Published:Updated:

சக்தி சங்கமம்

'காமாட்சி உன் நாக்குல குடியிருக்கா!’ காஞ்சி மகானின் அருளாசிவில்லிசைக் கலைஞர் சுப்பு ஆறுமுகத்துடன் வாசகர்கள் கலந்துரையாடல் - 2

''காஞ்சிப் பெரியவரை பலப்பல முறை சென்று தரிசித்திருப்பீர்கள். அவரின் அருளுக்குப் பாத்திரமாகியிருப்பீர்கள். பெரியவா தங்களுக்குப் பிரத்யேகமாக வழங்கிய அருளுரை, அறிவுரையை எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்களேன்?'' என்று வாசகி உஷா பாலசுப்ரமணியன் கேட்டதும், சட்டென்று முகம் மலர்கிறது சுப்பு ஆறுமுகத்துக்கு. காஞ்சிப் பெரியவரைப் பற்றிப் பேசும்போதெல்லாம் சுப்பு ஆறுமுகத்தின் முகத்தில் அலாதி உற்சாகமும், குரலில் ஒரு பரவசமும் நெகிழ்ச்சியும் இழையோடுவதை உணரமுடிகிறது.

• ''காஞ்சி மகா சுவாமிகளை 1963-ல் தரிசிக்கும் பாக்கியம் கிடைச்சுது. மடத்தில் என் கச்சேரி நடந்தது. அடுத்த நாள் பெரியவா என்னிடம், 'இதுக்கு முன்னே காஞ்சிபுரம் வந்திருக்கயா?’ என்று கேட்டார். அறிஞர் அண்ணா அவர்களைப் பார்ப்பதற்காக கலைவாணர் என்னை காஞ்சிபுரம் அழைத்து வந்திருந்தார். அந்தச் சம்பவத்தைச் சொன்னேன். உற்றுப் பார்த்துச் சிரித்தார். அந்தச் சிரிப்புக்கான அர்த்தம் பிறிதொரு நாளில்தான் எனக்குத் தெரிய வந்தது. பின்பு, 'உன் கச்சேரியில் புல்லாங்குழல் உண்டா?’ என்று கேட்டார். 'அது வட இந்திய வாத்தியமாச்சே! வில்லுப்பாட்டு, தமிழகத்தில் திருநெல்வேலிப் பக்கம் உண்டான கலை! அதனால புல்லாங்குழல் வெச்சுக்கலை!’ என்றேன். கொஞ்ச நேரம் என்னையே மௌனமாகப் பார்த்துக்கொண்டிருந்தவர், பிறகு ஏதோ நினைத்துக்கொண்டு, மறுபடி சிரித்தார். பெரியவா சிரித்தால், காஞ்சி காமாட்சியே நம்மைப் பார்த்துக் கருணையோடு சிரிக்கிற மாதிரி இருக்கும். அதை அனுபவிச்சவங்களுக்குத்தான் தெரியும். சிறிது நேரம் கழித்து, 'ஆமாமாம்... அது கிருஷ்ணனுடைய வாத்தியமாச்சே!’ என்றார் பெரியவா.

சக்தி சங்கமம்

உடனே, அவர் முன் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தேன். 'பெரியவா! நான் வட இந்திய தென்னிந்திய பேதம் பார்க்கிறேன். நீங்களோ சர்வ வியாபியான கிருஷ்ணனுடைய வாத்தியம் அது என்று சொல்லிவிட்டீர்கள். எனக்கு திசைதான் தெரிந்தது. உங்களுக்கோ தெய்வம் தெரிகிறது. இன்னும் எத்தனை தூரம் கடந்து வந்தாலும் உங்கள் பக்கத்தில்கூட வரமுடியாது என்பதை உணர்ந்து கொண்டேன்’ என்றேன். மறுபடியும் சிரித்து, கைகளை உயர்த்தி, 'காமாட்சி உன் நாக்கில் குடியிருக்காடா. நீ க்ஷேமமா இருப்பே!'  என்று ஆசிர்வதித்தார்.

இன்னொரு சந்தர்ப்பத்தில், 'கலவை’யில் எனது வில்லுப்பாட்டுக் கச்சேரி நடந்தது. அப்போது பெரியவா பக்தர்களுக்கு விபூதி கொடுப்பதைக்கூட  நிறுத்திவிட்டு, சட்டென்று நான் பாடுவதையே உற்றுப்பார்த்தார். எனக்கோ உள்ளுக்குள் ஆச்சரியம்...  எதற்காக இப்படி அந்த மகான் நம்மையே பார்த்துக்கொண்டிருக்கிறார் என்று! கச்சேரி முடிந்ததும் தோளில் இருந்த அங்கவஸ்திரத்தை எடுத்து இடுப்பில் பவ்யமாகக் கட்டிக்கொண்டு, பிரசாதம் வாங்க அவரிடம் சென்றேன். 'நான் ஏன் உன்னை அப்படி உத்துப் பார்த்தேன்னு யோசிச்சியோ? அது வேற ஒண்ணுமில்ல. உன் வில்லைப் பார்த்தால், எனக்கு ஸ்ரீராமன் தெரியறார்;  உடுக்கையைப் பார்த்தால், சிவன் தெரியறார். வில்லைப் பார்த்தால், ராமேஸ்வரம் தெரியறது; உடுக்கையைப் பார்த்தால், காசி தெரியறது. வில் தென்னிந்தியான்னா, உடுக்கை வட இந்தியா! சைவ- வைஷ்ணவ ஒற்றுமையை, தேசிய ஒற்றுமையையெல்லாம் உன் கையிலேயே வெச்சிண்டிருக்கியே, அதைத்தான் நான் உத்துப் பார்த்தேன்!’ என்றார். அவரது விளக்கத்தைக் கேட்டுச் சிலிர்த்துப் போனேன்'' என்ற சுப்பு ஆறுமுகம், தொடர்ந்து பெரியவாளின் அருளாடல்களைப் பற்றி உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார்...

''ஒருமுறை மனசு நிறைய கவலையோட கலவைக்குப் போனேன். பெரியவரை தரிசனம் பண்ணி, நமஸ்கரிச்சேன். மனசுக்குள் 'காமாட்சித் தாயே! என் கவலைகளை உன் காலடியில் வைக்கிறேன்’னு அழுதேன். உடனே பெரியவா, 'உன் கவலைல இருக்கிற 'வ’வை அழிச்சுட்டு, அந்தக் காமாட்சியே உன் நாக்குல வந்து உக்கார்ந்துண்டுட்டாடா! நீ க்ஷேமமா இருப்பே!’ன்னு ஆசிர்வாதம் பண்ணினார் மகா பெரியவா. சிலிர்த்துப் போயிட்டேன். என் கவலைகளைப் போக்கி, கலையைத் தந்திருக்கிறாள் காமாட்சி என்பதை எத்தனை நுட்பமாகச் சொல்லியிருக்கிறார் பாருங்கள்! பெரியவாளின் ஆசிர்வாதத்தால்தான் நானும் என் குடும்பமும் இன்னிக்கு வரைக்கும் நல்லா இருக்கோம்'' என்றார் நெகிழ்வுடன். தொடர்ந்து...

''ஒருமுறை, காஞ்சிபுரத்தில் ஒரு டாக்டர் வீட்டு கல்யாணத்தில் கச்சேரி முடித்துவிட்டு, நேரம் இருந்ததால் மடத்துக்குச் சென்று பெரியவாளை தரிசித்தேன். 'எங்கே இவ்வளவு தூரம்?’ என்று விசாரித்தார். எனக்கு மனத்தில் ஒன்றும் வைத்துக் கொள்ளத் தெரியாது. உள்ளதை உள்ளபடி சொன்னேன். கருணை வெள்ளமெனச் சிரித்தவர், 'சத்தியம் பேசறேடா! உனக்கு ஒரு குறைவும் வராது. இங்கே பட்டுப் புடவை, பட்டு வேஷ்டி வாங்க வரவாள்ளாம், பெரியவாளைத்தான் பார்க்கப் போயிருந்தேன்னு சொல்லிண்டிருக்கா!’ என்று சொல்லிவிட்டு, மீண்டும் குழந்தையெனச் சிரித்தார். அப்போதுதான், அன்று நான் அறிஞர் அண்ணாவைப் பார்க்கக் காஞ்சிபுரம் வந்ததாகச் சொன்னபோது, பெரியவா உற்றுப் பார்த்துப் புன்னகைத்ததன் அர்த்தம் புரிந்தது. பெரியவா நம்மிடம் எதிர்பார்ப்பதெல்லாம் சத்தியம், சத்தியம், சத்தியம் மட்டுமே!'' என்றார்.

சக்தி சங்கமம்

''வில்லுப்பாட்டின் மூலமாக தெய்வத் திருமணங் கள் பற்றிய கதைகளைச் சொல்கிறீர்கள். அதே போன்று, மக்கள் பின்பற்ற வேண்டிய கடமைகள், நல்லொழுக்கங்கள் குறித்தும் சொல்லலாமே?'' என்று வாசகர் ரகுராம் கேட்டார்.  

•  ''நிறையச் சொல்லியிருக்கிறேனே! தவிர, தெய்வத் திருமணங்கள் பற்றிய கதைகளே ஆனாலும், அவற்றிலிருந்து மனிதனுக்கான கடமைகள், நல்லொழுக்கங்கள் பற்றிய விஷயங்களை எடுத்துக் கொள்ளலாமே? உதாரணமாக, திருப்பதி வேங்கடேசப்பெருமாள் கல்யாணம் என்று எடுத்துக்கொண்டால்... சிரமப்பட்டாவது கடன் உடன் வாங்கித் திருமணம் செய்யுங்கள்; செய்த பிறகு, சீக்கிரமாக வட்டியையும் முதலையும் திருப்பிக் கட்டிவிடுங்கள்; இல்லையென்றால், வட்டி கட்டி மாளாது என்கிற அறிவுரை இருக்கிறதே! வள்ளி கல்யாணம் என்றால், உயர்ந்த குலத்தைச் சேர்ந்த முருகப் பெருமான், தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்த வள்ளியை மணம் புரிந்தார். பின்னால் சாதிச் சண்டையெல்லாம் வரப் போவது தெரிந்துதான், அது கூடாது என்று முன்கூட்டியே  முருகப்பெருமான் உதாரணமாய்த் திகழ்ந்திருக்கிறார். இது காதல் திருமணம் மட்டுமல்ல; கலப்புத் திருமணமும்கூட! கந்த புராணத்தின் தத்துவமே சாதி சமய ஒற்றுமைதான்.

ஆக, தெய்வத்திருமணக் கதைகளைச் சொல்லும் போதுகூட, அவற்றிலிருந்து ஜனங்களுக்குத் தேவையான அறிவுரைகளையும், அறவுரை களையும் எடுத்துச் சொல்லி, அவர்களை நல்வழிப்படுத்தவே வில்லுப்பாட்டைப் பயன் படுத்துகிறோம். அறிவுரை களை நேரடியாகச் சொன் னால் எடுத்துக்கொள்ளமாட் டார்கள். அதனால் நாசூக் காக, சூட்சுமமாகத்தான் சொல்ல வேண்டும். அப்படி இங்கிதமாகச் சொல்வதுதான் வில்லுப்பாட்டுக் கச்சேரி.''

''சுதந்திரப் போராட்ட வீரர்களின் கதைகளை வில்லுப்பாட்டில் சொல்லியிருக்கிறீர்களா?''  - கேட்டவர் வாசகர் கிருஷ்ணன்.

• ''வ.உ.சி., மகாகவி பாரதி போன்றோரின் கதைகளை வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளாகக் கொடுத்திருக்கிறேன். பாரதி ஒருமுறை தன் மனைவியிடம், 'எல்லோருக்கும் தெரியும்படியாக அரிசி இல்லையென்று சொல் லாதே! 'அகரம் இகரம் என்று சொல்’ என்றாராம். வீட்டில் குந்துமணி அரிசி இல்லை என்பதை எப்படி நாசூக்காகச் சொல்லவேண்டும் என்று மனைவிக்குக் கற்றுத் தந்தாரே தவிர, அரிசிக்கு என்ன வழி என்று யோசிக்கவில்லை பாருங்கள்... எவ்வளவு பெரிய கவிஞர் அவர்!  

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளை வாழ்வில் ஒரு நிகழ்ச்சி. ஓர் ஆலை மூடப்பட்டு, தொழிலாளர்கள் பசியில் வாடுகிறார்கள். வேறு வழியின்றி, மனைவியிடம் அவளின் நகைகளைக் கழற்றித் தரச் சொல்லிக் கேட்கவேண்டும் என்று நினைத்தபடியே வீட்டுக்குள் வருகிறார். அங்கே அவரின் மனைவி, ஏற்கெனவே நகைகளைக் கழற்றி வைத்துக்கொண்டு அவரிடம் தருவதற்குத் தயாராகக் காத்திருக்கிறார். என்ன உத்தமமான தம்பதி அவர்கள்! இப்படி நம் தேசத் தலைவர்களது  வாழ்க்கையை வில்லுப்பாட்டில் சொல்லும்போது, உயர்ந்த கருத்துக்களையெல்லாம் மக்களிடம் சுலபமாகக் கொண்டு செல்ல முடியும்.''

சக்தி சங்கமம்

''மறக்கமுடியாத இசை நிகழ்ச்சி என்று எதைச் சொல்வீர்கள்?'' என்று கேட்டார் வாசகர் ராமமூர்த்தி.

•  ''நிறையவே உண்டு. குறிப்பா, என் மனசை பாதிச்ச ஒரு நிகழ்ச்சியைச் சொல்றேன். இருபது இருபத் தைந்து வருடங்களுக்கு முன்னால, மதுராந்தகம் அருகே, 'பாரதமாதா தொழு நோயாளிகள் காப்பகம்’னு ஓர் அமைப்பு இருந்தது. அதன் அமைப்பாளர்களில் ஒருவர் என்னிடம் வந்தார். ரொம்பவே தயங்கியபடி, 'எவரும் வந்து செல்வதற்கே தயங்குகிற, கூச்சப்படுகிற, பயப்படுகிற அமைப்புதான் எங்களுடையது. ஆனாலும், எங்களுக்கு ஓர் ஆசை. இங்கே நீங்கள் வந்து கச்சேரி செய்தால் எங்களுக்குச் சந்தோஷமாக இருக்கும். இங்கு இருக்கும் நோயாளிகள் இன்னும் எத்தனை காலம் உலகில் இருப்பார்களோ,  தெரியாது. நாங்கள் உங்களைக் கட்டாயப்படுத்த விரும்பவில்லை’ என்றார்.

சுதந்திரப் போராட்டத்தில், பிரிட்டிஷாரால் கைது செய்யப்பட்டு, ஜெயிலுக்குப் போகும்போது நல்ல ஆரோக்கியமாக இருந்து, வெளியில் வரும்போது தொழுநோயாளியாக வந்தவர் சுப்பிரமணிய சிவா. அவர்தான் அந்த பாரதமாதா தொழுநோயாளிகள் காப்ப கத்தைத் தொடங்கி வைத்தவர். அங்கிருந்து ஒருவர் என்னைத் தேடி வந்து வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடத்தச் சொல்லிக் கேட்கிறார் என்றதும், சிலிர்த்துப் போனேன். 'ஒரு பைசாகூட சன்மானமாக வாங்க மாட்டேன். மாலை மரியாதைகளெல்லாம் கூடாது. அவர்களே போதும் என்று சொல்லும் வரைக்கும் பாடுகிறேன்’ என்று நிபந்தனை விதித்தேன். அதன்படி, அங்கே வில்லுப்பாட்டு நிகழ்ச்சியை நடத்தினேன். என்னுடன் என் மகள் பாரதி, மகன் காந்தி இவர்களையும் அழைத்துச் சென்றிருந்தேன்.  

வில்லுப்பாட்டில் மகாத்மா காந்தியின் கதையைச் சொன்னேன்.  காந்தி,  தொழுநோயாளிக்கு சேவை செய்திருக்கிறார். அருணகிரிநாதர், தொழுநோயால் அவதிப்பட்டிருக்கிறார்.  இதையெல்லாம் சொன்னபோது அவர்கள் நெகிழ்ந்துபோனார்கள். அங்கு, தொழுநோயால் அவ்வளவாக பாதிக்கப்படாத ஒருவர்தான் சமையல் செய்தார். அவர் வடை செய்துகொண்டு வந்து தட்டில் கொடுத்தார். ஒரு வடையை எடுத்துச் சாப்பிட்டேன். 'அன்பு மட்டும் இருந்தால் யாரையும் எந்தத் தீங்கும் ஒன்றும் செய்யாது’ என்று சொல்லி விடைபெற்றேன். இது என்னால் மறக்கமுடியாத, நெகிழ்ச்சியான அனுபவம்!'' என்று சொல்லும்போதே குரல் தழுதழுக்கிறது சுப்பு ஆறுமுகத்துக்கு.

''ஆன்மிகம், தேசியம் எனத் தனித் தனியாக நிகழ்ச்சிகள் செய்திருக்கிறீர்களா?'' என்று வாசகர் ஜெயமூர்த்தி கேட்டார்.

•  ''ஆன்மிகம், தேசியம் எனப் பிரிக்க வேண்டியதில்லை. இரண்டுமே ஒன்றை ஒன்று சார்ந்ததுதான். ஆன்மிகம் சார்ந்த பாடல் கள் எல்லாமே தேசியச் சிந்தனை உள்ள பாடல்களாகவும் இருக்கும். 'பாரதமாதா திருப்பள்ளியெழுச்சி’ என்று பாரதியார் பாடியிருக்கிறாரே! தேசபக்திதான் தெய்வபக்தி! நாவுக்கரசர் பாடிய 'நாமார்க்கும் குடியல்லோம்’ என்பதன் தொடர்ச்சியாக, 'பரிபூரணனுக்கே நாம் அடிமை செய்வோம்’ என்று முடிக்கிறார். 'காலடி முதல் காஞ்சி வரை’ என்று ஆதிசங்கரர் முதல் பரமாச்சார்யாள் வரை பாடும்போது இந்தியா முழுவதையும் வலம் வரலாம்.''

சக்தி சங்கமம்

''உங்களுடன் பேசிக்கொண்டிருப்பதில் பல நல்ல விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடிகிறது. நீங்கள் பழகிய பிரமுகர்கள் குறித்து ஏதேனும் சுவாரஸ்யமான சம்பவங்கள், அனுபவங்கள் இருந்தால் எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்களேன்'' என்று ஆர்வம் பொங்கக் கேட்டார் பாலசுப்ரமணியம்.

•  ''அப்துல்கலாம் அவர்கள் குடியரசுத் தலைவராக இருந்தபோது, சங்கீத நாடக அகாடமியின் புரஸ்கார் விருதை அவரது தங்கக்  கரங்களால் பெற்றேன். அப்போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. குடியரசுத் தலைவரிடம் எப்படி நடந்துபோய், எப்படி வாங்கவேண்டும் என்றெல்லாம் முன்னதாக ஒத்திகை பார்த்திருந்தனர். ஆனால், மேடையில் நின்றிருந்த அவர் என்னைப் பார்த்ததும் 'வாங்க’ என்றார். பொன்னாடை போர்த்தியவுடனே, குனிந்து என்னிடம், 'ஒரு பாட்டு பாடுங்க’ என்றார். திடுமென்று அவர் இப்படிக் கேட்டதும், முதலில் எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. 'இன்று மாலை ராஷ்டிரபதி பவனில் ஸ்பெஷல் கச்சேரியே இருக்கிறதே’ என்று தயங்கினேன். 'அது இருக்கட்டும். இப்ப எனக்காகப் பாடுங்க’ என்றார். 'தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லினில் பாட வந்தருள்வாய் கலைமகளே...’ என்று பாடத் தொடங்கியதும், சபையில் இருந்த அத்தனை பேரும் தாளம் போட ஆரம்பிச்சிட்டாங்க. எனக்கு இந்தி தெரியாது. அதனால் தமிழிலேயே, 'மகாத்மா காந்தி போலவே மாமனிதர் வந்திருந்தார். டாக்டர் அப்துல்கலாம் வாழிய வாழியவே’ என்று முடித்தேன். ஒரே அப்ளாஸ்! அன்று மாலை ராஷ்டிரபதி பவனில் விருந்து கொடுத்தார்கள். அங்கும் கச்சேரி செய்தோம்.

அதேபோல், நடிகர் திலகம் சிவாஜி வீட்டில் ஐயப்ப பூஜை. மாடியில் பந்தல் போட்டு, என் கச்சேரி! மிக எளிமையான குடும்ப விழாவாக நடந்தது. வெளி ஆட்கள் யாரும் இல்லை. கொஞ்ச நேரம் கேட்டுவிட்டுப் போகலாம் என்று வந்த சிவாஜி,  முழுக் கச்சேரியையும் அமர்ந்து ரசித்துக் கேட்டுவிட்டு, வாழ்த்தினார். 'என் உடல்நிலை சரியில்லை. ரொம்ப நேரம் உட்கார முடியலை. இருந்தாலும், உன் கச்சேரியை முழுக்கக் கேட்காமல் கிளம்ப மனசில்லை. இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு’ என்றார். ''

''கடவுள் நம்பிக்கை, மனிதனுக்கு எந்த அளவுக்கு அவசியம் என நினைக்கிறீர்கள்?''- வாசகர் காமேஸ்வரனின் கேள்வி இது.

•  ''கடவுள் இருக்கிறாரா என்று கேட்க வைப்பதே கடவுள்தானே!  கடவுள் நாம் விரும்பியதையெல்லாம் தருகிறாரோ இல்லியோ... நமக்குத் தேவையானதையெல்லாம் நிச்சயம் தந்தே தீருவார். அப்படி கடவுள் எனக்குக் கொடுத்த முக்கியமான வரம் - என் குடும்பம்.

என் மனைவி மகாலட்சுமிக்கு தினமும் டைரி எழுதும் வழக்கம் உண்டு. என் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களையெல்லாம் தொகுத்து, 'உண்மையுள்ள ஒரு கவிஞன்’ என்ற பெயரில் ஒரு புத்தகமாக அவள் எழுதியிருக்கிறாள். வாழ்க்கையில் வறுமையை அனுபவிப்பது ஒரு பெரிய விஷயமல்ல; உழைப்பால் அதிலிருந்து மீண்டுவிடலாம். ஆனால் வறுமையிலும் செம்மையாக இருக்க வேண்டும். அதனால் கிடைக்கும் நிம்மதி இருக்கிறதே,  அதுதான் அருமையான விஷயம். அதற்கு கணவனும் மனைவியும் நம்பிக்கையோடு இருக்கவேண்டும். இந்த நம்பிக்கை இருந்தால் வாழ்க்கையில் நடப்பது அனைத்தும் நல்லவையே! அந்தப் புத்தகத்தின் சாராம்சம் இதுதான்!'' என்று சொல்லி கலந்துரையாடலை சுப்பு ஆறுமுகம் நிறைவு செய்தபோது, நல்லதொரு பல்கலைக்கழகத்தில் சில காலம் பயின்ற பூரிப்பையும், மன நிறைவையும் வாசகர்கள் பெற்றார்கள் என்றால் மிகையில்லை.

தொகுப்பு: பாரதி மித்ரன்

படங்கள்: 'க்ளிக்’ ரவி

''காஞ்சிப் பெரியவர் பற்றி நீங்கள் வில்லிசைக் கச்சேரி செய்ததுண்டா?''

- ஜெயஸ்ரீ நாராயணன், நெய்வேலி

•  ''ஓ... செய்திருக்கிறேனே! 'காலடி முதல் காஞ்சி வரை’ என்ற தலைப்பில், பெரியவா பிறந்த  விழுப்புரத்திலேயே கச்சேரி செய்திருக்கிறேன்.''

பாமரர்களுக்கும் ஆன்மிகம் வசப்படுமா?

- ஆர்.கனகராஜ், திருவண்ணாமலை.

•  ''நிச்சயமாக! பல ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு நிகழ்வைச் சொல்கிறேன். வாடிக்கையாக ஒரு சைக்கிள் ரிக்ஷாவில்தான் அடிக்கடி செல்வேன். அவர் தன் வண்டியில் சுவாமி விவேகானந்தரின் கம்பீரத் தோற்றம் கொண்ட படத்தை ஒட்டி வைத்திருந்தார். அவரிடம் ஒருநாள், 'ஏம்பா... இவர் யார்னு தெரியுமா?’ என்று கேட்டேன்.

'தெரியாது சாமி!’ன்னார்.

'அப்புறம் எதுக்கு இவர் படத்தை இங்கே ஒட்டி வெச்சிருக்கே?’ என்று கேட்டேன்.  

'சாமி, இந்தப் படம் ஒரு காலண்டர்ல கிடைச்சுது. எடுத்து கட் பண்ணி ஒட்டி வெச்சுக்கணும்னு தோணிச்சு. ஒட்டி வச்சுக்கிட்டேன். அவரு யாரா இருந்தா என்ன சாமி? இந்தப் படம் வெச்சதிலேர்ந்து சத்தியம் பேசணும்னு தோணுது. பொய் பேசவே தோணலை. இவரைப் பார்க்கப் பார்க்க உடம்பே சிலிர்த்துப் போகுது. ஒரு தெகிரியம் வருது. அதென்னவோ சாமி... சொல்லத் தெரியலை. தினம் தினம் அவரைக் கும்பிட்டுட்டுத்தான் வண்டியை எடுக்கறேன்’னார். பிரமிச்சுப் போயிட்டேன். ஆன்மிகம் என்பது வேறில்லை; அது ஓர் ஆன்ம அனுபவம்! அது அவருக்கு வாய்ச்சிருக்கு.

சக்தி சங்கமம்

அவரிடம், 'அவர்தான் சுவாமி விவேகானந்தர்’னு சொன்னேன். உடனே அவர், 'எங்கே இருக்கார் சாமி? ஒரு நா அவராண்டை என்னைக் கூட்டிட்டுப் போறியா?’ன்னார். 'மயிலாப்பூர்ல இருக்கார். அவசியம் ஒரு நாள் கூட்டிட்டுப் போறேன்’ என்றேன். அதன் படியே அவரை ராமகிருஷ்ண மடத்துக்கு அழைத் துக்கொண்டு போய், ராமகிருஷ்ணர், விவே கானந்தர் பற்றி எளிமையாக எடுத்துச் சொன்னேன். 'விவேகானந்த சுவாமிஜிக்கு ஜெய்!’ என்றார் அவர் உணர்ச்சிப் பெருக்குடன்!

அடுத்த இதழில்... சக்தி விகடன் வாசகர்களுடன் கலந்துரையாடுகிறார் 'தி ஹிந்து கார்ட்டூனிஸ்ட்’ ஓவியர் கேஷவ்