குருப்பெயர்ச்சி பலன்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

கேள்வி - பதில்

எங்கே செல்கிறது ஆன்மிகம்? சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

தையுமே எதிர்பார்க்காமல் பூஜை- புனஸ்காரங்கள், வழிபாடுகள் போன்றவற்றை உரிய கடமையாக நிறைவேற்றிக்கொண்டிருந்த காலம் இருந்தது. தற்போது, நமது ஆசைகளைப் பூர்த்தி செய்யும் எண்ணத்தில், எதிர்பார்ப்புடன் நடைமுறைப்படுத்தும் சடங்குகளாக அவை மாறிவிட்டன.

அதேபோல் குருமார்கள், மகான்கள் என்ற பெயரில் தனி மனிதத் துதியே மேலோங்கியிருக்கிறது.

இன்றைய ஆன்மிகம் எதை நோக்கிச் செல்கிறது?

- கோ.சிதம்பரம், ராதாபுரம்

கேள்வி - பதில்

ழிபாடுகள், லௌகீக- சுகபோக சாதனங்களை ஈட்டித் தரும் சடங்காகச் சித்திரிக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் கொள்கை மாறுபாட்டால் பூஜா பலன்கள் மனத் தெளிவை ஏற்படுத்தும் தகுதியை இழந்துவிட்டன.

கடவுளை வழிபடுவதில் அக்கறை குறைந்து வருகிறது. மகான்களை வழிபடுவதில் அக்கறை வளர்ந்து வருகிறது. கடவுளைவிட மகான்கள் உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் மேலோங்கியிருக்கிறது. கடவுளின் கோபத்தில் தவிக்க நேர்ந்தால், குருவானவர் கடவுளின் கோபத்தில் இருந்து நம்மை விடுவிப்பார்; ஆனால், குருவின் கோபத்துக்கு ஆளானால், உன்னை விடுவிக்க யாரும் இருக்கமாட்டார்கள்; ஆகவே, கடவுளைவிட உயர்ந்தவர் குரு என்ற அளவுக்கு குருபக்தியை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு இருப்பவர்களும் உண்டு. கடவுள் பக்தனுக்குக் கட்டுப்பட்டவர்; அவர் பக்ததாசன். ஆகையால், கடவுளின் பக்தனை வழிபடுபவர்களும் உண்டு.

எதிர்பாராத நிலையில், மகான் ஒருவரைச் சந்தித்த ஒருவன், அவரின் பெருமைகளை அறிந்ததும், 'என் தந்தை உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார். அவரைக் காப்பாற்ற தாங்கள் அருள வேண்டும்’  என்று அவரிடம் வேண்டினான். மகான் விபூதி பிரசாதம் அளித்து, 'இதைத் தந்தையின் நெற்றியில் இட்டுவிடு. அவர் எழுந்து ஆரோக்கியம் பெற்று, நீண்ட நாள் வாழ்வார்’ என்று அருளினார்.

தந்தையின் நெற்றியில் அந்த விபூதியை வைத்ததில் இருந்து, அவர் படிப்படியாகக் குணமடைந்து, திடகாத்திரத்துடன் விளங்கினார். இந்த அனுபவம் அவனுக்கு அந்த மகான்மீது நிரந்தர பக்தியை ஏற்படுத்தியது. அந்த மகானின் வழிபாடு அவனுக்குப் பிடித்துவிட்டது. அவன் அவரது டிவோட்டியாக (பக்தனாக) மாறிவிட்டான்.

? என்ன சொல்ல வருகிறீர்கள்? ஏதேனும் பலனை எதிர்பார்த்துதான் மகான்களையும் குருமார்களையும் மக்கள் பின்பற்றுகிறார்கள் என்கிறீர்களா?

பெரும்பாலும் அப்படித்தான்!

மேற்சொன்னது போன்று, தங்களது அனுபவத்தில் நிறைவுபெற்று, மாறுபட்ட மகான்களின் டிவோட்டிகளாக மாறியவர்களும் உண்டு. இப்படி, கடவுள் வழிபாட்டை மறந்துவிட்ட டிவோட்டிகள் குழு நம் தேசத்தில் நிரம்பிவிட்டன. இந்தக் குழுவினருக்கு அவரவர் நம்பிக்கை பெற்ற மகானே வழிகாட்டி! வேதம், சாஸ்திரம், புராணம், இதிகாசம், சம்பிரதாயம் ஆகிய அத்தனையும் பின்னுக்குத் தள்ளப்பட்டு, அந்த மகானின் வாக்கையே உயர்வாக- வேதவாக்காகக் கருதி, அதை ஏற்றுப் பெருமையுடன் கடைப்பிடிப்பவர்களும் உண்டு.

குடும்ப விவகாரங்கள் அத்தனையும் அவர்கள் வழிபடும் மகான்களின் பரிந்துரையில்தான் நிகழும். முகூர்த்த சாஸ்திரம் பரிந்துரைத்த முகூர்த்தத்தை மகான்களின் வார்த்தையால் தவிர்த்துவிடுவார்கள். அவரே தாலியை எடுத்துத் தர, அதை வாங்கி திருமாங்கல்ய தாரணம் செய்வதை பாக்கியமாகக் கருதுகிறார்கள். தங்களது பழைய பண்பாடுகளை ஒரு பக்கம் கட்டி வைத்துவிட்டு, குறிப்பிட்ட மகானின் வழிகாட்டுதலால் இணைந்தவர்கள் ஏராளம். அவர்களுக்கு அது நிம்மதியளிக்கிறது. இப்படி, டிவோட்டி முறையில் பிரிந்திருக்கும் சமுதாயம் ஸனாதனத்தை அறவே ஒதுக்கிவிட்டது. பழைய ஸனாதனக் கோட்பாடுகள் இன்றைக்குச் செல்லாக்காசாக மாறிவிட்டன!

? குருமார்கள், மகான்கள் என்று ஒருவரைப் பின்பற்றுவதும், அவர்களது வழிகாட்டுதலும்தான் பழைய சாஸ்திர சம்பிரதாயங்கள்  வழக்கொழியக் காரணம் என்கிறீர்களா?

வேறு சில காரணங்களும் உண்டு. கடவுள் மனத்தில் குடியிருக்கிறார். அவரை தியானம் செய்தால் போதும்; கோயில், குளம் செல்வது வீண். நாம சங்கீர்த்தனத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டால் போதும்; இந்தச் சடங்குகள் எதுவும் தேவையில்லை. ஏழைகளுக்கு அன்ன தானம் செய்தால் போதும்; முன்னோர் ஆராதனை தேவையில்லை. கோயிலில் பணத்தைக் கட்டி, அவர்கள் மூலம் முன்னோர் ஆராதனையை நிறைவேற்றினாலே போதும்... இப்படியான எண்ணங்களும் கருத்துக்களும்கூட இன்றைய நிலைக்குக் காரணம் எனலாம்.

பெற்றோர் வாழும் காலத்திலேயே அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்க்கத் துடிப்பவர்கள், முன்னோர் ஆராதனையை நினைத்துப் பார்ப்பார்களா என்ன?!

இன்றைய அறிவியல் உலகில், ஸனாதனத்துக்கு என்ன வேலை? கொல்லன் பட்டறையில் ஈக்கு என்ன வேலை?! ஸனாதன வாழ்வின் போர்வையில், லோகாயத வாழ்க்கையைப் பின்பற்றுபவர்களுக்கு ஸனாதனம் இடையூறு. உயிர் பிரிந்த உடலை கொடையாக அளித்து மகிழும் மனம், ஸனாதனம் சொல்லும் இறுதிச்சடங்கை மறந்துவிடும்.

மறுமணமும், விவாகரத்தும், கலப்புத் திருமணமும் அரங்கேறி வரும் நிலையில், ஸனாதனம் உதாசீனப்படுத்தப்படுகிறது. மாற்றான் மனைவியை ஏற்றுக்கொள்ளுதல், கணவனை இழந்தவளை மணம் செய்தல் இவையெல்லாம் இப்போது எல்லோராலும் ஏற்கத்தகுந்ததாக மாறிவிட்டன. குழந்தையுடன் விவாகரத்தைச் சந்தித்தவளை மணந்து வாழ்வு அளிப்பவர்களும் உண்டு. விவாகரத்து ஆன பெண்மணியை குழந்தையுடன் கன்யாதானம் செய்துகொடுக்கும் பெற்றோரும் இருக்கிறார்கள். கலப்புத் திருமணத்தில் பிறந்த குழந்தைக்கு உரிய காலத்தில் உபநயனம் நடத்தி அழகுபார்க்கும் பெற்றோரும் உண்டு. ஆக, ஸனாதனமும் கடவுள் சிந்தனையும் கவனிப்பாரற்றுத் தவிக்கின்றன. அவை, சொற்பொழிவிலும் ஏட்டிலும் மட்டுமே ஒட்டிக்கொண்டிருக்கின்றன.

கேள்வி - பதில்

ல்லை! தங்களின் கருத்துக்கள் சிந்தனையாளர்களை ஈர்க்காது. அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தென்படும் குறைகளை பூதாகரமாக்கி, ஸனாதனம், கடவுள் சிந்தனைகள் சீரழிந்ததாகச் சொல்வது அறியாமை! இடைக்காலத்தில் தலைதூக்கிய ஸனாதனப் பகையானது இன்று அறவே அகன்று, விழிப்பு உணர்வு ஏற்பட்டு, ஸனாதனம் சிறப்புற்று விளங்குகிறது.

'கடவுள் இருக்கிறாரா?’ என்ற கேள்விக்கு, 'கடவுள்தான் இருக்கிறார்; மற்றவர்கள் ஒருகாலத்தில் இருக்கமாட்டார்கள்’ என்று மகான்களிடம் இருந்து பதில் வந்தது. அவர்கள் மூலம் ஸனாதனத்தின் சாரம் எளிமையாக விளக்கப்பட்டது. 'முனைந்து செயல்படு; வெற்றி உண்டு. கடவுள் உன்னோடு இருக்கிறார்’ என்றார் ஒரு மகான். 'உடலில் ஆன்ம வடிவில் மனத்தில் குடிகொண்டிருப்பது கடவுள். சிந்தனை செய்வது மனம். சிந்தனை செயல்பட்டு முழுமை பெறும் வரையிலும், மனத்தில் ஆன்ம வடிவில் தென்படும் கடவுள், சிந்தனையையும் செயல்பாட்டையும் கண்காணித்துக் கொண்டிருப்பார். கடவுள் உன்னோடு இருக்கிறார் என்று உணர்ந்தால், வெற்றி உண்டு.’ இப்படியான மகான்களின் விளக்கங்கள் ஸனாதனத்தின் சாரமாகவே திகழ்கின்றன.

? ஆக, அவர்களைப் பின்பற்றினால் போதும்; தர்மசாஸ்திரம், சடங்கு- சம்பிரதாயங்கள் தேவையில்லை என்பதுதான் உங்கள் கருத்தா?

அப்படியில்லை! ஸனாதனத்தின் அருளுரைகளைக் காலத்துக்கு ஏற்ப, பாமரர்களின் மனநிலையை அறிந்து, கதைகளாகவும் நிகழ்வுகளாகவும் மகான்கள் பகிர்ந்தளித்து, அறத்தில் நாட்டத்தை நிலைப்படுத்துகிறார்கள் என்றே கருதவேண்டும்.

பிரகலாதன், துருவன், மீரா போன்றோர் அந்த நம்பிக்கையில் கரையேறியவர்கள். அவர்களின் கதைகள், பாமரர்களின் மனத்தில் கடவுள் இருப்பதை உணரவைக்கிறது. சொற்பொழிவில் விளக்கப்படும் அத்தனை கடவுள் லீலைகளும் 'மனத்தோடு ஒட்டிக்கொண்டிருக்கும் ஆன்மாவே கடவுள்’ என்பதை உணர வைக்கின்றன.

அன்றாட வாழ்க்கையை நடைமுறைப்படுத்தவே அல்லல்படுகிற மக்களுக்கு ஆன்மிகச் சொற்பொழிவுகள், பக்தியின் மேன்மையைச் சொல்லும் விளக்கவுரைகள், கோயில்- குளங்களின் பெருமையைச் சொல்லும் விரிவுரைகள் ஆகியவை மன அமைதியையும் மகிழ்ச்சியை யும் அளிப்பதுடன், அன்றாடத் தேவைகளையும் ஈட்டித் தருகின்றன.

அர்ஜுனன், தன்னுடன் இருப்பது கடவுள் (கண்ணன்) என்று உணர்ந்தான்; போரில் வெற்றி பெற்றான். குசேலன் தன் மனத்தில் கடவுள் இருப்பதை உணர்ந்தான்; இரண்டு பிடி அவலுக்கு அவனது ஏழ்மை அகன்றது. அக்ஷயபாத்திரம் காலியான வேளையில் விருந்தோம்பல் நடத்தவேண்டிய கட்டாயம் வந்தது. கடவுள் தன்னோடு இருக்கிறார் என்பதை உணர்ந்தாள் திரௌபதி; வெற்றி பெற்றாள். எந்தத் தடயமும் இல்லாமல் துப்புதுலக்க முற்பட்டார் ஹனுமன். தன்னுடன் கடவுள் (ஸ்ரீராமன்) இருப்பதை உணர்ந்தார்.  முனைந்து செயல்பட்டு, கடலைத் தாண்டி, சீதையைச் சந்தித்து வெற்றியோடு திரும்பினார். 'அநாதைக்கு தெய்வம் துணை’ என்று சொன்னார்கள் மகான்கள்.

'உனக்கு நாதன் இல்லை; அதாவது, பாதுகாவலன் இல்லை என்று நினைப்பது அறியாமை. அந்த நினைப்பு உன்னைச் செயல்படத் தயங்கவைக்கும். உலகையும் உயிரினங்களையும் படைத்தவன் உனக்கும் உயிரினங்களுக்கும் பாதுகாப்பு அளித்துக் கொண்டிருக்கிறான். அவனே உனக்கு நாதன். அதாவது, உனக்கு என்றும் பாதுகாப்பாக இருப்பவன். நீ அனாதை இல்லை. உண்மையில் நீதான் நாதனோடு இருப்பவன். அவளை அறியாதவர்களே அநாதைகள். உன் மனத்துடன் இணைந்திருக்கும் ஆன்மா அவன்தான். உன் மனத்தில் குடிகொண்டிருப்பனை நீ அறியாமல் இருப்பதுதான் ஆச்சரியம்!  உனது விருப்பம் உருப்பெறும் மனத்தில் அவன் இருக்கிறான். அது அவனுக்குத் தெரியும். நீ செயல்பட்டால், வெற்றிபெற அவன் ஒத்துழைப்பான்’ என்ற விளக்கம், ஸனாதனத்தின் சாரம்.

'இந்த உடல் தேவாலயம். அதில் குடிகொண்டிருக்கும் ஜீவன் என்றும் விளங்கிக் கொண்டிருக்கும் கடவுள். அறியாமை என்கிற நிர்மால்யத்தை (முதல் நாள் பூஜையில் நிறைந்த பழைய புஷ்பங்கள்), அகற்றி, அந்த ஜீவன்தான் கடவுள் என்று வழிபாட்டில் ஈடுபடு’  என்பது மகான்களின் அறிவுரை (தேஹோதேவாலய: ப்ரோத்தோ...).

'உன்னில் உறைந்திருக்கும் ஆன்மாதான் (ஜீவாத்மா) கடவுள் என்பதை மறைக்கும் அறியாமையை (நிர்மால்யத்தை) அகற்றினால் தெய்வம் பளிச்சிடும்; வழிபட இயலும்!’ - இது ஸனாதனத்தின் சாரம்.

ஆக, ஸனாதனத்தின் சாரங்களை மக்களுக்கு எளிமையாகப் புரியவைப்பதில் மகான்களின் பங்கு அதிகம். எனவே, மகான்களை வழிபடும் (டிவோட்டிகள்) மக்களின் மகான் பக்தி, அவர்கள் தங்களை எளிதில் மனத்தளவில் உயர்த்திக்கொள்ள உதவுகிறது.

வார்த்தை ஜாலங்கள் இன்றையச் சூழலில் எடுபடாது!

மக்கள் விழிப்பு உணர்வு பெற்றுவிட்டனர். அலசி ஆராயும் திறன் வளர்ந்தோங்கி உள்ளது. கடவுளைத் தெரிந்துகொள்ள விருப்பமில்லை. தங்களது விருப்பத்தை நிறைவேற்ற, கடவுள் திருவுருவங்களை அணுகுபவர்களே ஏராளம். அபிஷேக- அர்ச்சனைகளில் இணைந்து, அதற் குப் பிரதிபலனாக வேலைவாய்ப்பு, திருமணம், பண வரவு, நோய்களில் இருந்து விடுதலை ஆகியவற்றை எதிர்பார்க்கிறார்கள். வழிபாடு, வியாபார நோக்கில் வளர்ந்திருக்கிறது.

? பாமரன் கடவுளிடம் தனது வேண்டுதலை முன்வைப்பதை வியாபார நோக்கம் என்று எப்படிச் சொல்லமுடியும்?

வேண்டுதல்களின் நோக்கத்தைக் கவனித்தால், உங்களுக்குப் புரியவரும். காதலில் வெற்றி பெற, விவாகரத்தில் வெற்றி பெற, தேர்வில் முதன்மை பெற, பரிசுப் பொருள் வந்தடைய, வீடு- வாசல், வாகனம், செல்வம், குழந்தைகள், உயர்பதவி, பட்டம், பெருமை, புகழ் ஆகிய அத்தனைக்காகவும் வழிபாட்டில் வேண்டப் படுவது உண்டு. கடவுள் எதைக் கேட்டாலும், கொடுக்க வேண்டும். பாகுபாடு இல்லாமல், கேட்பவரை உரைத்துப் பார்க்காமல் எல்லோருக் கும் அவர் வாரி வழங்கவேண்டும் என்று கடவு ளைப் பற்றிய கணிப்பு பலரிடம் உண்டு.

லோகாயத வாழ்க்கைக்குத் தேவையானவற்றை அள்ளித் தரும் வள்ளலாகவே கடவுளைப் பார்க்கிறார்கள். அதை உணர்ந்த சொற்பொழிவாளர்களும் பல நிகழ்வுகளை எடுத்துக்காட்டாகச் சொல்லி, விருப்பத்தை நிறைவேற்றும் வேந்தனாகக் கடவுளைச் சித்திரிக் கிறார்கள்.

கடவுளின் உண்மை வடிவத்தை உணர முடியாதவாறு, மக்களின் அறியாமையைப் பாதுகாத்து வரும் சொற்பொழிவாளர்களும் உண்டு!

? அப்படியானால், கடவுளிடம் எதையும் பிரார்த்திக்கக்கூடாது என்கிறீர்களா?

அது வேண்டும், இது வேண்டும் என்று வேண்டிக் கொள்வதற்காகக் கடவுள் இல்லை. கடவுளிடம் எதையும் பெற வேண்டியது இல்லை. நம்மை அவருக்கு அர்ப்பணம் செய்ய

வேண்டும். அதற்காகக் கடவுளை அடையாளம் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஆனால் தற்போது, விருப்பத்தை நிறைவேற்ற கடவுளை அணுகுபவர்களே அதிகம் தென்படுகிறார்கள். சொற்பொழிவுகளிலும் ஸனாதனத்தின் தனி வடிவத்தைப் பார்க்க இயலவில்லை. இறையுருவத்தின் முன்னிலையில் நிகழும் பஜனை, ரசிகர்களை மகிழ்விக்கப் பயன்படுகிறது. விஞ்ஞான விளக்கத்தோடு இணையவைத்துச் சொல்லப்படும் பழம்பெரும் கதைகள், ரசிகர்களின் கைத்தட்டலைப் பெற முனைவதற்காகவே!

கடவுளுக்கும் பக்தனுக்கும் இடைத்தரகராகச் செயல்பட்டு, பக்தனுக்காகக் கடவுளிடம் சிபாரிசு செய்பவர்களும் உண்டு. தன்னுள் இருக்கும் கடவுளை அணுக, வெளியே இருக்கும் ஒருவரை அடிபணிவது பரிதாபம். தற்பொழுது, ஸனாதனம் அஞ்ஞாத வாஸத்தில் இருக்கிறது. அது செழிப்பாக இருப்பதாகச் சித்திரிப்பது ஆச்சர்யம் அளிக்கிறது!

தங்கள் சிந்தனைக்கு ஒரு வார்த்தை...

வேதம், சாஸ்திரம், புராணம், இதிகாசம், சம்பிரதாயம் ஆகியவற்றில் தென்படும் கடவுளின் பெருமைகள், லீலைகள் அத்தனையையும் உள்வாங்கி, 'கடவுள் உன் மனத்தில் ஆன்மா வடிவில் இணைந்திருக்கிறார்’ என்ற உணர்வை ஏற்படுத்த முனைவது, என்றும் அழியாத ஸனாதனம்.

'கதைகளில் வரும் அற்புதமான நிகழ்வுகள், நடைமுறைகள், பக்தர்களின் இன்னல்கள், துஷ்டர்களின் அழிவு, சிஷ்டர்களின் தெளிவு அத்தனையும் கடவுள் பெருமையின் எடுத்துக்காட்டு’ என்றால், நம்மால் அவரது பெருமையை முழுமையாகக் கண்டுகொள்ள முடியாது.

ஆனால், அவரை உள்ளத்தில் கண்டு, அவரிடம் ஒன்றி, துயரம் தொடாத இன்பத்தைச் சுவைக்கலாம். இதையே ஸனாதனம் விளக்குகிறது. ஸனாதன சொற்பொழிவுகளும் இந்த உண்மையை அறிய முயற்சிப்பதற் கான தூண்டுகோலாகச் செயல்பட வேண்டும்.

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஆன்மிகம் சம்பந்தமான எல்லா சந்தேகங்களுக்கும் பதில் தருகிறார் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள். கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: 'கேள்வி பதில்', சக்தி விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.