Published:Updated:

துங்கா நதி தீரத்தில்... 3

குரு தரிசனம்! பாரதி காவலர் டாக்டர் கே.ராமமூர்த்தி, ஓவியம்: ஸ்யாம்

துங்கா நதி தீரத்தில்... 3

குரு தரிசனம்! பாரதி காவலர் டாக்டர் கே.ராமமூர்த்தி, ஓவியம்: ஸ்யாம்

Published:Updated:

பிராப்தம் என்று ஒன்று இருக்கிறது. யாருக்கு என்ன கிடைக்க வேண்டுமோ, அது அவருக்குக் கிடைத்தே தீரும்.

மைசூர் சமஸ்தானத்தின் ஆஸ்தான வித்வானாக இருந்தவர் குனிகல் ராம சாஸ்திரிகள். கர்மானுஷ்டானங்களிலிருந்து தவறாமலும், பூரண ஆத்ம சுத்தியுடனும் திகழ்ந்த அவர் வேதாந்த தர்க்க சாஸ்திரங்களில் மிகுந்த பாண்டித்யம் பெற்றிருந்தார்.

தர்க்க சாஸ்திரத்தில் சதகோடி கிரந்தம் என்ற சிறந்த கிரந்தம் இயற்றியதால், அவர் 'சதகோடி ராம சாஸ்திரிகள்’ என்றே பெருமையுடன் அழைக்கப்பட்டார். அந்நாளில், தென் பாரதத்தில் இருந்த தர்க்க சாஸ்திர பண்டிதர்கள் பெரும்பாலும் இவருடைய சீடர்களாகவே இருந்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒருமுறை, சதகோடி ராம சாஸ்திரிகள், ஸ்ரீநரஸிம்ம பாரதி சுவாமிகளைத் தரிசிக்க சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்துக்குச் சென்றார். தன்னுடன், 16 வயதே ஆன தன் மகன் லக்ஷ்மி நரஸிம்ம சாஸ்திரிகளையும் அழைத்துச் சென்றார். அந்தச் சிறு வயதிலேயே சாஸ்திரங்களில் பாண்டித்யம் பெற்றுத் தேஜஸுடன் விளங்கிய லக்ஷ்மி நரஸிம்ம சாஸ்திரிகளைக் கண்டு அளவற்ற சந்தோஷம் அடைந்தார் ஸ்ரீநரஸிம்ம பாரதி சுவாமிகள்.

தன் மகனைக் கண்டதும் சுவாமிகளின் முகத்தில் ஏற்பட்ட மலர்ச்சியையும், தன் மகனிடம் அவர் காட்டிய பரிவையும் கண்ட ராம சாஸ்திரிகளின் மனத்தில், 'எங்கே தன் செல்லப் பிள்ளையை ஸ்ரீமடத்துக்குக் கொடுக்கும்படி கேட்டுவிடுவார்களோ’ என்பதாக ஒரு சந்தேகம் ஏற்பட்டுவிட்டது. அது மட்டுமல்ல, தமது யோக சக்தியினால் முரட்டுக் கொள்ளையர்களின் மனத்தையே மாற்றி ஆட்கொண்டவராயிற்றே சுவாமிகள்... அவர் அதே யோக சக்தியினால் தன் செல்வ மகனின் மனத்தையும் மாற்றி, ஸ்ரீமடத்துக்கு வாரிசாக நியமித்துக்கொண்டுவிட்டால் என்ன செய்வது என்ற அச்சமும் ஏற்பட்டுவிட்டது.

துங்கா நதி தீரத்தில்... 3

சுவாமிகள் யோக சித்திகள் பெற்றவராகத் திகழ்ந்தாலும், குழந்தை உள்ளம் கொண்டவர். அதேபோல், குழந்தைத்தனமான பிடிவாதமும் அவருக்கு உண்டு. தாம் ஒன்றை நினைத்தால், அது உடனே தாம் நினைத்தபடியே நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக  இருப்பார். சுவாமிகளின் இந்தப் பிடிவாத குணத்தால் அவரைச் சுற்றி இருப்பவர்களுக்குச் சிரமம் நேர்ந்தாலும் கூட, அதை அவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். காரணம், சுவாமிகளிடம் அவர்களுக்கு அவ்வளவு பக்தி; நம்பிக்கை.

இப்படித்தான் ஒருநாள், திடீரென்று நினைத்துக்கொண்டவராக, ''நாளை மத்தியானம் ஸ்ரீசந்திரமௌலீசுவரர் யாத்திரை புறப்படுகிறார்'' என்று மடத்துச் சிப்பந்திகளிடம் கூறினார் சுவாமிகள். ''யாத்திரை புறப்படுவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யப் போதிய அவகாசம் இல்லையே!'' என்றனர் சிப்பந்திகள். அதைக் கேட்ட சுவாமிகள், ''அப்புறம், உங்கள் இஷ்டம்'' என்று சொல்லிவிட்டுத் தம்முடைய யதாஸ்தானத்துக்குச் சென்றுவிட்டார்.

அப்படியானால் சுவாமிகள் யாத்திரை புறப்படமாட்டார் என்று நினைத்துக் கொண்டு, மடத்துச் சிப்பந்திகள் அசிரத்தையாக இருந்துவிட்டனர்.

மறுநாள், தாம் குறிப்பிட்ட நேரத்தில் ஸ்ரீசந்திர மௌலீசுவர விக்கிரகத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டுவிட்டார் சுவாமிகள். ஸ்ரீமடத்து காரியஸ்தர்கள் கேட்டபோது, ''நான்தான் நேற்றே சொல்லிவிட்டேனே'' என்று சொல்லியபடி யாத்திரையைத் தொடங்கியேவிட்டார். உடனே, ஸ்ரீமடத்துச் சிப்பந்திகள் பதறியடித்து, யாத்திரைக்குத் தேவையான ஆயத்தங்களைப் பரபரப்பாகச் செய்துகொண்டு, வேகவேகமாக சுவாமிகளின் பின்னாலேயே போய்ச் சேர்ந்தார்கள்.

யாத்திரை புறப்படுவது மட்டுமல்ல, சுவாமிகள் யாத்திரையை எங்கே நிறுத்தச் சொன்னாலும் அங்கேயே நிறுத்திவிட வேண்டும். அது வனாந்தரமா, வெட்ட வெளியா, தங்குவதற்கு வசதியான இடமா என்றெல்லாம் கவலையே படக்கூடாது.

யாத்திரை பூனா நகரத்தின் பக்கமாகப் போய்க்கொண்டிருந்தபோது, பூஜைக்காக ஒரு கிராமத்தில் தங்க வேண்டியதாயிற்று. மத்தியான பூஜையை அங்கே முடித்துக் கொண்டு, சாயங்கால பூஜைக்குள் அடுத்த கிராமத்துக்குச் சென்றுவிடுவதாக ஏற்பாடு. ஆனால், மத்தியான பூஜையை முடித்துக் கொண்டு, வந்திருந்த பக்தர்களுக்கு அருளாசி வழங்கிப் புறப்படுவதற்கு நேரமாகிவிட்டது.

யாத்திரை தொடர்ந்தது. அடுத்த கிராமத்துக்குச் செல்லும் வழியில் அடர்ந்த காடு ஒன்று குறுக்கிட்டது. காட்டு வழியில் சென்றுகொண்டு இருந்தபோது, சாயங்கால பூஜைக்கான நேரம் வந்துவிட்டதால், அங்கே தென்பட்ட ஓர் ஓடையின் அருகில் யாத்திரையை நிறுத்திவிடும்படி ஆக்ஞாபித்தார் சுவாமிகள். சிப்பந்திகள் தயங்கினார்கள். காரணம், அடர்ந்த அந்தக் காட்டுப் பகுதியில் துஷ்ட விலங்குகள் மட்டுமல்ல, கொடூர சுபாவம் கொண்ட வழிப்பறிக் கொள்ளையர்களும் அதிகம். ஆனாலும், சுவாமிகள் சொல்லிவிட்டபடியால், வேறு வழி இல்லை.

சுவாமிகள் எது பற்றியும் கவலைப்படாமல், ஓடையில் ஸ்நானத்தை முடித்துக்கொண்டு, ஸ்ரீசந்திரமௌலீசுவரர் பூஜையைத் தொடங்கினார். அபிஷேக அலங்காரங்கள் செய்து பூஜைகளை முடித்து, தியானத்தில் அமர்ந்த நேரம்... சிப்பந்திகள் பயந்ததுபோலவே கொள்ளையர்கள் வந்துவிட்டனர். அவர்களில் சிலர் ஸ்ரீமடத்துச் சிப்பந்திகளை மிரட்டி, மறைவிடத்துக்குக் கொண்டு சென்றனர். கொள்ளையர் தலைவன் இரண்டு கொள்ளையர்களுடன் சுவாமி களிடம் சென்றான். அப்போது சுவாமிகள் தியானத்தில் இருந்தார். சுவாமிகளுக்குப் பின்னால் நின்றிருந்த சிப்பந்திகள் கொள்ளையர்களைக் கண்டு, 'என்ன விபரீதம் நடக்கப்போகிறதோ!’ என்று அச்சத்தில் ஆழ்ந்தனர்.

துங்கா நதி தீரத்தில்... 3

சற்றைக்கெல்லாம் தியானம் கலைந்து கண் விழித்த சுவாமிகள், எதிரில் இருந்தவர்களைப் பார்த்து, ''யாரப்பா நீங்கள்? உங்களுக்கு என்ன வேண்டும்?'' என்று கேட்டார்.

''நாங்கள் யாராக இருந்தால் உமக்கென்ன? எங்களுக்குத் தேவை உங்களிடம் உள்ள தங்க நகைகளும், தங்கக் காசுகளும்தான்!'' என்றான் கொள்ளையர் தலைவன்.

''ஓஹோ... அப்படியா! நீங்கள் கேட்பது சரி. ஆனால், இந்தத் தங்க நகைகள், தங்கக் காசுகள் எல்லாம் என்னுடையவை அல்லவே! ஸ்ரீசந்திரமௌலீசுவரருக்கும், ஸ்ரீமடத்துக்கும் பக்தர்கள் காணிக்கையாகக் கொடுத்தவை. இவற்றை உங்களுக்குத் தர எனக்கு எந்த உரிமையும் இல்லையே!'' என்றார் சுவாமிகள்.

''தாங்கள் சாதுவாக இருக்கின்ற படியாலும், தியானத்தில் இருந்தபடியாலும் நாங்கள் பேசாமல் இருந்தோம். நீங்களாகவே கொடுத்துவிட்டால் உங்களுக்கு நல்லது. இல்லையென்றால், உங்களையும், உங்களைச் சேர்ந்தவர்களையும் கஷ்டப்படுத்தி நகைகளையும், தங்கக் காசுகளையும் நாங்களே பறித்துக்கொள்ள வேண்டியிருக்கும். எப்படி வசதி?'' என்று கேட்டான் கொள்ளையர் தலைவன்.

''அப்பனே! சிவபெருமானுக்குச் சொந்த மானவற்றை உன்னால் கொண்டுபோக முடியாதே!'' என்றார் சுவாமிகள்.

''நல்லது. நீங்களே எடுத்துக் கொடுங்கள். நாங்கள் கொண்டு செல்கிறோம்'' என்றபடி, தாங்கள் கொண்டு வந்திருந்த கம்பளியை அவர் முன் விரித்து வைத்தான் கொள்ளையர் தலைவன்.

சுவாமிகளின் விழியசைப்பு கண்டு, சிப்பந்திகள் நகைகளையும், காசுகளையும் கம்பளியில் வைத்தனர். அவற்றை எடுத்துச் செல்லுமாறு கொள்ளையர் தலைவனிடம் கூறிவிட்டு, கண்களை மூடி, ஜப மாலையை உருட்டி, ஜபம் செய்யத் தொடங்கிவிட்டார் சுவாமிகள்.

ஒரு கொள்ளையன் அந்தக் கம்பளியை மூட்டையாகக் கட்டித் தூக்கப் பார்த்தான். முடியவில்லை. மூன்று பேராக முயன்று பார்த்தும், அதை இம்மியளவுகூட அசைக்க முடியவில்லை 'என்னடா விந்தை இது!’ என்று கொள்ளையர் தலைவன் திகைத்து நின்றான். சற்றைக்கெல்லாம், தங்க நகைகள் இருந்த பகுதியைத் தவிர, அந்தக் கம்பளி சுற்றிலும் எரிந்துபோனது.

சுவாமிகளின் தவ வலிமை கண்டு, அச்சம் மேலிட, அவரின் திருவடிகளில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினான் கொள்ளையர் தலைவன். தங்களின் பாவங்களை மன்னிக்கும்படியும், இனி கொள்ளையடிப்பதை விட்டு விட்டுத் திருந்து வாழ்வதாகவும் கூறி, மன்னிப்புக் கேட்டான். சுவாமிகளின் திருவுள்ளமும் அதுதானே! அவர்களை மன்னித்து, ஆசி வழங்கினார்.

தங்கள் உள்ளங்களைத் திருத்தி ஆட்கொண்ட சுவாமிகளுக்கும், அவரின் பரிவாரங்களுக்கும் துஷ்டமிருகங்களால் இடைஞ்சல் எதுவும் வராதபடி பார்த்துக்கொண்டனர், நல்லவர்களாக மாறிய அந்தக் கொள்ளையர்கள்.

துங்கா நதி தீரத்தில்... 3

ந்தச் சம்பவத்தை நினைத்துக்கொண்ட சதகோடி ராம சாஸ்திரிகள், எங்கே தன் செல்வ மகனின் மனத்தையும் சுவாமிகள் தமது தவ வலிமையால் மாற்றி ஸ்ரீமடத்துக்கு வாரிசாக நியமித்து விடுவாரோ என்று அச்சம்

கொண்டார். அதனால் அவசரம் அவசரமாக சுவாமிகளிடம் விடைபெற்றுக் கொண்டு ஊருக்குத் திரும்பியவர், அதே வேகத்தில் தன் மகன் லக்ஷ்மி நரஸிம்மனுக்கு ஒரு பெண் பார்த்துத் திருமணமும் செய்துவைத்துவிட்டார்.

விஷயம் தெரியவந்த சுவாமிகள் தமக்குள் சிரித்துக்கொண்டார். நடக்கப்போவது பற்றி முன்னதாகவே அறியக்கூடிய யோக சித்தி பெற்றவர் அல்லவா நம் சுவாமிகள்! இருந்தாலும், தாம் மனிதப் பிறவி எடுத்ததன் காரணமாக, ஸ்ரீசாரதா பீடத்துக்கு அடுத்த பீடாதிபதியைத் தேர்ந்தெடுப்பதில் சஞ்சலம் கொண்டதுபோல் நடந்து கொண்டார். ஸ்ரீசாரதையும் அதை நம்பியதுபோல் காட்டிக் கொண்டதுடன், அவரை 'ஸ்தலத்தை விட்டுச் செல்லுமாறு’ பணித்தாள்.

மைசூர் சமஸ்தான எல்லையில் சுவாமிகளை வரவேற்க, மைசூர் சமஸ்தான மன்னர் தனது பரிவாரங்களுடன் காத்துக் கொண்டிருந்தார். தம்மை வரவேற்க வந்த பக்தர் கூட்டத்தில், சுவாமிகளின் அருள்விழிகள் யாரையோ தேடுவது போல் இருந்தன. தேடியவர் பார்வையில் தென்பட்டாரோ இல்லையோ. நமக்கு அதுபற்றி ஒன்றும் தெரியவில்லை. சுவாமிகளுக்கே வெளிச்சம்! சுவாமிகளின் அருகில் சென்ற மன்னர் அவரை பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்று, அவரின் திருவடிகளில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து, அரண்மனைக்கு அழைத்துச் சென்றார். சுவாமிகள் அரண்மனையை அடைந்ததும், சிறிதுகூட சிரம பரிகாரம் செய்துகொள்ளாமல் உடனடியாக ஸ்நானம் முடித்துக்கொண்டு, ஸ்ரீசந்திரமௌலீசுவர பூஜையைத் தொடங்கிவிட்டார். பூஜைகள் நிறைவு பெற்றதும், மன்னரையும் அவருடைய குடும்பத்தினரையும் ஆசிர்வதித்துவிட்டு, தனியறைக்குச் சென்றுவிட்டார்.

தனிமையில் அமர்ந்ததுமே, ஸ்ரீமடத்துக்கான அடுத்த வாரிசு பற்றிய கவலை அவரிடம் மீண்டும் வந்து சேர்ந்துகொண்டது.  

ஸ்ரீமடத்துக்குத் தக்கதொரு வாரிசை சாரதை தேர்ந்தெடுத்துக் கொள்வாள் என்பதில் சுவாமிகளுக்கு அசாத்திய நம்பிக்கை உண்டு. ஆனாலும், அது எப்போது?

ஸ்ரீசாரதா பீடம்தான் ஆதிசங்கரர் ஸ்தாபித்த முதல் பீடம். அப்படியிருக்க, அந்தப் பீடத்துக்கு அடுத்த பீடாதிபதி கிடைக்காமல் போவாரா, என்ன?

சரி, ஸ்ரீசாரதா பீடம் உண்மையிலேயே ஆதிசங்கரரால்தான் ஸ்தாபிக்கப்பட்டதா?

தொகுப்பு: க.புவனேஸ்வரி    

படம்: ஜெ.வேங்கடராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism