Published:Updated:

‘நாராயணன் படங்கள்... நாற்பது வருட தேடல்!’

என் கடன் இறைப் பணி செய்து கிடப்பதே..! இ.லோகேஸ்வரி

நூற்றெட்டு திவ்விய தேசங்கள்- வட நாடு, தொண்டை நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, மலை நாடு, நடு நாடு ஆகியவற்றில் உள்ள அற்புதமான க்ஷேத்திரங்கள். இவற்றுள் பரமபதம், வைகுண்டம் நீங்கலாக மற்ற தலங்கள் அனைத்தையும் பூவுலகில் தரிசிக்க இயலும். இந்தத் தலங்கள் குறித்த தகவல்களும், அழகிய திருமேனிகளைக் கொண்ட இறைவனின் (உற்ஸவர்) புகைப்படங்களும் நிச்சயம் பொக்கிஷம்தான்!

இவை அனைத்தையும் தரிசிப்பதே மிகப் பெரும் பாக்கியம். அப்படியிருக்க, இவற்றைச் சேகரித்து வைத்திருப்பதோடு, அதிலிருந்து வேண்டுவோருக்கு வேண்டுவதைத் தந்து உதவுவதையே தன் கடமையெனக் கொண்டு ஓர் அன்பர் வாழ்ந்து வருகிறார் என்றால், அது எத்தனைப் பெரிய இறைத் தொண்டு!

அவர், எம்.என்.ஸ்ரீநிவாசன். வயது 70. சென்னை, வேளச்சேரியில் உள்ள அவரின் இல்லத்தில் சந்தித்தோம். வீட்டு ஹாலில் நுழைந்ததும், சுவரே தெரியவில்லை. அப்படி, ஒரு இடம்கூட பாக்கி இல்லாமல், பெருமாளின் வெவ்வேறு விதமான படங்கள் சட்டமிடப்பட்டு, அற்புதமாகக் காட்சியளிக்கின்றன. பெருமாள் மற்றும் வைணவ திருக்கோயில்கள் தொடர்பான புகைப்படங்கள் சேகரிக்கும் இவரது இந்தப் பணி சுமார் 40 வருடங்களாகத் தொடர்கிறதாம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நெற்றியில் திருநாமம் துலங்க, வார்த்தைக்கு வார்த்தை பெருமாளின் திருநாமத்தை உச்சரித்தபடியே தன் அனுபவங்களை, தேடல்களைப் பகிர்ந்துகொண்டார் ஸ்ரீநிவாசன்.

‘நாராயணன் படங்கள்... நாற்பது வருட தேடல்!’

''சென்னை, திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி கோயில் பக்கத்துலதான் எங்க வீடு இருந்துது அதனால, சின்ன வயசுலேருந்தே கோயிலுக்கும் எனக்குமான உறவு ஆரம்பமாயிடுச்சுன்னுதான் சொல்லணும். தாத்தாவுக்கும் அப்பாவுக்கும் கோயில் கைங்கர்யம். அதனாலயே பெருமாளைக் கிட்டே தரிசிக்கிற பாக்கியம் கிடைச்சுது. சின்ன வயசுல கோயிலுக்குப் போறதுங்கறது பொழுதுபோக்கு சமாசாரமா இருந்தாலும், பிறகு கோயிலே கதிங்கற அளவுக்கு மெள்ள மெள்ள எனக்குள்ளே ஒரு தெளிவு வர ஆரம்பிச்சுது. ஒருகட்டத்துல, பெருமாளுக்குக் கைங்கர்யம் பண்றதுதான் உலகத்துலயே மிகப் பெரிய வேலை, மிகப் பெரிய சேவைனு உணர்ந்தேன்.

அந்த நேரத்துலதான் என் நண்பர் கீதாச்சாரி, ஒரு புத்தகம் வெளியிட முடிவு செய்திருந்தார். அந்தப் புத்தகத்துக்கு திவ்ய தேசப் படங்களை அட்டைப்படமா வைக்கணும்னு ஆசைப்பட்டு, அதன்படியே படங்களைச் சேகரிச்சார். அந்தப் புத்தகத்துலதான் என் முதல் கட்டுரை பிரசுரமாச்சு. விஜயவாடா பக்கத்துல இருக்கிற மங்களகிரி ஸ்ரீநரசிம் மரைப் பத்தி எழுதியிருந்தேன். அதுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சுது. இதுல, கூடுதல் சந்தோஷம் என்னன்னா, எங்களுக்குக் குலதெய்வம் ஸ்ரீநரசிம்மர்தான்!'' என்று நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் ஸ்ரீநிவாசன்.

''வைஷ்ணவம் பற்றி எல்லாருக்கும் தெரியப்படுத்தணும்; பெருமாளின் பெருமைகளை மக்களுக்குக் கொண்டு செல்லணும். இந்த நினைப்பே என் புத்தி முழுக்க ஓடிக்கிட்டே இருந்துது. அதனால, வைணவக் கோயில்கள் பத்தின விஷயங்களைத் தேடித் தேடி தெரிஞ்சுக்க ஆரம்பிச்சேன். கோயில் படங்கள், ஸ்வாமியோட படங்கள்னு சேகரிக்கத் தொடங்கி னேன். விளையாட்டா ஆரம்பிச்ச அந்த விஷயம் இப்ப மிகப் பெரிய கலெக்ஷனா மாறியிருக்கிறதை நினைச்சா எனக்கே பிரமிப்பா இருக்கு.

‘நாராயணன் படங்கள்... நாற்பது வருட தேடல்!’

இப்படிப் படங்களைச் சேகரிச்சுட்டிருந்த என்னை எழுத்தாளனாக் கினது பெருமாளின் கருணைதான். கோயில்கள் பத்தின தகவல்களும் படங்களுமா பல பத்திரிகைகள்ல எழுதத்  தொடங்கினேன். காலேஜ்ல படிக்கும்போது ஆரம்பிச்ச என் எழுத்துப் பணி, அடுத்தடுத்து சின்னதும் பெருசுமா நிறைய கம்பெனிகள், நிறைய வேலைகள்னு மாறினாலும், இன்னிக்கி வரைக்கும் தொடர்ந்துக்கிட்டுதான் இருக்கு!'' என நெக்குருகிச் சொல்லும் ஸ்ரீநிவாசன், தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களுக்கும் சென்று, அங்கே உள்ள வைணவக் கோயில்கள் குறித்த

‘நாராயணன் படங்கள்... நாற்பது வருட தேடல்!’

தகவல்களையும் படங்களையும் சேகரித்து வைத்திருக்கிறார். இவரின் முயற்சியையும் விருப்பத்தையும் அறிந்த நண்பர்களும் இவருக்குப் பெருமாள் கோயில் படங்களையும், தகவல்களையும் தந்து உதவியுள்ளார்களாம்.

''இப்படித்தான், சென்னை நன்மங்கலம் பக்கத்துல இருக்கிற பெருமாள் கோயில் பத்தி தகவல் சேகரிச்சு, படங்களோடு எழுதினேன். அதுக்குப் பிறகுதான் இப்படி யொரு கோயில் இருக்கறதே எல்லாருக்கும் தெரிஞ்சுது. அப்புறம் அந்தக் கோயிலுக்குத் திரளாக ஜனங்க வர ஆரம்பிச்சதும், திருப்பணிக்கு உதவிகள் கிடைச்சு கும்பாபிஷேகம் நடந்ததும், என் இந்த ஜென்மத்துக் கொடுப்பினை'' என்று நெகிழ்ச்சியுடன் சொல்லும் இவர், ஸ்ரீவைஷ்ணவ மாணிக்க மஞ்சரி, வைணவம் போற்றும் வழிபாடுகள் என இரண்டு புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார்.

''வைஷ்ணவத்தை உலகுக்கு எடுத்துச் சொன்னதில் ஸ்ரீராமாநுஜருக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. அதனால், ஸ்ரீராமாநுஜரையே என் குருவாகக் கருதி, ஆன்மிகப் பயணத்தைத் தொடர்ந்துக்கிட்டிருக்கேன். வருகிற 2017-ம் வருஷம், ஸ்ரீராமாநுஜருக்கு 1000-வது ஆண்டு விழா கொண்டாடப்பட இருக்கிறது. அப்போது என்னிடம் உள்ள ஸ்ரீராமாநுஜரின் அத்தனைப் படங்களையும் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட வேண்டும் என்பதே இந்த எளியவனின் ஆசை, விருப்பம், லட்சியம் எல்லாமே!'' என்று சொல்லும்போதே, கண்களில் இருந்து கரகரவென வழிகிறது நீர்.

'என் கடன் இறைப் பணி’ என்று வாழ்ந்தாலும், அவரை வழிநடத்திச் செல்வது ஸ்ரீராமாநுஜரின் மீதான அவரின் குரு பக்தியே என உணர்ந்து சிலிர்த்தோம்.

படங்கள்: ரா.மூகாம்பிகை