Published:Updated:

விதைக்குள் விருட்சம் - 12

எதிர்மறைச் சிந்தனைகள்சேவாரத்னா டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி ஓவியங்கள்: அரஸ்

விதைக்குள் விருட்சம் - 12

எதிர்மறைச் சிந்தனைகள்சேவாரத்னா டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி ஓவியங்கள்: அரஸ்

Published:Updated:

உடல், மனம், அறிவு, ஆத்மா ஆகிய நான்கு பரிமாணங்களில், மனமும் அறிவும் சேர்ந்து செயல்படும்போது உண்டாகும் சக்தியானது, மனித வாழ்க்கையை நடத்திச் செல்கிறது. இடைவிடாது பிரச்னைகளைப் பற்றி நினைத்துப் போராடும்போதும், எதிர்மறைச் சிந்தனைகளால் மனத்தைக் குழப்பிக்கொள்ளும்போதும் நம்முள்ளே அடங்கியிருக்கும் இந்த உன்னத சக்தி, ஆழ்மனத்தில் புதைந்து விடுகிறது. அந்த உன்னத சக்தியை வெளிக் கொண்டு வந்தால்தான் நம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும். அதற்கு ஒரே வழி, எதிர்மறைச் சிந்தனைகளை முற்றிலுமாக நீக்குவதுதான்!

விபரீத கற்பனைகள்!

இல்லாத பிரச்னைகளை இருப்பதாக நினைத்துக் குழப்பம் அடையத் தூண்டுவதே எதிர்மறைச் சிந்தனைகள்தான். பள்ளிக்குச் சென்ற பிள்ளை உரிய நேரத்தில் வீடு வரவில்லையென்றால், தாய் படும் கவலை சொல்லி மாளாது. 'வரும் வழியில் சாலையைக் கடக்கும்போது விபத்து ஏதும் ஏற்பட்டிருக்குமோ?’, 'அடிபட்டு ஆஸ்பத்திரியில் இருக்கிறானோ?’, 'யாரேனும் தன் பிள்ளையைக் கடத்திக்கொண்டு போய்விட்டார்களோ?’... இப்படியான எதிர்மறைச்  சிந்தனைகள் அவளுள் ஓடிக்கொண்டே இருக்கும்.

மனம் பதைபதைக்கும். உடல் வியர்க்கும். ரத்த அழுத்தம் எகிறும். பலருக்கும் போன் செய்து விசாரிப்பாள். கணவனுக்கும் போன் செய்து அழுது, அவனையும் பதற வைப்பாள். அரை மணி நேரத்துக்குப் பின், அவள் பிள்ளை சிரித்துக்கொண்டே வருவான். 'வரும் வழியில் மைதானத்தில் கிரிக்கெட் ஆடிக்கிட்டிருந்தாங்க.  கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்துட்டு வந்தேன்’ என்பான்.

விதைக்குள் விருட்சம் -  12

இப்படித் தேவையற்ற விபரீத கற்பனைகளால் பயம் ஏற்படும்போது, ஆழ் மனத்தின் அற்புத சக்தி அதிக ஆழத்தில் புதைந்துவிடுகிறது.

ஓர் இடத்துக்குப் போகிறோம். எதற்காக அந்தப் பிரயாணம், யாரைப் பார்க்கச் செல்கிறோம், என்னென்ன எடுத்துச் செல்ல வேண்டும், எப்போது புறப்பட வேண்டும், நாம் பிரயாணம் செய்யும் கார் நல்ல கண்டிஷனில் உள்ளதா என்றெல்லாம் சிந்திப்பது ஆக்கபூர்வமான சிந்தனை.

ஆனால், போகிற காரியம் நடக்காமல் போனால் என்ன செய்வது, போன இடத்தில் பேச்சுவார்த்தையில் சண்டை வந்துவிட்டால் என்ன செய்வது, போகிற வழியில் விபத்து ஏற்பட்டு ஒன்றுகிடக்க ஒன்று ஆகிவிட்டால் என்ன ஆவது என்று நினைப்பதெல்லாம் எதிர்மறைச் சிந்தனைகள். இப்படி நினைப்பதால் ஏற்படுகிற பயத்தில், நம்முள் அடங்கியுள்ள மகத்தான மானிட சக்தி நீறு பூத்த நெருப்பாகிவிடுகிறது. அதனை ஊதி ஊதி சாம்பலை அகற்றினால்தான், நெருப்பின் சக்தி வெளிப்படும். அதைவிட, எதிர்மறைச் சிந்தனைகளே நம்முள் ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்வதே சாலச் சிறந்தது.

நோயின் கொடுமை

எதிர்மறைச் சிந்தனைகள் ஏற்படுவது  பெரும்பாலும் நாம் நோய்வாய்ப் படுகிற தருணத்தில்தான். இன்றைய உலகில் அநேகமாக எல்லோருக்குமே ஓரளவேனும் மருத்துவ விஞ்ஞான அறிவு உள்ளது. எனவே, லேசாகக் காய்ச்சல், ஜலதோஷம் வந்தாலே, பலர் எதிர்மறையாகச் சிந்திக்கத் துவங்கிவிடுகிறார்கள். இது மலேரியாவாக இருக்குமோ, டெங்கு, சிக்குன்குன்யா இப்படி ஏதாவது இருக்குமோ என்றெல்லாம் பயப்படுகிறார்கள். போதாததற்கு அவரைச் சுற்றியுள்ளவர்களும் எதிர்மறையாகவே பேசி, அவரது பயத்தை அதிகமாக்கிவிடுவார்கள்.

சிறந்த டாக்டர்கள், நோயாளியின் பயத்தை அதிகப்படுத்த மாட்டார்கள். அவர்கள் தங்களின் இனிமையான வார்த்தைகளாலேயே நோயாளியின் மனத்துக்குத் தெம்பூட்டி, குணப்படுத்திவிடுவார்கள். டாக்டரின் வார்த்தைகள் கொடுக்கும் நம்பிக்கை, ஆழ்மனத்தில் புதைந்து கிடக்கும் மனித சக்தியை வெளிப்படுத்தி, நோயாளியை குணப்படுத்திவிடும். நோய் வந்தால் எச்சரிக்கையாக இருக்கவேண்டுமே தவிர, பயப்படக்கூடாது.

விதைக்குள் விருட்சம் -  12

மாற்றுத்திறனாளிகளின் மனோவலிமை

உடல் ஊனமுற்றவர்களை மாற்றுத்திறனாளிகள் என்று குறிப்பிடுகி றோம். அவர்களில் பலர் சாதனையாளர்களாக இருப்பதையும் பார்க்கிறோம். அவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ளவேண்டிய முக்கியமான பாடம் ஒன்று உண்டு. 'எதிர்மறைச் சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காதே!’ என்பதுதான் அது. ஆக்கபூர்வ சிந்தனைகளே நம் வாழ்க்கையை உயர்த்தும்.

ஆழ்மன சக்தி!

மனித மூளையைப் பற்றி ஆயிரத்துக்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தி, மனம்- அறிவு- ஆத்மா மூன்றுக்கும் இடையே உள்ள தொடர்பை யும், அதனால் உருவாகும் ஆக்க சக்தியையும் அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆய்வுகள் மூலம் அவர்கள் கண்டறிந்த, ஆழமன சக்தியால் உண்டாகும் பலன்களின் பட்டியல் இது...

1. ஆழ்மனத்தின் அற்புத சக்தி, மன இறுக்கத்தைப் போக்கி, அறிவு, ஆற்றல், உடல் நலம் ஆகியவற்றை மேம்படச் செய்கிறது.

2. ஆக்கபூர்வமாகச் சிந்திக்கும் திறனை அதிகரிக்கச் செய்கிறது.

3. குறிக்கோள்களை அடையும் வழிமுறைகளை எளிதில் அறிய வகை செய்கிறது.

4. தடைகளைத் தாண்டும் சக்தியை உண்டாக்குகிறது.

5. உற்சாகத்தையும், மனோபலத்தையும், தன்னம்பிக்கையையும் அதிகரிக்கச் செய்கிறது.

6. ஆன்மிகத் தேடலை உருவாக்குகிறது.

7. வெற்றியை நோக்கிச் செல்லும் தெளிவைக் கொடுக்கிறது.

(விருட்சம் வளரும்)

விதைக்குள் விருட்சம் -  12

அன்பால் புலியையும் வெல்லலாம்!

குருவும் சிஷ்யனும் காட்டு வழியே சென்றுகொண்டி ருந்தனர். அப்போது, திடீரென புலியின் உறுமல் அருகில் கேட்டது. சிஷ்யன் நடுநடுங்கிப் போனான். ''குருவே, இங்கிருந்து ஓடிவிடலாமா?'' என்று பரிதாபமாகக் கேட்டான்.

''ஓடிவிடலாம்தான். ஆனால், புலி நம்மைத் துரத்தாமல் விடாது. புலியை எதிர்த்துப் போராடலாம் என்றாலோ, நம்மிடம் ஆயுதம் எதுவுமில்லை. பேசாமல், கடவுளை வேண்டிக் கொண்டு, கண்களை மூடி, தியானத்தில் அமரலாம். ஆனால், கடவுளின் தீர்ப்பு யார் பக்கம் இருக்கும் என்று நமக்குத் தெரியாது. எனவே, சற்றுப் பொறுமையாக இரு!'' என்ற குரு, தன் மனத்தை ஒருமுகப்படுத்தி, தியானத்தில் ஈடுபட்டார். புலி சற்று நேரத்தில், வேறு வழியில் சென்று மறைந்தது.

''குருவே, என்ன அற்புதம் செய்து புலியை விரட்டினீர்கள்?'' என்று கேட்டான் சிஷ்யன்.

''ஒன்றும் பெரிதாகச் செய்ய வில்லை. என் மனத்திலிருந்து எதிர்மறை எண்ணங்களை வெளி யேற்றி, ஆழ்மன சக்தியை வெளிக் கொண்டு வந்தேன். புலியின் மன நிலையை அது பாதித்து, அமைதியை ஏற்படுத்தியது. எனவே, அது சாந்தமாகி, விலகிச் சென்றது. நம் உள் மனமும் அறிவும் ஒருமுகப்பட்டு, அமைதியும் சாந்தமும் நிலவும்போது, அந்த சாந்த நிலை வெளியேயும் பரவி, நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் அமைதியடையச் செய்கிறது!'' என்றார் குரு.