Published:Updated:

 ⁠⁠⁠பாவாஜிக்காக யானையாக வந்த திருப்பதி பெருமாள்!

 ⁠⁠⁠பாவாஜிக்காக யானையாக வந்த திருப்பதி பெருமாள்!
 ⁠⁠⁠பாவாஜிக்காக யானையாக வந்த திருப்பதி பெருமாள்!

திருப்பதி மலையில் கோயிலுக்கு வலது பக்கமேட்டில் அமைந்திருக்கிறது ஹாதிராம் பாவாஜியின் மடம். ஒரு காலத்தில் திருமலை திருப்பதி உற்சவங்கள் எல்லாம் இந்த மடத்தின் மேற்பார்வையில்தான் நடைபெற்றன. இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஹாதிராம் பாவாஜி யார் என்று பார்ப்போம்.

வடஇந்தியாவில் பிறந்த பாவாஜி என்பவர் பல கோயில்கள், பல இடங்களில் இறைவனைத் தேடி அலைந்தார். இறுதியில் அவர் திருப்பதிக்கு வந்து சேர்ந்தார். திருப்பதி வந்து வெங்கடேசப் பெருமாளை தரிசனம் செய்ததும், நாம் தேடிய தெய்வம் இவர்தான் என்று முடிவு செய்து, அங்கேயே ஓர்ஆசிரமத்தை நிர்மாணித்துக் கொண்டு வாழத் தொடங்கினார்.  தினமும்  சுவாமி புஷ்கரிணியில் குளித்துவிட்டு வெங்கடேசப் பெருமாளைத் தரிசிப்பார். சுவாமியை நேரில் காண்பதுபோல, ''அதோ சுவாமி... இதோ சுவாமியின் திருவடிகள்'' என்று மெய்மறந்து வழிபடுவார். சதாசர்வகாலமும் பெருமாள் சிந்தனைதான். ஆனால், அவரை சிலர் மனக்கோளாறு உள்ளவரோ, போலிச்சாமியாரோ என்றுகூட நினைத்தனர். 

சில நேரம் தாயக் கட்டங்களைப் போட்டு சுவாமியுடன் தாயம் விளையாடுவார். தன்னுடன் அமர்ந்து சுவாமியே விளையாடுவது போல் ஆனந்தப்படுவார். சுவாமியின் காயை நான் வெட்டிவிட்டேன் என்று சந்தோஷத்தில் துள்ளிக் குதிப்பார். 'சுவாமி, இனி உங்கள் முறை. நீங்கள் விளையாடுங்கள்' என்பார்.  சில நாள்களில் சுவாமி விளையாட வரவில்லையே எனக் கூறி வருந்துவார். இதைப் பார்ப்பவர்களுக்குப் பெரிய ஆச்சர்யமாகவும் இருக்கும், வேடிக்கையாகவும் இருக்கும். ஒரு நாள் அவர் ஆசிரமத்திலிருந்த போது, திடீரென பலமான சத்தம் ஒன்று கேட்டது. கண் இமைக்கும் நேரத்தில் ஆசிரமம் முழுவதும் நறுமணமும் வெளிச்சமும் பரவியது. ஆச்சர்யத்துடன் என்னவென்று தலை நிமிர்ந்து பார்த்தார். 

ஆஹா! ஆயிரம் கோடி சூரிய பிரகாச வெளிச்சத்துக்கிடையில் அந்தப் பரம்பொருளே காட்சி தந்தார். சுவாமியின் திருவுருவத்தைப் பார்த்ததும் பாவாஜியின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. ''கோவிந்தா! கோவிந்தா! சீனிவாசப் பெருமாளே!'' என்று பக்திப் பெருக்குடன் சொல்லிக்கொண்டே சுவாமியின் திருவடிகளில் விழுந்தார்.  தன் முன் விழுந்த தனது பக்தனைத் தூக்கி நிறுத்தி, ''பாவாஜி! இனி நாம் இருவரும் தாயம் ஆடுவோம். வா, நான் சீக்கிரம் செல்லவேண்டும்” என்று சொன்னார். அதைக் கேட்ட பாவாஜிக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. சுவாமியை, பயபக்தியுடன் தனது அறைக்கு அழைத்துச் சென்று, தாயக்கட்டத்தை விளையாடத் தொடங்கினார். ஆனால், அவரால் இயல்பான மனநிலையில் விளையாடவே முடியவில்லை. ''ஏன் பாவாஜி! நீங்கள் தாயம் ஆடமாட்டீர்களா? என்று சுவாமி கேட்ட பிறகுதான் பாவாஜி தனது நிலையையே உணர்ந்தார். தாயம் ஆடத் தொடங்கினார். அவரது பக்தியை மெச்சி, சுவாமியும் அவருடன் சிறிது நேரம் தாயம் ஆடிவிட்டு சென்று விட்டார்.

இப்படி அடிக்கடி சுவாமியும் அவரும் தாயம் விளையாடுவது வழக்கம். அப்படி ஒருமுறை விளையாடும்போது, சுவாமி தான் அணிந்திருந்த தங்க நகை மாலையைக் கழற்றி வைத்துவிட்டு திடுமென  அவசர வேலையாகச் செல்வதாக சென்றுவிட்டார். பாவாஜியின் கண்களுக்கு, தகதகவென்று சுவாமியின் மாலை மின்னியது. 'சுவாமி தன் கழுத்து மாலையை தவறுதலாக இங்கே மறந்துவிட்டுச் சென்று விட்டார் போலும்; இதற்காக அவர் இங்கே வந்தாலும் வரலாம்' என்று எண்ணியவாறே சுவாமியின் வருகையை எதிர்நோக்கியிருந்தார்.
காலையில் கிழக்கே சூரியன் உதித்தும் சுவாமி வரவில்லை. அதனால், தங்க மாலையை எடுத்துக்கொண்டு கோயிலை நோக்கி விரைந்தார்.

சுவாமிக்கு பூஜை செய்ய வந்த அர்ச்சகர்கள், சுவாமியின் கழுத்தில் தங்க மாலை இல்லாதது கண்டு திகைத்தனர்; கலவரமடைந்தனர். உடனே விஷயத்தை கோயில் அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தினர். எல்லோரும் மாலையைத் தேடலாயினர். அந்த வேளையில்தான் பாவாஜி தங்க மாலையைக் கையில் எடுத்துக் கொண்டு, கோயிலுக்கு வந்துகொண்டிருந்தார். அதைப் பார்த்த கோயில் சிப்பந்திகள், ''அதோ! சுவாமியின் மாலை... ஹாதிராமைப்  பிடியுங்கள்! பிடித்துக் கட்டுங்கள். இவன் போலிச் சாமியார்'' என்று கூக்குரலிட்டனர்.

எல்லோருமாகச் சேர்ந்து பாவாஜியைப் பிடித்து அடித்து உதைத்தனர். இந்தக் களேபரத்தில் பாவாஜி சொன்னதை எவரும் கேட்கவில்லை. இதற்குள், கோயில் அதிகாரிகளில் ஒருவர் அங்கு வந்து “அவரைஅடிக்க வேண்டாம். அவர் சொல்வதையும் முதலில் கேளுங்கள்.  பிறகு அவரைத் தண்டிக்கலாம்'' என்றார். பாவாஜி நடந்தவற்றையெல்லாம் விவரமாகக் கூறினார். ஆனால், 'சுவாமி வந்து உன்னோடு தாயம் விளையாடுவார் என்பது சரியான கட்டுக்கதை. சாமிக்கு வேறு வேலை இல்லையா?' என்று கூறி அவரை மிகவும் ஏளனப்படுத்தினர். ஆனால், கோயில் அதிகாரிக்கு மட்டும், இவர் சொல்வது உண்மையாக இருக்குமா அல்லது பொய் சொல்கிறாரா என்று தெரியவில்லை.

கடைசியாக, ''ஒரு சந்தர்ப்பம் தருவோம். பாவாஜியைச் சிறையில் அடையுங்கள். அந்த அறையிலேயே ஒரு கட்டு கரும்புகளையும் போட்டு வையுங்கள். விடிவதற்குள் சுவாமியின் உதவியுடன் இந்தக் கரும்புக் கட்டுகளை இவர் சாப்பிட்டுத் தீர்த்து விட்டால் விடுதலை. இல்லாவிட்டால் இவருக்கு மரணதண்டனைதான்'' என்று கூறிவிட்டுப் போனார். பாவாஜியை சிறையிலடைத்து கூடவே கரும்புக் கட்டையும் போட்டு வைத்தனர். பாவாஜியோ எந்தக் கவலையும் படாமல், வழக்கம்போல் ஆபத்தைப் பற்றி கவலைப்படாமல், பெருமாள் சிந்தனையிலேயே இருந்தார். அப்படியே அயர்ந்து தூங்கிப்போனார்.

பாவாஜி கண்ணயர்ந்த சற்றுநேரத்தில் வெள்ளை யானை அந்த அறைக்குள் புகுந்து ஒரே கணத்தில் கரும்புக்கட்டுகள்  அனைத்தையும் தின்று தீர்த்தது. விடியற்காலையில் பாவாஜியை தனது துதிக்கையால் தட்டி எழுப்பி ஆசி கூறி பிளிறியது. இந்தச் சத்தத்தைக் கேட்ட சிறைக் காவலர்கள் நடுநடுங்கிப் போய்விட்டனர். 'பூட்டுகள் போட்டு பூட்டப்பட்டுள்ள சிறைக்குள் யானை எப்படி வந்தது' என்பது அங்கு கூடிய அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இதற்குள் கோயில் அதிகாரிகளும் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்களைப் பார்த்ததும் யானை சிறைக் கதவுகளை மோதி, உடைத்தெறிந்தது.

இந்தக் காட்சியைக் கண்டு எல்லோரும் பிரமித்துப்போய் அப்படியே நின்றுவிட்டனர். கண்ணிமைக்கும் நேரத்தில் யானை  மறைந்தது. தன் பக்தனைக் காப்பாற்ற வேங்கடேசப் பெருமாளே, யானை உருவில் அங்கு வந்து கரும்புகளை எல்லாம் தின்றுவிட்டுச் சென்றதை அப்போதுதான் அவர்கள் அனைவரும் உணர்ந்தனர். சாதாரண பக்தனுக்காக பெருமாள் நிகழ்த்திய லீலையை எண்ணி எண்ணி புளகாங்கிதமடைந்தனர். சுவாமியின் மகிமையைக் கண்டு அளவிலா ஆனந்தமடைந்தனர்.

பாவாஜியை, 'போலிச்சாமியார் 'என்று  கூறி அடித்தவர்கள்கூட, அவரது காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டனர். அவரது பார்வையோ யானை சென்ற திசையிலேயே இருந்தது.  'ஹாத்தி ராம்! ஹாத்தி ராம்!' என்று சொல்லிக்கொண்டே கோயிலுக்குள் ஓடிச்சென்றார். ஹாத்தி என்ற வார்த்தைக்கு  இந்தி மொழியில் யானை என்று பொருள். அது முதல் அவரை ஹாதிராம் பாவாஜி என்றே பக்தர்கள் அழைக்கத் தொடங்கினார்கள். இவரே பெருமாளின் அணுக்கத் தொண்டர். இவரைச் சந்தித்து நாம் வேண்டினால், நமக்காக பெருமாளிடம் வாதாடி, நம் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவார் என இவரது ஆசிரமத்துக்குத் தவறாது வரத்தொடங்கினர். சுவாமியின் பூஜைகளையும், உற்ஸவங்களையும் சிறப்புடன் எவ்வித குறையுமின்றி நடத்தி வந்தார்.

கடைசியில், பாவாஜி சுவாமியிடம் ஐக்கியமானார். சுவாமியைப் பார்க்கச் செல்பவர்கள் அனைவரும் பாவாஜி மடத்தையும் பார்ப்பது வழக்கம். பாவாஜியும், அவரது சீடர்களும் வெகுகாலம் திருப்பதி திருக்கோயி லுக்கு அதிகாரிகளாக இருந்து, செம்மையாக உற்சவங்களை எல்லாம் நடத்தி வந்தனர்.