Published:Updated:

பிரதோஷ நடனம்!

இ.லோகேஸ்வரி

ண்டு முனிவருக்கும் பரத முனிவருக்கும் தாண்டவங்களைக் கற்பித்தார் சிவ பெருமான் என்கிறது நாட்டிய சாஸ்திரம்.  ஆனந்த தாண்டவம் தொடங்கி பிரளய தாண்டவம் வரை, 108 தாண்டவங்களை சிவனார் ஆடியதாகக் குறிப்பிடுகிறது புராணம். இதில், பஞ்ச தாண்டவங்கள், சப்த தாண்டவங்கள் எனப் பல பிரிவுகள் இருந்தாலும், மொத்தமாக சிவ தாண்டவம் என்று அழைக்கிறார்கள் முன்னோர்கள்.

தேவ-அசுரர்கள் பாற்கடல் கடைந்த கதையும், அதிலிருந்து தோன்றிய விஷத்தை அருந்தி தன் கண்டத்தில் தக்கவைத்துக் கொண்டு, திருநீலகண்டராக சிவபெருமான் இந்த உலகை அனுக்கிரஹித்த புராணமும் நாமறிந்ததே. அப்படி விஷாபகரணம் செய்த  சிவபெருமான், உலகம் உய்ய ஒரு தாண்டவம் ஆடி அருளினார். இதை, சந்தியா தாண்டவம் என்றும் பிரதோஷ தாண்டவம் என்றும் ஞானநூல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இந்த சிவதாண்டவம் நிகழ்ந்தது ஒரு சனிக் கிழமையின் பிரதோஷ வேளையில்.  அதனால்தான், சனிக்கிழமையில் வருகிற பிரதோஷம் சிறப்பு வாய்ந்ததாகப் போற்றப் படுகிறது.  இந்தச் சம்பவத்தை அப்படியே நாட்டியமாகப் பார்த்தால்... அதுவும் ஒரு பிரதோஷ வேளையில் பார்த்தால் எப்படியிருக்கும்?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பிரதோஷ நடனம்!

சிலிர்ப்பும் பிரமிப்பும் நிறைந்த அப்படியான ஓர் அனுபவத்தை, ஒவ்வொரு பிரதோஷத் துக்கும் ஒவ்வொரு சிவாலயத்தில்... தனது பிரதோஷ நடனத்தால் பக்தர்களுக்குத் தந்துகொண்டிருக்கிறார் செந்தில்குமார் எனும் அன்பர். இவரின் சொந்த ஊர் உடுமலைப்பேட்டை. எனவே, உடுமலை செந்தில் என்றால் பலருக்கும் பரிச்சயம்! அர்ப்பணிப்பு நோக்கில், பிரதோஷ வேளையில் கோயிலில் சிவ தாண்டவம் ஆடுகிற அன்பர், இன்றைய தேதிக்கு இவர் ஒருவர் மட்டும்தான்!

ஒரு பிரதோஷ நாளில், சிவாலயத்தில் ஆடி முடித்துவிட்டு வந்த செந்திலிடம் பேசினோம். ஆடிய களைப்பு சிறிதுமின்றி, உற்சாகத்துடன் பேச ஆரம்பித்தார் அவர்.

''என் அப்பா, கோதை பொன்னப்பா. அம்மா பத்மாவதி. எது கேட்டாலும் மறுப்புச் சொல்லாமல் செய்து கொடுக்கிற அருமையான பெற்றோர் கிடைச்சது மிகப் பெரிய வரம். சின்ன வயசுல ஒரு ஈர்ப்புல, பரதம் கத்துக்கணும்னு வீட்ல சொன்னப்ப, உடனே ஒப்புக்கிட்டாங்க. சொல்லப் போனா, எங்க வீட்லயே முறையா பரதம் கத்துக்கிட்டது நான் மட்டும்தான்.

பரணி முத்துசாமிப் பிள்ளைகிட்டயும், முத்து பாகவதர்கிட்டயும் பரதம் கத்துக்கிட்டேன். அவங்கதான் எனக்கு குரு. பின்னாடி இந்த பரதமே என் வாழ்க்கையா அமையும்னு கனவுலகூட நினைச்சதில்லை'' என்று வியந்தபடி சொல்கிறார் செந்தில்.

பிரதோஷ நடனம்!

''எங்க ஊர்ல, பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டா பரதம் கத்துக் கொடுக்க ஆரம்பிச்சேன். அப்புறம் வெளியூர் பள்ளி களுக்குப் போய், பயிற்சி கொடுத்தேன்.அப்புறம் அனாதை ஆஸ்ரமங்களுக்கும் மலை கிராமங்களுக்கும் போய், அங்கே உள்ளவங்களுக்கும் பரதக் கலையின் மேன்மை யைச் சொல்லி, பயிற்சி கொடுத்தேன்.அதையடுத்து, கிராமியக் கலைன்னு சொல்லப் படுற ஒயிலாட்டம், காவடி ஆட்டத்தையும் கத்துக்கணும்னு தோணுச்சு. முறைப்படி அவற்றையும் கத்துக்கிட்டேன்.

இப்படியே போயிக்கிட்டிருந்த என் வாழ்க்கைல மிகப்பெரிய திருப்புமுனை ஏற்பட்டுதுன்னா, அது 90-ம் வருஷத்துலதான்! சுவாமி தயானந்த சரஸ்வதியை தரிசிக்கிற வாய்ப்பு கிடைச்சுது. அதுவரை என் வாழ்க்கைல எந்தக் குறிக்கோளும் இல்லாம ஓடிக்கிட்டிருந்தேன். என்னை உற்சாகப் படுத்தியதோடு மட்டும் இல்லாம, என்னைப் பக்குவப்படுத்தி, நல்வழி காட்டி, நெறிப்படுத்தியது தயானந்த சரஸ்வதி சுவாமிகள்தான். அவரோட வழிகாட்டுதலால, சென்னைக்கு வந்து, ரெண்டு வருஷம் பரதத்தின் நுணுக்கங்களை இன்னும் இன்னும் ஆழமாக் கத்துக்கிட்டேன்.

கணபதி ஸ்தபதியோட புத்தகம் உத்வேகம் கொடுத்துச்சு. அந்தப் புத்தகத்தில் இருந்து, நடனச் சிற்பத்தில் உள்ள முத்திரைகளைக் கூர்ந்து கவனிச்சு, உள்வாங்கிக்கிட்டேன். ஒருகட்டத்துல, அவர்கிட்டயே சிற்ப சாஸ்திரத்தையும் கத்துக்கிட்டது என் பாக்கியம்!'' என்று சொல்லி நெகிழ்கிறார் உடுமலை செந்தில்.

''கணபதி ஸ்தபதி, என்னை ரொம்பவே ஊக்கப்படுத்துவார். 'பிரணவ வேதம்’னு ஒரு புத்தகம். அதை அவர்தான் எனக்கு அறிமுகப்படுத்தினார். அதுல நடனங்கள் பற்றிய விவரங்கள் நிறைய உண்டு. முக்கியமா, பிரதோஷ தாண்டவம் பத்தின விவரங்கள், படங்கள், முத்திரைகள்னு படிக்கப் படிக்க, பிரமிச்சுப் போனேன். உள்ளே சிவனாரின் பிரதோஷ தாண்டவம் ஓடிக்கிட்டே இருந்துச்சு.

சென்னைலேருந்து சொந்த ஊருக்கு வந்தேன். அப்பத்தான், ஹரிஓம் பாட்டிங்கறவங்க என்னைத் துடியலூர் கோயி லுக்குக் கூட்டிட்டுப் போனாங்க. அவங்க பேர் லக்ஷ்மி ஸ்வாமிநாதன். ஆனா, ஹரிஓம் பாட்டின்னாதான் எல்லாருக்கும் தெரியும்.

பிரதோஷ நடனம்!

அன்னிக்குப் பிரதோஷம். அந்த பூஜைல கலந்துக்கிட்டு, ஸ்வாமியையும் நந்திதேவரையும் தரிசனம் பண்ணினப்போ, உள்ளுக்குள்ளே அப்படியொரு சிலிர்ப்பு... பூரிப்பு! இங்கே உள்ள உத்ஸவருக்காக ஒரு நடனம் ஆடணும்னு தோணுச்சு. பாட்டிகிட்ட சொன்னேன். சரின்னு சொன்னதோட மட்டுமில்லாம, அவங்களே பாட்டும் பாடினாங்க. உடனே நடனமாடினேன். அதுதான் பிரதோஷ வேளைல, கோயில்ல நடனமாடின முதல் நிகழ்ச்சி! 2001-ம் வருஷம் துவங்கிய இந்த பிரதோஷ நடனம், இதோ... 14 வருஷங்களா தொடர்ந்துக்கிட்டிருக்கு!'' என்று நெக்குருகிச் சொல்லும் செந்தில், இதுவரை 312 பிரதோஷ நாட்களில், கோயில் பிராகாரங்களில் நடனமாடியிருக்கிறார்.

முன்னதாக, எந்தக் கோயிலில் பிரதோஷ நடனம் ஆடுகிறாரோ, அந்தக் கோயிலின் ஸ்தல புராண விவரங்களையும் பெருமைகளையும் தெரிந்துகொண்டு, பிரதோஷ நடனத்தில் அந்தக் கோயிலின் பெருமையைப் பறைசாற்றும் விதமாகவும் ஆடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

''முதல் கட்டமா, என் சொந்த ஊரைச் சுற்றிலும், அதாவது  கோவையைச் சுற்றிலும் உள்ள கோயில்களில் பிரதோஷ நடனம் ஆடினேன். அடுத்து, திருவாவடுதுறை மற்றும் தருமபுர ஆதீனங்களைச் சேர்ந்த கோயில்கள்லயும் ஆடினேன். தஞ்சாவூரைச் சுற்றியுள்ள கோயில்கள்ல

பிரதோஷ நடனம்!

ஆடினேன். இந்த ரெண்டு ஆதீனகர்த்தாக்களும் என்னை ஆசீர்வதிச்சு, ஊக்கப்படுத்தினாங்க!'' என்று பெருமிதத்துடன் சொல்லும் உடுமலை செந்தில், பிரதோஷத்தின்போது பிரதோஷ தாண்டவம், மகா சிவராத்திரியின்போது மயான தாண்டவம், பிரளய தாண்டவம், சம்ஹார தாண்டவம், ஆருத்ரா தரிசனத்தின் போது ஆனந்தத் தாண்டவம் என்று விதம் விதமான தாண்டவங்கள் ஆடுவாராம்! ''நண்பர் கார்த்திக் கடம் வாசிக்க, அதற்கேற்ப நான் ஆடும் பிரதோஷ தாண்டவத்தைக் கண்டு கூட்டம் மெய்ம்மறந்து நிற்கும்'' எனச் சொல்லும்போது, உடுமலை செந்திலின் முகத்தில் அப்படியொரு பூரிப்பும் நிறைவும்!

''மேடையில் ஆடுறது வேற; கோயில் பிராகாரத்துல நடனமாடுறது வேற! ஸ்வாமிக்கு அபிஷேகம் முடிஞ்சு, அலங்காரம் செய்வதற்கான நேரத்துல ஆடுவேன். ஸ்வாமி புறப்பாடாகி, பிராகார வலம் வரும்போது ஆடுவேன். சில தருணங்கள்ல தேவாரம், திருவாசகம் பாடிக்கிட்டே ஆடுவேன். இதுக்காக எந்தச் சன்மானமும் நான் வாங்குறதில்லை. ஒரு ஆத்ம திருப்திக்காகவே ஆடுறேன். பக்தியும் சிவனாரோட அருளும் மக்களுக்குக் கிடைக்கணுங்கறதுதான் என் நோக்கம்'' என்று சொல்லும் உடுமலை செந்தில், தஞ்சைப் பெரிய கோயிலில் மட்டும் இரண்டு முறை நடனமாடியுள்ளார். சிவனாரின் பிரதோஷ தாண்டவக் காட்சிகள், அங்கே சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன என்று சரித்திர விவரமும் சொல்கிறார் உடுமலை செந்தில்.  

''ஒருமுறை, மயிலை ஸ்ரீகபாலீஸ்வரர் கோயில்ல ஆடினேன். ஆனா, சில காரணங்களால என்னால முழு ஈடுபாட்டோடு ஆடமுடியலை. மனசு உடைஞ்சுபோயிட்டேன். 'நாம ஏதோ தப்புப் பண்ணியிருக்கோம்போல. அதான், ஸ்ரீகபாலீஸ் வரருக்கு முன்னால சரியா ஆடமுடியாமப் போச்சு’ன்னு ரொம்பவே வருத்தப்பட்டேன்.

அதுக்குப் பிறகு, திருப்பதியில நடனமாடக் கூப்பிட்டிருந்தாங்க. போய் ஆடினேன். அதையடுத்து, திருவண்ணாமலைல நடனம். நடுவுல, திடீர்னு மயிலாப்பூர் சாயிபாபா கோயில்லேர்ந்து அழைப்பு! 'பாபா சமாதித் திருநாளில், நான்கு மாட வீதிகளிலும் நடனமாடணும்’னு கூப்பிட்டிருந்தாங்க. சரின்னு வந்தா, அன்னிக்குப் பிரதோஷம் வேற! திரும்பவும், ஸ்ரீகபாலீஸ்வரர் கோயில் நிர்வாகத்துக்கிட்ட பேசி, அன்னிக்குப் பிரதோஷ வேளைல ஆத்மார்த்தமா ஆடினேன் பாருங்க... அப்படியொரு ஆட்டம்! ஆடி முடிச்சதும், அப்படி யொரு மனநிறைவுக்கு ஆளானேன் அன்று! மறக்கவே முடியாத நிகழ்வு அது!'' என்று கண்ணீர் பொங்கச் சொல்கிறார் உடுமலை செந்தில்.

பக்தியை வளர்க்கவும் செழிக்கச் செய்யவும் இப்படியான அடியார்கள் தங்கள் பங்குக்கு ஒவ்வொரு விதமாக சேவையாற்றி வருகிறார்கள். ஒரு பிரதோஷ வேளையில், உடுமலை உங்கள் ஊர் சிவாலயத்துக்கும் நடனமாட வருவார். அந்த நடனத்தை அவசியம் சென்று பாருங்கள்... சிலிர்த்துப் போவீர்கள்!

படங்கள்: கே.குணசீலன், ஆ.முத்துகுமார்