Published:Updated:

ஸ்ரீரமண மகரிஷி

ஆத்ம அனுபவம்

ஸ்ரீரமண மகரிஷி

ஆத்ம அனுபவம்

Published:Updated:
ஸ்ரீரமண மகரிஷி
ஸ்ரீரமண மகரிஷி
ஸ்ரீரமண மகரிஷி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரு விஷயத்தை மறுதலிக்கும்போது, தீர்மானமாக மறுப்பதற்கும் ஞானிகளால்தான் முடியும். ஹடயோகம் பற்றிய தனது கருத்துக்களை, பகவான் ஸ்ரீரமண மகரிஷி என்று பிற்பாடு அழைக்கப்பட்ட பாலசுவாமி பேசுவதை அறியும்போது, அவரின் நிதானம் ஆச்சர்யமூட்டுகிறது. ஒரு கடினப் பிரயோகம்கூட இல்லை. நெல் முனையளவும் கர்வம் இல்லை. 26 வயது நிரம்பிய இளைஞனாக பாலசுவாமி இருக்கும்போது இதுகுறித்து விளக்கியிருக்கிறார். ஒரு சொல்கூட அநாவசியமாக வந்து விழவில்லை. கனிந்த சிந்தனை சரியான வாக்கியங்களாக வெளிப்படுத்தப்படுகிறது.

 'விசார மார்க்கம் என்பது, முரட்டு மாட்டுக்குப் பசும்புல் கொடுத்துத் தடவி வசப்படுத்துதல்போல’ என்று அறிஞர்கள் கூறுவர். மிகத் தீவிரமாக ஞானம் தேடுதல் உள்ளவர்களே விசார மார்க்கத்தில் இறங்குவர்; நடுத்தர நிலை உள்ளவர்கள் மனதை ஒருமுகப்படுத்தி தியானத்தில் ஈடுபடுவர்; இன்னும் ஆரம்ப நிலையில் உள்ளவர்கள், பிராணாயாமம் போன்ற அப்பியாசங்களில் ஈடுபட்டுப் படிப்படியாக முன்னேறி விசாரத்துக்கு வருவர்.

எது ஒருவருக்கு சௌகர்யமோ, அவ்விதமே பயிற்சி செய்யலாம். யோகிகளைவிட பக்திமானே எனக்குப் பிரியமானவன் என்று கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார். ஏதோ வழியில் அலையும் மனதை நிலைநிறுத்தி, தன்னைப் பார்க்கும் பக்குவம் வந்துவிட்டால், வந்த வழி பற்றிக் கவலையென்ன?

இதற்கு சந்நியாசம்தான் வழியா? அப்படியும் சொல்வதற்கில்லை. தன்னை அறியும் முழு முயற்சியில் ஈடுபடுபவரே சந்நியாசி. வெளி விஷயங்களை விடுபவர்தான், பந்தங்களை நீக்கியவர்தான் என்பதல்ல! தன்னையறியும் ஈர்ப்பில் இருந்துவிட்டால் அவர் தனியாக இருந்தாலும், பெரிய சம்சாரியாக இருந்தாலும், இரண்டும் அவருக்கு ஒன்றாகவே தோன்றும். எல்லா விஷயங்களிலும் ஈடுபட்டாலும், ஈடுபடாதவராகவே அந்த முயற்சியுள்ளவர் இருப்பார்.

''நன்றாகப் புரிந்து கொள்! சாத்விகமான ஆகாரத்தை உண்டு, திடமான முயற்சியுடன், 'தான்’ என்ற மமதையை, 'நான்’ எனும் அகங்காரத்தை நீக்கிவிட்டால், எல்லோராலும் செய்ய முடிந்த காரியம்தான் அது. இயலாதது எதுவுமில்லை. திடமான முயற்சி முக்கியம்'' என்கிறார் பாலசுவாமி.

ஒரு நாள், சிதம்பரத்திலிருந்து வந்த சாஸ்திரி என்பவர், விவேக சூடாமணி என்ற நூலை பாலசுவாமியிடம் கொடுத்தார். அது அற்புதமான புத்தகம். ஆன்ம விசாரம் உள்ளவர், இது தவிர வேறு எதுவும் படிக்கத் தேவையில்லை. பாலசுவாமி, அதை சேஷய்யரிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னார். சேஷய்யருக்கு அந்த மூல நூல் பிடிபடவில்லை. மொழி நடையால் உள்பொருந்திய பொருளை அறிய மிகக் கஷ்டப்பட்டார். 'இதை எளிமையாக்கித் தாருங்கள்’ என்று வேண்டினார்.

அதன் தமிழ் மொழி பெயர்ப்பு ஒன்றை பாலசுவாமியின் தொண்டர் பழனிசுவாமி என்பவர் கொண்டு வந்தார். உலகநாத சுவாமிகள் என்கிற ஞானி, விருத்தப்பாக்களில் எழுதிய நூல் அது. பாலசுவாமியும் உரைநடையில் எழுதத் துவங்கினார். அதே நேரம், சேஷய்யருக்கு இன்னொரு தமிழ்ப் பிரதி கிடைக்கவே, பாலசுவாமி தமிழ் உரைநடையில் எழுதுவதை நிறுத்திவிட்டார்.

உத்தண்டி என்ற இன்னொரு அன்பர், தனது சொத்துக்களை விற்று, தான- தருமங்கள் பல செய்து, தன்னிடம் மீதியிருந்த 100 ரூபாயை பாலசுவாமியிடம் கொடுக்க முற்பட, சுவாமி அதை ஏற்கவில்லை (1904-ல் அது மிகப் பெரிய தொகை).

கம்பீரம் சேஷய்யரின் மருமகன் கிருஷ்ணன் ஒரு நாள் விரூபாக்ஷி குகையை சுத்தம் செய்யும்போது, சுவாமி பாதி எழுதிய விவேக சூடாமணி தமிழாக்க உரைநடையைப் பார்த்தார். அந்த 100 ரூபாய் இருந்தால், இதைத் தமிழில் அச்சடிக்கலாமே என்று தோன்றியது அவருக்கு. எனவே, பாலசுவாமியிடம், அதை எழுதி முடித்துத் தருமாறு கேட்டார். அவரது நோக்கம் என்ன என்று பாலசுவாமிக்குத் தெரிந்தது. சில நாட்களில் தமிழாக்க உரைநடை எழுதி முடிக்கப்பட்டது. உத்தண்டி என்கிற அந்த மனிதரின் காசு புனிதமாயிற்று; விவேக சூடாமணி உரைநடை புத்தகமாயிற்று.

பகவான் ஸ்ரீரமண மகரிஷி என்று பிற்பாடு அழைக்கப்பட்ட பாலசுவாமி எழுதிய விவேக சூடாமணி என்ன சொல்கிறது? உலகத்தில் உள்ள எல்லா மனிதர்களும் உடல் உபாதையில்லாது, எந்தவித துக்கமும் தாக்காது, எல்லா இடத்திலும், எல்லா நேரத்திலும் சுகமாக இருக்கவே விரும்புகிறார்கள். சகலருக்கும் தன் மீதே அளவில்லாத பிரியம் இருக்கிறது. சுகமாய் இருத்தலே இப்பிரியத்துக்குக் காரணம். உறங்கும்போது எதுவும் செய்யாது, அதே நேரம் மிகவும் சுகமாக இருக்கிறோமே... அப்படிப்பட்ட சுகம் வேறு எதில் என்று அலைய, எங்கேயும் துக்கமற்ற சுகம் கிடைப்பதில்லை என்று புரிகிறது.

அப்போது, இதற்கு என்னதான் வழி, எப்படித்தான் இதை அடைவது என்று மனிதர்கள் பரிதவிக்க, அதற்கான வழிகாட்டலாகவே... இறைவன், ஆதிசங்கரர் உருவம் பூண்டு வேதாந்தத்தின் அந்தரங்கத்தை, மிகப் பெரிய ரகசியத்தை விவேக சூடாமணி என்னும் நூலால் வெளிப்படுத்தினான்.

பாலசுவாமியின் உரைநடை யில், முன்னுரை இப்படி ஆரம்பிக்கிறது...

ஸ்ரீரமண மகரிஷி
##~##
'அரிது அரிது... மானிடராய்ப் பிறத்தல் அரிது! இந்த மானிடர்கள், தங்கள் சுபாவ மாகிய ஆனந்தத்தை அடைய வேண்டும். இது ஞானத்தால் வரும். ஞானம், விசாரத்தால் வரும். இதற்கு என்ன செய்தால் நலம்?’

நல்ல குருவை அடைய வேண்டும். யார் நல்ல குரு, யார் நல்ல சீடன் என்று விளக்கி, குரு சேவை எவ்விதம் என்று கூறி, எது இருப்பினும் தன் முயற்சியே இந்த மார்க்கத்துக்கு வழி என்றும் கூறுகிறார் பாலசுவாமி.

நானே பிரம்மம், அஹம் பிரம்மாஸ்மி என்கிற உணர்வை இடையறாது, தரையில் எண்ணெய் ஊற்றப் படுகிற விதமாக, ஒரே வேகத் தில் சீராய் சிந்திக்க, மனம் தெளிவடையும்; சமாதி கைகூடும் என்கிறார்.

இவ்வளவுதான்! இதுதான் சொல்லப்படுகிறதா? இன்னும் விளக்கமாகப் பேசக்கூடாதா? கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போலிருக்கிறதே! மனிதர்களின் நலம் கருதி, பாலசுவாமி தொடர்ந்து எழுதுகிறார்...

'மனிதப் பிறவி மிக அரிதான பிறவி. இதில் அறிஞராகப் பிறப்பது மிகவும் அரிது. அந்த அறிஞன் மோட்ச ஆனந்தத்தை அடைய முற்படுவது, பல நெடும் பிறவிகளின் பயனால் கிட்டுகிறது. பண்டிதர்களின் விளக்கத்தைத் தேடி அலையாதே! வீணையில் நாதம் கேட்கும் போது சந்தோஷம். பிறகு, அது எதுவும் தருவதில்லை. அதுபோல், உபந்யாசங்கள் மோட்சத்தைத் தராது!

முயற்சியில்லாது நடக்குமா? அரசன் என்று சொல்லிக் கொண்டிருந்தால் அரசனாகி விடுவாயா? மருந்து என்று சொல்வதாலேயே வியாதி தீருமா? 'நானே பிரம்மம்’ என்கிற வார்த்தையால் முக்தி வராது. குருவின் மூலமாக 'நான்’ என்பதன் விளக்கம் கேட்டும், அதை இடைவிடாது சிந்தித்தும் நிலைபெற வேண்டும்.

மோகத்துக்குக் காரணம் மூளை, எலும்பு, கொழுப்பு, சதை, அங்கங்கள், ரத்தம், சருமம் ஆகியவற்றுடன் கூடிய உடல். இதுவே 'நான்’ என்றால், பிரச்னைகள் வந்துவிடும். உடல் சுகமே முக்கியம் என்கிறவன், முதலையைக் கரை சேரக் கட்டை யாகப் பிடிப்பவன். உடம்பு பற்றிய அபிமானம் வாடுகிற போது, மோகம் அகலும்போது, மோட்சம் அருகே வருகிறது.

உடம்பு அனுபவிப்பதை மனம் பெரிதாக்கி, கற்பனையில் திளைத்து, அந்தச் சுகத் தில் காலம் கழிக்கிறது. கனவுகளில் உடல் ஆட்டங்கள் தோன்றுகின்றன. இதற்கு மனமே காரணம்! ஆனால், சுகத்துக்கு எல்லை உண்டு; கனவுக்கு முடிவுண்டு.

நேற்று நன்றாக அனுபவித் தேனே; இன்று இல்லையே; நாளை எப்படியோ என்று கணக்குப் போடுகிறது மனம். அனுபவித்துவிட்டு சும்மா இருக்கத் தெரியவில்லை. வருகிறபோது அனுபவிப்போம் என்கிற பொறுமை இல்லை. கூச்சல் துவங்குகிறது. 'எனக்கு இல்லாட்டி, எவனுக்கும் இருக்கக்கூடாது; எனக்குக் கிடைக்கலேன்னா, யாருக்கும் கிடைக்கக்கூடாது.’ மனம் எனக்கு, நான், என்னுடையது என்கிற அகங்காரத்தில் மாட்டிக்கொள்கிறது. அப்போது, அனுபவிக்கும் தன்மையையும் அது இழக்க நேரிடுகிறது.

உடம்பு சுகத்தை அனுபவிக்க, மனம் அதைப் பெரிதுபடுத்த, உள்ளே இந்த விஷயத்துக்குக் காரணமான, மூலமான ஆத்மா அசைவற்று, வெறுமே காட்சி யாய் இருக்கிறது. அந்த ஆத்மா இல்லையெனில், உடம்பும் இல்லை; மனமும் இல்லை.

மனமற்ற உடம்பு நினைவற்ற ஆழ்ந்த தூக்கத்தின்போது ஆன்மாவுக்கு அருகே இருக்கிறோம். அது பரம சுகமாய் இருக்கிறது. நிரந்தரமாய், தெளிவாய் ஆன்மாவுக்கு அருகே இருப்பது எப்படி?

ஆன்மா இல்லாது, நான் நான் என்று உடம்போ, மனதோ எதைச் சொல்லும்? எப்படிச் சொல்லும்? ஆகவே, நான் நான் என்பது, ஆத்மாவைச் சொல்வதே! ஆனால், மனதின் அகங்காரம், ஆத்மாவை மறந்துவிட்டு தன்னைத் தான் நான் என்று சொல்லும். ஆன்மா நகர்ந்தால், தான் இல்லை என்பது தெரிந்தும், அது அடிமனதில் இருப்பினும், அதை மறந்துவிட்டு, மறைத்துவிட்டு, மனம் தன்னை முன் னிலைப்படுத்திக்கொள்ளும். ஆத்மா சும்மாயிருக்கும்.

கனவில் ஓர் உலகம் எப்படித் தோற்றுவிக்கப்படுகிறதோ, அதேபோல நனவில் ஓர் உலகம் மனதால் தோற்றுவிக்கப் படுகிறது. நான் இன்ன தேகம், இன்ன ஜாதி, இன்ன மதம், இன்ன மொழி என்று நிரந்தரமில்லாத விஷயங்களை மனம் பெரிதுபடுத்திக்கொள்ளும்.

இவற்றையெல்லாம் தாண்டி, நான் ஆத்மா என்கிற எண்ணத்துடன், மனதின் ஆட்டங்களை, ஆசைகளை நிறுத்தி யார் அமைதியாகிறாரோ, அவராலேயே தன்னை உணர முடியும். மனதின் சஞ்சலம் நீங்கும்.

ஸ்ரீரமண மகரிஷி

புத்தி, விஷய- ஞான சேகரிப்புக்கான இடம். பல ஜென்மங்களின் விஷயங்கள் இந்த புத்தியில் ஒளிந்திருக்கும். இதன் தூண்டுதலால் புண்ணியங்கள், பாவங்கள் செய்ய நேரிடும். மனம் அடங்க, புத்தியும் ஒரு கட்டில் நிற்கும்.

இவற்றைத் தாண்டி ஆத்மாவை அறிய, நான், நீ, கடவுள் இவர்கள் எல்லாமும் ஒன்றே என்று புரியும். பிறகு, பேதம் ஏது? பேதமில்லாமல் சண்டையேது? பெரிது சிறிது எப்படி? எல்லாமும் ஆத்ம ரூபமானால் எல்லைகள் உண்டா? ஜாதி- மத- மொழி பேதங்கள் உண்டா? ஆத்மா இன்னொரு ஆத்மாவை அறிய மொழி எதற்கு? மதம் என்ன தடை? ஜாதிக்கு என்ன அர்த்தம்? ஏதுமில்லை.

நான் ஆத்மா என்று தெரிந்துவிட்டால், அதுவே நீயாகிறாய் என்பதும் நேர்ந்துவிடும்.

தேகம் பற்றிய ஆசை, உலகப் புகழ் பற்றிய ஆசை, படிப்பு தரும் கர்வம் இருப்பின், ஆத்மா பற்றிச் சிந்திக்கவே முடியாது. இவற்றை விலக்கினால் ஆன்ம தரிசனம் கிட்டும். எப்படி விலக்குவது?

விஷயங்களில் ஆசை வரும்போதே, அந்தச் சிந்தனை தோன்றும்போதே, கவனமாகப் பார்க்க... எண்ணங்கள் தோன்றும்போதே உற்றுக் கவனிக்க... எதிரி வரும்போதே வெட்டி வீழ்த்த... உள்ளே ஆன்மா சுயமாய் பிரகாசிப்பதை உணரமுடியும்.

இங்கே இதற்கு அகங்காரம் பெரிய தடை. நான் இப்படி, இன்ன விதம், இன்ன வழி, இன்ன குணம், இன்ன மொழி, இன்ன குலம் என்கிற அகங்காரம் பற்றி, உள்ளே கேள்வி கேள். ஆன்மா அகன்ற பிறகு, இறந்த பிறகு என்ன மொழி, என்ன இனம், என்ன நிறம், எவ்வளவு உயரம், எத்தனைப் பணம், எவ்வளவு அழகு... எல்லாம் ஒழிந்தது.

மனதை உள்ளே திருப்பு. இவையனைத்துக்கும் காரணமான ஆன்மாவைப் பார்க்க முயற்சி செய். அப்போது அழியாத அழகு, குறையாத தெளிவான அறிவு, உலகாயத நட்பு தோன்றும். குதூகலம் பரவும். பசியிருப்பினும், நோய்ப்படினும் சிரிப்புதான் வரும். அகங்காரம் அழித்தவுடன் போகாது. மறுபடி மறுபடி வரும். கவனமாய் இரு!

நீர்க்குமிழி உடைந்து நீராவதுபோல, மண் குடம் உடைந்து மண்ணாவதுபோல, இப்பிறவி நீங்கி ஆன்ம சொரூபமாவது எளிதில் விளங்கும். மரண பயம் போகும். எது இவ்வுலகை ஆட்டி அலற வைக்கிறதோ, அந்த மரண பயம் ஞானிக்குச் சிறிதும் இல்லை. சரி சரி, கிளம்பு என்கிற தன்மை ஏற்பட்டுவிடும். இது பெரிய விடுதலை.

உண்ணுதலும், உடுத்தலும் ஞானிக்கு எவ்விதம்? ஞானி இவற்றைச் சொப்பனத்தில் செய்வதுபோல, எந்தப் பிடிப்புமின்றிச் செய்வான். எந்த நியமமும் இல்லாது, சர்வ சுதந்திரமாய்ச் சுற்றித் திரிவான். பித்தன், பேயன்போல நடந்துகொள்வான். யாராலும் அறியப் படாதவனாய், பிச்சைக்காரனோடு பிச்சைக்காரனாய்த் திரிவான்.

ஸ்ரீமத் சங்கர பகவத்பாதாள் அருளிய இந்த விவேக சூடாமணி, பாலசுவாமியால் உரை நடையாக்கப்பட்டது. புரிந்து அனுபவித்து எழுதப்பட்டது.

அப்போது, ஹடயோகத்தின் உபயோகம் என்ன?

இயம நியமங்கள் தேவையில்லை. மனம் அடங்க, தானாய் இவை வரும். பிரம்மத்தைச் சார்ந்திருப்பது பிரம்மச்சரியம் என்று புரியும். மந்திர ஜபங்கள், பக்தி கீர்த்தனங்கள், மூச்சு இழுத்துவிடும் பிராணயாமம் இவற்றில் மனம் போகாது. மாறாக சுவாசம், மனம் அடங்க தானாய் சரியாகிவிடும். மோகமில்லா மனதில் கூச்சலில்லாத சுவாசம் ஏற்படும்.

ஆடும் மனதை உற்றுப்பார்க்க, மனம் அடங்கி தானே அழியும். அப்போது, ஆத்ம அனுபவம் ஏற்பட்டுவிடும்.

எனவே, மனதை அடக்குவதை விட்டுவிட்டு, அதை உற்றுப் பார்க்கத் தவறிவிட்டு, யம நியமம், பிராணாயாமம் என்று பயிற்சிகளில் ஈடுபடுவானேன்? நேரிடையாய் எதிரியைத் தாக்கலாமே என்கிறார் பாலசுவாமி. ஒரு வேளை, 'எனக்கு இதுதான் சௌகர்யம். ஹடயோகம் பயின்று, மெள்ள மெள்ள தியானத்துக்கு வருகிறேன்’ என்பவருக்கும் சரி என்கிறார் மகரிஷி. தலையைச் சுற்றி மூக்கு தொடு; மூக்கு தொடுவதே முக்கியம் என்பது அவர் விளக்கம்.

கரடியாய், குரங்காய், மானாய், முயலாய் விதம் விதமான சர்க்கரை மிட்டாய்களைத் திருவிழாவில் விற்கின்றனர். ஆளுக்கொரு உருவை வாங்கிச் சாப்பிட்டாலும், கடைசியில் கரைந்து மீறுவது சர்க்கரைதான். இனிப்புதான். அதுபோல் மனித லட்சியம், ஆத்மானுபவம்!

பக்தியோ, நாம சங்கீர்த்தனமோ, மந்திர ஜபமோ, யாக விஷயங்களோ, ஹடயோகமோ... மனம் அழித்து ஆன்மாவை தரிசிப்பதே முக்கியம். ஆனால், நேரடியாய்த் தொடு! விசாரம் என்பது சிதறாத வழி. மற்றவை திசை மாற்றிவிடலாம். லட்சியம் நோக்கிய பயணம் முடங்கலாம். எது நான், நான் யார், எது அது என்று இடைவிடாது சிந்திக்க, உள்ளே ஏதோ ஒரு கணத்தில் ஸ்பூரிக்கும் என்கிறார்.

பகவான் ஸ்ரீரமண மகரிஷி பற்றிக் கதையாய் எழுத இயலாது; சம்பவங்களாக அடுக்க இயலாது; அவர் தத்துவ சொரூபம். ஞான விளக்கு. பேச்சு தாண்டி, உணர வேண்டிய சத் விஷயம்.

- தரிசிப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism