Published:Updated:

கலகல கடைசிப் பக்கம்

சிரிசிரி சேவை! வீயெஸ்வி, ஓவியம்: சசி

ற்றவர்களுக்கு உதவுவதற்கென்றே இறைவ னால் படைக்கப்பட்டது தனது சரீரம் என்பதில் உறுதியாக இருப்பவர் நண்பர். அவருக்குப் பாடத் தெரியாது என்பதால், சாரீரம் பற்றிய பேச்சுக்கு இடமில்லை!

யார் வீட்டில் என்ன நல்லது கெட்டது என்றாலும், முதலில் ஆஜராகிவிடுவார் அவர். எங்கள் இருவருக்கும் பொது நண்பரின் வீட்டில், அண்மையில் ஒரு திருமண வைபவம். ஒரு மாதத்துக்கு முன்னதாகவே அதில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுவிட்டார் நண்பர். தலைமை சமையல் கலைஞர் அழைக்கப்பட்டு, பட்ஜெட் எவ்வளவு, ரிசப்ஷன், முகூர்த்தம் என ஒவ்வொரு வேளைக்கும் என்ன மெனு என்பது உள்பட அனைத்தும் இவர் முன்னிலையில்தான் இறுதி செய்யப்பட்டன. அதேபோல், திருமண மேடை மற்றும் மண்டப முகப்புக்கு அலங்காரம் செய்யும் நிபுணர் வரவழைக்கப்பட்டபோது, ஆக்கபூர்வ ஆலோசனைகள் பலவற்றை வாரி வழங்கினார் நண்பர். நகை, ஜவுளி விஷயத்தில் மட்டுமே இவர் தலையீடு இல்லை.

கலகல கடைசிப் பக்கம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

எந்தத் திருமணத்துக்கும் புதிதாக துண்டு ஒன்று வாங்கிக் கொள்வார். கல்யாணமெல்லாம் முடிந்து கட்டுச்சாதக்கூடையோடு மணமக்களை ஒரு வேனில் ஏற்றி அனுப்பி வைக்கும்வரை அந்தத் துண்டு அவர் தோளை விட்டு இறங்காது. 'மொத்தத்துக்கும் இன்சார்ஜ்’ என்பதற்கான அடையாளம் அது! வேஷ்டியில் சிந்திய சாம்பாரின் கறை இன்னொரு அடையாளம்.

நெற்றி, கழுத்து வியர்வையைத் துடைத்துவிட்டுக் கொண்டே மணமேடைக்கும் டைனிங் ஹாலுக்கும் பம்பரமாகச் சுழல்வார். பந்தி விசாரிப்பில், 'ஏய்... இங்க பாயசம் கொண்டு வா!’, 'சாருக்கு என்ன வேணும்னு கேட்டுப் பரிமாறு!’ என்பது மாதிரியாக, இவர் உரக்கக் கட்டளையிடுவது சுத்துப்பட்டு எட்டுத் தெருக்களிலும் எதிரொலிக்கும்.

அமங்கல வீட்டிலும் நண்பரின் கை வண்ணம் அப்படியே! நல்ல காரியத்தைப் பற்றி எழுதிவிட்டு, கையோடு இதைப் பற்றியும் விரிவாக எழுத பேனா மறுக்கிறது.

நண்பரின் தன்னலமற்ற சேவை மனப்பான்மை, சரீர உபகாரம் எல்லாம் சரிதான்! ஆனால், அந்த நிகழ்ச்சி நடந்து முடிவதற்குள் அவர் ஆடுகிற ஆட்டமும், போடுகிற கூச்சலும், செய்கிற ரகளையும் இருக்கிறதே... அடாடா! தான் டென்ஷன் படுவது மட்டுமில்லாமல் சுற்றியிருப்பவர்களையும் உண்டு இல்லையென்று ஆக்கிவிடுவார் மனுஷர்.

''பரோபகாரமாக சேவை செய்தால் அதுவே பெரிய உல்லாசம். அதுவே விளையாட்டு. அதுவே இன்பம்!

கிருஷ்ண பரமாத்மா குன்றைத் தூக்கிப் பிடித்தது விளையாட்டு மாதிரி இருக்கும். ஆனால், கோபர் களைக் காப்பதற்காகவே அவ்வளவு பெரிய மலையை பாலகிருஷ்ணன் தூக்கினான். விஷம் கக்கும் காளிங்கனின் தலைமீது நர்த்தனம் செய்தது, வெளியில் பார்த்தால் விளையாட்டு! உண்மையில், அதுவும் ஜனங்களைக் காத்து, அவர்களுக்கு நீர்நிலையை மீட்டுத் தருவதற்காகச் செய்த சேவைதான். துளிக்கூடப் பற்று இல்லாமல், சிரித்துக்கொண்டே சாந்தமாக இவ்வளவையும் செய்தான் கிருஷ்ணன். நம்மிலும் சேவை செய்கிறவர்களுக்கு இந்தச் சிரிப்பும் சாந்தமும் எப்போதும் இருக்க வேண்டும்!'' என்னும் மகா பெரியவாளின் இந்த அருளுரையை நண்பருக்கு நினைவுபடுத்தினேன்.

''முயற்சி செய்கிறேன்'' என்று சிரித்தார், தன் தோள் துண்டைச் சரிசெய்தபடியே! அடுத்த வைபவத்துக்குள் அவர் தன் சுபாவத்தையும் கொஞ்சம் சரிசெய்து கொண்டுவிட்டாரானால், 'சேவா சிரோன்மணி’ என்று அவருக்குப் பட்டமே கொடுத்துவிடுவேன்!