Published:Updated:

பொன் மழை பொழிந்தது!

அட்சய திருதியையில் லட்சுமி கடாட்சம்! தி.தெய்வநாயகம்

அது பிக்ஷை பாத்திரம் அல்ல; அக்ஷய பாத்திரம்!

ஒரு நெல்லிக் கனியை ஏற்று, தங்கக்கனிகளை பொன்மழையாகப் பொழியவைத்தது என்றால், அது அக்ஷய பாத்திரம்தானே!

அது வேனிற் காலம். சித்திரை மாதத்து வளர்பிறை திருதியைத் திருநாள். பிக்ஷை ஏற்கப் புறப்பட்டிருந்தான், பாலகன் சங்கரன்.

பொன் மழை பொழிந்தது!

பொய், பொறாமை, ஆசை, வஞ்சனை... என கொடுமையின் வெம்மையால் தகிக்கும் பூமகளின் துயரம் தீர்த்து, அவளைக் குளிர்விக்க... சாட்சாத் பரமேஸ்வரனின் அம்சமே இங்கே சங்கர பாலகனாக வந்து அவதரித்திருக்கிறது.

அவருக்கு இன்ப-துன்பங்கள் ஏது? வெம்மை- குளிர்ச்சி எனும் பாகுபாடுகள்தான் ஏது?

ஆனாலும் காட்டு மரங்கள் எல்லாம்... பாலகனின் மலர்ப் பாதங்கள் வெயிலின் வெம்மையால் நோகக் கூடாதே என்று, இலைகளையும் பூக்களையும் உதிர்த்து... காலடியில் அவதரித்த சங்கரனின் காலடிக்கு இதமாக மலர்ப்பாதை போட்டிருந்தன!

மெள்ள நடந்து வந்த சங்கரனின் கண்களுக்கு தூரத்தில் ஒரு குடிசை தென்பட்டது. நடையை வேகப்படுத்தினான். ஊரின் எல்லையில் தனியே இருந்த அந்த குடிசையின் அருகில் சென்று, வாயிலில் நின்று குரல் கொடுத்தான்.

''பவதி பிக்ஷாந்தேஹி''

உள்ளே இருந்து ஒரு மாதரசி வெளிப்பட்டாள். பாலகனைக் கண்டாள். அனிச்சையாகவே அவளது கரங்கள் சேர்ந்து குவிய, சங்கரனை வணங்கினாள். ஏனோ தெரியவில்லை... இந்த பாலகனைக் கண்டதுமே அவள் உள்ளம் விம்மியது; கண்கள் தானாக நீரைச் சொரிந்தன. மனம் ஏதேதோ புலம்ப நினைக்க, அதன் வெளிப்பாடாய் அவள் உதடுகள் துடித்தன. உள்ளுக்குள் ஒரு தெய்விகச் சிலிர்ப்பு. ஆண்டவனை நேரில் தரிசித்த பரவசம்!

கணநேரம் செய்வதறியாது திகைத்து நின்றாள். மறுகணம் தன்னிலை உணர்ந்தவளாக உள்ளே ஓடினாள். பாலகனுக்கு பிக்ஷையிட ஏதாவது உள்ளதா எனத் தேடிப் பார்த்தாள். விதியின் விளையாட்டு... குன்றிமணி அரிசி இல்லை. பரிதவித்துப் போனாள். எனினும் முயற்சியைக் கைவிடாமல், அடுத்தடுத்த அறைகளிலும் தேடத் துவங்கினாள். ஒரு பானையில் நெல்லிக்கனி ஒன்று கிடைத்தது.

அகமகிழ்ந்து பயபக்தியோடு அதை எடுத்துவந்து, கை நடுக்கத் துடன் சங்கரனின் பி¬க்ஷ பாத்திரத்தில் இட்டாள். புன்னகையுடன் ஏற்றுக்கொண்ட சங்கரருக்கு, அவளின் தவிப்பையும், கை நடுக்கத் தையும் கண்டு சடுதியில் புரிந்துபோனது... அந்த இல்லத்தின் இல்லாமையும் இயலாமையும்!

மெள்ள கண் மூடி, மகாலட்சுமியை தியானித்தான். மனதாரப் பிரார்த்தித்தான்...

அங்கம் ஹரே: புளகபூஷணமாஸ்ரயந்தீ
ப்ருங்காங்கனேவ முகுளாபரணம் தமாலம்
அங்கீக்ருதாகிலவிபூதிரபாங்கலீலா
மாங்கல்யதாஸ்து மம மங்களதேவதாயா:

- ஸ்ரீமகாவிஷ்ணுவின் மார்பு மகிழ்ச்சியால் மெய்சிலிர்க்கும்போது, பொன்னிற வண்டுகள் மொய்க்கும் முகுள மலர்களைப் போல் காட்சி தருகிறது. சர்வ மங்கலங்களுக்கும் நாயகியான திருமகள் அதில் வசிக்கிறாள். அவரின் ஆனந்தத்துக்கு வேறு காரணம் வேண்டுமோ? அப்படிப்பட்ட திருமகளின் கடைக்கண் பார்வை   வேண்டும், அந்தக் குடிசையில் சகல மங்கலங்களும் பெருக வேண்டும்... எனத் துதித்துப் பாடத் துவங்கினான்.

தாமரை போன்ற முகமுள்ள தேவிக்கு நமஸ்காரம், பாற்கடலில் பிறந்த தேவிக்கு நமஸ்காரம், சந்திரன், அமிர்தம் ஆகியவற்றுடன் தோன்றிய தேவிக்கு நமஸ்காரம், ஸ்ரீமந் நாராயணனுடைய ப்ரிய தேவிக்கு நமஸ்காரம் என்று பாடலால் போற்றி வழிபட்டான்.

பொன் மழை பொழிந்தது!

மகாவிஷ்ணுவின் நாயகியே, மனத்தை ரமிக்கச் செய்பவளே, மூவுலகத்துக்கும் ஐஸ்வரியத்தைக் கொடுப்பவளே கருணை செய் என்றெல்லாம் வேண்டிப் பாடிமுடித்தான்.

அலைமகள் கருணை செய்தாள்: அங்கே அந்த இல்லத்தில் பொன்மாரிப் பொழிந்தது!

இந்த தெய்விகச் சம்பவம் குறித்து சுவாரஸ்யமான கர்ண பரம்பரைத் தகவல் ஒன்றும் உண்டு. துவாபர யுகத்தில் ஸ்ரீகிருஷ்ணரின் அருளால் குபேர சம்பத்து பெற்ற குசேல தம்பதியே கலியுகத்திலும் பிறந்து வறுமையை அனுபவித்தனர். முற்பிறவியில் அவர்களுக்குக் கிடைத்த செல்வபோகத்தை முறையுடன் செலவழிக்காததால், இப் பிறவியில் அவர்களுக்கு வறுமை வாய்த்தது என்று திருமகள் ஆதிசங்கரரிடம் தெரிவித்ததாகவும், அவர் 'என்பொருட்டு இவர்களுக்கு அருள் செய்ய வேண்டும்’ என்று கனகதாரா ஸ்தோத்திரம் பாடி தேவியை வழிபட்டதாகவும் சொல்கிறது அந்தத் தகவல்!

அலைமகளை துதித்து ஆதிசங்கரர் அருளிய 'கனகதாரா ஸ்தோத்திரம்’, அவர் அருளிய முதல் பாடல்!  

மூன்று வேதங்களின் ஸ்வரூபிணியும், மூவுலகத்துக்கு தாயுமான மகாலட்சுமியை இந்த கனகதாரா ஸ்தோத்திரங்களினால் தினசரி எவர் துதிக்கின்றனரோ, அவர்கள் இந்த உலகில் எல்லாக் குணங்களும் நிறைந்தவர்களாகவும், மிகுந்த பாக்கியசாலிகளா கவும், வித்வான்கள் கொண்டாடும் புத்தி சக்தி உள்ளவர்களாகவும் திகழ்வார்கள் என்பது ஸ்ரீஆதிசங்கரரின் திருவாக்கு.

ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடி, திருமகள் அருளால் பொன்மழை பெய்வித்த சம்பவம் நிகழ்ந்தது ஓர் அட்சயதிருதியை நாளில். எனவே, அட்சய திருதியை தினத்தில் இந்த ஸ்தோத்திரத்தைப் பாடி அலைமகளை வழிபடுவதால், நமது வறுமைகள் நீங்கும்; வீட்டில் லட்சுமிகடாட்சம் பெருகும்.

கனகதாரா ஸ்தோத்திரம் மட்டுமல்ல... அட்சய திருதியை அன்று துதித்து வழிபட்டு வரம்பெற உகந்த இன்னும் சில தெய்வப் பாடல்களும் உண்டு.

பதினாறு பேறுகள் அருளும் அபிராமியம்மை பதிகம்

அபிராமிப் பட்டர் அருளிய அபிராமியம்மை பதிகத்தில் ஒரு பாடல் பதினாறு பேறுகளையும் விவரித்து அவற்றை அருளும் படி வேண்டுகிறது.

கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்
            கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
           கழுபிணியிலாத உடலும்
சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
           தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
           தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
          துன்பமில்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
           தொண்டரோடு கூட்டு கண்டாய்:
அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே
          ஆதிகடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
           அருள்வாமி அபிராமியே!

பொன் மழை பொழிந்தது!

அம்பாளுக்கு நெய்தீபம் ஏற்றிவைத்து இந்தப் பாடலைப் பாடி வழிபட வேண்டும். இதனால் கல்வி, நீண்ட ஆயுள், நல்ல நட்பு, குறையாத வளம், இளமை, பிணியில்லாத தேகம், சலித்துக்கொள்ளாத மனம், அன்பு மிகுந்த மனைவி, குழந்தை பாக்கியம், புகழ், வாக்குத்தவறாத நிலை, தடைகள் இல்லாத கொடைத்தன்மை, அழியாத செல்வம், நெறிமுறையுடன் கூடிய அரசாங்கம், துன்பம் இல்லாத வாழ்வு, அம்பாளிடம் குறையாத பக்தி ஆகிய பதினாறு பேறுகளும் வாய்க்கும்.

திருப்புகழ் பாடல்....

பொன் மழை பொழிந்தது!

கோவை மாவட்டம் சோமனூருக்கு அருகிலுள்ள தலம் கொங்கணகிரி. இங்கு அருளும் முருகப்பெருமானைப் போற்றி அருணகிரியார் அருளிய இந்தப் பாடல்  என்னென்ன வேண்டுகிறது தெரியுமா?

ஐங்கரனை ஒத்தமனம் ஐம்புலம் அகற்றிவளர்
   அந்திபகல் அற்றநினை  வருள்வாயே
அம்புவித னக்குள்வளர் செந்தமிழ்வ ழுத்தி  உனை
   அன்பொடுது திக்கமனம் அருள்வாயே
தங்கியத வத்துணர்வு தந்தடிமை முத்திபெற
   சந்திரவெ ளிக்கு வழி அருள்வாயே
தண்டிகைக னப்பவுசு எண்டிசைம திக்கவளர்
   சம்ப்ரமவி தத்துடனெ  அருள்வாயே
மங்கையர்சு கத்தைவெகு இங்கிதம்என்  உற்றமனம்
  உன்றனை நினைத்தமைய அருள்வாயே
மண்டலிகா ரப்பகலும் வந்தசுப ரக்ஷைபுரி
   வந்தணைய புத்தியினை அருள்வாயே
கொங்கில் உயிர் பெற்றுவளர் தென்கரையில்   அப்பர் அருள்
    கொண்டு உடல் உற்றபொருள் அருள்வாயே
குஞ்சரமு கற்கிளைய கந்தன்  என வெற்றிபெறு
   கொங்கணகி ரிக்குள்வளர் பெருமாளே.

பொன் மழை பொழிந்தது!

கருத்து: யானை முகம் கொண்ட விநாய கருக்கு இளையோனாக விளங்கி, மூன்று உலகங்களையும் தனது வலிமையினால் வெற்றி கொள்ளும்,  'கொங்கணகிரி’ எனும் திருமலையின் மீது எழுந்தருளியிருப்பவரே!

ஐந்து திருக்கரங்களைக் கொண்ட விநாய கரைப் போன்று, எல்லா காரியங்களுக்கும் முற்படும் மனமானது ஐந்து புலன்களின் வழியே செல்லும் தொழிலை நீக்கி, மறுப்பு நிலை என்ற கேவல நிலை அகற்றி நினைவற்ற நிலையைத் தந்தருள்வீர்.

செந்தமிழ் பாடலால் அன்புடன் துதிசெய்ய அருள்புரிவீர். தவத்தால் வருகின்ற மெய்யுணர்வைத் தந்து சிவகதி பெறுமாறு சந்திர ஒளி வீசுகின்ற மேலைவெளிக்கு வழியை அருள்வீர். எட்டு திசைகளிலும் உள்ளவர்கள் மதிக்குமாறு மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழ்கின்ற பெருவாழ்வுக்கு அருள்புரிவீர். பெண்களது இன்பத்தை, மிகுந்த இனிமை என்று எண்ணி சேர்ந்துள்ள மனமானது, உம்மை நினைத்து அமைதியடைய அருள் புரிவீர். இரவும், பகலும் உயிர்களைக் காத்து அருள்புரிந்து சிவநெறியில் வந்து சேர நல்லறிவைத் தந்தருள்வீர்.

அவிநாசி என்ற தலத்தின் தென் கரையில் சுந்தரமூர்த்தியினால், சிவபிரான் துணைக்கொண்டு, முதலை வாய்ப்பட்ட மகன் உயிர் பெற்று உடம்புடன் வெளிப்பட்ட அற்புதம் நிகழ்ந்தது. அப்படியான ரகசியப் பொருளை எனக்கும் அருள்வீராக என வேண்டுகிறது, அருணகிரியாரின் இந்தத் திருப்புகழ் பாடல்.

அடுத்த கட்டுரைக்கு