Published:Updated:

கேள்வி - பதில்

எது மூடநம்பிக்கை?சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி - பதில்

எது மூடநம்பிக்கை?சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:

'மூடநம்பிக்கைகள்’ என்ற பெயரில் பாரம்பரியம் மிகுந்த சடங்குகளும், உயர்ந்த வழிபாடுகளுமே வழக்கொழிக்கப் படுகின்றன. ஆனால், எந்தவொரு அடிப்படை ஆதாரமும் இல்லாத விஷயங்கள் எல்லாம் நாகரிகப் போர்வையில் நம்பிக்கைக்கு உகந்தவையாகச் செயல்படுத்தப்படுகின்றன. எனவே, எது நல்ல நம்பிக்கை, எதுவெல்லாம் மூட நம்பிக்கைகள் என்று தெளிவுபடுத்த வேண்டும்.

- எம். தாமோதரன், விருதுநகர்

தழ்களில் இடம்பெறும் விளம்பரங்கள் மற்றும் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கு நாங்கள் பொறுப்பல்ல, ஜாதக விளக்கங்களில் பாதிப்பு ஏற்பட்டால் நாங்கள் பொறுப்பல்ல, குறிப்பிட்ட விளம்பரங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு எங்கள் சேனல் பொறுப்பல்ல...இப்படியான அறிவிப்பு களை பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் நீங்கள் பார்த்திருக்கலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குறிப்பிட்ட கட்டுரைகளில் இடம்பெறும் தகவல்கள் அல்லது சின்னத்திரைகளில் காட்சிப் படுத்தப்படும் நிகழ்வுகள் குறித்து தகுந்த சான்றுகள் பெற இயலாதபோது, அவற்றின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிவிடும். அதனால் மேற்கண்ட

வாசகங்களைப் பயன்படுத்துவர். இன்னின்ன விஷயங்கள் அல்லது தகவல்கள் நம்பிக்கையானவை என்று உறுதியாகச் சொல்ல இயலாததால் இப்படியொரு நிலைப்பாடு. ஆக, சான்று இல்லா தவை நம்பகத்தன்மையை இழந்துவிடும்!

கேள்வி - பதில்

இந்தக் கோயில் குளத்தில் நீராடி, இறையுருவை வணங்கினால் மக்கட்பேறு கிடைக்கும் என்பது ஐதீகம் என்று படித்திருப்பீர்கள். இதிஹாசம் என்றால் பழங்கதைகள். அதில் வரும் தகவல் களுக்கு  இதிஹாசம்தான் பொறுப்பு. அதை, ஐதிஹ்யம் என்பர். இதுவே ஐதீகம் என்று மருவி வழக்கில் வந்துவிட்டது. இதிஹாச தகவல்களை எல்லோரும் நம்பிக்கையுடன் ஏற்கமாட்டார்கள்; ஒரு சாரார் மட்டுமே ஏற்பார்கள். அதன் நம்பகத் தன்மைக்குச் சான்று இருக்காது. இப்படி, சான்று இல்லாத நம்பிக்கையை மூடநம்பிக்கை எனலாம்.

? எல்லோராலும் ஏற்கப்படும் விஷயம் எனில், அது நல்ல நம்பிக்கை என்று முடிவுக்கு வரலாமா?

அப்படி சொல்லிவிட முடியாது! பார்வை அற்றவனுக்கு தெய்வ வடிவத்தைப் பார்க்க இயலாது. மற்றவர்கள் பார்த்து சொல்லும் விளக் கத்தைக்கொண்டு, அதன் அடிப்படையில் அந்த தெய்வ உருவத்தை மனத்தில் பதித்துக்கொள்வான். நேரடியாகப் பார்த்து அறிய இயலாமல், பிறரது விளக்கத்தை உண்மை என்று நம்பிக்கைவைப்பது, மூட நம்பிக்கை, அதாவது 'அந்தவிச்வாஸம்’.

சுக்கிர மூடம், சனி மூடம் என்று கிரகங்களின் தரத்தை வரையறுக்கிறது ஜோதிடம். 'மூடம்’ என்ற சொல், செயலிழப்பைச் சுட்டிக்காட்டும். 'மூடன்’ என்றால் அலசி ஆராயும் திறனை இழந்துவிட்ட மூளையை உடையவன் எனப்பொருள். 'மூடனே! பணத்தாசையை விட்டுவிடு’ என்று ஸ்ரீஆதிசங்கரர் சொல்வார் (மூட ஜஹீஹிதனாகமத்ருஷ்ணாம்). 'அடமுட்டாளே! மரணத்தை நினைத்து ஏன் பயப்படுகிறாய்?’ என்று கேட்கிறார்  சார்ங்கதரர் (மிருத்யோர்பிபேஷிகிம்மூட). கோவிந்தனை வழிபடு என பஜ கோவிந்தத்தில் அறிவுறுத்தும் சங்கரர், அதில் 'மூடமதே’ எனும் பதத்தின் மூலம், புத்தியை நேர்வழியில் செயல்படவைக்காதவனை மூடன் என்கிறார். ஆக, நம்பகத்தன்மைக்கு சான்று இருந்தால், நல்ல நம்பிக்கை; இல்லையெனில் மூடநம்பிக்கை என எடுத்துக்கொள்ளலாம். அதுமட்டுமின்றி, 'மூடநம்பிக்கை’ என்பதற்கு, 'நம்பிக்கை செயல்படாமல் இருப்பது’ என்றும் பொருள் கொள்ளலாம். அதேநேரம், சான்று இருந்தும் அதுகுறித்து நாம் தெரிந்து கொள்ளாமல் விட்டுவிட்டு, 'சான்று இல்லை. அதனால் அது மூட நம்பிக்கை’ என்று சொல்லமுடியாது.

? ஆக, நல்ல நம்பிக்கை, மூட நம்பிக்கை என்று தரம் பிரிக்க தகுந்த சான்று ஒன்றுதான் அளவுகோல் எனச் சொல்ல வருகிறீர்களா?

உங்களுக்கு இன்னும் ஆழமான புரிதல் தேவை. கௌதம புத்தரிடமிருந்து விளக்கம் பெற்று, புத்த மதத்தை நன்கு அறிந்துகொண்ட புத்தத்

துறவி ஒருவர் தமது சொற்பொழிவில், 'இந்த உலகம் சூன்யத்திலிருந்து, அதாவது ஒன்றுமில்லாத இடைவெளியில் இருந்து தோன்றியது. ஆகையால், அதன் முடிவு சூன்யத்தில் இணைந்துவிடும்’ என்றார். அதைக் கேட்ட வேறொரு சீடன், 'இதற்கு சான்று என்ன?’ என்று துறவியிடம் கேட்டான். அவர், 'புத்தர் வாக்கு’ என்று பதில் அளித்தார்.

நேரடியாக சான்றை தெரிந்துகொள்ளாமல்- புத்தர் சொன்ன தகவலை அப்படியே ஏற்றுக்கொண்டு, கிளிப்பிள்ளை போன்று எடுத்துச் சொன்னதால், அந்த துறவியின் கூற்றை மூடநம்பிக்கை என்று நிராகரித்ததாகக் கதை உண்டு.

சூன்யத்திலிருந்து உலகம் தோன்றவில்லை. தோன்றும் பொருளுக்கு ஓர் அடிப்படை வேண்டும். அதுவே பிரம்மம்; அது, இருக்கும் பொருள். கடைசியில் அதில் உலகம் மறைந்து விடும். தோற்றத்துக்கு, அதோடு இணைந்த ஓர் உண்மைப்பொருள் தேவைப்படும். அதுவே ஸத்; அதன் விளக்கம் ப்ரம்மம் என்று விளக்கம் அளித்தார்கள். ஆகவே, சூன்யத்தை ஏற்க இயலாது எனக்கூறி சூன்யவாதம் சான்றில்லாதது என்று உறுதிப்படுத்தினார்கள்.

'சூன்யம் இல்லை. ஒரு ஸத் இருக்கிறது (ஸத்- இருப்பது, உண்மையானது). அதற்கு பிரம்மம் என்று பெயர். அது உலகம் முழுவதும் பரவியிருப்பது; உலகம் முழுவதும் பரவியிருப்பதும் அதுவே’ என்று விளக்கம் உண்டு. 'சரி! இந்த விளக்கத்துக்கு சான்று என்ன?’ என்று கேள்வி எழுந்தது. 'வேதம் சொன்னது’ என்று பதில் வந்தது. 'இல்லை... நேரடியாக உணராமல் வேதத்தின் வார்த்தையை நம்பி விளக்கம் அளிப்பது, மூடநம்பிக்கையில் அடங்கும்’ என்று நிராகரித்ததாகவும் தகவல் உண்டு. எனவே, சான்று மட்டுமே போதாது. மனம்

அதை ஆராய்ந்து உணர வேண்டும். அப்படி உணர்ந்துகொண்ட மனம் வைக்கும் நம்பிக்கையே நல்ல நம்பிக்கை; மற்றவை மூட நம்பிக்கைகளே எனும் விளக்கம் பழைய சிந்தனையாளர்களிடம் உண்டு என்பதை அறியலாம்.

எதையும் ஆராய்ந்து உணர்ந்து நம்பிக்கை வைத்தால், அது முழுப்பலனை அளிக்கும் தகுதி பெற்றுவிடும். அப்படி ஆராய்ந்து உணர முற்படா மல் நம்பிக்கை வைப்பது மூடநம்பிக்கை.

கேள்வி - பதில்

உங்களின் கருத்தை ஏற்க முடியாது. சான்று, அதன் உண்மைத்தன்மை ஆகியவற்றை வைத்து நம்பிக்கை யின் தரத்தை நிர்ணயிக்கக்கூடாது. பயன்பாட்டை அளவுகோலாக ஏற்கவேண்டும்.

நெருக்கடி நிலையில் ஒரு பொய் நன்மையை விளைவிக்கும் என்றால், அதை ஏற்பது உண்டு. அந்தத் தருணத்தில் சான்று பார்க்கப்படுவது இல்லை; விளையும் பயன்தான் பார்க்கப்படுகிறது. ஆக, நன்மையை ஈட்டித்தரும் நம்பிக்கைகள் மூடநம்பிக்கை ஆகாது.

? அப்படியானால், காலம் காலமாகக் கடைப்பிடிக்கப் பட்டு வரும் சில நடைமுறைகளை மூடநம்பிக்கை என்று விலக்கச் சொல்கிறார்களே! என்ன காரணம்?

குறிப்பிட்ட சில வழக்கங்களும் செயல்பாடு களும் மூடநம்பிக்கைகளாக சித்திரிக்கப்படுகிறது எனில்... தாழ்வு மனப்பான்மையை அடக்கமுடியாத நிலையில், பொறாமையில் வெகுண்டெழுந்து, இனப்பகையில் வெற்றி பெறுவதற்காக, அந்த இனத்தின் பண்பாட்டை மூடநம்பிக்கையாகச் சித்திரித்து வெற்றி அடைந்திருக்கிறார்கள் என்றே சொல்லவேண்டும்.

? சரி! பயன் விளைவிப்பவை என்பதற்காக இல்லாத ஒன்றை இருப்பதாக ஏற்கமுடியுமா?

தெருவில் விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தை ஒன்று கல்லும் முள்ளும் நிறைந்த இடத்துக்குச் செல்ல முயற்சிக்கிறது. அப்போது, 'அங்கே போகாதே. பூச்சாண்டி பிடித்துக் கொள்வான்’ என்று தகப்பன் குழந்தையை திரும்ப அழைப்பான். உண்மையில் அந்த இடத்தில் பூச்சாண்டி எல்லாம் கிடையாது. ஆனாலும், ஒரு நன்மையை எண்ணி, இல்லாத பூச்சாண்டியை இருப்பதாகச் சொன்னான். இது எப்படி மூட நம்பிக்கையாகும்? 'வருமுன் காப்போம்’ என்ற கோணத்தில் குழந்தையை ஆபத்திலிருந்து காப்பாற்றும் முயற்சிதான் இது. அந்த இடத்துக்குச் சென்று காலில் முள் குத்தி ரணம் ஏற்பட்டு அவஸ்தைப்படுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டான் என்று பெருமைகொள்ளவேண்டும்.

தலைவரின் சமாதிக்கு மலர் வளையம் வைப்பது, அவரது நினைவு நாளில் அன்ன தானம் செய்வது, அவரது படத்துக்கு மலர் தூவி பெருமைப்படுத்துவது, அவருக்கு மணிமண்டபம் எழுப்புவது, பொது இடத்தில் சிலை வைத்துப் பராமரிப்பது, அவருக்குக் கோயில் கட்டி வழிபடுவது, அவரது பிறந்த நாளில் விளக்கேற்றி தேங்காய் உடைத்து மலர் அலங்காரம் எல்லாம் செய்வது என அவரது பெருமைகளைப் புகழ்ந்து பாடி வழிபடுவர்.

உயிரும், பூத உடலும், உறவினரும் இல்லாத நிலையில், அங்கு செய்யும் பணிவிடைகளுக்கு அடிப்படைச் சான்றுகளும் இல்லாத நிலையில் இதை மூடநம்பிக்கையாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனாலும் தொண்டர்களின் பக்தியும், பாசமும் இருப்பதால், சமுதாயத்தில் தங்களின் பெருமையை நிலைநாட்ட அவர்களுக்கு இந்தச் சம்பிரதாயங்கள் பயன் படுவதால், இவை மூட நம்பிக்கை ஆகாது.

தங்கள் விளக்கம் சிந்தனையாளர்களை ஈர்க்காது. சான்றில்லாத நம்பிக்கைகள் மூட நம்பிக்கைகள் என்பதே பொருந்தும். பயன் தரும் நம்பிக்கைகள் எல்லோரையும் திருப்திப்படுத்திவிடாது.

நாத்திகம், பகுத்தறிவு, யுக்திவாதம் ஆகிய அத்தனையும் சான்று இல்லாத நம்பிக்கையில் வளர்ந்தவை. அவை, மூடநம்பிக்கையில் அடங்கும். 'ஆன்மா என்றெல்லாம் தனியே கிடையாது; உடல்தான் ஆன்மா’ என்பார்கள் சிலர். மரணத்தின்போது உடலையும் (பூத உடல்), ஆன்மாவும் வேறு வேறாகப் பார்த்தும் அவர்களுக்கு பகுத்தறிவு வரவில்லை! உடலும் ஆன்மாவும் வேறு என்பதற்கு சான்று உண்டு. இரண்டும் ஒன்று என்பதற்குச் சான்று இல்லை. சான்றில்லாத நம்பிக்கையை ஏற்று விளக்கம் அளிப்பவனின் கருத்து மூடநம்பிக்கையில் எழுந்தது என்பதை மறுக்க முடியாது.

? எதை வைத்து அப்படிச் சொல்கிறீர்கள்?

பால் அபிஷேகம் கற்சிலைக்குத்தான்; கடவுளை எட்டாது என்று பகுத்தறிவு சொல்லும். இந்த வாதத்துக்குச் சான்று இல்லை. அது மூடநம்பிக்கை. அபிஷேகம் செய்யும் பக்தனானவன் எங்கும் நிறைந்த பரம்பொருளை, குறிப்பிட்ட சிலையில் கண்டு மகிழ்ந்து அபிஷேகிக்கிறான். கடவுள் எங்கும் நிறைந்தவர் என்பதற்கு சான்று உண்டு. ஆனால் சிலையில் கடவுள் இல்லை என்பதற்குச் சான்று இல்லை.

ஈன்றெடுத்தவரை அப்பா என்று அழைக்கிறோம். அவர் எல்லோருக்கும் அப்பாவாகிவிட மாட்டார். 'அப்பா’ எனும் எண்ணம் அப்பாவிடம் இல்லை; மகனின் மனத்தில் பதிந்திருக்கிறது. அதற்கு சான்று இருப்பதால் அவரை எப்போதும் அப்பாவாகவே பார்க்கிறான். நாத்திகரும் தன்னை ஈன்றவரை அப்பா என்றே கருதுவார்! தனது அறிவுக்கு எட்டியதை மட்டும் நம்புபவரே நாத்திகர். குறுகிய சிந்தனை வட்டத்தில், தனது அனுபவத்தை  மட்டும் நம்பி விளக்கம் தருபவர், பகுத்தறிவாளன் அல்லது யுக்திவாதி. ஆனால், சிந்தனையின் எல்லையில் உண்மையைக் கண்டவர்கள் ஞானிகள்- அறிஞர்கள். அவர்களது விளக்கத்துக்குச் சான்று உண்டு. மற்றவர்களின் விளக்கம் சான்றில்லாத நம்பிக்கையில் எழுந்தவை. அவை அத்தனையும் மூடநம்பிக்கை.

கேள்வி - பதில்

? அப்படியானால், ஆன்மிகம் குறித்துப் பேசுபவர்கள் எல்லாம் சான்றுகளுடன் பேசுகிறார்கள்; அவர்களது கருத்துக்கள் எல்லாமும் நல்ல நம்பிக்கை எனச் சொல்லவருகிறீர்களா?

இல்லை! சான்றில்லாத விளக்கங்கள் பல சொற்பொழிவுகளில் தென்படுகின்றன. ஜோதிடத்திலும் சான்றில்லாத பரிகாரங்களை உதிர்ப்பதற்கு வெட்கப்படாதவர்களும் உண்டு. மகான்களை மகேசனாக மிகைப்படுத்தி விளக்குபவர்களும்  சான்று பற்றிக் கவலைப்படமாட்டார்கள்! மூட நம்பிக்கைகளை உதாரணம் காட்டி உயர்ந்த தத்துவங்களை விளக்குபவர்களும் உண்டு. மூடநம்பிக்கையை மூலதனமாக வைத்துச் செயல்படுபவர்கள், மனிதனுக்கு எல்லா வகையிலும் பெருமை அளிக்கும் பண்பாட்டை மூடநம்பிக்கையாகச் சித்திரித்து விளக்கும் விந்தையும் நிகழ்கிறது!

'கல்வி அறிவும் சிந்தை வளமும் பெறாத இருவர் இருக்கிறார்கள். அதில் ஒருவன் குரு மற்றவன் சீடன் என்கிற பாகுபாட்டில் அவர்களின் தரத்தை நிலைநிறுத்துவது மூட நம்பிக்கையின் எல்லை’ என்கிறது சாஸ்திரம் (உபாவபிஅச்ருதக்ரந்தௌ உபாவபிஜடாத் மகௌ, அஹோமௌர்க்கயஸ்ய மாஹாத்ம்யம் தத்ரைக: சிஷ்யதாம்கத:)

கடவுளுக்கு உருவமோ பெயரோ இல்லை. இதை, இப்படியும் சொல்லலாம்... எந்தப் பெயரும் எந்த உருவமும் அவருக்குப் பொருந்தும். கண்களும் கருத்தும் அவரை நெருங்கும்விதமாக... பெயரையும் சிலையையும் உருவத்தையும் பயன் படுத்தினார்கள். படிப்படியாக மனமானது கடவுளை பரிபூரணமக உணரும்போது, பெயரும் உருவமும் விடைபெற்றுக்கொள்ளும். கடவுள் ஒளிமயமானவர் என்ற உண்மையை மனம் உணர்ந்துவிடும்.

ஒளி ஆகாயத்தில் பரவியிருப்பதால், கடவுளின் சாந்நித்தியம் எங்கெங்கும் விளங்கு வதை உணரும் மனம், உரிய சான்று களுடன் கடவுளை விளக்கும் பேருரைகளை வெளியிடும். அது நல்ல நம்பிக்கைகளாக மாறிவிடும். அறியாமையின் விளைவாக, சிந்தனை வளம் குன்றியவர்கள், ஸனாதனத்தின் நல்லுரைகளை மூடநம்பிக்கை என்று சித்திரித்து மக்களின் மனத்தில் பதியவைத்தார்கள். 'மூடநம்பிக்கை’ என்று அவர்கள் விளக்கும் விளக்க உரைகளானது சான்றில்லாத தகவல் களால் நிறைந்திருக்கும். ஆக, அதுவே மூடநம்பிக்கை ஆகும்.

தங்கள் சிந்தனைக்கு ஒரு வார்த்தை...

இடைக்காலத்தில் மனிதப் பண்புகள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு, சீர்திருத்தவாதி கள் தங்கள் சிந்தனைக்கு இசைவாக அவற்றை மூடநம்பிக்கைகளாக சித்திரித்து, பாமரர்களை தங்கள் சித்தாந்தத்தை ஊக்குவிப்பவர்களாக மாற்றினர். அதில் வெற்றி கண்டுவிட்ட களிப்பில், பாமரர்களிடம் மீண்டும் விழிப்பு உணர்வு ஏற்படாமல் இருக்க, தங்களது மூடநம்பிக்கை

சிந்தனைகளை அடிக்கடி புதுப்பித்துக் கொண் டிருக்கிறார்கள். ஆனாலும், எதிர்பாராத வகையில் மக்களிடம் விழிப்பு உணர்வு ஏற்பட்டு, அவர்கள் உண்மையைக் கண்டறிந்து வருவதால், சீர்த்திருத்தவாதிகள் குழப்பம் அடைந்திருக்கிறார்கள். விரைவில் அவர்களும் தங்களது செயல்பாட்டில் மாற்றம் கண்டு, தெளிவு பெறுவார்கள்.

கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய். இதையறிந்து, சான்றுகளுடன் நம்பிக்கையை ஏற்கும் எண்ணம் மனத்தில் உறுதியாகும்போது, மூட நம்பிக்கை தாமாகவே விலகிவிடும்.

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஆன்மிகம் சம்பந்தமான எல்லா சந்தேகங்களுக்கும் பதில் தருகிறார் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள். கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: 'கேள்வி பதில்', சக்தி விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.