Published:Updated:

பாடல் சொல்லும் பாடம்!

சிபாரிசு கடிதம்! பி.என்.பரசுராமன், ஓவியம்: நடனம்

ருவர் தன் மனத்தில் இருப்பதை அடுத்தவர்களுக்குத் தெரிவிப்பது, கடிதம் மூலமாகத்தான். அந்தக் கடிதத்தை, பாட்டாகவே எழுதி அனுப்பினால் எப்படியிருக்கும்?

முதலில்... ஒரு கடிதம் என்றால், அதில் அனுப்புநர், பெறுநர், தகவல் என மூன்று விஷயங்கள் அவசியம் இருக்க வேண்டும்.

இதோ... இந்தக் கடிதத்திலும், அதாவது இந்தப் பாடலிலும் அந்த மூன்றும் உள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

1. மதிமலி புரிசை மாடக் கூடல்
பதிமிசை நிலவும் பானிற வரிச்சிறை
அன்னம் பயில் பொழில் ஆலவாயின்
மன்னிய சிவன் யான் மொழிதருமாற்றம்

2. பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க்கு
உரிமையின் உரிமையின் உதவி ஒளி திகழ்
குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச்
செருமா உகைக்கும் சேரலன் காண்க!

3. பண்பால் யாழ்பயில் பாணபத்திரன்
தன்போல் என்பால் அன்பன் தன்பால்
காண்பது கருதிப் போந்தனன்
மாண் பொருள் கொடுத்து வரவிடுப்பதுவே

மூன்று பகுதிகள். முதல் பாடல் - அனுப்புநர்; யார்? சிவபெருமான். இரண்டாம் பகுதி - பெறுநர்; அதாவது, சேரமான் பெருமாள்; மூன்றாம் பகுதி - தகவல்; என்ன தகவல்? பாணபத்திரனுக்குச் செல்வம் கொடுப்பது பற்றி!  

இந்தக் கடிதத்தை இன்னும் சற்று விரிவாகப் பார்ப்போமா?

பாடல் சொல்லும் பாடம்!

முதல் பாடலில், சிவபெருமான், திருவாலவாய் மதுரை எனத் தெளிவான விலாசம் உள்ளது. 2-வது பாடலில், மழை மேகம் போல வாரிக் கொடுப்பவன், பாவலர்களுக்கு மிகுந்த உரிமையுடன் வேண்டியதை, எல்லையில்லாமல் கொடுப்பவன், இந்த இரண்டுக்கும் மேலாக பதவியில் இருக்கும் (அதுவல்லவோ முக்கியம்?!) அரசன் சேரமான் எனத் தெரிவிக்கிறது.

இந்தக் காலத்தில், பலருடைய சிபாரிசுக் கடிதங்கள் பலனில்லாமல் போவதற்கான காரணம் இந்தப் பகுதியில் விவரிக்கப் பட்டுள்ளது. அதாவது, அடுத்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நற்குணம் கொண்டவர்களிடம் மட்டுமே சிபாரிசுக் கடிதம் எடுபடும். அது மட்டுமல்ல; நல்லவர் களை ஆதரிப்பது, அரசனின், ஆட்சியாளனின் கடமை என்ற குறிப்பும் இந்தக் கடிதத்தில் அடங்கியுள்ளது.

மூன்றாவது பாடலில், கடிதத்தைக் கொண்டு செல்பவருடைய தகுதி என்ன, தேவை என்ன என்று சொல்லி, அவரது தேவையை நிறைவேற்றி மதுரைக்கே திருப்பி அனுப்பிவிட வேண்டும் என்கிற தகவல் இடம்பெற்றுள்ளது.

மதுரையில் எழுந்தருளியிருக்கும் திருஆலவாய் இறைவன் முன்னால் நின்று, தூய்மையான அன்போடு, தினந்தோறும் பாடல்கள் பாடி, வழிபாடு செய்து வந்தார் பாணபத்திரர். அவர் கனவில் திருஆலவாய் அண்ணல் தோன்றி, ''பாணபத்திரா! சேரமான் பெருமாளுக்கு யாம் தரும் ஓலையைக் கொண்டு போய்க் கொடுத்து, பெரும் பொருளைப் பரிசாகப் பெற்றுக் கொள்!'' என்றார்.

பாணபத்திரர் விழித்தெழ, அருகில் ஓலை இருந்தது. அதைக் கொண்டுபோய், சேரமான் பெருமாளிடம் கொடுத்தார். அந்த ஓலையில் இருந்த பாடலே இது. இனி, பாடலின் ஜீவநாடியான பகுதியைப் பார்ப்போம்.

''சேரமன்னா! இந்தக் கடிதம் கொண்டுவரும் பாணபத்திரன் பண்பாளன். உன்னைப் போல், அவனும் எம் பக்தன். உன்னைப் பார்ப்பதற்காக அவனை அனுப்பி இருக்கிறேன். அந்தப் பாணபத்திரனுக்கு நிறையப் பொருள் கொடுத்து, மறுபடியும் அவனை மதுரைக்கு என்னிடமே திருப்பி அனுப்பிவிடு!'' என்கிறார் சிவனார்.

பாணபத்திரரை மறுபடியும் மதுரைக்கே திருப்பி அனுப்புமாறு சிவபெருமான் ஏன் முக்கியமாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்?

சேரமான் பெருமாளும் தலைசிறந்த சிவபக்தர். நாயன்மார் வரிசையில் இடம் பெற்றவர். அப்பேர்ப்பட்ட உத்தம பக்த ரான சேரமான் பெருமாள், இன்னிசை மீட்டி இசையால் வழிபாடு செய்யும் பாணபத்திரரைத் தன் அருகிலேயே வைத்துக் கொண்டு விட்டால்... என்ன செய்வது? மதுரையில் பாணபத்திரர் செய்யும் இசைத் தொண்டு தடைப்பட்டு விடுமல்லவா? அதனால்தான் அவரை மறுபடியும் மதுரைக்கே திருப்பி அனுப்பும்படி உத்தரவு இட்டார் திரு ஆலவாய் அண்ணல்.

யார் யாருக்குக் கொடுக்க வேண்டும்? எப்போது கொடுக்க வேண்டும்? என்ன கொடுக்க வேண்டும்? யார் மூலம் கொடுக்க வேண்டும்? எல்லாம் இறைவனுக்குத் தெரியும்.

- இன்னும் படிப்போம்...