Published:Updated:

கலகல கடைசிப் பக்கம்

நாடகமே உலகம்!வீயெஸ்வி, ஓவியம்: சசி

விமான நிலையத்திலிருந்து வெளியே வந்துகொண்டிருந்த நண்பரையும் அவரின் மனைவியையும் பார்த்தபோது, எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. இருவரும் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி, கார் பார்க் நோக்கி வந்துகொண்டிருந்தார்கள்.

நண்பரின் மனைவி வீல் சேரில் வருவதைப் புரிந்துகொள்ள முடிந்தது. ஆர்த்தரைடீஸ் நோயாளி அவர். நடப்பதில் சிரமம் இருந்திருக்கும்; வீல் சேர் தேவைப்பட்டிருக்கலாம். ஆனால், நண்பருக்கு என்ன ஆச்சு? தினமும் விடியற்காலை 4 மணிக்கு, பூங்காவின் சிமென்ட் பாதையில் வேக வேகமாக இருபது சுற்றுக்கள் வரை நடக்கும் பேர்வழியாயிற்றே அவர்!

வீட்டிலும் மனுஷர் ஒரு நிமிஷம் சும்மா இருக்க மாட்டார். ஸ்டூல் போட்டு ஏறி, சுவர் கடிகாரத்துக்கு சாவி கொடுப்பார்; பரண் மீது ஏறி டிரங்க் பெட்டியைக் குடைவார்; கொல்லைப்புறம் சென்று, கிணற்றின் கைப்பிடிச் சுவர்மீது ஏறி நின்று, மரத்திலிருந்து சப்போட்டா பறிப்பார். பொழுது போகாவிட்டால், மொட்டை மாடி தண்ணீர் டாங்க்கை ப்ளீச்சிங் பவுடர் போட்டுச் சுத்தப்படுத்துவார். இத்தனைக்கும் நண்பருக்கு வயது 60 ப்ளஸ்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கலகல கடைசிப் பக்கம்

இப்போது ஏன் சக்கர நாற்காலி? போன இடத்தில் ஏதேனும் விபத்தா? பாத்ரூமில் வழுக்கி விழுந்து, இடுப்பில் எலும்பு முறிவா? அல்லது லோ ஷ§கர், தலைச்சுற்றல், வர்டிகோ... இப்படி ஏதாவதா?

கார் பார்க் வரை வீல்சேர்கள் உருண்டு வந்துவிட்டன. டிக்கியில் பெட்டிகளை அடுக்கி வைத்தார்கள் ஏர்லைன்ஸ் சிப்பந்திகள். நண்பரும் அவர் மனைவியும் காரில் ஏறி உட்கார உதவினார்கள். முன் சீட்டில் நான் உட்கார்ந்தேன்.

''நீங்க இப்படி வீல் சேர்ல வந்து இறங்குவீங்கன்னு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவே இல்லை. போன் பண்ணி என்கிட்டே ஒரு வார்த்தை சொல்யிருக்கலாம். ஒரு இ-மெயிலாச்சும் அனுப்பியிருக்கலாம். ப்ச்... போகட்டும். என்னதான் ஆச்சு உங்களுக்கு? என்ன பிராப்ளம்?'' என்றேன், பின்பக்கம் கழுத்தைத் திருப்பி.

''எனக்கா? பிரச்னையா? நத்திங்!'' என்று சொல்லிக் கடகடவெனச் சிரித்தார் நண்பர்.

''அப்புறம் எதுக்கு உங்களுக்குச் சக்கர நாற்காலி?''

''அது ஒண்ணுமில்லே... வீல் சேர் கேட்டு வாங்கிட்டா பயணத்துல ஒரு பிக்கல் பிடுங்கலும் இருக்காது. உட்கார வெச்சு ஏத்தி, இறக்கிடறான். க்யூவுல நின்னு அல்லல்பட வேண்டாம். முக்கியமா, பேக்கேஜ் கிளியரன்ஸ்போது பெல்ட்ல மிதந்துவரும் பெட்டிகளை எடுக்க முட்டி மோத வேண்டாம். சகலத்தையும் ஏர்லைன்ஸ் ஊழியர்களே பண்ணிடுவாங்க'' என்று விவரித்த நண்பரின் முகத்தில் நிறையவே பெருமிதம்!

ஆனால், நண்பரின் செயல் சாமர்த்தியமானதாகவோ, பெருமைகொள்ளத்தக்கதாகவோ தோன்றவில்லை.

ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்று மில்லா

மாக்களுக் கோர் கணமும்கிளியே!

வாழத் தகுதி யுண்டோ?

என்ற பாரதியாரின் பாடல் வரிகள் நினைவுக்கு வந்தது.