Published:Updated:

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்!

காலக் கணிதத்தின் சூத்திரம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்!

காலக் கணிதத்தின் சூத்திரம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:

மிதுனம், கன்னி ஆகிய இரண்டு ராசிகளில் ஒன்றில், பிறந்த வேளை (லக்னம்), நட்சத்திர பாதம் (சந்திரன்) இருக்கும் நிலையில், குருவின் த்ரிம்சாம்சகத்தில் பிறந்தவள், பதிவிரதையாக விளங்குவாள். கணவனின் ஆசை, ஆர்வம், எண்ணம் ஆகியவற்றை நிறைவேற்றுவதில் மிகுந்த கவனம் செலுத்துவாள். உடலுறவுக்குக் கணவனைத் தவிர மற்றவர்களுக்கு இடமளிக்க மாட்டாள்.

கணவனைத் தவிர, தவறான எண்ணத்துடன் மற்றவர்கள் குறித்த நினைவானது, பதிவ்ரதை என்ற தகுதியை இழக்கவைக்கும்.தவறான எண்ணத்துடன் மாற்றானோடு பேசுவது, அரவணைப்பது, கண்ணால் பார்த்து மனத்தைப் பறிகொடுப்பது என்பதெல்லாம் 'பதிவ்ரதை’ எனும் தகுதியை இழக்கவைக்கும். உடலுறவு மட்டுமே அதன் இழப்பாகாது; உள்ளத்தின் உறவும் இழப்பாகும். அப்படியானவர்கள் 'ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற சட்டதிட்டத்துக்கு உட்பட்டு வாழ்பவர்கள் அல்ல!

ஆனால் மேலே சொன்னதுபோன்ற வேளையில் பிறந்தவள், ஒருவனோடு மட்டுமான உறவில் முழு மகிழ்ச்சியை எட்டிவிடுவாள்.  அப்படி மகிழும் மனம் மாற்றானை ஏறெடுத்தும் பார்க்காது. அப்படியொரு திடமான எண்ணம் அவளது இயல்பாக இருக்கும். மாறுபட்ட, கட்டுப்பாடு இல்லாத உடலுறவால் இருவரும் பிணியில் சிக்கித் தவிக்க நேரிடும். சுகாதாரத்தைக் காப்பாற்ற 'ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற கோட்பாடு உதவும். இது,  சமுதாயக் கட்டுக்கோப்பு சிதறாமல் இருக்கவும் ஓர் அரணாக அமைகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்!

அடக்கம், தெளிவு, திடம் ஆகிய அத்தனையும் அவளது இயல்பில் கலந்திருக்கும். அந்தத் தூய்மையான மனம் அருளையும் வழங்கும்; அதைச் சீண்டினால் அழிவையும் சந்திக்கவைக்கும். தவமிருந்து சேமித்த பக்குவம் அவளிடம் உண்டு. இப்படியான அருங்குணம்- பண்பு குறித்த பெருமையை விளக்கும் புராணத் தகவல்கள் கட்டுக்கதையன்று. மனப்போக்கை அலசி ஆராய முற்பட்ட மனோதத்துவ நிபுணர்களுக்கு, அவளின் மனநிலை ஒரு பாடமாக இருக்கும். துரதிர்ஷ்டவசமாக இன்றையச் சூழல், 'ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற கோட்பாட்டை மறந்து, பிணியில் சிக்கித் தவிக்கவைக்கிறது. சமுதாயக் கட்டுக்கோப்பை சிதறடிக்க வைக்கிறது. இழப்பை சரிக்கட்ட இல்லாத ஒன்றைத் தேடி அலைய வைக்கிறது. விலங்கினங்களின் தரத்துக்கு தன்னைத் தாழ்த்திக்கொள்ள வைக்கிறது.

இயற்கையின் கோட்பாடும் மனோதத்துவமும் இணைந்து செயல்படும் பாங்கினை ஜோதிடத்தில் காணலாம். இயற்கையின் கோட்பாட்டின் துணையோடு மனப்போக்கின் தரத்தை ஆராய்வது, ஜோதிடத்தின் குறிக்கோள். விண்வெளியில் சந்திரன், புதன், சுக்கிரன், சூரியன், செவ்வாய், குரு, சனி என்கிற வரிசையில் கிரகங்கள் சுழன்று கொண்டிருக்கும். அந்தச் சுழற்சியானது உலக இயக்கத்துக்குத் துணைபுரியும்.

குருவுக்கு இருபுறமும் இரண்டு வெப்பக் கிரகங்கள் இருக்கும். சனி வெப்பம் மிக்கவன். செவ்வாயும் அப்படியே. குரு தட்பக் கிரகம். கிடுக்கிப்பிடி போல் மாட்டிக் கொண்டிருக்கும் குரு, தனது இயல்பை இழக்காமல் இருப்பார். ஆக, இரு வெப்பங்களின் தாக்கத்திலும் சுண்டிப்போகாமல், தனது தட்பத்தால் அடக்கும் திறமை பெற்றவர். தமது சேர்க்கை அல்லது பார்வையால் வெப்பக் கிரகத்தின் தாக்கத்தை மறைத்து, அதன் இயல்பை மாற்றி அமைப்பவர் அவர். தெளிவு, திடம், அடக்கம் ஆகிய மூன்றும் அவர் இயல்பில் தென்படுவதால், அவரது த்ரிம்சாம்சகத்தில் பிறந்தவள், அந்த மூன்று இயல்புகளையும் பெற்றிருப்பதை, 'பதிவ்ரதை’ என்ற உயர்வு வெளிப்படுத்துகிறது.

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்!

கடமை, கட்டுப்பாடு மற்றும் சட்டத்திட்டங் களில் உள்ள திடசித்தம் 'பதிவ்ரதை’ என்ற சொல்லில் விளக்கப்பட்டிருக்கிறது. அந்த திடசித்தம் மற்ற விஷயங்களிலும் இணைந்து பெருமையையும் பெருந்தன்மையையும் வளர்க்க உதவும் என்பது சிறப்பு. மறுமணமும், கலப்பு மணமும், விவாகரத்தும் மலிந்த இன்னாளில், 'பதிவ்ரதை’ கோட்பாடு காணாமல் போயிவிட்டது என்ற விதண்டாவாதத்துக்கு இடமில்லை. கணவன் விஷயத்தில் ஏற்பட்ட மனோதிடம் மறைந்தாலும், மறைக்கப்பட்டாலும் அதற்கு அடிப்படையாக இருந்த திடசித்தமானது, அவளுடைய வாழ்க்கைக்கு வழிகாட்டியாக மாறுவதைத் தடுக்க முடியாது.

எத்தனை வீராங்கனைகள், பெண் சிங்கங்கள் இன்று வளைய வருகிறார்கள். அதில் திருமணமாகாதவர்களும், கணவனை இழந்தவர்களும் அடங்குவர். கணவன் இருந்தால், 'பதிவ்ரதை’ என்ற அந்தஸ்தில் அவளது திடசித்தம் பளிச்சிடுகிறது என்பது பொருள். இறுக்கமான காதலில் திருமணத்தில் இணைய வேண்டும் என்பது திடசித்தம். இணைப்பில் இருந்து வெளியேறவும் அதே திடசித்தம் பயன்பட்டது. பதிவ்ரதையின் திடசித்தத்தின் இலக்கணம் வேறு.  ஆராய்ந்து முடிவெடுத்த பிறகு அதில் நுழைந்து செயல்படுவதற்கு இடையூறு தென்பட்டால், அதை எதிர்த்துப் போராடி வெற்றியை எட்டுவதும் திடசித்தமாகும். மனோதத்துவத்தில் நிறைவை எட்ட ஜோதிடம் வேண்டும்.

கடகம் நீர் ராசி. சந்திரன் தட்பக்கிரகம். அவனும் நீரில் இருந்து  தோன்றியவன் (பாற்கடல் கடைந்தபோது வந்தவன் என்கிறது புராணம்). 'சந்திரன் நீர்மயன்’ என்கிறார் வராஹமிஹிரர் (ஸலில மயேசசினி). குரு தட்பக்கிரகம். அவர் அங்கு உச்சனாக பலம் பொருந்தியவராக விளங்குகிறார். மற்றக் கிரகங்களின் விகிதாசாரப்படி தட்பம் இருப்பதால், அவற்றை தட்பக்கிரகம் என்கிறோம். குருவில்... தட்பத்தின் எல்லை தொட்டு இருப்பதால், அவரது சேர்க்கை வெப்பத்தைத் தணிக்கும் தகுதியைப் பெற்றிருக்கும்.

கடகத்தில் குருவை உச்சனாக சித்திரிப்பதில் இருந்து, அவர் முழு தட்பம் பெற்றவர் அதாவது வெப்பத்தால் வெல்ல முடியாத தட்பம் இருப்பவர் என்று பொருள்கொள்ளலாம். பனிக் கட்டியாக மாறிய குளிர், வெப்பத்தைத் தலைதூக்கவிடாது. ஏழில் இருக்கும் செவ்வாயின் வெப்பத்தை குருவின் சேர்க்கையும், பார்வையும் தணித்துவிடும். குரு சேர்க்கை, பார்வை செவ்வாய் தோஷத்தை அகற்றிவிடும் என்கிற வழக்குச்சொல்லும் குருவின் அளவுகடந்த தட்பத்தின் வெளிப்பாடு!

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்!

இங்கு வெப்பக் கிரகம், வெப்பக் கிரக ராசியில் உச்சம் பெறுகிறது. தட்பக்கிரகம், தட்பக்கிரக ராசியில் உச்சம் பெறுவதைக் கவனிக்க வேண்டும். சூரியனும் செவ்வாயும் வெப்பக்கிரக ராசியில் உச்சம் பெறுகிறார்கள். சந்திரனும், சுக்கிரனும், குருவும் தட்பக்கிரக ராசியில் உச்சம் பெறுகிறார்கள். சூரியனிடம் இருந்து வெளிவந்த கிரகம் சனி. சந்திரனிடம் இருந்து வெளிவந்த கிரகம் புதன். இருவரும் அலிகள். சனி ஆணானாலும் அலியாகச் சுட்டிக்காட்ட, பெண் கிரகமான சுக்கிர கிரக வீட்டில் உச்சம் பெற்றதாகக் காட்டப்பட்டிருக்கிறது. சனி வெளி வந்தது, வெப்பக் கிரகமான சூரியனில் இருந்து. இணைந்தது தட்பக்கிரகம்; அலியைச் சுட்டிக்காட்டியது. வெப்பமிகுதியில் ஆண் அலியாக மாறினான். தட்பக்கிரகமான சந்திரனிடம் இருந்து வெளிவந்த புதன் தட்பக்கிரகம். ஆகையால் தனது வீட்டிலேயே உச்சம் பெற்று இருப்பதால் தட்பத்தின் மிகுதியால், பெண் அலியாக சுட்டிக் காட்டப்பட்டது.

பெண் ஜாதகத்தில் 7-ம் வீட்டில் சனியும் புதனும் சேர்ந்து இருந்தால், அவளுக்கு வரும் கணவன் அலியாக இருப்பான் என்ற விளக்கம் ஜோதிடத்தில் உண்டு. அலி பண்பையும் சேர்த்து சுட்டிக்காட்டும் நோக்கத்துடன் புதன் தனது வீட்டிலும், சனி சுக்கிரன் வீட்டிலும் உச்சம் பெறுவர் என்று விளக்கமளித்தது. சந்திரன், சுக்கிரன், புதன் - இவர்களில் விகிதாசாரப்படி ஏற்றக் குறைச்சலோடு (சந்திரன்) தென்படுவதால், அவற்றின் தட்பம் வெப்பத்தால் உறிஞ்சப்பட்டு, வெப்பச் சூழலை ஏற்படுத்திவிடும்.

ஆண் ஜாதகத்தில் 7-ல் சுக்கிரனும் செவ்வாயும் சேர்ந்து இருந்தால், செவ்வாயின் வெப்பம் தட்பக்கிரகமான சுக்கிரனையும் ஆட்கொண்டுவிடும். செவ்வாயோடு (வெப்பம்) சேர்ந்த சுக்கிரனும் (தட்பம்) பாபியாகி விடுகிறான் என்று ஜோதிடம் விளக்கும். ஆகையால், 'செவ்வாய் ஒரு பாபக்ரஹம், செவ்வாயின் சேர்க்கையில் சுக்கிரனும் பாபியாகி விடுவான் (பாபஸம்யுக்தசுக்ர:)’ என்று வெப்பமானது, தட்பத்தை ஆட்கொள்வதை விளக்கும்.

ஹரித்வாரில் ஓடும் கங்கையில், உச்சி வெப்பத்தில் குளிப்பவனுக்கு நீர்மட்டத்தின் மேலெழுந்தவாரியாக வெப்பம் அனுபவப்படும். ஆழமாக உள்ளே சென்றால் தட்பத்தின் அனுபவம் முழுமையாகக் கிடைக்கும். கதிரவன் கிரணத்தின் வெப்பம் உள்ளே செல்ல முடியாமல் தட்பம் தடுத்துவிடும். இங்கு தட்பம் வென்று விடுகிறது. அந்த அளவுக்கு குருவின் தட்ப நிலையானது எந்த வெப்பத்தையும் ஆட்கொண்டுவிடும். சூடேறிய தோசைக்கல்லில் கையால் தெளித்த நீர் நொடியில் மறைந்துவிடும். இங்கு வெப்பத்தின் தாக்கம் வலுப்பெறவில்லை; தட்பம் வலுவிழந்து இருப்பதால் ஆட்கொண்டுவிட்டது. இப்படி, எல்லா சிந்தனைகளும் உருவாவதற்கு, வெப்பதட்பத்தின் விகிதாசாரக் கலவை காரணமாவது உண்டு.

இங்கு ராசி முழுதும் புதன் பரவியிருப்பான். ஒற்றைப்படை ராசியில் 10 பாகைகளுக்கு மேல் 8 பாகைகள் குருவின் த்ரிம்சாம்சகம் இருக்கும். இரட்டைப்படை ராசியில் 12 பாகைகளுக்கு மேல் 8 பாகைகள் குரு த்ரிம்சாம்சகம் இருக்கும். 'த்ரேக்காணத்தில் 2-வது த்ரேக்காணம் இணைந்து  இருக்கும். ஹோரையைப் பொறுத்தவரையிலும் இரண்டிலும் (இரு ராசிகளிலும்) சூரிய- சந்திரர்கள் பங்கு விகிதாசாரப்படி இணைந்திருக்கும். அவற்றின் தாக்கத்தைப் பின்னுக்குத் தள்ளி குரு த்ரிம்சாம்சகம் தனது இயல்பை, அவளிடம் ஏற்படுத்தி பதிவ்ரதையாக மாற்றுகிறார்.திடசித்தத்தில் தன்னை உயர்த்திக்கொள்ள வழிவகுக்கிறார்.

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்!

ராசியில் புதன், ஹோரையில் சூரிய- சந்திரர்கள், த்ரேக்காணத்தில் ஒற்றைப்படை ராசியில்- ஐந்துக்கு உடைய சுக்கிரன்; இரட்டைப் படை ராசியில் ஐந்துக்கு உடைய சனி. அதாவது சூரியன், சனி என்ற இரு வெப்பக் கிரகங்கள்; புதன், சுக்கிரன் என்ற இரண்டு தட்பக்கிரகங்கள். இவற்றின் இணைப்பில் ஏற்பட்ட மாறுதலை தனது தட்பத்தால் விலக்கி குரு த்ரிம்சாம்சகம் வென்று, அதில் பிறந்தவளை திடசித்தம் உள்ளவளாக சித்திரிக்கவைக்கிறது.

சந்திரகேந்திர குரு (கஜகேஸரி யோகம்) 1, 4, 7 10 வீடுகளில் ஒன்றில் சந்திரனும், ஒன்றில் குருவும் இருந்தால் (சந்திரனோடு இணைந்தாலும்), ஒன்றுக்கொன்று கேந்திரத்தில் அமைந்தாலும்... இரு தட்பக்கிரகங்களின் சம்பந்தத்தில்- குரு தட்பத்தால் பலம் பெறும் வேளையில், சந்திரன் (மனம்) தொடர்பால் மனம் தெளிவு பெற்று சீரான சிந்தனையில் வாழ்க்கை வளம் பெறுவதை 'தன யோகம்’ என்று சுட்டிக்காட்டும்.

வாழ்க்கை வளம் பெற பொருளாதாரத்துக்கும் பங்கு உண்டு. சூடான சிந்தனையில் தளர்ச்சியடைந்த மனம், நேராக செயல் படாது. குருவின் சம்பந்தத்தால் குளிர்ந்த மனம், வலுவான- திடமான சிந்தனையைப் பெற்று, தன் காலில் நிற்கும் தகுதியைப் பெற்று பொருளாதார நிறைவை எட்ட வழிவகுக்கும் என்று ஜோதிடம் விளக்கும்.

'குரு’ என்ற சொல்லுக்குக் கனமானவன்... 'எடை’யில் கனமாக இருப்பவன் என்று பொருள் உண்டு. 'கன பரிமாணம்’ தட்பத்துக்கு உண்டு. வெப்பத்துக்கு இல்லை. காய்ந்த பழங்களில் நீர் இருக்காது. எடையும் குறைந்துவிடும். காயாத பழங்களில் தட்பம்தான் கனபரிமாணத்தைச் சுட்டிக்காட்டுகிறது.

தன்னிடம் இருக்கும் தட்பத்தை வைத்துக்கொண்டு பல இடையூறுகளை விளக்கும் தகுதி பெற்றிருக்கிறார் குரு. நன்மையையும் தீமையையும் சந்திக்க வைப்பது சிந்தனை. வெப்பத்தின் தாக்கம் தணிந்து, தட்பம் மேலோங்கும்போது, நேரான வழியில் சிந்தனை செயல்பட்டு பலனை எட்டி விடுவோம். 'குரு பலம் திருமணத்தை எட்ட வைக்கும்’ என்கிற சொல்வழக்கு, இடை யூறான சிந்தனையை அகற்றி, திருமணத்துக்கு உகந்த சிந்தனையில் திருப்பிவிட ஒத்துழைப்பவர் என்று பொருள் உணர்த்துகிறது எனலாம். ஆக, ஆராய்ந்து செயல்பட்டு அனுபவத்துக்கு வந்த பிறகு பலன் சொல்ல விழைவது ஜோதிடனுக்கு அழகு.

- சிந்திப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism