Published:Updated:

ஆலயம் தேடுவோம்...

பாஸ்கரராயருக்கு நமது காணிக்கை!ஆனந்தவல்லி சமேத பாஸ்கரேஸ்வரர் திருக்கோயில்இ.லோகேஸ்வரி

திசங்கரர் பலமுறை லலிதா சஹஸ்ரநாமத்துக்கு பாஷ்யம் எழுத நினைத்து, தமது சிஷ்யரிடம் சஹஸ்ரநாமச் சுவடிகளை எடுத்துவரப் பணித்தபோதும், சிஷ்யர் விஷ்ணு சஹஸ்ரநாம சுவடிகளையே தந்தாராம். இரண்டு மூன்று முறை இவ்வாறு நடக்க, 'ஏன் இப்படி?’ என்று சிஷ்யரிடம் கேட்டார் ஆதிசங்கரர். சிஷ்யர், தான் சுவடிகளை எடுக்கச் செல்கையில், ஒரு சிறு பெண் வந்து சுவடிகளைத் தந்ததாகவும், அதனைச் சரிபார்க்காது தான் கொண்டுவந்து தந்துவிட்டதாகவும் கூறினார்.

இவ்வாறு இரண்டு மூன்று முறை விஷ்ணு சஹஸ்ரநாமச் சுவடிகளை அன்னையே சிறுமி ரூபத்தில் வந்து தந்ததாக அறிந்துகொண்ட சங்கரர், அதுவே அன்னையின் ஆணை என்று உணர்ந்து, விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யம் மட்டும் செய்தாராம். சௌந்தர்ய லஹரி, பவானி ஸ்தோத்ரம் எனப் பல விதங்களில் அன்னை பராசக்தி மீது ஸ்லோகங்களை அருளிய ஆதிசங்கரரால், லலிதா சஹஸ்ரநாமத்துக்கு பாஷ்யம் பண்ண இயலவில்லை.

ஆலயம் தேடுவோம்...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பிற்காலத்தில், ஆசார அனுஷ்டானங்கள் நிரம்பப் பெற்றவரும், சகல சாஸ்திரங்களில் பாண்டித்யம் கொண்டவருமான பாஸ்கர ராயர் என்பவரைக் கொண்டு லலிதா சஹஸ்ர நாமத்துக்கு பாஷ்யம் எழுதிக்கொண்டாள் அம்பிகை.

கும்பகோணம்- மயிலாடுதுறை மார்க்கத்தில், பாஸ்கரராயபுரம் என்று அவர் பெயராலேயே ஓர் ஊர் இருக்கிறது. அது தற்போது பாஸ்கரராஜபுரம் என்று மருவியுள்ளது.

அன்னை பராசக்தியின்மீது மாறாத அன்பும் பக்தியும் கொண்டிருந்த பாஸ்கரராயர், தமது இறுதிக் காலத்தில் பாஸ்கரராஜபுரத்தில் ஒரு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்துள்ளார். அந்த ஆலயத்தையே நாம் இன்று தரிசிக்க உள்ளோம்.

17-ம் நூற்றாண்டில், மகாராஷ்டிராவில் உள்ள பாகா எனும் ஊரில் பிறந்து, காசியில் உபநயனம் செய்யப் பெற்றவர் பாஸ்கரராயர். ந்ருஸிம்ஹாத்வரி என்ற பண்டிதரிடம் பாஸ்கரராயர் வேத சாஸ்திரங்கள் பயின்றார்.

ஆலயம் தேடுவோம்...

பிறகு, குஜராத்தில் பல இடங்களில் மத்வ சம்பிரதாயங்களில் தேர்ச்சி பெற்றவர்களுடன் வாதங்கள் செய்து, பராசக்தியின் பெருமை களை நிலைநாட்டினார். அப்போது தஞ்சையை ஆண்ட மன்னர், பாஸ்கரராயரின் ஆன்மிகப் பணிகளைப் பற்றிக் கேள்விப்பட்டு, காவிரிக்கரையில் ஒரு கிராமத்தை அவருக்குக் கொடுத்து, வசிக்கச் செய்தார். கும்பகோணம் திருவிடைமருதூருக்கு அருகில் இருக்கும் பாஸ்கரராஜபுரம் கிராமம்தான் அது. அங்குதான் அவர் தமது இறுதிக் காலத்தில் பல நூல்களை எழுதி, 95-வது வயதில் அம்பிகையின் திருவடிகளை அடைந்தார்.

பாஸ்கரராஜபுரத்தில், அவருக்கு சமாதியை அதிஷ்டானம் அமைத்து வழிபட்டு வருகிறார்கள். பாஸ்கரராயர் வழிபட்ட சிவலிங்கத்தை வைத்து, அந்த ஊரிலேயே ஸ்ரீபாஸ்கரேஸ்வரர் ஆலயத்தை நிர்மாணித்து வழிபட்டு வந்தார், பாஸ்கரராயரின் மனைவி ஆனந்தி. அங்குள்ள அம்பாளுக்கு ஆனந்தவல்லி என்னும் திருநாமம் சூட்டி, வழிபட்டு வருகிறார்கள் அவ்வூர் மக்கள்.

லலிதா ஸஹஸ்ரநாமம், சௌந்தர்யலஹரி இவை இரண்டுக்கும் பாஸ்கரராயருடைய உரைகளே பிரதானமான உரைகளாக இன்றளவும் கருதப்படுகிறது. இவருடைய லலிதா ஸஹஸ்ரநாம பாஷ்யத்தைப் பார்த்தால், இவருடைய மேதாவிலாசம் நன்கு புலப்படும். வேதம், ஆகமம், புராணம், மந்திர சாஸ்திரம், ஸ்ரீவித்யை முதலியவற்றில் இவருக்குள்ள பரந்த அறிவு யாவரையும் வியப்பில் ஆழ்த்தும்.

ஆலயம் தேடுவோம்...

இவருடைய மாணாக்கர்களில் ஒருவராகிய ஜகந்நாதர் என்கிற உமாநாதர், ஸ்ரீபாஸ்கர விலாஸம் என்னும் நூலில் இவருடைய பெருமைகளையெல்லாம் விரித்துரைத்திருக்கிறார். இத்தகைய மகானுடைய அதிஷ்டான திருக்கோயில் தமிழ்நாட்டில் இருப்பது பெருமைக்குரிய விஷயம்.

மகான்களால் வழிபடப்பெற்ற  திருக் கோயில்கள் தனிச்சிறப்பு கொண்டவை மட்டுமல்ல; அளப்பரிய அருள்திறமும் கொண்டவை. பாஸ்கரராஜபுரத்திலுள்ள பாஸ்கரேஸ்வரர் திருக்கோயிலும் அத்தகைய புனித ஆலயங்களில் ஒன்று.

இறைவன் ஸ்ரீபாஸ்கரேஸ்வரர் என்னும் திருநாமத்துடனும், அம்பிகை ஆனந்தவல்லி என்ற பெயருடனும் அருளாட்சி செய்து வரும் இந்த ஆலயத்தில், விஷ்ணுவையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்துள்ளனர். தாயார் ஸ்ரீலக்ஷ்மிநாராயணி என்ற திருப் பெயருடன் அருட்காட்சி தருகிறாள்.

ஆலயம் தேடுவோம்...

மேலும் இக்கோயிலில் ஓம்காரேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, விநாயகர், முருகர் போன்ற தெய்வமூர்த்தங்களும் உள்ளன.

சுமார் 200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த ஆலயம், தற்போது கும்பாபிஷேகத் துக்காகக் காத்திருக்கிறது. கோயிலின் வெளிப்புறச் சுவர்களும், கோயில் விமானங்களும் சிதிலமடைந்துள்ளன.

இவற்றை மீண்டும் புதுப்பித்துக் கும்பாபி ஷேகம் செய்ய வேண்டும் என்ற நோக்கில், 'ஸ்ரீபாஸ்கரராஜபுரம் ஆஸ்திக சமாஜம்’ என்கிற அமைப்பை நிறுவி, கோயில் திருப்பணிகளையும், கும்பாபிஷேகத்துக் கான ஏற்பாடுகளையும் செய்துவருவதாகக் கூறினார், இந்த அமைப்பின் செயலாளர் கல்யாணராம ஐயர்.

பாஸ்கரராயருக்கென ஒரு மணி மண்டபமும் கோயில் அருகிலேயே கட்டியுள்ளனர். அந்த மணிமண்டபத்தை  புதுப்பிக்கும் பணியும் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

அம்பிகையின் பூரண அருளுக்குப் பாத்திரமானவரும், அம்பிகையைப் போற்றும் ஆயிரம் நாமாவளிகளைக் கொண்ட ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்துக்கு அற்புதமான பாஷ்யம் எழுதியவருமான  பாஸ்கரராயர் வழிபட்ட ஸ்ரீபாஸ்கரேஸ்வரர் திருக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்விக்க நிதியுதவி செய்யவேண்டியது நம் பொறுப்பு மட்டுமல்ல; லலிதா சஹஸ்ரநாம பாஷ்யம் அருளிய பாஸ்கரராயருக்கு நாம் செலுத்தவேண்டிய காணிக்கையும்கூட!

படங்கள்: கு.கார்முகில்வண்ணன்

ஆலயம் தேடுவோம்...

பாஸ்கரராஜபுரம் ஊரில் கோதண்டராமர் திருக்கோயிலும் உள்ளது. இங்குள்ள சீதாராமர் மற்றும் லக்ஷ்மணர் விக்கிரகங்களை மைசூர் மன்னர் தந்ததாக இவ்வூர் மக்கள் தெரிவிக்கின்றனர். அண்ணாசாமி சாஸ்திரிகள் என்பவர் இந்த ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர். அவர் மைசூர் மன்னரிடம் திவானாக இருந்துவந்துள்ளார். எனவே, மன்னர் திவானுக்கு அந்த விக்கிரகங்களைத் தந்தாராம். அண்ணாசாமி சாஸ்திரிகள் வைத்து வழிபட்ட விக்கிரகங்கள்  தற்போது பந்தநல்லூர் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் பாதுகாப்பில் உள்ளன. அந்த விக்கிரகங்களை மீண்டும் தங்கள் கோயிலில் வைத்து வழிபட வேண்டும் என்று ஊர் மக்கள் முயற்சி செய்து, அதற்கான வேலைகளையும் தற்போது செய்து வருகின்றனர். இந்தக் கோதண்டராமர் கோயிலையும் புதுப்பிக்க வேண்டும், ஆனந்தவல்லி சமேத ஸ்ரீபாஸ்கரேஸ்வரருக்கும் கோதண்டராமருக்கும் ஒருசேர கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்ற ஒரே மனநிலையுடன் இந்த ஊர் மக்கள் இறைவனை நாளும் வேண்டிக்கொண்டிருக்கின்றனர். இரண்டு கோயில்களையும் புதுப்பிக்கும் பணிகளும், கட்டுமானப் பணிகளும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன. இரண்டு கோயில்களின் திருப்பணிக்கும் நம்மால் இயன்ற அளவு அள்ளிக் கொடுத்து, சிவ-விஷ்ணுவின் பேரருளுக்குப் பாத்திரமாவோம்!

எங்கே இருக்கிறது? எப்படிச் செல்வது?

கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை  வழியில் திருவாலங்காடு வரை பேருந்து வசதி உள்ளது. திருவாலங்காட்டிலிருந்து பாஸ்கரராஜபுரம் செல்ல ஆட்டோ வசதி உள்ளது.