Published:Updated:

'ஒளியும் பெண்களும் ஒன்றே..!’

வல்லம் விளக்கு பூஜையில் பேராசிரியர் விளக்கம் வி.ராம்ஜி

''திருமங்கை ஆழ்வார், 'அம்மாவைவிட மேலானவன்’ என்று பெருமாளையும், மாணிக்கவாசகப் பெருமான், 'பசியாற்றுகிற தாய்க்கும் மேலானவன்’ என்று சிவபெருமானையும் போற்றுகின்றனர். ஆக, பெண்களைக் கடவுளுக்கு நிகராக வைத்து இந்தத் தேசம் பூஜிக்கிறது; பெண்கள் முன்னின்று நடத்தும் எந்தப் பூஜைக்கும் வழிபாட்டுக்கும் அளப்பரிய சக்தி இருக்கிறது எனக் கொண்டாடுகிறது.

இறைவன், உருவமில்லாதவன். ஆனால், ஒளி ரூபமாகத் திகழ்பவன். அதனால்தான் வள்ளலார், 'அருட்பெருஞ்ஜோதி... தனிப்பெருங்கருணை’ என்று சொன்னார். சபரிமலையில் மகர ஜோதி தரிசனமும், திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவும் மிகவும் பிரசித்தம். அந்த நாட்களில், லட்சக்கணக்கான பக்தர்கள், ஜோதி தரிசனம் செய்து இறைவனை வழிபடுகின்றனர்.

ஆக, ஒளி வடிவில் உள்ள இறைவனை, திருவிளக்கு பூஜையாக, இறைவனுக்கு நிகரான பெண்களே கொண்டாடி வணங்குகிறபோது, அந்த வீடு எத்தனை சுபிட்சம் பெறும்... அந்த இல்லத்தில் லட்சுமி கடாட்சம் எந்த அளவுக்கு நிறைந்திருக்கும் என எண்ணிப் பாருங்கள்...'' - பேராசிரியர் மருதவாணன் பேசப் பேச, பெண்கள் அனைவரும் மிகுந்த ஈடுபாட்டுடன் கேட்டு, உள்வாங்கிக் கொண்டிருந்தார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
'ஒளியும் பெண்களும் ஒன்றே..!’

சக்திவிகடனும் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனமும் இணைந்து நடத்தும் திருவிளக்கு பூஜை, தஞ்சாவூர் அருகில் உள்ள வல்லம் ஸ்ரீஏகௌரி அம்மன் ஆலயத்தில், கடந்த 22.4.14 அன்று நடைபெற்றது. சக்திவிகடன் நடத்தும் 137-வது விளக்கு பூஜை இது.

''எந்தவொரு நல்ல காரியத்தைத் தொடங்கும் போதும், அங்கே இரண்டு விஷயங்கள் நிச்சயம் இருக்க வேண்டும்; இருக்கும். ஒன்று, தீபம்; மற்றொன்று, பெண்கள். அதனால்தான், 'மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா’ என்பது கவி வாக்கு. அதனால்தான், பெண்களை 'வீட்டுக்கு விளக்கேற்ற வந்த மகாலட்சுமி’ எனக் கொண்டாடுகிறோம்.

விளக்கில் ஒளி ரூபமாகத் திகழும் இறைவனை, ஏகௌரி அம்மனை, ஆத்மார்த்தமாக வழிபடுங்கள். உங்கள் கவலைகளையும் துக்கங்களையும் நீங்களே இறக்கி வைக்காவிட்டால், கடவுள் மட்டும் எப்படி இறக்கி வைப்பார்? எனவே, எல்லாக் கவலைகளையும் துக்கங்களையும் வேதனைகளையும் அவமானங்களையும் தூக்கித் தூர வைத்துவிட்டு, உங்கள் திருவிளக்கில் தீபமென ஒளிரும் ஏகௌரி அம்மனை மனதார வழிபடுங்கள். உங்கள் இல்லமும் இல்லத்தில் இருப்பவர்களும் தெய்வ கடாட்சத்துடன், நிம்மதியும் சந்தோஷமும் பூத்துக் குலுங்க வாழ்வீர்கள் என்பது உறுதி!'' என்று பேராசிரியர் மருதவாணன் சொல்லித் தன் உரையை நிறைவு செய்ய, பலத்த கரவொலி எழுப்பி ஆமோதித்தார்கள் வாசகிகள்.

ஏகௌரி அம்மன் கோயிலில் நடைபெறும் விளக்கு பூஜை அல்லவா? எனவே, கௌரி எனும் பெயர் கொண்ட வாசகி இருக்கிறாரா எனக் கேட்டோம். வயது முதிர்ந்த பெண்மணி ஒருவர் எழுந்து வந்தார். அவரைக் கொண்டே, ஏகௌரி அம்மன் சந்நிதியில், நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார் பேராசிரியர். வல்லம், தஞ்சாவூர், கந்தர்வகோட்டை, திருச்சி, புதுச்சேரி எனப் பல ஊர்களில் இருந்தும் வந்திருந்தார்கள் வாசகிகள்.

'ஒளியும் பெண்களும் ஒன்றே..!’

''முந்தைய சோழர் காலத்துக் கோயிலாமே இது! கரிகாலச் சோழன் காலத்திலேயே இந்தக் கோயில் இருந்திருக்கிறதாம். அப்பேர்ப்பட்ட பெருமைகள் கொண்ட கோயிலில் விளக்கு பூஜை நடப்பதும், அதில் நாங்களும் கலந்துகொண்டிருக்கிறோம் என்பதும் நினைக்கவே பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. நாங்கள் பாக்கியம் செய்திருக்கிறோம்!'' என்று உற்சாகமும் சிலிர்ப்புமாகச் சொன்னார் சுகன்யா எனும் வாசகி. உளவியல் படித்தவராயிற்றே, அவர் சொன்னால் அப்பீல் ஏது?!

நாகஸ்வர வித்வானான தன் கணவருக்கு நல்லதொரு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று கமலவேணியும், தன் இரண்டு மகள்களும் நன்றாகப் படித்துப் பட்டதாரியாக வேண்டும் என்று நளினியும் வேண்டிக்கொண்டார்கள்.

'இந்த முறை, வெயிலின் உக்கிரம் ரொம்ப இல்லாமல், கோடை மழை பெய்து, பூமி குளிரணும்’ என்று வாசகி தமிழரசி பிரார்த்தனை செய்ததாகத் தெரிவித்தார்.

''வருஷா வருஷம் சித்திரை மாசம், இங்கே ஏகௌரி அம்மன் கோயில்ல மகா சண்டி ஹோமம், சித்ரா பௌர்ணமி, திருவிளக்கு பூஜைன்னு முப்பெரும் விழா நடக்கறது வழக்கம். இந்த வருஷமும் மே 11-ம் தேதிலேருந்து 14-ம் தேதி வரைக்கும் ரொம்ப விமரிசையா நடக்கப்போகுது. இதுல தவறாம கலந்துக்கறவ நான். இந்த முறை சக்திவிகடன் இங்கே விளக்கு பூஜை நடத்தினது எங்களுக்குக் கிடைச்ச போனஸ்! ரொம்ப உற்சாகமாவும் புத்துணர்ச்சியாவும் இருக்கு. இங்கே வந்திருக்கிற எல்லாரும் சண்டி ஹோம விழாவுக்கு அவசியம் வரணும். இன்னிக்கு நானும் என் குடும்பமும் சௌக்கியமா, சீரும் சிறப்புமா இருக்கோம்னா, அதுக்கு இந்த சண்டி ஹோமமும் விளக்கு பூஜையும்தான் காரணம்'' என்று கண்ணீரும் சந்தோஷமும் பொங்கச் சொன்ன மல்லிகாவுக்கு 64 வயது.

தாய்க்குலங்களின் பிரார்த்தனைகள் அத்தனையையும் குறைவற நிறைவேற்றித் தருவாள் அன்னை ஏகௌரி அம்மன்!

படங்கள்: மு.கார்முகில்வண்ணன்