Published:Updated:

துங்கா நதி தீரத்தில்... - 4

குரு தரிசனம்! பாரதிகாவலர் டாக்டர் கே.ராமமூர்த்திஓவியங்கள் ஸ்யாம்

துங்கா நதி தீரத்தில்... - 4

குரு தரிசனம்! பாரதிகாவலர் டாக்டர் கே.ராமமூர்த்திஓவியங்கள் ஸ்யாம்

Published:Updated:

சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தை ஜகத்குரு ஆதிசங்கரர்தான் ஸ்தாபித்தார். இதில் சந்தேகமும் இல்லை; சர்ச்சையும் இல்லை. பின் ஸ்ரீசாரதா பீடத்தை ஆதிசங்கரர் ஸ்தாபித்ததாகச் சொல்லப்படுவது சரிதானா என்ற கேள்வி எதற்கு?

ஓர் உண்மை என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும் என்றால், அது பற்றிய கேள்விகளும், தேடல்களும் இருந்துகொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த உண்மை நிலைத்திருப்பதுடன், அந்த உண்மையைக் குறித்த புதுப்புது விஷயங்களும், அதன் புதுப்புது பரிமாணங்களும் நமக்குத் தெரிய வரும். அப்படியான நம் கேள்விக்கான தேடலில்தான் சில விஷயங்கள் நமக்குத் தெரிய வந்தன.

ஆதிசங்கரர் சாட்சாத் சிவபெருமானின் அம்சம் என்று போற்றப் பெறுகிறார். இதற்கான ஆதாரம் என்ன தெரியுமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

யஜுர் வேதத்தின் ஒரு பகுதியான ஸ்ரீருத்ரத்தில், சிவபெருமானைப் பற்றிக் குறிப்பிடுகையில்...

'வ்யுப்த கேசாய’ என்று ஒரு பெயர் குறிப்பிடப் பட்டிருக்கிறது. 'தலையில் முடி இல்லாமல், முண்டனம் செய்த தலையுடன் இருப்பவர்’ என்று அதற்குப் பொருள். சிவபெருமான் சடாமுடியுடன் காணப்படுபவர். அவருக்கு எப்படி இந்தப் பெயர் பொருந்தும்? எனவே இந்தப் பெயர், சிவபெருமானின் அம்சமாக கலியுகத்தில் அவதரிக்கப் போகும் ஆதிசங்கரரையே குறிப்பதாகும் என்ற தெளிவு நமக்கு ஏற்படுகிறது.

துங்கா நதி தீரத்தில்... - 4

ஆம்... சிவபெருமானின் அம்சமாக, இந்தக் கலியுகத்தில், காலடியில் அவதரித்தார் ஆதிசங்கரர். அதேபோல், ஆதிசங்கரர் வேதாந்த ஞானத்தை விளக்கமுறச் செய்ய, மற்றுமோர் அவதாரமும் நிகழ்ந்தது. அது, அன்னை ஆதிசக்தியின் அம்சமான ஸ்ரீசரஸ்வதி தேவியின் அவதாரம்.

இந்துமதத்தின் மேன்மையைக் காக்கவும், வேதாந்த தர்மத்தை விளக்கமுறச் செய்யவும் சிவபெருமானின் அவதாரமாக, காலடியில் அவதரித்து, தன் தாயின் சம்மதத்துடன் சந்நியாசம் ஏற்று, பாரதநாடு முழுவதையும் பிரதட்சிணபாதையாக வலம் வந்த மகான், ஆதிசங்கரர். தமக்குரிய சீடர்களைத் தேர்ந்தெடுக்கவும், தர்மத்தை நிலைநாட்டவும் இந்த விஜயம் அவருக்குப் பயன்பட்டது. வாரணாசி முதல் சிருங்கேரி வரை அவர் சென்ற புண்ணியத் தலங்கள் பல. அந்த புண்ணிய யாத்திரையில் நதிதீரங்களும் இடம் பெற்றன.

நர்மதையின் கரையில்தான் சங்கரர் தமது குருவான கோவிந்த பகவத்பாதரைச் சந்தித்தார். கங்கையின் கரையில்தான் அவருடைய வேதாந்த விளக்க நூல்கள் உருவாயின. சௌபர்ணிகா நதிக்கரையில்தான் அவர் மூகாம்பிகை அம்மனை ஆராதித்தார். துங்கா நதிதீரத்தில்தான்  ஸ்ரீசாரதா தேவியை பிரதிஷ்டை செய்ததுடன், யஜுர்வேத பிரமாணமாக ஸ்ரீசாரதா பீடத்தையும் நிறுவினார்.

சங்கரர் தமது திக்விஜயத்தின்போது மகிஷ்மாதியில் மண்டனமிச்ரர் என்ற பேரறிஞரைச் சந்தித்தார். அவர் மீமாம்சத்தைக் கரைகண்டவர். அவருடைய மனைவி உபயபாரதியும் (இவரே ஸ்ரீசரஸ்வதி தேவியின் அவதாரம்) கலைகளில் சிறந்தவர். அந்த அம்மையாருக்கு சாரதா என்ற பெயரும் உண்டு. சங்கரரும் மண்டனமிச்ரரும் தர்க்கவாதம் செய்தபோது, உபயபாரதியே நடுவராக இருந்து, சங்கரரே வெற்றி பெற்றதாகத் தீர்ப்பு வழங்கினார்.

துங்கா நதி தீரத்தில்... - 4

மண்டனமிச்ரர் சங்கரரின் சீடரானார். அத்வைதத்தைப் பற்றி, 'நைஷ்கர்ம சித்தி’ என்ற புகழ்பெற்ற நூலையும் எழுதினார். சுரேஸ்வராச்சார்யர் என்னும் தீட்சா நாமத்துடன் சங்கரரைத் தொடர்ந்து செல்ல, மண்டனமிச்ரருடன் அவருடைய மனைவி உபயபாரதியும் தொடர்ந்து வந்தார். அப்படி வரும்போது சங்கரருக்கு அந்த அம்மையார் ஒரு நிபந்தனை விதித்தார். ''நான் பின்தொடர்ந்து வரும்போது நீங்கள் திரும்பிப் பார்த்தால், அதற்குப் பிறகு நான் வரமாட்டேன். அந்த இடத்திலேயே நின்றுவிடுவேன். இந்த நிபந்தனையை நீங்கள் காப்பாற்ற வேண்டும்!'' என்று கூறி இருந்தார்.

சங்கரர் துங்கா நதிதீரத்துக்கு வரும்வரை யில், உபயபாரதியின் கால் மெட்டி ஒலி கேட்டுக்கொண்டே வந்தது. அந்த இடத்துக்கு வந்ததும் ஒலி அடங்கிவிட்டது. தம்மையும் மறந்து சங்கரர் திரும்பிப் பார்த்தார். உபயபாரதியின் கால்கள் அப்படியே நின்றுவிட்டன. பாதங்கள் மணலில் புதையுண்டு அழுந்திவிட்டன. அந்த இடமே சாரதாதேவியின் ஆலயம் அமைவதற்குரிய இடமாயிற்று.

சங்கரர் தமது திக்விஜயத்தில் இருமுறை சிருங்கேரிக்கு வந்திருக்கிறார். முதல்முறை வந்தபோது, துங்கா நதிதீரத்தில் அமர்ந்து சூரியபகவானைப் பிரார்த்தனை செய்தார். அப்போது அங்கே மிக விநோதமான காட்சி ஒன்று அவருக்குப் புலனாயிற்று. தவளை ஒன்று பிரசவிப்பதற்காக அந்த வெயிலில் இடம் தேடித் திணறிக்கொண்டிருந்தது. பிரசவ வேதனையிலும் வெயிலின் கொடுமையிலும் தவித்துத் துடித்துக் கொண்டிருந்த அந்தத் தவளைக்கு ஒரு பாம்பு தன் படத்தை விரித்து நிழல் தந்துகொண்டிருந்தது. அந்த அற்புதக் காட்சியைக் கண்டார் சங்கரர். 'ஒரு விநாடி அசந்தாலும் தவளையை அப்படியே விழுங்கிவிடும் பாம்பு, அதன் பிரசவ வேதனையைக் கண்டு அனுதாபம் கொண்டு நிழல் தருவதா? என்ன விசித்திரம் இது?’ என்று வியந்தவர், அந்தப் புண்ணிய நதி தீரத்தில், பகைமையின் சாயல்கூட விழமுடியாது என்று உணர்ந்தார். பகுத்தறிவில்லாத மிருகங்களின் உள்ளத்தில்கூட, பகைமை மறந்து தாய்மைக்கே உரித்தான பாச உணர்வு நிலைத்திருக்கும் பவித்ர பூமியான அந்த சிருங்கேரி திருத்தலத்தில், தாம் ஸ்தாபிக்கவேண்டும் என்று சங்கல்பித்திருந்த  நான்கு மடங்களில் முதலாவது மடத்தை நிறுவத் திருவுள்ளம் கொண்டார். மற்ற மூன்று மடங்கள், கிழக்கே ஜகந்நாத் (பூரி), மேற்கே துவாரகை, வடக்கே பத்ரிநாத் என்பவை.

சிருங்கேரிக்கு மற்றுமொரு புனிதப் பின்னணியும் உண்டு.

துங்கா நதி தீரத்தில்... - 4

ங்க தேசத்தை ரோமபாதன் என்ற அரசன் ஆண்டு வந்தபோது, ஒருமுறை கடுமையான வறட்சியும் பஞ்சமும் ஏற்பட்டது. அந்தப் பஞ்சத்திலிருந்து விடுபட, மகரிஷி ஒருவரிடம் அறிவுரை பெறச் சென்றான் அந்த அரசன். ''காசியபரின் மகனான விபாண்டகருக்குப்  பிறந்த ரிஷ்யசிருங்கர் துங்கா நதிதீரத்தில் ஆசிரமத்தில் வசிக்கிறார். அவருடைய தந்தை அவரைப் பெண் வாசனையே அறியாத தூய பிரமச்சாரியாக வளர்த்து வருகிறார். தூய்மையே வடிவான அந்தத் தவப்புதல்வன் இந்த நாட்டுக்கு வந்தால் மழை பெய்யும்!'' என்று கூறினார் அந்த மகரிஷி.

ரோமபாதன் ரிஷ்யசிருங்கரை நாடி வரவில்லை. பெண்மையின் நளினத்தையே அறியாத ரிஷ்யசிருங்கரை, அழகான பெண்ணொருத்தி மூலம் தன் நாட்டுக்கு அழைத்து வரத் திட்டமிட்டான். அதற்காக, சாந்தா என்ற அரண்மனை நடன மங்கையை அனுப்பினான். அவளும் அவளது தோழிகளும் ஆண் வேடம் தரித்து, ரிஷ்யசிருங்கரின் ஆசிரமத்தை அடைந்தார்கள். அவர்களை வரவேற்று உபசரித்தார் ரிஷ்யசிருங்கர். மெள்ள மெள்ளப் பழகியபோது, பெண்மையின் நளினத்தை உணர்ந்தார். சாந்தாவுடன் ரோம பாதரின் நாட்டுக்கு வந்துவிட்டார். அவர் அங்க தேசத்தில் காலடி வைத்ததும், பெருமழை பெய்தது. அந்த அழகிய பெண் சாந்தா, அவருடைய மனைவியானாள். நாடு வளம் பெற்றது.

அந்த ரிஷ்யசிருங்கர் வாழ்ந்த திருத்தலம் இந்த சிருங்கேரி.

சங்கரர் ஸ்ரீசக்ரத்தை மலைப்பாறையில் தாமே வரைந்தார். அதன்மேல் சாரதா தேவியின் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து அங்கேயே தங்கி, சந்திர மௌலீசு வரரின் ஸ்படிக லிங்கத்தைப் பூஜித்தார். இரத்தின கர்ப்பத்தில் மகாகணபதியையும் உருவாக்கிப் பூஜித்தார். ராஜநாகம் தவளைக்கு நிழல் தந்த துங்கா நதிக் கரையிலும், லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அங்கே நாகமும் தவளையும் பாறையில் செதுக்கப்பட்டன.

இந்தப் புண்ணிய பூமியில் ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீசாரதா பீடத்தின் பீடாதிபதியாக, சங்கரரின் முதல் சீடரான  ஸ்ரீசுரேஸ்வராச்சார்யர் பொறுப்பேற்றார்.

மன்னர்களும் மஹனீயர்களும் போற்றிப் பணிந்த சிறப்பைப் பெற்ற ஸ்ரீசாரதாபீடத்து இறைவி சாரதா தேவியை, விஜய நகர சாம்ராஜ் யத்தின் அரசர்கள் வணங்கி வழிபட்டார்கள். சிருங்கேரி, சிறந்த கல்விக்குரிய பீடமாகவும் அமைந்தது. அங்கே நிறுவப்பட்ட சங்கர மடம், பக்தி மார்க்கத்துக்கு வழிகாட்டும் தலமாக அமைந்துள்ளன.

சரித்திர நீரோட்டத்தில், சிருங்கேரி மடம் பல தாக்குதல்களுக்கும் உள்ளாகியிருக்கிறது; அரச வம்சத்த வரால் போற்றிப் பாதுகாக்கப்பட்டும் இருக்கிறது.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம், கர்நாடகத்தை ஆண்ட திப்புசுல்தான், சிருங்கேரியில் மடங்களை நிறுவவும், ஆலயங்கள் அமைக்கவும், பூஜைகள் நடைபெறவும் உதவியதுதான்.

பிரிட்டிஷ் ஆதிக்கத்தைத் திப்புசுல்தான் எதிர்த்தபோது, 'கடவுளின் அருளாலும், தங்கள் ஆசியாலும், என்னுடைய படைபலத்தாலும், ஆங்கிலேயர்களை நான் வெல்வேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது!’ என்று சிருங்கேரி சங்கராசார்ய சுவாமிகளுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.

இதுதான் புனிதம் நிரம்பப் பெற்றதும், தரிசிப்போர்க்கு புண்ணியம் சேர்ப்பதுமான ஸ்ரீசாரதா பீடத்தின் மகத்துவம்.

தொன்மைச் சிறப்பும் தொல்புகழும் கொண்ட ஸ்ரீசாரதா பீடத்தைத் தமக்குப் பின் நிர்வகிப்பதற்குத் தக்கதொரு சீடர் வேண்டுமே என்ற தேடலில்தான்...

இதோ, ஸ்ரீநரஸிம்ம பாரதி ஸ்வாமிகள் மைசூர் அரண்மனையில் ஏகாந்தமாக அமர்ந்து சிந்தனையில் ஈடுபட்டார். சற்றைக்கெல்லாம் அவரது திவ்விய வதனம் பளிச்சிட்டது.

அவருக்குப் பின் ஸ்ரீசாரதா பீடத்தை நிர்வகிக்கப் போவது யார் என்பதையும், அவர் எங்கே இருக்கிறார் என்பதையும் அன்னை ஸ்ரீசாரதை அவருக்கு உணர்த்திவிட்டாள்.

யார் அவர்? எங்கே இருக்கிறார் அவர்?

- தொடரும்...

தொகுப்பு: க.புவனேஸ்வரி

படம்: ஜெ.வேங்கடராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism