Published:Updated:

சக்தி சபா

சக்தி சபா

சக்தி சபா

மத்வரின் அவதார தலத்தில் ஸ்ரீமாயாதுர்கா தரிசனம்!

அது 1994-ம் ஆண்டு. மே மாதத்தின் கடைசி வாரம். நானும் நண்பர்கள் சிலரும் உடுப்பி தலத்துக்குச் சென்றிருந்தோம். மூன்று நாட்கள் அங்கு தங்கியிருந்து உடுப்பி கிருஷ்ணனை கண்ணாரத் தரிசித்து, மனதாரப் பிரார்த்தித்து மனநிறைவு பெற்றோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உடுப்பியில் ஸ்ரீகிருஷ்ணர் ஆலயம் மட்டுமின்றி, நாம் தரிசிக்க வேண்டிய வேறுசில புண்ணிய தலங்களும் உண்டு. அவற்றுள் குறிப்பிடத்தக்கது அருகில் இருக்கும் பாஜக க்ஷேத்திரம். த்வைத தத்துவத்தை உலகுக்கு அருளிய ஸ்ரீமத்வரின் அவதார ஸ்தலம் இது. உடுப்பியில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள இந்த ஊருக்கு பேருந்து வசதிகள் நிறைய உண்டு. நாங்கள் ஆட்டோவில் சென்றோம். பாஜக க்ஷேத்திரத்தை அடைந்தபோது மாலை 4 மணியாகிவிட்டது. ஸ்ரீமத்வர் அவதரித்த இல்லத்தைத் தரிசித்துவிட்டு, கிளம்ப யத்தனித்தபோது அருகிலிருந்த சிறு குன்று கண்ணில் பட்டது, நாங்கள் செய்த பாக்கியம் என்றே கூறவேண்டும்.

அந்த குன்றின் மீது சிறு ஆலயம் ஒன்று இருந்தது; ஸ்ரீமாயா துர்கா ஆலயம் என்றார்கள் ஊர்க்காரர்கள். எங்களுக்கு அந்த ஆலயத்தைத் தரிசிக்கும் ஆசை. ஆனால் அப்போது பெய்யத் துவங்கிய மழை தயக்கத்தைத் தந்தது. எனினும், நாங்கள் மலையேறத் துவங்கினோம். சிறிது நேரத்துக்கெல்லாம் மழை வலுக்கத் துவங்கியது. எல்லோரும் தொப்பலாக நனைந்துபோனோம். நல்ல குளிர்வேறு! ஒருவழியாக உச்சியை அடைந்து கோயிலுக்குள் நுழைந்தால்... அங்கே கருவறையில் மங்கல நாயகியாய் காட்சி யளித்த ஸ்ரீமாயா துர்காவின் தரிசனத்தில் மெய்ம்மறந்துபோனோம்.

சிறிய மூர்த்தம்தான் என்றாலும் உலகையே வசமாக்கும் சாந்நித்தியம் தேவியின் திருமுகத்தில்! கம்சனின் கைகளில் இருந்து நழுவி 'உன்னைக் கொல்லப் போகும் கண்ணன் யதுகுலத்தில் வளர்கிறான்’ என்று எச்சரித்தாளே... அந்த மாயாதேவிதான் இவள் என்று புராணத்தை விவரித்தார்கள் கோயில் ஆட்கள். அதுமட்டுமா? ஸ்ரீமத்வர் சிறுவனாக இருந்தபோது பெரும்பாலும் அந்தக் கோயிலில்தான் பொழுதைக் கழிப்பார் எனும் தகவலையும் அவர்கள் விவரிக்க... நாங்கள் நெக்குருகிப்போனோம். இப்போதும் கண்களை மூடினால் நம் சிந்தையில் நிறைகிறாள் ஸ்ரீமாயாதுர்கா.

உடுப்பி செல்லும் அன்பர்கள் இந்த அன்னையையும் அவசியம் தரிசித்து வாருங்கள்.

- க. சரவணன், காஞ்சிபுரம்

சக்தி சபா

வேள்வியில் தரிசனம்!

சென்னை- கொளத்தூருக்கு அருகில் உள்ளது பெரவள்ளூர். இங்கே சக்திவேல்நகர் பகுதியில் மிக அழகுற அமைந்திருக்கிறது, ஸ்ரீஓம்சக்தி விநாயகர் திருக்கோயில். பிள்ளையார் மட்டுமின்றி பெருமாள், முருகன் உட்பட பல தெய்வச் சந்நிதிகளையும் கொண் டிருக்கும் இந்தக் கோயிலில், சமீபத்தில் கும்பாபிஷேகம் சிறப்புற நடந்தேறியது. அதைத் தொடர்ந்து நடைபெற வேண்டிய  மண்டல பூஜையும் கடந்த மார்ச் மாதம் 22-ம் நாள், சனிக்கிழமையன்று வெகு கோலாகலமாக நடைபெற்றது.

சக்தி சபா

அன்று மாலையில் திருக்கோயிலில் பெருமாள் திருக்கல்யாண வைபவமும், விசேஷ ஹோம ஆராதனைகளுடன் நடைபெற்றது. பெரவள்ளூர் மட்டுமின்றி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்களும் திரளாக வந்து கலந்துகொண்டு, திருக்கல்யாண வைபத்தைத் தரிசித்து, ஸ்வாமியின் அருள் பெற்று சென்றனர்.

திருக்கல்யாண வைபவத்தையொட்டி நிகழ்ந்த வேள்வியின் போது, வேள்வி அக்னியில் ஷீர்டி ஸ்ரீசாயிநாதனின் உருவம் தெரிவதாக, பக்தர்கள் பரவசத்துடன் வந்து வணங்கிச் சென்றது குறிப்பிடத்தக்க சிறப்பம்சம். இதில் விசேஷம் என்னவென்றால், அந்தக் கோயிலில் ஸ்ரீசாயி பாபாவுக்கும் தனிச்சந்நிதி ஒன்று உண்டு. ''ஸ்ரீசாயி இந்தக் கோயிலில் தனது சாந்நித்தியத்தை ஏதேனும் ஒரு வகையில் வெளிப்படுத்துவார் என்று நம்பிக்கையுடன் இருந்தோம். எங்கள் நம்பிக்கை பலித்தது'' என்று ஸ்ரீசாயிபக்தர்கள் நெகிழ்ச் சியுடன் பகிர்ந்துகொண்டபோது, ஸ்ரீசாயிநாதரை நேரில் தரிசித்தது போன்ற மகிழ்ச்சி அவர்களிடம்!

- சுரேஷ், சென்னை-82

குலம் காக்கும் கோமாதா!

வீட்டில் இடைவிடாமல் தொடரும் பிரச்னைகள், அதனால் மனத்தில் நீங்காத சஞ்சலம் என வருத்தத்தில் இருக்கிறீர்களா? அப்படியென்றால் பசு தரிசனம் உங்களுக்கு உதவி செய்யும். எனது தந்தையார் எனக்குச் சொல்லிக்கொடுத்த வழிமுறை இது.  

''தினமும் பசுவைத் தரிசித்து, ஒருபிடி அகத்திக்கீரை கொடுத்து, தொட்டுக் கும்பிட்டால் போதும்; வீட்டில் லட்சுமிகடாட்சம் பெருகும். நம்ம பாவங்கள் தொலைவதோடு; நம்மை பீடித்த பீடைகள் தீய தொல்லைகள் எல்லாம் விலகிப்போகும்'' என்பார் அவர்.

சக்தி சபா

அப்படி பசுமாட்டை வணங்கும்போது 'சர்வ விருப்பங்களையும் நிறைவேற்றித் தருபவளும், சர்வ தீர்த்தங்களிலும் நீராடிய புண்ணியத்தைத் தருபவளும், பரிசுத்தத்தை அளிக்கக்கூடியவளும், காமதேனுவின் ச்ரேஷ்டையுமான அம்மா கோமாதாவே உனக்கு நமஸ்காரம்’ என்று மனத்தில் பிரார்த்தித்து வணங்கவேண்டுமாம்.

இந்தக் கருத்தைச் சொல்லும் கீழ்க்காணும் ஸ்லோகத்தைச் சொல்லியும் பசுவை வழிபடலாம்.

காம் ச த்ருஷ்ட்வா நமஸ்க்ருத்ய க்ருத்வா சைவ ப்ரதக்ஷிணம்
ப்ரதக்ஷிணீக்ருதா தேன ஸப்தத்வீபா வஸுந்த்தரா
ஸர்வகாமதுகே தேவி ஸர்வதீர்த்தாபிஷேசினீ
பாவனே ஸுரபிஸ்ரேஷ்டேதேவி துப்யம் நமோஸ்துதே

- உஷா விஸ்வநாதன், தூத்துக்குடி

கேட்கிறோம்...

? அற்புத பலன் தரும் 'சொற்றுணை வேதியன்...’ எனத் துவங்கும் பதிகம் எந்தத் தலத்தில் பாடப்பெற்றது. அப்பர் பெருமான் பாடியருளிய பதிகம் இது என்பதை அறிவோம். அவர் அந்தப் பாடலைப் பாடிய சூழலை விவரித்தால், பயனுள் ளதாக இருக்கும்.

- ரமேஷ், திருச்சி-2

? கதிரவன் தன் கிரணங்களால் இறையை பூஜிக்கும் தலங்கள் குறித்த தகவல்கள் நிறைய உண்டு. அதுபோன்று, ஏதோ ஒரு திருத்தலத்தில் மாதத்துக்கு ஒரு தூண் வீதம் பன்னிரு தூண்களை சூரியக்கதிர்கள் தழுவும் அதிசயம் நிகழ்வதாக, தான் கேள்விப்பட்டதை நண்பர் ஒருவர் கூறினார்.அது எந்தத் தலம் என்பதை அறிய ஆசை. அறிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

- இ. ராமு, திருவாரூர்

வாசகர்களே...

ஆன்மிகம் சம்பந்தமான உங்கள் அனுபவங்கள், சந்தேகங்கள், உங்களுக்குத் தெரிந்த தகவல்களை பகிர்ந்துகொள்ளும் பகுதி. 'உங்களுடன்... நீங்கள்.’ அனுப்பவேண்டிய முகவரி:

'சக்தி சபா', சக்தி விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.