பாகைகள் 25-ல் இருந்து 30 வரை செவ்வாயின் த்ரிம்சாம்சகம். இரட்டைப்படை ராசியில் கடைசி ஐந்து பாகைகள் செவ்வாயில் த்ரிம்சாம்சகம். ஒன்றில் முதல் த்ரேக்காணம்; மற்றொன்றில் கடைசி த்ரேக்காணம். அதுபோல், இரண்டிலும் சூரிய ஹோரை. மிதுனத்திலும் கன்னியிலும் 30 பாகைகளுக்கும் புதன் பரவியிருப்பான். மிதுன ராசிக்கு முதல் த்ரேக்காணத்திலும் புதன் இருப்பான். கன்னியில் 3-வது த்ரேக்காணத்துக்கு சுக்கிரன் இருப்பான். ஆக, இரண்டு ஹோரைகளிலும் சூரியனும், ராசியில் புதனும், த்ரேக்காணத்தில் புதனும் சுக்கிரனும், த்ரிம்சாம்சகத்தில் செவ்வாயும் இணைந்த நிலையில் அவளது பிறந்தவேளை, சந்திரன் சேரும்போது, அவளது மன இயல்பு கபடம் இணைந்ததாக இருக்கும் என்கிறது ஜோதிடம்.

சூரியன், செவ்வாய் ஆகியவை வெப்ப கிரகங்கள். புதனும் சுக்கிரனும் தட்பகிரகங் கள். மனத்துக்குக் காரகன் சந்திரன். உலக சுகபோகங்களுக்குக் காரகன் சுக்கிரன். விவேகத்தை (பகுத்தறிதல்) அளிப்பவன் புதன். செவ்வாயின் (வெப்பக் கிரகம்) த்ரிம்சாம்சகத்தின் இணைப்பானது, மனம், விவேகம் இரண்டையும் திசைமாறி சிந்திக்கவைத்து, சுக்கிரன் (சுயநல உணர்வு) சேர்க்கையில் கபடமான இயல்பை ஏற்படுத்திவிடுகிறது!

சித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

ஆராயாமல் அவசர முடிவெடுப்பது, சுயநலத்துக்கு முன்னுரிமை அளித்து முடிவெடுப்பது, எதிர்விளைவை எண்ணிப் பார்க்காமல் முடிவெடுப்பது, விரும்பியதை எட்டிப்பிடிக்கும் வரை சுறுசுறுப்பைத் தளராமல் வைத்திருப்பது ஆகிய அத்தனையும் செவ்வாயின் கை ஓங்கினால் நிகழ்ந்துவிடும். முதல் ஐந்து, கடைசி ஐந்து பாகைகளில் வீற்றிருக்கும் செவ்வாயின் த்ரிம்சாம்சகம், மற்ற தட்பக்கிரகங்களின் தாக்கத்தைப் பின்னுக்குத் தள்ளி... புதனுக்கு ஆராயும் திறன் இருந்தாலும், வெப்பத்தின் (செவ்வாய்) சேர்க்கையால் அதன் இயல்பில் சிந்தனையைத் திருப்பி, கபடமான இயல்பை ஏற்க ஒத்துழைக்கிறான் புதன். இங்கு, த்ரிம்சாம்சகம் (செவ்வாய்- வெப்பக் கிரகம்) வலுப்பெற்று, சிந்தனையின் தரத்தை திசை திருப்பியது என்று ஜோதிடம் விளக்கும்.

செவ்வாய், சனி, குரு, புதன், சுக்கிரன் ஆகிய ஐந்தும் த்ரிம்சாம்சகத்தை ஆட்கொள்ளும் வேளையில், இயல்பின் மாறுபாட்டுக்கு தனிப்பங்கு பெறுவார்கள். இவர்கள் ஐவரும் ஒற்றைப்படை ராசியிலும் இரட்டைப்படை ராசியிலும் முழுப்பங்கு பெறுவர். நாம் வாழ்க்கையில் சந்திக்கும் ஏற்ற-இறக்கத்திலும், இன்ப-துன்பத்திலும் இந்த ஐவரின் பங்கு இருக்கும்.

அத்தனை அனுபவங்களையும் மனம் ஏற்க ஆன்மாவின் தொடர்பு அவசியம். அதை சூரிய- சந்திரர்கள் ஏற்கிறார்கள். சூரியனின் வெப்பம் சந்திரனில் விழுந்து பலம் பெறுகிறான். ஆன்மாவின் இணைப்பு சந்திரனுக்கு (மனம்) பலமூட்டுகிறது. மனத்தில் வாசனை வடிவில் மறைந்திருக்கும் கர்ம வினையானது, செவ்வாயின் த்ரிம்சாம்சகத்தின் இணைப்பில் இயல்பாக வெளிப்பட்டு செயலாற்றி, துயரத்தைச் சந்திக்கவைக்கிறது. கண்ணுக்குப் புலனாகும் சூரியனும் சந்திரனும் காலம் வாயிலாக வெப்ப வடிவில் வெளிப்பட்டு, மனத்தின் இயல்பில் மாற்றத்தை ஏற்படுத்தி, கர்ம வினைக்கு உகந்த செயல்பாட்டை அனுபவிக்கவைக்கின்றன.

ஆன்மாவுடன் இணைந்த மனமே கர்மவினையின் பலனை உணர்கிறது. வெளியே காலத்துடன் இணைந்த சூரிய-சந்திரர் வெப்பம் வாயிலாக, உரிய காலம் வரும்போது உணரவைக்கிறார்கள். அங்கும் காலத்தின் இணைப்பு இருக்கும். நாமும் தட்ப-வெப்ப நிலையின் அளவை வைத்து காலத்தைச் சுட்டிக்காட்டுகிறோம். வானிலை அறிக்கை என்பது, சுற்றுச்சூழல் மாறுபாட்டால் ஏற்பட்ட தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக விடுபடும் எச்சரிக்கை எனலாம். வெளியுலக விளைவுகளுக்கு, காரிய காரணங்களுடன் விஞ்ஞானம் விளக்கமளிக்கும்.

சூரியன் (ஆன்மா), சந்திரன் (மனம்), செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி (புலன்கள்). இவர்களில் சூரியன் வெப்பம்; சந்திரன் தட்பம். செவ்வாயும் சனியும் வெப்பத்துக்கு ஊக்கமளிக்கும். புதன், குரு, சுக்கிரன் ஆகியோர் தட்பத்துக்கு ஒத்துழைப்பர். இப்படி வெப்பம் தட்பம் இரண்டின் விகிதாசாரச் சேர்க்கையில் உள்ளுக்குள் (உடலுக்குள்) சுற்றுச்சூழல் மாறுபாட்டால் விளையும் சிந்தனையின் தரத்தை வரையறுக்கும் திறனை இன்றுவரை விஞ்ஞானம் பெறவில்லை. அங்கும் ஜோதிடம் கை கொடுக்கும்.

வெள்ளையர்கள் வெப்பத்தின் தாக்குதலுக்கு ஆளாகும்போது, ஊட்டியைச் சரணடைந்தார்கள். இன்றைக்கு நாம் குளிர்சாதன அறையில் முடங்கிக்கிடக்கிறோம். ஆனால், உடலுக்குள் உருவாகும் புழுக்கத்தில் இருந்து வெளிவர ஊட்டியும், கொடைக்கானலும், குளிர்சாதன அறைகளும் ஒத்துழைக்காது. புழுக்கத்தின் காரணத்தை அறிந்து, சிந்தனையை திசை திருப்பி, தப்பிக்க வேண்டும். அதற்கு, முனிவர்களின் ஜோதிட சிந்தனைகள் ஒத்துழைக்கும்.

சித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

சூரிய வெப்பத்தின் தாக்கமானது நீரை ஆவியாக்கி, மேகமாக உருப்பெறச்செய்து மழை பொழிய வைக்கிறது என்கிறது விஞ்ஞானம். ஆனால் அந்த மழை எங்கு, எவ்வளவு, எப்போது பெய்யும் என்ற விளக்கங்களை அளிக்கும் திறன் அதற்கு இருக்காது. அந்த வேளையில் உருவான சுற்றுச்சூழலின் தரமானது மழையை திசைதிருப்பி, எதிர்பார்க்காத மாறுதலையும் ஏற்படுத்திவிடும். பஞ்ச பூத விகிதாசாரக் கலவையில் சுற்றுச்சூழல் உருவாகும். அதன் தாக்கம், நமது சிந்தனைக்கு எட்டாத விளைவுகளை நிகழ்த்திவிடும்.

காரண-காரிய ஆராய்ச்சியுடன் விஞ்ஞானத்தின் சிந்தனை முற்றுப்பெறும். அதையும் தாண்டிய சிந்தனை வளம்பெற்ற முனிவர்களின் கணிப்பு, விஞ்ஞானத்தின் கண்களுக்கு இன்றும் புலனாகவில்லை. முனிவர்களது சிந்தனை, கண்ணுக்குப் புலப்படாத பரம்பொருளை உணரவைத்தது. உலக இயக்கத்துக்குக் காரணமான பெரும்சக்தியை ஒதுக்கி... உடல் இயக்கத்துக்குக் காரணமான மனத்தையும், ஜீவாத்மாவையும் ஒதுக்கி... உயர்வற்ற உலகம், உடல் ஆகியவற்றில் நிகழும் மாற்றத்துக்கு காரண காரிய வடிவில் தகவல் அளிப்பது, என்றைக்கும் நிலைத்திருக்காது.பாதிப்புக்கு மருந்து அளிக்கும் மருத்துவம், அதன் மூல காரணத்தைப் பற்றிக் கவலைப்படாது. பாதிப்பு அகன்றால் நிம்மதியுண்டு என்று சொல்லும். விஞ்ஞானமும் அப்படித்தான்.

ஜோதிட விளக்கங்களின் தரத்தை விலையிருத்துவதற்காக, விஞ்ஞானத்தையும் கடவுளையும் சரணடைபவர்கள், முனிவர்களது சிந்தனைக் கணிப்பை எட்டாதவர்கள். மலை ஏறுபவன் முடவனின் துணையை ஏற்கமாட்டான்!

ஐம்பெரும் பூதங்களில் ஒன்றான ஆகாயத்தில் உறைந்திருக்கும் ஒளிகளின் பங்கில் ஏற்படும் விளைவுகளை விளக்க வந்தது ஜோதிடம். அதை ஒதுக்கிய உலக ஆராய்ச்சியோ, உடல் ஆராய்ச்சியோ முழுமை பெறாது. விஞ்ஞான வளர்ச்சி மனித சிந்தனையை பிரமிக்கவைப்பது உண்மைதான். ஆனால், அதன் மூலம் அமைதியும் மகிழ்ச்சியும் இணைந்த வாழ்வை எல்லோராலும் எட்ட இயலவில்லை. உலகவியல் சுகத்தை நிறைவு செய்யும் முயற்சியில் களைத்துப்போன மக்களுக்கு விழிப்பு உணர்வை ஏற்படுத்தி, அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கையை ஏற்க வைத்து மகிழ்கிறது ஜோதிடம்.

கோழியானது உணவோடு சிறு கல்லையும் சேர்த்து விழுங்கிவிடும். அதற்கு ரத்தினக் கல்லும் கருங்கல்லும் ஒன்றுதான். கற்களின் பாகுபாட்டை அது அறியாது. அதேபோல், தமது சிந்தனை, முனிவர்களின் சிந்தனையைவிடச் சிறந்தது என்று எண்ணுபவர்களும் உண்டு. அவர்களது அறியாமை உண்மையை எட்டுவதற்கு இடையூறாக அமைந்துவிடும்.

- சிந்திப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism