Published:Updated:

சக்தி சங்கமம்

புராணங்கள் வெறும் கதைகள் அல்ல!

'தி ஹிந்து கார்ட்டூனிஸ்ட்’ ஓவியர் கேஷவ் - சக்தி விகடன் வாசகர்கள் கலந்துரையாடல்

லிலையில் கண்ணன்! இன்னொருபுறம், அம்மாவிடம் பவள வாய் திறந்து பிரபஞ்சத்தைக் காட்டுகிறது கிருஷ்ணக் குழந்தை. மற்றோர் இடத்தில் காளிங்க நர்த்தனம் செய்கிறது.

கிருஷ்ண கதை மாத்திரமா? பரீட்சித்து மகாராஜாவுக்கு சுகபிரம்மம் கதை சொல்வது முதல், பாற்கடல் சம்பவம், சிவனார் விஷம் அருந்துதல், வராஹ அவதாரம், தூணைப் பிளந்து தோன்றும் ஸ்ரீநரசிம்மம் எனப் பல்வேறு காட்சிகளுடன் ஒட்டுமொத்த பாகவதமும் ஒரே பிரமாண்ட கேன்வாஸில்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பார்த்ததுமே பிரமித்து நின்றுவிட்டார்கள் நம் வாசகர்கள்.

'சக்தி சங்கமம் - ஓவியர் கேஷவ்வுடன் கலந்துரையாடல்’ என்ற அறிவிப்பைத் தொடர்ந்து ஏராளமான வாசகர்கள் ஆர்வத்துடன் தங்களது கேள்விகளை அனுப்பியிருந்தார்கள். அவற்றில் சிறப்பான கேள்விகளுக்கு உரிய வாசகர்களைத் தேர்வு செய்திருந்தோம். அவர்களுடன் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலைப் பொழுதில், சென்னை- அடையாறு கிரீன்வேஸ் சாலையில் இருக்கும் ஓவியர் கேஷவ்வின் இல்லத்தில் சங்கமித்தோம்.

பாகவத ஓவியத்தில் இருந்தே துவங்கியது கலந்துரையாடல்.

சக்தி சங்கமம்

''இப்படியும் பண்ண முடியுமான்னு ரொம்ப ஆச்சரியமா இருக்கு சார்! நிறைய காட்சிகள், நிறையச் சம்பவங்கள்... இது என்ன கான்செப்ட் சார்? ஒரே கதையா, அல்லது வேறு வேறு கதைகளை ஒரே தொகுப்பாக வரைந்திருக்கிறீர்களா?'' - சென்னை அரசு கவின் கலைக்கல்லூரி மாணவர் ஏகாம்பரம் ஆர்வத்துடன் கேட்க, புன்னகையோடு விவரிக்கிறார் ஓவியர் கேஷவ்.

''இது ஸ்ரீமத் பாகவதத்தில் வரும் காட்சிகள். பாம்பு தீண்டி ஏழு நாட்களில் மரணம் என்பது பரீட்சித்து மன்னனுக்கு உண்டான சாபம். மரணத்துக்குப் பிறகு நற்கதி பெற விரும்பிய அந்த மன்னன் ஏழு நாட்களையும் பயனுள்ளதாகக் கழிக்க விரும்பினான். இந்த நிலையில் சுகபிரம்ம மகரிஷி அங்கு வர, அவர் மூலம் பாகவதக் கதைகளைக் கேட்டு, மன்னன் நற்கதி அடைந்தான்.

பகவான் விஷ்ணுவின் மகிமைகளை, அவதாரச் சிறப்புகளைச் சொல்லும் அற்புதமான பொக்கிஷம் ஸ்ரீமத் பாகவதம். அதில் வரும் சம்பவங்கள்தான் இந்த ஓவியத்தில் உள்ள காட்சிகள்.

ஒருமுறை... 'ஞானமும் வைராக்கியமும் என்னுடைய குழந்தைகள். உலகில் நான் மட்டும் இளைமைப்பொலிவுடன் திகழ, என் குழந்தைகளான ஞானமும் வைராக்கியமும் பொலிவிழந்து, முடிவை நெருங்கும் தறுவாயில் இருக்கிறார்கள். அவர்களை மீண்டும் பொலிவுறச்செய்ய தாங்கள்தான் வழிகாட்ட வேண்டும்’ என நாரதரிடம் புலம்பியதாம் பக்தி. ஆனால் நாரதருக்கும் பதில் சொல்லத் தெரியவில்லை. பிறகு, 'பாகவத சப்தாஹம் ஒன்றே அதற்கு வழி! உயிர்களாகிய ஜீவாத்மா பகவானாகிய பரமாத்மாவுடன் இணைய அதுவே வழிவகுக்கும்’ என்று சூரிய பகவான் உபதேசித்ததாக பாகவத மஹாத்மியம் கூறுகிறது. அத்தனை மகத்துவமானது பாகவதக் கதையைக் கேட்பதும், படிப்பதும்.

இன்னொரு முக்கியமான விஷயம் சொல்கிறேன். ஒவ்வொரு நொடியையும் நன்மையானதாக, நல்ல விஷயங்களில் கழிக்கவேண்டும் எனச் சொல்லித்தருகிறது பரீட்சித்துவின் கதை. ஒரு வகையில் நீங்களும் நானும்கூட பரீட்சித்துதான். எல்லோருக்குமே முடிவு உண்டு என்ற விதிப்பாடு தெரியும். ஆக, கிடைக்கும் ஒவ்வொரு கணத்தையும் பயனுள்ளதாக்கிக் கொள்வோம். என்ன, சரிதானே!''

சக்தி சங்கமம்

? ''இப்படி ஒரு ஆர்ட்வொர்க் பண்ணணும்னு எப்படி உங்களுக்குத் தோணுச்சு, சார்? இதை வரைவதற்கு எத்தனை நாட்கள் ஆனது?'' - இது வாசகி சுகன்யாவின் கேள்வி.

''குஜராத்தில் கேசவ்நாராயணன் டோங்ரே என்ற பெரியவர் பாகவத சாரத்தை மிக அருமையாக அருளியிருக்கிறார். பாகவத சாரம் குறித்த அவரது அருளுரைகள், 'பாகவத ரகசியம்’ எனும் பெயரில் நூலாகவும் வெளிவந்திருக்கிறது. நான் அதைப் படித்திருக்கிறேன். அதேபோன்று, அலகாபாத் அருகே மான்கட் என்ற இடத்தில், கிருபாளு மகராஜ் என்பவரும் பாகவத தாத்பரியத்தை விளக்கிச் சொல்வார். அவரது சொற்பொழிவை டி.வி-யில் ரசித்திருக்கிறேன். இப்போதும் அவரது உரைகள் அவ்வப்போது டி.வி-யில் ஒளிபரப்பாவது உண்டு.

பாகவத சாராம்ச கதைகளை ஏழு நாட்களுக்குச் சொல்வார்கள். இதற்கு 'பாகவத சப்தாஹம்’ என்று பெயர். அற்புதமான இந்த பாகவதக் கதைகளை ஒரே கேன்வாஸில் ஓவியங்களாகத் தந்தால், அதைப் பார்த்து ரசிக்கும் ஒவ்வொரு வருக்கும் பாகவதக் கதையைப் படிக்கும் தூண்டுதல் ஏற்படுமே என்று யோசித்தேன். அதன் விளைவுதான் இந்த ஓவியம்.

மொத்தம் 79 எபிசோட்கள். 2007-ல் ஆரம்பித்தேன். நான்கு வருடங்கள் ஆனது. என்னைப் பொறுத்த வரையிலும் இது இன்னும் முழுமையாகவில்லை என்றே சொல்வேன்!''

? ''பொதுவாக புராண ஓவியங்களை, அதற்கு உரிய கதைகளை மனத்தில் வைத்து வரைவீர்களா? அல்லது, அதன் தத்துவ- தாத்பரியங்களை ஓவியங்களில் உணர்த்த முற்பட்டது உண்டா?''

- வாசகர் ராஜனின் இந்தக் கேள்விக்கு உற்சாகமாகப் பதில் தந்தார் ஓவியர் கேஷவ்.

''முதலில் ஒன்றை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். இவை எல்லாமே அடையாளங்கள்தான்; ஒருவித சிம்பல்ஸ்தான்! புராணங்கள் சொல்வது வெறும் கதைகள் மட்டுமே அல்ல; ஒவ்வொன்றும் ஒரு தத்துவத்தைச் சொல்லும் எனப் பெரியோர்கள் சொல்வார்கள்.

உதாரணமாக, இந்த ஓவியத்தைப் பாருங்கள். காளிங்க நர்த்தனம். காளிங்கன் எனும் நாகத்தை கண்ணபிரான் அடக்கியருளிய கதையை விளக்கும் ஓவியம் இது. ஆயிரம் தலை கொண்ட நாகபடத்தின் மீது  நடனம் ஆடிய கண்ணன், காளிங்கனின் எந்தெந்த தலையெல்லாம் கர்வத்துடன் தலைதூக்குகிறதோ, அதையெல்லாம் மிதித்து ஆடி அடக்கினான் என்பார்கள் பெரியோர்கள். இந்தக் கதை, கர்வம் கூடாது என்று விளக்குகிறது; கர்வம் கொண்டவன் அழிவான் என்று உணர்த்துகிறது; கர்வத்தை பங்கம் செய்ய அறிவுறுத்துகிறது.

அதேபோன்று, வாமன அவதாரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அங்கும் மகாபலியின் கர்வம் அடக்கப்பட்டது. வாமன மூர்த்தி மண்ணை அளந்த பிறகு, ஒரு காலைத் தூக்கி விண்ணளந்தார். அப்போதுதான் அந்த திருப்பாதக் கமலத்தைத் தரிசிக்கும் பேறு பிரம்மனுக்கு வாய்த்ததாம். ஆமாம்! பகவானின் நாபிக்கமலத்தில் பிறந்த நான்முகனுக்கே ஒருபோதும் இறைவனை முழுமையாகத் தரிசிக்கும் வாய்ப்பு அமைந்தது இல்லை; எனில், நாமெல்லாம் எம்மாத்திரம்?!

சரி, விஷயத்துக்கு வருவோம். விண்ணளந்த பாதத்தைத் தனது கமண்டல நீரால் அபிஷேகித்தான் பிரம்மன்; திருப்பாதம் பட்ட அந்த நீர் ஆகாய கங்கையாகப் பரிணமித்து வீழ்ந்தது; அதை சிவனார் தமது திருமுடியில் தாங்கிக்கொண்டார் என்கிறது ஒரு புராணம். இங்கே, இமயத்தை ஈசனின் அம்சமாகக் கருதி வழிபடுவதை கருத்தில் கொள்ள வேண்டும். இமயத்தின் பனிமுடியில்தான் கங்கா பிரவாகம் துவங்குகிறது. இயற்கையை இறையின் குறியீடாகப் புராணம் காட்டுவது எவ்வளவு பொருத்தம் பார்த்தீர்களா?

அதேநேரம், வாமன அவதாரம் முன்னரே நிகழ்ந்தது. ஆனால், பகீரதன் தவத்தால்தான் கங்கா, பூமிக்கு இறங்கினாள். பகீரதன் ஸ்ரீராமனின் மூதாதையர். எனில், பகீரத தவம் நிகழ்ந்தது திரேதா யுகம் ஆயிற்றே என்று வெறும் கதையை மட்டுமே எடுத்துக் கொண்டால் குழப்பமே மிஞ்சும்!''

சக்தி சங்கமம்

? ''சாமி படங்கள் வரைவது என்றால், விரத கட்டுப்பாடுகள், பிரத்யேக வழிபாடுகள் என்றெல்லாம் சொல்வார்கள். நீங்கள் அப்படி விரத கட்டுப்பாடுகள் கடைப்பிடிப்பது உண்டா?''

 - வாசகர் ஸ்ரீதர் ராஜா இந்தக் கேள்வியைக் கேட்டதும், பெரிதாகச் சிரிக்கிறார் ஓவியர் கேஷவ்.

''உண்மையைச் சொல்லிவிடுகிறேன். எனக்கு டிசிப்ளின் கிடையாது. அதாவது, இத்தனை மணிக்கு எழுந்துகொள்ள வேண்டும், இப்படித்தான் இன்னின்ன நாளுக்குள் இதை முடிக்க வேண்டும் என்கிற நேர ஒழுங்குமுறை கிடையாது.

ஒரு படத்தை வரையத் துவங்கும்போது, அதில் மட்டுமே மனத்தை நிலைநிறுத்தினால் போதுமானது என்பது என் எண்ணம். ஆதாரக் குறிப்புகள் இல்லாமல் எந்த ஓவியத்தையும் வரைவது இல்லை.  சில நேரங்களில், குறிப்பிட்ட கட்டம் வரை  ஓவியம் வளர்ந்துவிட்ட நிலையில், அதுகுறித்த புதிய குறிப்புகள் கிடைக்கும். பிறகென்ன... வரைந்ததை அழித்துவிட்டு, மீண்டும் முதலிலிருந்து ஆரம்பிப்பேன்.

அமாவாசை, பௌர்ணமி, விஜயதசமி, ஏகாதசி போன்ற புனிதமான நாட்களில் புதிய ஓவியம் ஒன்றை வரையத் தொடங்குவது என் வழக்கம். ஸ்ரீமத் பாகவத ஓவியத்தை வரையத் துவங்கியதும் ஒரு விஜயதசமித் திருநாளில்தான். மற்றபடி, ஓவியத்துக்காக விரத வழிபாடுகள் என எதுவும் கடைப்பிடித்தது இல்லை.''

கேஷவ் சொல்லிமுடிக்க, வாசகர் செந்தமிழ் செல்வன் மற்றொரு ஓவியத்தைச் சுட்டிக்காட்டிக் கேட்டார்...

? ''அதென்ன சார், மையமாக கண்ணன்... சுற்றிலும் ஒரு துள்ளலோடு பசுக்கள்..? அதேபோல், அங்கே ஸ்ரீராமனின் அருகில் வித்தியாசமான கோலத்தில் அனுமன்..?''

''ஏற்கெனவே சொன்னதுதான்! புராணச் சித்திரிப்புகள் எல்லாமே குறியீடுகள்தான்; ஸிம்பல்கள்தான்! மேலோட்டமாகப் பார்த்தால், கண்ணன் குழலூத, அந்தக் குழலிசை கேட்டு, பசுக்கள் துள்ளிக் குதிப்பதுபோல் தோன்றும்.

சக்தி சங்கமம்

பசுவை ஜீவாத்மாக்களுக்கான குறியீடாகச் சொல்வார்கள். அதேபோன்று கண்ணன் ஆனந்தத்தின் குறியீடு. இறைவனை அடைவதற் கான பக்தி மார்க்கமும் ஆனந்தம். அதன் இலக்கான இறைவனும் ஆனந்தம். அதைக் குறிப்பதே இந்த ஓவியம்.

ஸ்ரீராம ஓவியம், அனுமன் சரணாகதி தத்துவத்தைக் காட்டுகிறது. தன்னை அப்படியே முழுமையாக இறைவனிடத்தில் ஒப்படைப்ப தே சரணாகதி தத்துவம். அதற்குச் சிறந்த உதாரணம் அனுமனும், அவரது தாஸ்ய பக்தி யும்!'' என்று ஓவியர் கேஷவ் சொல்லி முடிக்க...

''அதிலும், அந்தப் படத்துக்கு பார்டர் போன்று ஜாம்பவான் அனுமனின் பலத்தை அவருக்கு எடுத்துரைப்பதில் துவங்கி, அனுமன் கடல் தாண்டுவது, இலங்கையில் சீதாவைத் தரிசிப்பது, தொடர்ந்து லங்கா தகனம் எனக் காட்சிப்படுத்தி, கடைசியில் அவர் ஸ்ரீராமனிடம் வந்து சரணடைவது போன்று வரைந்திருப்பது மிக அற்புதம், சார்! சுந்தரகாண்டத்தை கண்ணெதிரில் காட்டியிருக்கிறீர்கள்'' என்று வாசகர் நாராயணன் பாராட்டினார். மற்ற வாசகர்களும் அதை ஆமோதித்தார்கள்.

? ''உங்கள் ஓவியங்களில் கண்ணனே அதிகம் இடம்பிடித்திருக்கிறார். மற்ற தெய்வங்கள் அதிகம் இல்லையே, ஏன்?''

- இது வாசகர் ஏழுமலை ஆதிகேசவனின் கேள்வி.

''உண்மையைச் சொல்வதென்றால், எனக்குக் கண்ணனை விட ஸ்ரீராமனையே அதிகம் பிடிக்கும்!'' என்று புன்னகைத்தபடி தொடர்கிறார் ஓவியர் கேஷவ்.

''சிறு வயதில், வால்மீகியின் ராமாயணக் கதையை ஓவியமா கத் தீட்ட ஆசைப்பட்டேன். அதன்படி, சிரத்தையாக வரையவும் துவங்கினேன்.

என் தந்தை குருவாக வணங்கும் மகான், புரிசை நடாதூர் கிருஷ்ணமாச்சாரியார். அவரிடம், அதுவரை நான் வரைந்த படங்களைக் காண்பித்து ஆசி வாங்க விரும்பினேன். தந்தையார் அவரைத் தரிசிக்கச் சென்றபோது, நானும் உடன் சென்றேன்.

தந்தை என்னை அவரிடத்தில் அறிமுகம் செய்ததுடன், ஓவியத்தையும் காட்டினார். அவர் அந்த ஓவியம் குறித்து எதுவும் விமரிசிக்கவில்லை. நன்றாக இருக்கிறது என்றோ, திருத்தங்கள் தேவை என்றோ எதுவும் சொல்லவில்லை. இரண்டு முறை அவரைத் தரிசிக்கச் சென்றும் இதுதான் நிலை. மூன்றாவது முறையாகத் தரிசிக்கச் சென்றபோது, ஒற்றை வரியில் அவர் சொன்னார்... 'இனி, நீ கண்ணனை வரை!’ அன்று முதல் கண்ணனை விதம் விதமாக வரையத் தொடங்கினேன்.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால்.. நான் வரையும் மற்ற தெய்வப் படங்கள் எல்லாம் ஏதேனும் ஒருவகையில் வெளியே சென்றுவிடும். அதென்னவோ தெரியவில்லை, கண்ணன் ஓவியங்கள் மட்டும் என் இல்லத்தில் என்னுடனேயே தங்கிவிடும். இதை எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை. சிலிர்ப்பான விஷயம்தான்!''

சக்தி சங்கமம்

தொடர்ந்து...

சக்தி சங்கமம்

 உங்களது கண்ணன் ஓவியங்களில் பெரும்பாலும் புல்லாங்குழல் மிஸ்ஸிங். இதற்குப் பிரத்யேகமாக ஏதாவது காரணம் உண்டா?

சக்தி சங்கமம்

ஒருபுறம் தெய்விகப் படங்கள்; மற்றொரு புறம் கலக்கலான அரசியல் அதிரடி கார்ட்டூன்கள்! மாறுபட்ட இரண்டு குதிரைகளில் எப்படி உங்களால் பயணம் செய்ய முடிகிறது? எப்படி இதை பேலன்ஸ் செய்கிறீர்கள்?

சக்தி சங்கமம்

 நீங்கள் வரைந்த மகாபெரியவா படத்தை அவரே பார்த்து ஆசிர்வதித்துக் கொடுத்தாராமே... அந்தச் சிலிர்ப்பான அனுபவத்தை பகிர்ந்துகொள்ளுங்களேன்.

- என, கேள்விகளை கோடைமழையெனப் பொழிந்து தள்ளினார்கள் சக்தி விகடன் வாசகர் கள். அவற்றுக்கு உற்சாகமும் ரசனையுமாக, சுவாரஸ்ய மான பதில்களை அளித்தார் ஓவியர் கேஷவ். அவை, அடுத்த இதழில்!

- சங்கமிப்போம்

படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

? நீங்கள் ஓவியத் துறையைத் தேர்ந்தெடுக்க என்ன காரணம்?

- சி.ராமன், மதுரை

''இதைத்தான் தேர்ந்தெடுக்கவேண்டும் என்ற திட்டமிடல் எதுவும் கிடையாது. எதேச்சையாக நடந்ததுதான் எல்லாம். குழந்தைப் பருவத்திலேயே, கையில் எது கிடைத்தாலும் தரையில் எதையாவது கிறுக்கத் துவங்கிவிடுவேன் என்று என் அம்மா சொல்வார்கள். ஆக, ஓவியம் எனது பிறப்பியல்பு என்றே சொல்லவேண்டும்.

? ஆன்மிக ஓவியங்கள் வரைவதில் உங்களின் குரு யார்?

- எம்.முருகன், கழுகுமலை

குருநாதர் என்று குறிப்பிட்டு சொல்லமுடியா விட்டாலும் சிறு வயதில் என்னை மிகவும் ஈர்த்தது, வீணை எஸ்.பாலசந்தரின் சகோதரர் எஸ்.ராஜம் அவர்களின் ஓவியங்கள். என்னுடைய 15 வயதில் நாங்கள் ஹைதராபாத்தில் இருந்தபோது, அப்பா படிக்கும் ராமாயணப் புத்தகங்களில் இடம் பெற்றிருந்த அவரது ஓவியங்களைப் பார்க்கும்போது இனம்புரியாத ஈர்ப்பு உண்டானது. அதற்கு பிறகு சிறிது இடைவெளி... ரவிவர்மாவின் ஓவியங்களை ரசிக்க ஆரம்பித்திருந்தேன். பின்னர் சென்னைக்கு வந்த பிறகு மீண்டும் பல்வேறு சந்தர்ப்பங்களில் எஸ்.ராஜம் அவர்களது ஓவியங்களை ஸ்டடி செய்யும் வாய்ப்பு அமைந்தது.

சக்தி சங்கமம்

கார்ட்டூனிஸ்ட்டாக பத்திரிகைகளில் என்னை வெளிக்கொணர்ந்தது பரணீதரன் சார்தான். அவர், 'போ, நேராகப் போய்ப் பார்த்து வரையத் துவங்கு. அப்பத்தான் நிறையக் கத்துக்கலாம். ஜனங்களை நேரில் பார்க்கும்போதுதான் அவர்களது நடை-உடை பாவனைகளை எளிதில் கிரகிச்சுக்க முடியும்’ என்பார். என்னிடம் வருபவர்களிடமும் நான் சொல்வதும் அதுதான்.

அடுத்த சங்கமம்...

வாசகர்களே! அடுத்த சக்தி சங்கமத்தில் உங்களுடன் கலந்துரையாடப் போகிறார்... தவத்திரு குன்றக்குடி அடிகளார். ஆன்மிகம் தொடர்பான உங்கள் கேள்விகளை 6.5.14-க்குள் எங்களுக்குக் கிடைக்குமாறு அனுப்பி வையுங்கள். சிறந்த கேள்விகளை எழுதியனுப்பிய வாசகர்களில் சிலர், 'சக்தி சங்கமம்’ கலந்துரையாடலில்  கலந்துகொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள்.