மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

சங்கடம் போக்கும் சனி பிரதோஷம்..! எஸ்.கண்ணன்கோபாலன்

ரு நாள் என்பது நம் வாழ்க்கையையே திசை திருப்பக்கூடியது. அது நல்ல திருப்பமா அல்லது நம்மைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் திருப்பமா என்பது, அந்த நாளின் நம்முடைய செயலின் தன்மையைக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது. காலம் காலமாக நல்லவர்களாக இருப்பவர்களும் ஏதேனும் ஒரு நாளில் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக கெட்டவர்களாக மாறிவிடக்கூடிய நிலை ஏற்பட்டு விடுகிறது. நல்லவர்களின் நிலையே இப்படி என்றால், நல்லவர் போன்று நடிப்பவரின் நிலையைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை.

எனவேதான், ஒவ்வொரு நாளும் நாம் நல்லதே நினைத்து, நல்லதே செய்து, நல்லவர்களாக வாழ வேண்டும் என்பதற்காக, தர்மசாஸ்திரம் பல நெறிமுறைகளை நமக்கு வகுத்துத் தந்திருக்கிறது.

ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

அந்த நெறிமுறைகளை மீறி, குற்றம் செய்பவர்களுக் கான தண்டனைகள் பற்றியும், அதே தர்மசாஸ்திரம் குறிப்பிடுகிறது. ஒரு குற்றத்தை பாமரன் ஒருவன் செய்தால், குறைவான அளவு தண்டனை தரும் தர்மசாஸ்திரம், அதே குற்றத்தை சாஸ்திரங்கள் கற்ற சான்றோர் செய்தால் அவர்களுக்குக் கடுமையான தண்டனையை விதிக்கிறது. காரணம், சாஸ்திரம் தெரிந்த சான்றோர் சொல்லும் தர்மத்தைத்தான் பாமரர்கள் கடைப்பிடிப்பார்கள். அவர்களே தப்பு செய்தால், பாமரர்கள் எப்படி அவர்களின் சொல்லை மதித்து நடப்பார்கள்? அதனால்தான், சமூகத்தை நல்ல வழியில் நடத்திச் செல்லும் பொறுப்பில் உள்ள சான்றோர் தவறு செய்தால், கடுமையான தண்டனையை விதித்திருக்கிறது தர்மசாஸ்திரம்.

தர்மசாஸ்திரப்படி வாழ்ந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவன், தன் மனைவியே தனக்குத் துரோகம் செய்தும் பழி வாங்க எண்ணாமல் பொறுமை காத்த சம்பவம் ஒன்றும், அதன் பயனாக ஒரு சிவாலயம் தோன்றிய வரலாறும் நமக்குத் தெரிய வந்தது.

'ஒரு நாள்... ஓரிடம்...’ அனுபவத்துக்காக எங்கே செல்லலாம் என யோசித்தபோது, 'சனிப் பிரதோஷம் வருவதால், அது தொடர்பான ஒரு கோயிலுக்குச் சென்று வரலாமே’ என்று தோன்றியது.

சனிப் பிரதோஷத்துக்கு அப்படி என்ன தனிச் சிறப்பு?

ஒருமுறை துர்வாச முனிவரின் சாபத்துக்கு ஆளான இந்திரன் தன் இந்திர பதவியையும் செல்வங்கள் அனைத்தையும் இழக்க நேரிட்டது. இழந்த பதவியையும் செல்வங்களையும் திரும்பப் பெற ஸ்ரீமகாவிஷ்ணு விடம் முறையிட்டான். அவருடைய ஆக்ஞைப்படி தேவர்கள் பாற்கடலைக் கடைந்ததும், அதில் இருந்து அமிர்தம் தோன்றியதும் பலருக்கும் தெரிந்ததுதான். ஒரு நன்மை நடக்கவேண்டுமானால், அதற்கு முன் பல சோதனைகளும் தோன்றுவது இயல்பு. அதன்படி, பாற்கடலில் அமிர்தம் தோன்றுவதற்கு முன், மிகக் கடுமையான ஆலகால விஷம் தோன்றியது.

அதன் வீரியத்தைத் தாங்கமாட்டாத தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டுப் புலம்ப, சிவனார் அந்த ஆலகால விஷத்தைத் தாம் ஏற்றுக்கொண்டார். பின்னர், தேவர்கள் போற்றித் துதிக்க, நந்திதேவரின் இரு கொம்பு களுக்கு மத்தியில் நின்று ஆனந்த நடனம் புரிந்தார் சிவன். இது நடைபெற்றது ஒரு சனிக்கிழமை நாளில்தான்! பிரதோஷ காலம் என்பது மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையில் உள்ள நேரம் ஆகும்.

ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

ஒவ்வொரு மாதமும் கிருஷ்ணபட்ச திரயோதசி, சுக்லபட்ச திரயோதசி என இரண்டு பிரதோஷங்கள் சிவாலயங்களில் கொண்டாடப்படுகின்றன. ஈசன் ஆலகாலம் உண்டது ஒரு சனிக்கிழமை திரயோதசி என்பதால், சனிப் பிரதோஷம் தனிச் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது.

சனிப் பிரதோஷ தரிசனத்துக்காக 'சப்த சங்கரஸ்தலம்’ என்று போற்றப்பெறும் சென்னை, மயிலை திருத்தலத்தில் அமைந் திருக்கும் காரணீஸ்வரர் திருக்கோயிலுக்குச் சென்றோம். சனிப் பிரதோஷம் மாலையில்தான் நடைபெறும் என்றாலும், கோயில் பற்றிய பல செய்திகளை அறிந்து கொள்ளவேண்டி, மயிலாப்பூர் கச்சேரி சாலையின் கிளைச் சாலையாகப் பிரியும் கடைவீதியில் (பஜார் தெரு என்றே அழைக்கப்படுகிறது), கச்சேரி சாலையில் இருந்து சுமார் அரை கி.மீ தூரத்தில் அமைந்துள்ள காரணீஸ்வரர் கோயிலுக்குக் காலையிலேயே சென்றுவிட்டோம்.

கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜ கோபுரத் துடன் திகழும் கோயிலுக்குள் பிரவேசிக்கிறோம். உள்ளே கொடிமரமும், அடுத்து நந்தி மண்டபமும் அமைந்துள்ளது. நந்திதேவரை வழிபட்ட பின்னர் கருவறைக்குள் செல்கிறோம். மகா மண்டபத்தில் நின்றபடி சர்வமங்கள விநாயகர், காரணீஸ்வரர், பொற்கொடி அம்பிகை, நடராஜர், உற்சவ மூர்த்தங்கள், சூரியன், பைரவர், சமயக் குரவர்கள், சந்தான பழனி ஆண்டவர் சந்நிதிகளைத் தரிசித்து வணங்கி, பிராகாரம் வலம் வருகிறோம். பிராகாரத்தில் கோஷ்ட மூர்த்தங்களாக நிருத்த கணபதி, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு (மிகப் பழைமையான சிவாலயங்களில்தான் ஈசனின் கருவறைப் பின்புற கோஷ்ட மூர்த்தமாக ஸ்ரீமகா விஷ்ணுவைத் தரிசிக்க முடியும்), பிரம்மா, துர்கை, சண்டிகேஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். பிராகாரத்தின் மேற்குப் பக்கத்தில் உண்ணாமுலை அம்பிகை சமேத அண்ணாமலையார், வள்ளி- தேவசேனா சமேத சுப்ரமணியர் சந்நிதிகளும், நாக பிரதிஷ்டையுடன் அரச மரம், ஆஞ்சநேயர், நவகிரகம், சனி பகவான் சந்நிதிகளும் அமைந்துள்ளன.

ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

பிற்பகல் நடை சார்த்தப்பட்டதும், கிடைத்த இடைவெளியில் கோயில் அர்ச்சகரிடம் பேசினோம்.

இந்து சமய அறநிலையைத் துறையின் மேற்பார்வையில் உள்ள இக்கோயில் மிகவும் பழைமையான கோயில் என்றும், புதன் தோஷ நிவர்த்தி ஸ்தலம் இது என்றும் குறிப்பிட்டார்.

சிவபெருமான் சந்நிதிக்கு நேராக வெளியில் நந்தி மண்டபமும், கொடி மரமும் உள்ளன. நந்தி பகவானுக்கு வலப்புறம் துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி சந்நிதிகள் அமைந்துள்ளன. காரணிச் சித்தர் என்ற சித்தர் வழிபட்டதால்,  ஈசன் காரணீஸ்வரர் என்று திருப்பெயர் கொண்டாராம். அம்பிகை ஸ்வர்ணலதாம்பிகை என்றும், பொற்கொடி அம்பிகை என்றும் திருப்பெயர் கொண்டாளாம். தன்னை வந்து வழிபடுவோருக்கெல்லாம் பொன்னும் பொருளும் வழங்கி அருள்புரிவதால், அவளுக்கு இந்தத் திருப்பெயர் என்கிறார்கள்.

சிந்து சமவெளி நாகரிகத்தின் தொடக்கக் காலம். அன்றைக்கு, சிந்து நதிக்குத் தென் கரையில் பத்மபுரி என்றொரு நகரம் இருந்தது. அந்த நகரில் வேதம் முற்றுணர்ந்த அந்தணச் செம்மலாய் வாழ்ந்து வந்தார் பசுபதி எனும் வேதியர். அவர்தம் தவப்பயனாய்த் தோன்றிய மகன் தனஞ்செயன், பெயருக்கு ஏற்ப அறிவிலும் அழகிலும் சிறந்து விளங்கினான். அவன் வாலிபப் பருவம் எய்தியதும், அழகிலும் பண்பிலும் சிறந்து விளங்கிய காந்திசுந்தரம் எனும் பெண்ணைத் திருமணம் செய்து வைத்தார் பசுபதி.

ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

தம்பதியர் கருத்தொருமித்த மனத்தினராய், சிறப்புடன் வாழ்ந்து வந்தனர். இருப்பதைக் கொண்டு சிறப்பான முறையில் குடும்பம் நடத்திய மனைவியிடம் தனஞ்செயன் மிகுந்த அன்பு செலுத்தினான். வாழ்க்கையும் இனிதாய்த் தொடர்ந்தது.

ஆனால், வினைப்பயன் விதிப்பயன் என்று ஒன்று இருக்கிறதே! அதை யாரால் மாற்றமுடியும்? ஒரு நாள், அது தன் குரூர விளையாட்டைத் தொடங்கிவிட்டது.

காந்திசுந்தரம், கணிகை ஒருத்தியின் பார்வையில் பட்டுவிட்டாள். அவளுடைய அழகும் வனப்பும் கண்ட அந்தக் கணிகை, 'காந்திசுந்தரத்தைத் தன் வசப்படுத்திக் கொண் டால், அவளைத் தன் தொழிலில் ஈடுபடுத்தி, பணக்காரியாக ஆகலாமே!’ என்று யோசித்தாள்.

காந்திசுந்தரத்திடம் தன்னை அறிமுகப் படுத்திக்கொண்ட அக் கணிகை, முதலில் அவளுடைய அழகைப் புகழ்ந்து பேசினாள். புகழ்ச்சிக்கு யார்தான் மயங்கமாட்டார்கள்? காந்திசுந்தரமும் மயங்கினாள். அடுத்த கட்டமாக, அவளின் கணவன் தனஞ்செயன் கணிகை ஒருத்தியிடம் காமுற்றுக் கிடப்பதாகக் கதை விரித்தாள். கணவனின் பேரில் அவளுக்கு வெறுப்பும் துவேஷமும் முளைவிட விதை விதைத்தாள். பின்பு, அவள் அழகுக்கும்  வனப்புக்கும் 'ம்’ என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும், பொன்னும் மணியும் காலடியில் குவியும் என்பதாக ஆசை உரம் போட்டாள். கடைசியில், அறுவடையும் செய்துவிட்டாள் அக் கணிகை. ஆம்... ஒருநாள், காந்திசுந்தரம் களங்கப்பட்டுப் போனாள்.

ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

தன் கரம் பற்றி வாழ்க்கைப் பயணம் தொடர்ந்தவள், இடையிலேயே தடம் மாறி களங்கப்பட்டது தனஞ்செயனுக்குத் தெரிய வந்தது. அழகு மட்டுமின்றி, உயர் பண்புகளும் கொண்டிருந்த தன் மனைவியா இப்படி? மனம் தாளவில்லை தனஞ்செயனுக்கு.

தடம் மாறிப்போன மனைவியைத் தண்டிக்க நினைக்கவில்லை அவன். காரணம், அவள்தான் விதிவசத்தால் தப்பு செய்துவிட்டாள் என்றால், சாஸ்திரம் தெரிந்த தானும் அப்படித் தப்பு செய்யலாமா என்று எண்ணினான். தனது தலைவிதியை எண்ணி வருந்தியவனாக, மனம் பேதலித்த நிலையில் காடுகளில் சுற்றித் திரிந்துகொண்டே, தென்திசை நோக்கி வந்துகொண்டிருந்தான்.

திருமயிலை திருத்தலத்தை அடைந்த நேரத்தில், அவன் மனம் தெளிவு பெற்றது. கடலோரத்தில் இருந்த கபாலீஸ்வரர் கோயில் கோபுர தரிசனம் கண்ட அவன், ஆலயத்துள் சென்று ஐயனை நெக்குருகி வழிபட்டான். சாஸ்திர நெறி தவறாமல் வாழும் அவனுக்குத் திருவருள் புரியத் திருவுள்ளம் கொண்ட சிவபெருமான், அசரீரியாக ஓர் இடத்தைக் குறிப்பிட்டு, அங்கே சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபடக் கூறினார்.

தனஞ்செயனும், சிவபெருமான் குறிப்பிட்ட இடத்தில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து, பக்தியுடன் பூஜித்து வரலானான். பக்திக்குப் பலன் கிடைப்பதற்கான காலமும் கனிந்தது.

தனஞ்செயன் பூஜித்த லிங்கத்தில் இருந்து அம்பிகையுடன் வெளிப்பட்ட சிவபெருமான், அவன் வேண்டும் வரம் யாதெனக் கேட்டார்.

''ஐயனே! நின் அருளால் நான் இனிப் பிறவாமை வேண்டும். மேலும், என் மனைவி, பொன்னும் பொருளும் கிடைக்கப் பெற வேண்டும் என்ற மதி மயக்கத்தினாலேயே தடம் மாறிச் சென்றாள். எனவே, எந்த ஒரு பெண்ணும் இங்கு வந்து வழிபட்டால், தங்கள் அருளாலும், தேவியின் கருணையினாலும் பொன்னும் பொருளும் கிடைக்கப் பெற்று, அவர்களின் மனம் நிறைவு பெற வேண்டும்'' என்று பிரார்த்தித்தான்.

அப்படியே அருள்புரிந்த ஈசன், அன்னை பொற்கொடி சமேதராகக் கோயில் கொண்டு அருளினார். அதுதான், இதோ நாம் தரிசித்துக் கொண்டு இருக்கிறோமே, இந்த காரணீஸ்வரர் கோயில்.

மாலை 3.00 மணிக்கு நாம் சனிப் பிரதோஷ விழாவைத் தரிசிக்கக் கோயிலுக்குச் செல்கிறோம். பக்தர்கள் பால், பன்னீர், பூச்சரங்கள், பூமாலைகள் மற்றும் நானாவித அபிஷேக திரவியங்களுடன் திரள்திரளாக வருகிறார்கள். கோயிலில் உள்ள திருமுறை மண்டபத்தில்,  நந்தி வாகனத்தில் எழுந்தருளியிருக்கும் பிரதோஷ மூர்த்தியைத் தரிசித்து வணங்கி, கருவறைக்குள் செல்கிறோம். சரியாக 4 மணிக்கு, கருவறையில் உள்ள சர்வ மங்கள விநாயகருக்கு முதல் அபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து நந்தி தேவர், முருகப் பெருமான், பொற்கொடி அம்பிகை, காரணீஸ்வரர், சண்டிகேஸ்வரர் சந்நிதிகளில் கிரமப்படி அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. அலங்காரம் செய்வதற்காகத் திரை போடவே, நாம் கோயில் பிராகாரத்தை வலம் வந்தோம். ஏராளமான பக்தர்கள் குவிந்திருப்பதை நம்மால் காணமுடிகிறது.

அப்போது வயது முதிர்ந்த ஒரு பாட்டியைக் கைப்பிடித்து, ஒவ்வொரு சந்நிதியாக பொறுமையாக அழைத்துச் சென்று தரிசனம் செய்ய வைத்த ஓர் இளைஞரைக் கண்டோம். பிரதீப் குமார் என்ற அந்த இளைஞர் ஹோட்டல் நிர்வாகத்தில் பட்டம் பெற்று தற்போது சென்னையில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் சமையல் கலைஞராகப் பணிபுரிந்து வருவதாகவும் ஊரில் இருந்து வந்திருக்கும் தன் பாட்டியை கோயிலில் நடைபெறும் சனிப் பிரதோஷ விழாவைத் தரிசிக்க அழைத்து வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

பெற்று வளர்த்த தாயையும் தந்தையையும் முதியோர் இல்லத்தில் கொண்டு சேர்க்கும் இளைஞர்கள் மத்தியில், தன் பாட்டியை மிகப் பொறுமையுடன் கோயிலில் ஒவ்வொரு சந்நிதியாக அழைத்துச் சென்று தரிசனம் செய்ய வைத்த அந்த இளைஞரைக் கண்டு, நாம் உண்மையிலேயே வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தோம்.

சரியாக 5.30 மணிக்கு அலங்காரம் முடிந்து, மங்கள இசை முழங்க, தீபாராதனை நடைபெற்றது. அதே நேரத்தில், திருமுறை மண்டபத்தில் எழுந்தருளியிருந்த பிரதோஷ மூர்த்திக்கு பக்தர்கள் கொடுத்த மலர்மாலைகள் சார்த்தப்பட்டு, பிராகார வலம் வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.

5.45 மணிக்கு, நாகஸ்வர இசையுடன் பிரதோஷ மூர்த்தியின் பிராகார வலம் தொடங்கியது. 'ஹர ஹர சங்கர... ஜெய ஜெய சங்கர’ என்று பக்திப் பரவசத்துடன் முழங்கியபடி பக்தர்கள் வலம் வந்ததைக் காண, அந்தப் பரவசம் நம்மையும் தொற்றிக்கொண்டது. மூன்றாவது சுற்றின்போது, வடகிழக்கு மூலையில் பிரதோஷ மூர்த்தியைச் சுமந்து வந்த தொண்டர்கள், சுவாமி நடனம் ஆடுவது போன்ற பாவனையில் வலமும் இடமுமாக ஒய்யாரமாக அசைந்து ஆடினர். தொடர்ந்து, பக்தர்களின் பரவசக் குரலில் சிவபுராணம் ஒலிக்க, அர்ச்சனைகள் நடைபெற்றன. நிறைவாக, தீபாராதனை முடிந்து, பிரதோஷ மூர்த்தி திருமுறை மண்டபத்துக்கு எழுந்தருள, பிரதோஷ விழா இனிதாய் நிறைவு பெற்றது. வந்திருந்த பக்தர்கள் மனம் மகிழ இறையருளும், வயிறு குளிர பிரசாதமும் பெற்றுத் திரும்பினர்.

எப்படிப்பட்ட நெருக்கடியான நிலையிலும் சாஸ்திர தர்மத்தில் இருந்து சிறிதளவும் தவறாமல் வாழ்ந்த ஒரு பக்தனின் காரணமாகத் தோன்றிய காரணீஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்ற சனிப் பிரதோஷ விழாவை தரிசித்த மனநிறைவுடன் நாமும் அங்கிருந்து கிளம்பினோம்.

படங்கள்: வீ.நாகமணி