மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அருட்களஞ்சியம்

அருட்களஞ்சியம்

அருட்களஞ்சியம்

திருமுருகாற்றுப்படை, 'இழுமென இழிதரும் அருவிப் பழமுதிர் சோலை மலைகிழவோனே!’ என்று நிறைவடைகிறது. அந்தத் தலத்தைப் பார்க்க, மதுரைக்கு வரவேண்டும். இப்போது அழகர் மலை என்று வழங்கும் இடமே இரண்டு அழர்களுக்கும் உரிய தலமாக விளங்குகிறது. ஒர் அழகர் கள்ளழகர் என்று சொல்லும் சுந்தரராஜப் பெருமாள், மற்றும் ஒருவன், 'என்றும் இளையாய் அழகியாய்’ என்று போற்றும் முருகன்.

மதுரைக்கு வடக்கே ஏறத்தாழ பன்னிரண்டு மைலில் இருக்கிறது அழகர் கோயில். இந்தக் கோயில், அடிவாரத்தில் இருக்கிறது. பச்சைப் பசேலென்று காட்சிகளுடன் மலையும் அழகாகவே இருக்கிறது.  சோலைமலை, திருமாலிருஞ்சோலை மலை, திருமாலிருங்குன்றம் என்றும் இந்த மலைக்குப் பெயர்கள் உண்டு.

பரிபாடல் இதன் புகழைப் பாடுகிறது. கீழுள்ள அழகர் கோயிலில் பதினெட் டாம் படிக் கறுப்பண்ண சுவாமி இருக்கிறார்.அவருக்கு வடிவம் இல்லாவிட்டாலும் பதினெட்டுப் படிகளுக்கு மேல் அவர் இருந்து இந்தத் தலத்தைக் காவல் புரிவதாக ஐதீகம்.

ராஜ கோபுர வாசல் எப்போதும் மூடி இருக்கும். கறுப்பண்ண சுவாமியின் சந்நிதிக்கு வடக்கேயுள்ள வாசல் வழியாகவே கோயிலுக்குள் செல்ல வேண்டும். இரண்டாவது பிராகாரத்தில் கல்யாண சுந்தரவல்லித் தாயாரைத் தரிசிக்கிறோம். மகா மண்டபத்தில் வலம்புரி விநாயகர் இருக்கிறார். அங்கே விபூதிப் பிரசாதம் கூடக் கிடைக்கிறது. கர்ப்பக்கிருகத்தில் எழுந்தருளியுள்ள திருமால் நெடுமாலாக விளங்குகிறார். இவரைப் பரமசுவாமி என்று அழைக்கிறார்கள். உற்சவ மூர்த்தியே சுந்தரராஜப் பெருமாள்.

மலைக்கு மேல் இரண்டு மைல் தூரத்தில் சிலம்பாறு இருக்கிறது. இதை நூபுரகங்கை என்றும் சொல்வர். இதற்குப் போகும் வழியில் முன்பு வேல் பொறித்த சிலை ஒன்றை மக்கள் வழிபட்டு வந்தனர். அதுவே பழமுதிர்சோலை மலையாகிய ஆறாவது படைவீடு என்று நம்பி வணங்கினர். அங்கே இப்போது ஒரு முருகன் கோயில் எழுந்திருக்கிறது. இங்கே முருகன் சந்நிதி முன்பு இருந்ததென்பதற்குத் திருப்புகழ் சான்று தருகிறது.

'ஆயிர முகங்கள் கொண்ட நூபுர மிரங்கு கங்கை
      ஆறமர லந்தலம்பு துறைசேர...
சோதியின் மிகுந்த செம்பொன் மாளிகை விளங்குகின்ற  
     சோலைமலை வந்துகந்த பெருமாளே...’

என்று நூபுரகங்கையையும் சோலை மலையையும் இணைத்து முருகனைப் பாடுகிறார் அருணகிரிநாதர். சிலப்பதிகாரத்தில் இந்தக் குன்றத்தில் புண்ணிய சரவணம் என்ற பொய்கை இருந்ததாகவும், அதில் மூழ்குகிறவர்களுக்கு இந்திரன் இயற்றிய வியாகரணமாகிய ஐந்திரத்தில் மிகு புலமை உண்டாகும் என்றும் ஒரு செய்தி வருகிறது. முருகன் எழுந்தருளியுள்ள தலங்களில் எல்லாம் சரவணப் பொய்கை இருக்கும். அந்த வகையில் இங்கே சரவணம் என்ற பொய்கை இருந்ததென்று தெரிவதனால், முருகனின்  திருக்கோயிலும் இருந்திருக்க வேண்டும் என்று தெளியலாம். திருமுருகாற்றுப்படையில் இங்குள்ள அருவியின் வருணனை அழகாக அமைந்துள்ளது. மாமனாகிய அழகனையும் மருமகனாகிய அழகனையும் தரிசித்துக்கொண்டு,

''ஆரும் இணையில் அழகா, முருகாபந்
தாரணியும் மார்பா. தனிமுதல்வா - காரணிந்து
மேயதிருச் சோலை மலையுறையும் வித்தகநின்
தூயமலர்ப் பாதம் துணை'' என்று போற்றுவோம்.

அருட்களஞ்சியம்

...................

1971 - விகடன் தீபாவளி மலரில் இருந்து...

தகவல்: விகடன் ஆசிரியர் குழு; ஓவியம்: ஸிம்ஹா

மூன்று சபதங்கள்!

ஒர் உயர்ந்த லக்ஷியத்தையோ உலக க்ஷேமத்தையோ அடிப்படையாகக் கொண்ட சபதங்கள் சிரஞ்ஜீவித்துவம் அடைந்துவிடுகின்றன.

அருட்களஞ்சியம்

பீஷ்மர் சபதம்: சந்தனு என்னும் மன்னன் கங்கைக் கரையில் பரிமளகந்தி என்ற பரதவர் தலைவன் மகளின் அழகுக்கும் பருவத்துக்கும் நயத்துக்கும் உள்ளம் பறிகொடுக்கிறான். ஆனால், தன் மகள் வயிற்றுச் சந்ததியினரே அரசாள வேண்டுமென்று செம்படவர்கோன் ஒரு நிபந்தனை போடுகிறான்.

இதைக் கேள்வியுற்ற இளவரசன் தேவ விரதன் அவனிடம் சென்று, ''பரிமளகந்தியின் சந்ததியே ஆளட்டும்; என் தந்தையின் பொருட்டு நான் உலகாட்சியை வெறுக்கிறேன். மூவர் அறிய, தேவர் அறிய, யாவரும் அறிய நான் பிரம்மசாரியாக இருப்பேன்'' என்று சபதம் ஏற்கிறான். பீஷ்மர் சபதம் என்றால் ஒருகாலும் தவறாதது என்று பொருள்!

பாஞ்சாலி சபதம்: பீஷ்மர், துரோணர், விதுரர் ஆகிய பெரியோர்கள் கூடிய ராஜ சபையிலே துச்சாதனன் பாஞ்சாலியை துகிலுரித்தான். தலை குனிந்து துடிதுடிக்கும் உள்ளங்களுடன் வீற்றிருந்த பாண்டவர்களின் துணை அவளுக்கு இல்லை. கண்ணனை அழைத்தாள்.வற்றாத துகில் கொடுத்து துச்சாதனன் கைகளுக்கு ஓயாத வேலை தந்தான் பக்தவத்ஸலன். அந்தச் சூழலிலே சபதம் செய்தாள் பாஞ்சாலி:

''இந்தத் துரியோதனன் கும்பல் படுகளத்தில் வீழ்ந்தாலன்றி, என் கூந்தலை நான் முடிப்பதில்லை.!''

அவள் சபதம் நிறைவேறிற்று.

பரதனின் சபதம்: பித்ருவாக்ய பரிபாலனம் செய்து பதினான்கு வருஷம் வனவாசம் செய்தான் ஸ்ரீராமன். ''அந்தப் பதினான்கு வருஷமும் ராமனுடைய பாதுகை களை பூஜித்துக்கொண்டு, நந்திக் கிராமத்திலேயே அவன் வரவுக்காகக் காத்திருந்து, அவனுடனே அயோத்தியில் பிரவேசிப்பேன்'' என்று சபதம் செய்தான் பரதன். ராஜகுமாரன் எனினும் ராஜ யோகங்கள் அனைத்தை யும் அறவே துறந்து, துறவியின் கோலத்தில் கடும் விரதத்தை அனுஷ்டித்தான். அதன்படி, அவனே ராமனை பட்டாபிஷேகத்துக்கு அழைத்துச் செல்ல, பிரதிக்ஞை நிறைவேறியது.

1953 - விகடன் தீபாவளி மலரில் இருந்து...

தகவல்: விகடன் ஆசிரியர் குழு; ஓவியம்: ஸிம்ஹா

அருட்களஞ்சியம்

..................

அனுமன் கூறிய அடையாளம்

அருட்களஞ்சியம்

அல்லியம் பூ மலர்க் கோதாய் ! அடிபணிந்தேன் விண்ணப்பம்;
சொல்லுகேன் கேட்டருளாய், துணை மலர் கண் மடமானே
எல்லியம் போது இனிதிருத்தல் இருந்தது ஓர் இடவகையில்
மல்லிகைமா மாலைகொண்டு அங்கு ஆர்த்ததும் ஓர் அடையாளம்.

- பெரியாழ்வார் திருமொழி

கலைஞர்களுக்கும் கவிஞர்களுக்கும் பக்தர்களுக் கும் ராம கதை ஒரு கற்பகத்தரு. அதன் அடியில் அமரும்போது அவர்களுக்கு அருமையான கற்பனைகள் பல தோன்றும். அவ்வாறு பெரியாழ்வாரின் கற்பனை யில் தோன்றிய ஒரு ரஸமான காட்சி...

சீதாவை அசோகவனத்தில் கண்ட ஆஞ்சநேயர் அடையாளம் கூறுகிறார்: 'தேவி! தாங்களும் ரகு வீரரும் ஒரு நாள் பந்தயம் போட்டு ஏதோ விளையாடினீர் களாம். அதில் ரகு வீரர் தங்களிடம் தோற்று விட்டாராம். ஒப்பந்தப்படி அவரைத் தாங்கள் கட்டிவைத்தீர்களாம், 'வைதேகி என் பொன் மேனி வருந்தச் சகியாதவள் அல்லவா? ஆதலால் மல்லிகைப் பூ மாலை கொண்டு என்னைக் கட்டிவைத்தாள். இது எங்கள் இருவருக்கும்தான் தெரியும். நீ போய்  இந்த அடையாளத்தைச் சொல்லி நான் தூது அனுப்பியதாகச் சொல்’ என்றார் ரகுராமன்' என்கிறார் ஆஞ்சநேயர். அனுமனின் அகக் கண்ணில் அப்போது தோன்றி இருக்கக் கூடிய அகக் காட்சியையே அற்புதமாக தீட்டி இருக்கிறார் சித்திரக்காரர்.

தகவல்: விகடன் ஆசிரியர் குழு;

ஓவியம்: கோபுலு