Published:Updated:

ஸ்ரீராமன் பாதம்பட்டு கல், கந்தர்வனான கதை தெரியுமா?

ஸ்ரீராமன் பாதம்பட்டு கல், கந்தர்வனான கதை தெரியுமா?
ஸ்ரீராமன் பாதம்பட்டு கல், கந்தர்வனான கதை தெரியுமா?

ஸ்ரீராமன் பாதம்பட்டு கல், கந்தர்வனான கதை தெரியுமா?

ரு தனிமனிதன் தனது காம, குரோத குணங்களால் கொடும் அரக்கனாகியதும், அதில் இருந்து மீண்ட புராண நிகழ்வொன்றையும் பார்ப்போம். தாயின் விருப்பத்தை நிறைவேற்றவும், தந்தையின் வாக்கை மெய்யாக்கவும், 'நாடு விட்டு காடு' சென்றார், ஸ்ரீராமன். அழகை ஆடையாக அணிந்திருந்த தண்டகாரண்யப்பகுதி ஆபத்தையும் தன்னிடம் ஒளித்தே வைத்திருந்தது. அந்த கானகப் பகுதியில் நுழைந்ததுமே, ராம லட்சுமணரையும் சீதாதேவியையும் முதல் ஆளாக தாக்க வந்தான் அசுரன் விராதன். குபேர லோகத்தைச் சேர்ந்த அழகிய கந்தர்வன்.

வெகுதூரம் நடந்து வந்த ஸ்ரீராமரும், சீதாதேவியும் களைப்பு காரணமாக, தண்ட காரண்யப் பகுதியில் ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து ஓய்வுகொண்டனர். அப்போதுதான் ஒளியை மறைக்கும் இருளாக வந்தான் விராதன். பிரம்மனிடம் சாகா வரம் பெற்ற‍ விராதன், நூறு சிங்கங்களின் பலம் கொண்டவன். அண்ட சராசரங்களும் பயந்து நடுங்கும் தோற்றமும் குரலும் கொண்ட அவன் அழகே உருவான ஸ்ரீராமன், சீதை, லஷ்மணர் ஆகிய மூவரையும் பார்க்கிறான்.

இரக்கமற்ற அரக்கமணம் கொண்ட அவன் சீதாதேவியின் அழகில் மயங்கினான். அடுத்தவர் மனைவி என்பதைக் கூட உணராத அந்த அரக்கன் சீதையை நெருங்கினான். பயந்து நடுங்கிய சீதாதேவியை தனது வலிய கரங்களால் பற்றி தூக்கிக்கொண்டு பறக்க‌த் தொடங்கினான். இவை யாவும் ஒரே கணத்தில் நிகழ்ந்தன.

இதனால் ராமரும் லட்சுமணரும் அதிர்ந்து போய், பின்னர் சட்டென சுதாரித்துக்கொண்டனர். அன்னையைப் போன்ற ஜானகிதேவியை ஒரு கோர அரக்கன் கவர்ந்து சென்றதைக் கண்ட இளையவர் லட்சுமணர் கடும்கோபம் கொண்டார். விராதனை எச்சரித்துத் தடுத்தார்.

காமம் கண்ணை மறைத்த அந்த விராதன் அதை கண்டுகொள்ளவில்லை. சீதாவின் அலறலும், தம்பியின் சீற்றமும் கண்ட ஸ்ரீராமர் தனது வில்லை எடுத்து அவனைத் தாக்கத் தொடங்கினார். போர் மூண்டது. சீதையைக் கீழே விட்ட அரக்கன், மரங்களையும், மலைகளையும் பெயர்த்து எடுத்துத் தாக்கத் தொடங்கினான். ராம,லட்சுமண பாணங்களால் அவை யாவும் பொடிப்பொடியாகின.

ஆத்திரமடைந்த அரக்கன் தாக்குதலை வேகமாக்கினான். என்ன செய்தும், அந்த இருவரையும் ஒன்றும் செய்யமுடியவில்லையே என்ற கோபத்தில் சீதாதேவியைத் துன்புறுத்த அவரை நோக்கிப் பாய்ந்தான். ஸ்ரீராமரின் பாணம் அவனை நோக்கி பாய்ந்து தடுத்தது. மரணமே இல்லாத தன்னை யாருமே தடுக்க முடியாது என கொக்கரித்த அவன், சீதாதேவியை விட்டுவிட்டு ஓடுமாறு கூவினான். பொறுமை இழந்த ராம, லட்சுமணர்கள் அம்புகளால் துளைத்தனர். என்ன செய்தும் அவன் சாகவில்லை.

இறுதியில் கோபமடைந்த ஸ்ரீராமர் அவனைத் தாக்கி காலால் உதைத்துத் தள்ளினார். உதை பட்ட விராதன் அங்கிருந்த பெரும் பள்ளத்தில் விழுந்தான். அவ்வளவுதான். ஸ்ரீராமரின் காலால் உதைபட்ட அரக்கன், அழகிய கந்தர்வனாக எழுந்து மூவரையும் வணங்கினான். 'அபயம், அபயம்' என்று சரணடைந்தான். காம இச்சையால் மதி மயங்கி ரம்பையை துன்புறுத்தியதால், பிரம்மதேவரின் சாபம் பெற்ற கதையைச் சொன்னான். சாபவிமோசனமாகத் தங்கள் திருவடி படவேண்டும் என்றே இத்தனை நாளும் திரிந்தேன் என்றும் கூறினான். அவனை ஆசீர்வதித்த ராமபிரான், காம, குரோத, லோப மாயையில் சிக்கிக்கொள்ளும் எவருமே அரக்கர் தான். எனவே தாழ்ந்த இச்சைகளை விலக்கிவிட்டு நலமாக வாழ ஆசீர்வதித்தார். இந்த சம்பவத்தின் மூலம் கேவலமான இச்சைகளை ஒழிக்கவேண்டும் என்பது மட்டுமல்ல, அதை ஒழிக்க கடவுளின் அனுக்கிரகமும் வேண்டும் என்பதையும் அறிந்தோம்.

ராவணனுக்கு முன்பே சீதாதேவியைக் கவர்ந்து செல்ல வந்த விராதன் மனிதர்களுக்கு ஒரு பாடமாக வேண்டியவன்.

அடுத்த கட்டுரைக்கு