Published:Updated:

கேள்வி - பதில்

விதி என்பது உண்மையா? சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி - பதில்

விதி என்பது உண்மையா? சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:

வாழ்வில் ஒருவன் ஜெயித்தால் அவனை அதிர்ஷ்டசாலி என்பது, துவண்டுபோகும் ஒருவனைப் பார்த்து, 'எல்லாம் அவன் தலைவிதி’ என்பதும் ஏற்புடையதா? எல்லாவற்றுக்கும் விதியும் அதிர்ஷ்டமும்தான் காரணம் என்றால், முயற்சிக்கும் உழைப்புக்கும் பலன் இல்லையா?

- எம். விஜயராகவன், மதுரை-2

ஆராய்ந்து செயல்பட்டு ஆசையை நிறைவு செய்வது, ஆறாவது அறிவுக்கு அழகு. சான்றில்லாத தகவல்களில் நம்பிக்கை வைத்துச் செயல்படும் போது, ஆறாவது அறிவுக்கு வேலை யில்லாமல் போய்விடும். அதை ஸனாதனம் ஏற்காது. மருந்தின் செயல்பாட்டை சுயம் உணர்ந்து பிணியை அகற்றப் பயன்படுத்த வேண்டும் என்கிறது ஆயுர்வேதம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உழைப்பு இல்லாமல் ஊதியம் பெற வேண்டும் எனும் எண்ணம் கொண்ட மனம்தான், 'எனக்கு அதிர்ஷ்டம் உண்டா... விதி இருக்கா?’ எனும் கேள்வியுடன் அதற்கான பதிலை அறிய ஜோதிடரை அணுகும். அதாவது, தனது விருப்பத்தை நிறைவேற்ற ஜோதிடம் ஒத்துழைக்குமா என்பதை அறிய ஆசைப்படுமே தவிர, அதன் கசப்பான முடிவை ஏற்க முற்படாது. அப்படி விரும்பாத விளைவுகளில் இருந்து தப்பிக்க, தான் முயற்சி எதுவும் செய்யாமல் கடவுளின் உதவியுடன் விருப்பத்தை நிறைவேற்ற முனைந்துவிடும்.மனம் உழைப்பை ஏற்காமல் பலனை எதிர்பார்க்கும்!

? அப்படியானால் ஜோதிட பரிகாரங்கள் வழிபாடுகள் எல்லாம் வீண்தானா?

மக்களின் பலவீனத்தைப் புரிந்துகொண்ட புதுத்தலைமுறைகள், 'எளிய பரிகாரத்தில் விருப்பத்தை அடைந்துவிடலாம்’ என்று பரிந்துரைக்கும். சான்றில்லாத அப்படியான பரிந்துரைகளை நம்பி, தனது உழைப்பை முடக்கி ஏமாற்றத்தை அடைபவர்களும் உண்டு.  இவ்வாறு தோல்வியுற்ற மனம் வேறொரு ஜோதிடரை அணுகும். ஆக, இல்லாத விதியை- இல்லாத அதிர்ஷ்டத்தைத் தேடி அலைந்து, முடிவில் துவண்டுபோகும். எனக்கு அதிர்ஷ்டம் இல்லை... என் தலைவிதி அப்படி... என்றெல்லாம் இல்லாத ஒன்றைக் குறிப்பிட்டு தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொள்ளும்.

கேள்வி - பதில்

விதி, அதிர்ஷ்டம், பாக்கியம், நாத்திகம் (யுக்திவாதம்) ஆகியவற்றுடன் ஸனாதனத்துக்கு ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. பிற்பாடு வந்த சிந்தனையாளர்களின் படைப்புகள் அவை. சமுதாயத்தில் அங்கீகாரம் கிடைப்பதற்காக அவற்றை ஸனாதனத்தின் குரலாக சித்திரித்தார்கள். புராணக் கதைகளை யும், செவிவழித் தகவலையும் கையாண்டு, புதுப் படைப்புகளுக்கு புத்துயிர் ஊட்டிவிட்டார்கள்!

? எனில், புராணங்களில் உள்ள தகவல்களும் இந்து தர்ம விளக்கங்களும் இட்டுக்கட்டப் பட்டவை என்கிறீர்களா?

இல்லை. நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டீர் கள். சில உதாரணங்களை விளக்கினால் உங்களுக்கு விளங்கும்.

பிண்டத்தை உண்ண வரும் காகத்தை பித்ருக்களின் மறு உருவமாக சித்திரிக்கும் தெம்பு இருக்கிறது. இலையும், தழையும், நீரும் அளித்தால் போதும்; கடவுள் நமது யோகக்ஷேமத்தை நிறைவேற்றிவிடுவார். 'கங்கை கங்கை’ என்று சொன்னால் போதும்; மறுபிறவி இருக்காது. இவையெல்லாம் சான்றில்லாத தகவல்கள்! கிரகங்களின் பாதிப்பு அகல, அவர்களை நினைத்தால் போதும்; மலை போல் வரும் இடையூறுகள் யாவும் நொடியில் மறைந்துவிடும் என்பதெல்லாம் ஸனாதனத்தின் விளக்கங்கள் அல்ல.

மூடநம்பிக்கைகளை நல்ல நம்பிக்கைகளாக மாற்றும் அவர்களது முயற்சி பரிதாபத்துக்கு உரியது. அதற்காக, நல்ல நம்பிக்கைகளையும் (சான்று உள்ள தகவல்களை) வரிந்து கட்டிக்கொண்டு பொய்யாக்கும் முயற்சியும் ஏளனத்துக்குஉரியது.

இதயத்தில் குடியிருக்கிறார் கடவுள் என்பதை மனம் நம்பாது. ஆலயங்களில் சிலை வடிவில் தென்படுகிறான் என்பதை நம்பும். கண்ணுக்குப் புலப்படாத கடவுளை மனம் உணரும். ஆனாலும், புலன்களுக்கு இலக்காகும் சிலைகளையே கடவுளாக நினைக்கும். மனம் வழிபட வேண்டும். உடல் உறுப்புகள் வழிபாட்டில் இணையும். ஆனால், 'மனம் தொடாத வழிபாட்டிலும் பலன் உண்டு’ என்று பாமரர்களது அறியாமையைத் தக்கவைக்க புதுத் தலைமுறையினர் சிலர் முயற்சிப்பார்கள். இப்படி சிந்தனையையும் செயல்பாட்டையும் ஒட்டுமொத்தமாக முடக்கும் தகவல்களில் ஸனாதனத்துக்கு உடன்பாடில்லை.

? எனில், விதி, அதிர்ஷ்டம் என்பதெல்லாம் இடையில் வந்தவை என்கிறீர்களா?

தனது தோல்வியை மறைக்க விதியைக் காரணம் காட்டுகிறார்கள் எனச் சொல்ல வருகிறேன்.

திறமை இருந்தும் முயற்சியில் இறங்கவில்லை. அவன் இலக்கை எட்டவில்லை. உடனே, தனக்கு அதிர்ஷ்டம் இல்லை என்கிறான். முயற்சியில் ஈடுபடுகிறான். போதுமான முயற்சி இல்லாததால் இலக்கை எட்டமுடியவில்லை. அதனால், விபரீதத்தைச் சந்திக்கிறான். அதனால் துவண்டுபோகும் அவன் 'என் விதி’ என்கிறான். ஆக, முயற்சியில் ஏற்பட்ட சுணக்கத்தை மறைக்க விதியை உருவாக்குகிறான்.

தகுதி இல்லை என்று தெரிந்தும், உயர் பதவியை அடைய முனைகிறான் ஒருவன். ஆனால், பலனின்றிச் சறுக்கிவிழுந்ததும் 'எனக்கு அதிர்ஷ்டம் இல்லை’ என்பான். காக்கை குளித்தால் கொக்காகுமா? பார்வை இல்லாதவன் ராஜ விழி விழிப்பானா? ஊனமுற்றவன் மலையேறுவானா? அதுபோல், முடியாத ஒன்றில் முயற்சி செய்வார்கள்; தோல்வியைத் தழுவுவார்கள். தோல்வியில் துவண்ட மனத்துக்கு முதலுதவி அளிக்க, இல்லாத விதியை உருவாக்குவார்கள். நேரான வழியில் சீரான செயல்பாட்டில் மனத்தோடு ஈடுபட்டால், குறிக்கோளை எட்டிவிடலாம். தோல்வி இருக்காது விதியை இணைக்க வேண்டியிருக்காது.

? ஆக, மனிதன் தன்னை நம்பவேண்டும்; விதியை நம்ப வேண்டாம். அப்படித்தானே?

தன்னையும், தனது திறமையையும் உள்ளபடி அறிந்துகொண்டு, அதற்கு உகந்த முறையில் செயல்பாட்டைத் திருப்பிவிட்டால், வெற்றி தேடி வரும். எட்டமுடியாததை எட்ட வேண்டும் என்ற எண்ணம் முளைக்கக்கூடாது.

பகுத்தறிவாளன் தேர்தலில் வெற்றிபெற எண்ணுகிறான். ஆனால், தனது முயற்சியில் நம்பிக்கையில்லாமல் பூஜை-புனஸ்காரங்களில் ஈடுபடுவான். ஜோதிடரை அணுகி தேர்தல் முடிவை அறிந்துகொள்ள நினைக்கிறான். விபரீதம் விளையும் என்று தெரிந்தால், பரிகாரத்தில் இணைகிறான். அவனது முயற்சியில் நம்பிக்கை இல்லை. அல்லது வெற்றி பெறும் அளவுக்கு முயற்சிக்க அவனுக்கு மனமில்லை. எனவே, சான்றில்லாத செயல்கள் மூலம் சரணடைகிறான். தோற்றால் விதி என்கிறான்; வென்றால் அதிர்ஷ்டம் என்கிறான். வெற்றிக்கும் தோல்விக்கும் அவனது செயல்பாடுதான் காரணம். அதை மறந்துவிட்டு விதி, அதிர்ஷ்டம் என்று புதுக்காரணத்தை உருவாக்குகிறான்.

ஜோதிடர்கள் மற்றவர்களின் வருங்காலத்தை படம்போட்டுக் காட்டுகிறார்கள். இடையூறு இருந்தால், அதை விலக்க பரிகாரத்தையும் பரிந்துரைக்கிறார்கள். ஜாதகன் துயரத்தில் இருந்து விடுபட்டு, பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்று மகிழ்ச்சியாக வாழவும் வழி சொல்கிறார்கள். ஆனால், தங்களது வாழ்க்கையில் பல போராட்டங்களைச் சந்தித்து, மீள முடியாமல் தவிக்கிறார்கள். தன்னையே முன்னேற்றிக்கொள்ள இயலாதவன், மற்றவர்களை எப்படி முன்னேற வைப்பான் என்ற சிந்தனை நம்மில் முளைக்க வில்லை. விதியையும் அதிர்ஷ்டத்தையும் நம்பி, செயல்பாட்டில் விருப்பமின்றி, பிறர் உதவியில் முன்னேற்றம் கிடைக்க எண்ணி, அல்லல்படுகிறோம்.

இப்படி, பொய்யான விதியை வைத்து நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் அவலத்தை நம் நாட்டில்தான் காண முடியும்.

ங்களது விளக்கம் ஏற்கத்தக்கதல்ல. அதிர்ஷ்டத்தையும் விதியையும் சந்தித்தவர்கள் ஏராளம். ஒரு ரூபாய் கொடுத்து வாங்கிய பரிசுச்சீட்டு, 2 கோடியை ஈட்டித் தந்தது; அது அதிர்ஷ்டம். முயற்சி இல்லாமல் வந்து சேர்ந்தது. 96 மதிப்பெண் பெற்றிருந்தும்  முன்னேறிய சமுதாயம் என்பதால், அவனுக்கு இடம் கிடைக்கவில்லை. இது விதி. 38 மதிப்பெண் வாங்கிய ஒருவருக்கு விரும் பிய கல்லூரியில் இடம் கிடைக்கும். இது அதிர்ஷ்டம். ஒன்றில் முயற்சியிருந்தும் பலன் இல்லை- விதி. மற்றொன்றில் முயற்சியில்லாமல் பலன் கிடைத்தது- அதிர்ஷ்டம்.

? நீங்கள் சொல்லும் உதாரணங்கள், காக்காய் உட்கார பனம் பழம் விழுந்த கதையாக இருக்கிறது. யதேச்சையாக நடந்ததற்கு விதியை யும் அதிர்ஷ்டத்தையும் காரணம் காட்டுகிறீர்களா?

யதேச்சையாக நடந்தது என்று சொல்லி, ஒரேயடியாக விதியைப் புறக்கணித்துவிட முடியாது. சாலையோரம் உறங்குபவன் மீது வண்டி ஏறி, உயிரிழப்பான். பெரும் விபத்தில் சிக்கும் ஒருவன் உயிரோடு வெளிவருவான். இங்கும் விதியின் விளையாட்டு செயல்பட்டது.

அரசன் உயிர் பிரிந்தது. அவனுக்கு வாரிசு இல்லை. பட்டத்து யானையிடம் மாலையைக் கொடுத்தார்கள். அது யார் கழுத்தில் மாலை போடுகிறதோ அவன்தான் அரசன் என்றார்கள். யானை, தெருவில் சுற்றித்திரிந்த ஒருவனுக்கு மாலையிட்டது. அவன் அரசனான். இதுவே அதிர்ஷ்டம்; முயற்சியில்லாமல் கிடைத்தது.கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் உணவு கிடைத்துவிடுகிறது. அதுவும் அதிர்ஷ்டம்தானே!

? அதெப்படி? எந்தவொன்றும் தானாக நடைபெற்றுவிடாது. நெருப்பு இன்றிப் புகையாது. காரணம் இல்லாமல் செயல்கள் கிடையாது. வெற்றி- தோல்விகளுக்கும் காரணங்கள் நிறைய இருக்கும். அதை மறைத்துவிட்டு விதியையும் அதிர்ஷ்டத்தையும்  சுட்டிக்காட்டுவது எந்தவிதத்தில் நியாயமாகும்?

இந்த குடியரசில் தகுதி இல்லாதவரும் பெரிய பதவிகளில் அமர்வது உண்டு. ஆனால், தகுதியிருக்கும் ஒருவனுக்கு அதை எட்டும் வாய்ப்பு இருக்காது. பற்றி எரியும் அரக்கு இல்லத்தில் மாட்டிக்கொண்ட பாண்டவர்கள் உயிர் தப்பினர். அவமானத்தைச் சந்தித்த கர்ணனுக்கு அரியாசனம் கிடைத்தது. உயிர் வாழ முடியாமல் தவித்த சுக்ரீவனுக்கு, எதிரி அழிந்து அரச பதவியும் கிடைத்தது. திறமையும் வீரமும் இருந்தும் மானிடனிடம் (ராமன்) மாட்டிக்கொண்டு உயிர் துறந்தான் ராவணன்.

குழந்தை இல்லாத தசரதனுக்கு, முனிவரின் சாபத்தால் குழந்தை கிடைத்தது. அப்பழுக்கற்ற ஸ்ரீகிருஷ்ணர் ஸ்யமந்தக மணியைத் திருடியவர் எனும் பழியைச் சுமந்தார். முனிவரது சாபத்தில் சிக்கிய அகல்யை ஸ்ரீராமனின் வரவால் வெளிவந்தாள். இப்படி, பல இடங்களில் விதியும் அதிர்ஷ்டமும் விளையாடி இருக்கிறது. அவர்களில் எந்த முயற்சியும் இல்லை!

? ஆக, எல்லாம் விதியின் விளையாட்டு எனச் சொல்ல வருகிறீர்களா?

நிச்சயமாக! கிரக அமைப்பில் ஏற்படும் ராஜயோகங்கள் பலருக்கு அனுபவத்துக்கு வந்திருக்கின்றன. தரித்திர யோகங்கள் பலபேரை வாட்டி வைத்திருக்கின்றன. பதவியில் இருக்கும் ஒருவரது உயிர் பிரிய, அருகில் இருக்கும் ஒருவருக்கு அதிர்ஷ்டவசமாக அந்தப் பதவி வாய்க்கும். அதேநேரம், வீண் பழியால் பதவியை இழப்பவர்களும் உண்டு. விபத்தில் சிக்கிய ஒருவன் மருத்துவ உதவிகள் கிடைக்காத நிலையிலும் உயிர்பிழைப்பது உண்டு. அதேநேரம், போதுமான மருத்துவ வசதி கிடைத்தும், மருத்துவர்கள் கைவிரிக்கும் நிலையும் உண்டு. இவை அத்தனையும் விதியின் விளையாட்டு. முழுப் பூசணியை சோற்றில் மறைக்க இயலாது. கைப்புண்ணுக்கு கண்ணாடி வேண்டாம். விதி நம்மை ஆட்டிப்படைக்கிறது. அதிர்ஷ்டம் நம்மை ஆளவைக்கிறது.

கேள்வி - பதில்

விதிக்கு உயிரூட்ட, அளவு கடந்த முயற்சி எடுத்திருக்கிறீர்கள்.  பாராட்டுக்கள்! ஆனால், உங்கள் கருத்தை ஏற்க இயலாது.

புராணக் கதைகளும், செவி வழி விளக்கங்களும், எடுத்துக்காட்டும் தகுதி பெறாதவை. புராணங்கள் குறிப்பிட்ட தத்துவத்தை விளக்க வந்தவை. ஸ்ரீராமனைப் போல் வாழ வேண்டும், ராவணனைப் போல் வாழக் கூடாது என்று சொல்லும் ராமாயணம். அறத்தை ஒட்டி வாழ வேண்டும்; அறத்தை விட்டு வாழக் கூடாது என்கிறது மகாபாரதம். 'ஆன்மிகம் தொடாத வாழ்க்கை பாலைவனம். ஆன்மிகத்துடன் இணைந்த வாழ்க்கை நந்தவனம்’ என்று பாகவதம் சொல்லும். ஆக, கதைகளில் வரும் நிகழ்வுகள் எல்லாம் நீங்கள் சொல்வதுபோன்று விதியையோ அல்லது அதிர்ஷ்டத்தையோ நிலைநாட்ட வரவில்லை. முனிவர்களது சிந்தனை இல்லாத ஒன்றை நிலைநாட்டுவதற்கு முனையாது.

? எனில், புராணங்கள் சொல்வதெல்லாம் கட்டுக்கதையா?

நீங்கள் புராணங்களைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள்!

வாலியின் அழிவு தேவையானபடியால், அவன் தம்பிக்கு உரிமை யான அரியாசனம் கிடைத்தது. 'ராமனாக அவதரித்து ராவணனை அழிக்கிறேன்’ எனும் இறைவனின் வாக்குறுதி நிறைவேறும் விதமாக, தசரதனுக்கு குழந்தை வாய்த்தது. அரக்கு இல்லத்தில் இருந்து வெளியேற மறைமுக முயற்சி இருந்தது.  கர்ணனை தம் பக்கம் இழுத்துக்கொள்ள, அரியாசனம் எனும் கருவி துரியோதனனுக்குப் பயன்பட்டது. மானிடரால் அழிவு என்ற சாபம் நிறைவேறும் விதமாக ராவணனின் மரணம் சம்பவித்தது. ஜாம்பவதியின் திருமணம் நிறைவேற, ஸ்ரீகிருஷ்ணன் ஸ்யமந்தக மணியை மீட்கவேண்டி வந்தது.

அதேபோன்று, கிரக அமைப்பிலும் ராஜயோகம் என்பது பூர்வ ஜன்ம புண்ணியத்தின் வெளிப்பாடுதான். பூர்வ ஜன்ம முயற்சி பலனளித்தது. ஏழ்மை யோகம் என்பதுவும் முன்ஜென்ம தவறுகளின் அனுபவமே!

? அப்படியானால் எதிர்பாராமல் கிடைக்கும் சுகபோகத்துக்கும், நிகழும் துயரங்களுக்கும் காரணம் என்ன?

எதுவும் தானாக நடைபெறுவதில்லை. எப்போதோ செய்த செயல்களின் பின்விளைவு களாகவே அவை இருக்கும்.

ஆறறிவற்ற உயிரினங்கள் இயற்கையின் பாதுகாப்பில் வாழ்கின்றன. இயற்கை தேரைக்கும் உணவளித்துவிடும். அதன் தரத்தை உணர்ந்து இயற்கை செயல்படும். விலங்கினங்கள் இரையைத் தேடிப் பெறும். தவளைகள் இருந்த இடத்திலே நாக்கை நீட்டி இரையை விழவைத்து உட்கொள்ளும். ஆனால் பூனையோ தனது முயற்சியால் தேடி அலைந்து தான் பாலைத் தேடிப் பெறுகிறது. நாயும் அலைந்து திரிந்துதான் உணவைப் பெறும்.

பதவியில் இருக்கும் அமைச்சர் உயிரிழந்தார் எனில், வேறொருவரை அந்தப் பதவிக்கு நியமிக்காமல் ஈமச்சடங்கில் இறங்க இயலாது. அரசு நிர்வாகத்தில் இடைவெளி வராமல் தடுக்க, அருகில் இருப்பவரை அரியாசனத்தில் அமர்த்துவது கடமை; அது அதிர்ஷ்டம் இல்லை. குறிப்பிட்ட நாட்களில் அந்த தற்காலிக பதவி முடிவுக்கு வந்து, வேறொருவரை நிலையாக பதவியில் இருத்துவார்கள். அடிபட்ட உடலானது உயிர் இருப்பதற்கான தகுதியை இழந்துவிட்டால், உயிர் வெளியேறத்தான் வேண்டும். அது விதியல்ல. மருத்துவ உதவியின்றி உயிர் நிலைத்திருப்பதற்கு, உடல் உறுப்புகள் வலுவிழக்காமல் இருந்தால் போதும். இதில் அதிர்ஷ்டம் எங்கிருந்து வந்தது?!

பாண்டவர்கள் யுத்த முயற்சியில் வெற்றி பெற்றார்கள். கௌரவர்கள் வலுவிழந்ததால் தோல்வியைத் தழுவினார்கள். ராமர் ராவணனை அழிக்க, தனது வீரத்தை மட்டுமே நம்பாமல், பலபேரின் (வானரங்கள், விபீஷணன்) ஒத்துழைப்பை சேர்த்துக்கொண்டு போராடினார். முனிவர்களது அருளும், குல தெய்வ வழிபாடும் முயற்சிக்கு வலுவூட்டியது. பாண்டவர்களுக்கும் கிருஷ்ணனின் அருளும், வியாசரின் அனுக்ரஹமும், வீரர்களின் ஒத்துழைப்பும் முயற்சிக்கு வலுவூட்டி வெற்றியை எட்டவைத்தது.

ஆக, விதி என்றும் அதிர்ஷ்டம் என்றும் இல்லாத ஒன்றை இருப்பதாகச் சொல்லி அதற்கு எடுத்துக்காட்டாக நிகழ்வுகளைக் காண்பித்து, அப்பாவி மக்களின் சிந்தனையை திசை திருப்பி, முயற்சியில் சுணக்கத்தை உண்டுபண்ணி வாழ்வை துயரத்தில் சிக்க வைக்கும் முயற்சி, எந்த மனித சிந்தனையிலும் முளைக்கக்கூடாது. ஸனாதனம் எந்த விஷயத்தையும் ஆறாவது அறிவால் ஆராய்ந்து செயல்படப் பணிக்கும். அதன் அகராதியில் இவை இரண்டும் இல்லை. விதி, மூடநம்பிக்கை, அதிர்ஷ்டம், பாக்கியம் அத்தனையும் உள்நோக்கம் உடைய சீர்திருத்தவாதிகளின் படைப்பு!

தங்கள் சிந்தனைக்கு ஒரு வார்த்தை...

துயரத்தில் ஆழ்ந்தவனின் சிந்தனை படுத்துவிடும்போது, அதைத் தட்டியெழுப்புவதற்காக, வேறுவழியின்றி இல்லாத விதியைப் பயன்படுத்தினார்கள். துயரத்துக்குக் காரணம் தெரிந்தவுடன் (அது கற்பனைக் காரணமானாலும்), 'தான் துயரத்துக்குக் காரணம் அல்ல’ என்கிற எண்ணம் அவனது தாழ்வுமனப்பான்மைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இது, படுத்த சிந்தனையை எழுப்ப உதவியது.

அதிர்ஷ்டம் என்ற பூரிப்பில் சிலிர்த்து எழுந்தவன், அந்த மிதப்பான எண்ணத்துடன் சிந்தனை திசைமாறிவிடாமல் இருக்க... 'இந்த பெருமைக்கு உனது பங்கு எதுவும் இல்லை. அதிர்ஷ்டம்தான் காரணம்’ என்று கூறுவதன் மூலம், அவனது அகங்காரம் அடங்கி ஒடுங்கவும் வழி வகுத்தது. ஆக, தோல்வியில் துவண்டவனைத் தூக்கிவிடவும், மகிழ்ச்சியில் இறுமாந்து இருப்பவனை அடக்கவும் இது பயன்படும். அதுவும் தவிர, அவனுக்குத் தெரிந்த காரணத்தைச் சுட்டிக்காட்டினால் அவன் மனம் ஏற்காது; தெரியாத காரணத்தை வேறுவழியில்லாமல் ஏற்றுக்கொள்ளும்!

- பதில்கள் தொடரும்..

வாசகர்களே... ஆன்மிகம் சம்பந்தமான எல்லா சந்தேகங்களுக்கும் பதில் தருகிறார் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள். கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: 'கேள்வி பதில்', சக்தி விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.