மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

வாழ்க்கைக் கல்வி ராமாயணம் எஸ்.கண்ணன்கோபாலன்

ரு நாள் என்பது, சந்தோஷமாக வாழ்பவருக்கு ஒரு நொடி; துன்பத்தில் ஆழ்ந்திருப்பவருக்கு ஒரு யுகம்! நாமும் இந்த இரு நிலைகளை வெவ்வேறு தருணங்களில் அனுபவித்திருப்போம்.

ஒரு நாள் என்பது, பல அனுபவங்களின் சாரமாகவும் இருக்கலாம்; பயனற்ற சக்கையாகவும் போகலாம். அது அந்த ஒரு நாளை நாம் எப்படிப் பயன்படுத்துகி றோம் என்பதைப் பொறுத்தது. சரியாகவும் முறையாகவும் பயன்படுத்தினால், பல அனுபவங்களும், அவற்றின் மூலம் சில படிப்பினைகளும் நமக்குக் கிடைக்கலாம். நமக்கு அப்படியொரு அருமையான தினம் வாய்த்தது.

'ஒரு நாள், ஓரிடம், ஓர் அனுபவம்’ என்னும் இந்தப் பகுதிக்கு எங்கே செல்லலாம் என்று யோசித்தபோது, ஸ்ரீராமநவமி வருவதால், ராமர் தொடர்பான ஒரு நிகழ்ச்சியை எடுத்துக் கொள்ளலாம் என முடிவு செய்தோம். திருநெல்வேலி, சந்நியாசி கிராமத்தில் 2013-ம் ஆண்டு ஸ்ரீராமநவமி தொடங்கி, கடந்த ஒரு வருட காலமாக திருச்சி கல்யாணராமனின் கம்பராமாயண தொடர் உபந்நியாசம் நடைபெற்று வருவதாகவும், அங்கே சென்றால் பல பயனுள்ள சுவாரசியமான தகவல்கள் கிடைக்கலாம் என்றும் தெரியவந்தது.

அது உண்மைதான் என்பதை, அந்த ஒரு நாளில் நாம் நன்றாகவே அனுபவித்து உணர்ந்தோம்.

சென்ற மார்ச் மாதம் 31-ம் தேதி, நாம் திருநெல்வேலியில் இருந்தோம். திருச்சி கல்யாணராமனைத் தொடர்புகொண்டபோது, அவர் உஞ்சவிருத்திக்குச் சென்றிருப்பதாகத் தகவல் கிடைக்கவே, சந்நியாசி கிராமத்தில் அமைந்திருந்த ஸ்ரீவிவேக சம்வர்த்தனி சபாவுக்குச் சென்றோம்.

ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

இந்தச் சபா, வேத சாஸ்திர விற்பன்னர்களால் 1897-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. வேத, உபநிஷத பாராயணம், சாஸ்திர வியாக்கியானம் நடைபெற்றதுடன், வேதம் பயிற்றுவித்த கேந்திரமாகவும் திகழ்ந்தது இது. வேதம், உபநிஷதம், இதிகாச, புராணங்கள் என எண்ணற்ற புத்தகங்கள் இடம்பெற்றிருந்த நூலகமாகவும் ஸ்ரீவிவேக சம்வர்த்தனி சபா திகழ்ந்தது. சிருங்கேரி ஸ்ரீ ஆசார்ய சுவாமிகள் எப்போது திருநெல்வேலிக்கு வந்தாலும், இந்தச் சபாவுக்கு விஜயம் செய்வது வழக்கம். அதற்கு அத்தாட்சியாக இந்த சபாவில் தெய்வத்திருவுருவப் படங்களுடன் சிருங்கேரி ஆசார்ய சுவாமிகளின் படங்களும் உள்ளன.

திருச்சி கல்யாணராமன், கம்பராமாயணத்தை ஒரு வருட தொடர் உபந்நியாசமாக நிகழ்த்த விரும்பி, அதற்கான இடம் தேடியபோது, அவருடைய நண்பர் ஒருவர் இந்தச் சபாவின் மேன்மையைப் பற்றி எடுத்துக் கூறி, இதுவே பொருத்தமான இடம் என்றார். தொடர்ந்து, தாமிரபரணி வைதிக சமாஜத்தினரின் துணையுடன் அவர் ஸ்ரீவிவேக சம்வர்த்தினி சபா நிர்வாகிகளை அனுகியபோது, கடந்த சில காலமாக சபா பூட்டப்பட்டு வெறுமனே இருந்தபடியால், ஒரு நல்ல காரியத்துக்குப் பயன்படட்டுமே என்று மனத்திருப்தியுடன் இடம் கொடுத்திருக்கிறார்கள்.

இதற்குள், உஞ்சவிருத்தி முடிந்து வந்திருந்தார் திருச்சி கல்யாணராமன். அவரிடம் பேசினோம்...

''சந்நியாசி கிராமம் என்ற பெயரில் உள்ள 'கி’ என்ற எழுத்தை எடுத்துவிட்டால், சந்நியாசி ராமம் என்று ராமர் பெயர் வருவதால், கம்பராமாயண தொடர் சொற்பொழிவுக்குப் பொருத்தமான இடம்தான் என்று மனத்தில் பட்டது. அது மட்டுமல்ல... ஸ்ரீவிவேக சம்வர்த்தனி சபா வேதம் ஒலித்த இடம். சாந்நித்தியம் நிறைந்தது. இந்த இடத்தில் கம்பராமாயணச் சொற்பொழிவு கேட்பவர்கள் பாக்கியசாலிகள். காலணிகளை வெளியில் விட்டுவிட்டு வர வேண்டும்; எவ்வளவுதான் செல்வாக்கானவராக இருந்தாலும், தரையில் அமர்ந்துதான் உபந்நியாசம் கேட்க வேண்டும் என்பதால், ஸ்ரீராமனின் கருவறையிலேயே அமர்ந்து உபந்நியாசம் கேட்பது போன்ற திவ்விய உணர்வு அன்பர்களுக்கு ஏற்படும்'' என்று கூறியவர், அன்று மாலை 6 மணிக்கு உபந்நியாசம் தொடங்கும் என்றார்.

மாலை 6 மணிக்கு ஸ்ரீவிவேக சம்வர்த்தினி சபாவுக்குச் சென்றோம். அரங்கத்துக்குள் இடம் போதாமல் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வெளியில் நின்றுகொண்டே கேட்டுக்கொண்டிருந்ததைப் பார்த்தபோது, சிரமம் இருந்தாலும் நல்ல விஷயங்களைக் கேட்பதில் அவர்களுக்கு இருந்த ஆர்வத்தை நம்மால் நன்றாகப் புரிந்துகொள்ள முடிந்தது.

அன்றைய தினம், போருக்குச் செல்லும் முன்பாக இந்திரஜித் தன் தந்தை ராவணனுக்கு அறிவுரை கூறும் நிகழ்ச்சியைப் பற்றி உபந்நியாசம் நடைபெற்றது. விபீஷணன், கும்பகர்ணன் போன்றோர் கூறிய உபதேசங்களைக் கேட்காத ராவணனுக்கு அவன் பிள்ளை இந்திரஜித் அறிவுரை கூறுகிறான்.

'நான் அச்சம் கொண்டு உங்களுக்கு உபதேசம் செய்வதாக நினைக்கவேண்டாம். நான் எத்தனை பாணங்கள் விட்டாலும், அவை ராம லட்சுமணரை பிரதக்ஷிணம் வந்து திரும்புகிறதே தவிர, அவர்களை ஒன்றும் செய்வதில்லை. உனக்காக நான் அவர்களுடன் போருக்குச் சென்று

மடிந்தபிறகாவது நீ சீதையினிடத்தில் வைத்திருக் கும் தகாத ஆசையை விட்டுவிட்டு, சீதையை ராமனிடம் அனுப்பிவிட்டால், அவர்கள் உன்னை மன்னித்து ஏற்றுக்கொள்வார்கள் என்கிறான்.

ஆனால், ராவணன் இந்திரஜித்தின் உபதேசத்தைக் கேட்கவில்லை. 'நான் இறந்தால்கூட பரவாயில்லை. வேதம் என்பது இருக்கும்வரை ராமன் பெயர் இருக்கும்; ராமன் பெயர் இருக்கும் வரை இந்த ராவணனின் பெயரும் இருக்கும். நான் ஜெயித்தாலும் தோற்றாலும் என் பெயர் நிலைத்திருக்கும் என்றான்’ என விவரித்த கல்யாணராமன், தொடர்ந்து குகன், சபரி பற்றிய சில விஷயங்களையும் கூறினார்.

ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

திருமங்கை ஆழ்வார் தமது ஸ்ரீரங்க தலத்து மங்களாசாசனத்தில், ராமனாக வந்து, குகனை ஏழை- ஏதலன் என்று நினைக்காமல் சகோதரனாக ஏற்றதைச் சிறப்பித்துப் பாடுகிறார். அப்படி ராமனால் சகோதரனாக ஏற்றுக்கொள்ளப்பட்ட குகன், கங்கைக் கரையில் ராமனைச் சந்தித்த முதல் நாளில், பக்குவம் செய்த மீனைக் கொடுத்தபோது, அதை ராமன் ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம், அதுவரை குகனுக்கு ஆசார்ய சம்பந்தம் இல்லாமல் இருந்தது. அதே குகன், மறுநாள் கொடுத்த உணவை ராமன் ஏற்றுக் கொண்டான். காரணம், குகன் ராமனையே தன் ஆசார்யனாக ஏற்றுக்கொண்டான். அந்த குரு சம்பந்தத்தின் காரணமாகத்தான் மறுநாள் குகன் அளித்த உணவை ஏற்றுக் கொண்டான் ராமன்.

கங்கையின் அக்கரையில் பரதன், பரிவாரங் களுடன் வருவதைக் கண்ட குகன், 'நாட்டை விட்டு ராமனைத் துரத்தியது போதாது என்று, இன்னும் என்ன கெடுதல் செய்ய வருகிறானோ?’ என்று நினைத்து, பரதனிடம் கோபம் கொள்கிறான். ஆனால், பரதனின் நோக்கம் தெரிந்ததும், 'ஆயிரம் ராமர்கள்கூட உனக்கு ஈடாக மாட்டார்கள்’ என்று பாராட்டுகிறான். பின்னாளில், 'எண்ணில் கோடி ராமர் எனினும், அண்ணல் நின் அருகு ஆவரோ!’ என்ற கோசலையின் வார்த்தைகளுக்கு குகனே முன்னோடி என்றே சொல்லலாம்.

சபரி ஒரு வேடுவப் பெண் என்பது நமக்குத் தெரியும். அந்த சபரி ராம தரிசனத்துக்காக ஏங்கிக் கிடந்தவள். ராமன் இன்று வருவான்; நாளை வருவான் என்று ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்து, தன் தள்ளாத வயதிலும், அலைந்து திரிந்து சுவையான கனி வகைகளைச் சேகரித்துக்கொண்டு காத்திருந்தவள். அவளுடைய ஏக்கம் தீர, ஒருநாள் ராம தரிசனம் கிடைத்தது. அவள் சுவைத்துப் பார்த்துக் கொடுத்த கனி வகைகளைப் பரிவுடன் ஏற்றுக்கொண்டான் ராமன். சபரி சுவைத்துப் பார்த்தது, எச்சிற்படுத்தியது என்று தயங்கவில்லை அவன். காரணம், ராமனுக்கு சபரியின் தாய்மை அன்பு புரிந்திருந்தது. அது மட்டுமல்ல... சபரிக்கு மதங்க முனிவருடன் ஆசார்ய சம்பந்தமும் இருந்தது.

வேடர் குலப் பெண்ணான சபரிக்கு குல வழக்கப்படி சிறிய வயதிலேயே திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. அதனால் சபரி வீட்டை விட்டுச் சென்றுவிடுகிறாள். காரணம், தனக்குத் திருமணம் நடைபெற்றால், விருந்துக்காக நூற்றுக் கணக்கான விலங்குகள் கொல்லப்படுமே என்ற எண்ணம்தான். திரேதாயுகத்தில் ஜீவகாருண் யத்துக்கு ஓர் உதாரணப் பெண்ணாகத் திகழ்ந்த வள் சபரி. அதனால்தான் அவளுக்கு மதங்க முனிவருடன் ஆசார்ய சம்பந்தமும், ராம தரிசன மும், முக்தியும் கிடைத்தன.

ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

இப்படிப் பல புதுப்புது தகவல்களை சுவா ரஸ்யமாகத் தொகுத்து அந்த நிகழ்ச்சியை விறுவிறுப்பாக நடத்திச் சென்றார் திருச்சி கல்யாணராமன்.

கம்பராமாயண தொடர் உபந்நியாசத்தின்போது, ஒவ்வொரு காண்டம் முடிந்ததும், ஒரு சிறப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. பால காண்டம் முடிந்ததும், சீதா கல்யாணம்; அயோத்தியா காண்டம் முடிந்ததும், பாதுகை ஊர்வலம் மற்றும் 15 குழந்தைகளுக்கு ஆண்டாள் வேஷம் போட்டு அக்காரவடிசல் நைவேத்தியம்; ஆரண்ய காண்டம் முடிந்ததும், நவராத்திரி சமயமாத

லால் 9 சுமங்கலிப் பெண்களுக்கு வஸ்திரம் வழங்கி, சுமங்கலி பூஜை; கிஷ்கிந்தா காண்டம் முடிந்ததும், வேத பாட சாலை மாணவர்களுக்கு வஸ்திரம் மற்றும் போர்வை வழங்குதல் நிகழ்ச்சி; சுந்தர காண்டம் முடிந்ததும், துளசி கல்யாணத்துடன் உபந்நியாச சம்பிரதாயப்படி அனைத்து பிரசாத நைவேத்தியமும் நடைபெற்றது.

யுத்த காண்டம் முடிந்ததும், கம்பராமாயணம் அரங்கேறியது அஸ்த நட்சத்திரம் என்பதால், 14-ம் தேதி சித்திரை அஸ்த நட்சத்திரத்தில் ஹோமம், சீதா கல்யாணம் மற்றும் ராமர் பட்டாபிஷேகமும் நடைபெற இருப்பதாகவும், அப்போது, இந்த ஒரு வருடகாலமாக உபந்நியாசம் சிறப்பாக நடைபெற சேவை புரிந்த அனைவருக்கும் எந்த பேதமும் பார்க்காமல் வஸ்திரம் மற்றும் சம்பாவனை வழங்க இருப்பதாகவும் அறிந்தோம்.

நமது வாழ்க்கையில் ஒரு கஷ்டம் ஏற்படுகிறது என்றால், அதற்கு நாம்தான், நம் செயல்கள்தான் காரணம். வேறு யாரும் காரணம் இல்லை. இதைப் புரிந்துகொண்டால், நாம் யாரிடமும் கோபம் கொள்ளமாட்டோம். நமக்குக் கஷ்டமே வரக்கூடாது என்று நாம் நினைத்தால், நம்முடைய சொல்லும் செயலும் நல்லனவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். நாம் நிம்மதியாக இருக்க வேண்டும்; மற்றவர்களும் நிம்மதியாக வாழ வேண்டும். அப்படி வாழக் கற்பிப்பதுதான் உண்மையான வாழ்க்கைக் கல்வி. இத்தகைய வாழ்க்கைக் கல்வியை நமக்கு வழங்குபவைதான் ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள்.

இவை போன்ற இதிகாசங்களை அனைவரும் புரிந்துகொண்டு ரசிக்கும்படியும், வாழ்க்கையில் கடைப்பிடிக்கும்படி அழுத்தமாகவும் எடுத்துச் சொல்லும் உபந்நியாசங்கள் காலம்காலமாக நம் நாட்டில் நடைபெற்று வந்துள்ளன. இன்றைக்கு பலவகையான பொழுதுபோக்கு அம்சங்கள் ஏற்பட்டுவிட்ட நிலையில், இம்மாதிரி நிகழ்ச்சிகள் அருகிவிட்டது வருத்தம்தான். எனினும், இன்றைய 'மெகா சீரியல்’ யுகத்திலும், ஒரு வருடகாலமாகத் தொடர்ந்து நடைபெற்ற திருச்சி கல்யாணராமனின் கம்பராமாயணம் உபந்நியாசத்தை முதல் நாள் வந்து கேட்டவர்கள் அதன்பின் ஒருநாள்கூடத் தவறாமல் தொடர்ந்து வந்திருந்து கேட்டு ரசித்ததுடன், தங்கள் குழந்தைகளையும், தங்க ளுக்குத் தெரிந்தவர்களையும் அழைத்து வந்து கேட்கச்செய்தது மன நிறைவூட்டும் ஒரு செய்தி!

இதுபோன்ற ஆன்மிக உபந்நியாசங்கள் பல இடங்களிலும் தொடர்ந்து நடைபெற வேண்டும். வேத சாஸ்திரங்களைப் பயிற்றுவிக்கும் மையங்கள் பல இடங்களில் தோற்றுவிக்கப்பட வேண்டும்.

'வேதங்களைப் பயில்வதால் மூடநம்பிக்கைகள் இல்லாமல் போவதுடன், ஆரோக்கியமான மனத்தையும் பெறலாம்’ என்கிறார் சுவாமி விவேகானந்தர். அப்படி, மனித வாழ்க்கையைப் பல வகைகளிலும் மேம்படுத்தக்கூடிய ஓர் உபந்நியாசத்தைக் கேட்ட மனநிறைவுடன், அந்த ஒரு நாள் உன்னத மான நாளாக இருந்த ஆத்ம திருப்தியுடன் சந்நியாசி கிராமத்திலிருந்து விடைபெற்றுக் கிளம்பினோம்.

படங்கள்: த.ஹரிஹரன்