இடது கை ஆட்காட்டி விரலில் காய்ந்துவிட்டிருந்த மையைக் காண்பித்து, தான் ஓட்டுப் போட்டதை எனக்கு உறுதிப்படுத்திய நண்பர், ''எனக்கு என்ன ஒரு வருத்தம்னா, இதுவரை நான் எத்தனை தடவை ஓட்டுப் போட்டேங்கறதுக்கு கணக்கு வெச்சுக்காம போயிட்டேன்'' என்றார்.
''அதனால என்ன கெட்டுப்போச்சு?'' என்று கேட்டேன்.
''25 தடவை விரல்ல மை குத்திக்கிட்டிருந்தா சில்வர் ஜுப்ளி கொண்டாடியிருப்பேனே! 'வெள்ளிவிழா காணும் ஜனநாயக காவலனே’னு பேனர் கட்டியிருப்பாங்க'' என்று அவர் அங்கலாய்க்க, ''கரெக்ட்! மீடியாக்கள் உங்களை பேட்டிகூட எடுத்திருப்பாங்க!'' என்றேன் நான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ஹூம்... ராமாயண காலத்து அயோத்தி மாதிரி நம்ம நாடு என்னிக்கு மாறுமோ தெரியலே! அப்பெல்லாம் அங்கே காவலர் களே கிடையாதாமே?'' ஏங்கினார் நண்பர்.
''அப்படியா! ஏனாம்?''
''காரணம் அங்கே களவு, கொள்ளை, பாலியல் பலாத்காரம் எதுவும் கிடையாதாம். ராம ராஜ்ஜியத்துல மந்திரிங்க யாரும் பணத்தாசை பிடிச்சு அலையலே! அதனால ஊழல்ங்கற பேச்சுக்கே இடமிருக்கலை!''
''நம்ம பாரத தேசம் இப்பக்கூட அப்படி மாறிட முடியும். ஆனா...''
''ஏன் இழுக்கறீங்க? சொல்லுங்க!'' என்று பரபரத்தார் நண்பர்.
''அதுக்கு ஸ்ரீராமன் மாதிரி ஒரு மன்னர் இருக்கணுமே!'' என்றேன்.
''அது மட்டுமல்ல... அவருடைய அமைச்சரவையும் திருவள்ளுவர் சொல்ற மாதிரி அமையணும்'' என்ற நண்பர், வள்ளுவனின் நிபந்தனைகளைப் பட்டியலிட்டார்.
''அமைச்சரவை துணிச்சலா செயல்படணும்; குடிகளைப் பாதுகாக்கணும்; அறநூல்களைக் கற்கணும்; அயராத முயற்சி இருக்கணும்.
சரியான ஒரு செயலைத் தேர்ந்தெடுக்கணும்; அதை நிறை வேற்ற வழிவகைகளை ஆராய்ந்து செயல்படுத்தணும்; முடிவு பாதகமா இருக்கும்னு தோணுச்சுன்னா, அதை மன்னருக்கு உறுதிபட எடுத்துச் சொல்லும் ஆற்றல் அமைச்சருக்கு இருக்கணும்.
சொன்னதையும் கேட்காமல், சொந்த அறிவும் இல்லாமல் இருக்கிற மன்னராக இருந்தால், அவருக்கு அருகிலுள்ள அமைச்சர்கள்தான் துணிவோடு நல்ல யோசனைகளைச் சொல்லணும்...இப்படி, அமைச்சரவை எப்படி இருக்கணும்கிறது‑க்கு இலக்கணம் சொல்றார் வள்ளுவர். இதெல்லாம் சாத்தியமா என்ன?'' என்று கேட்டார் நண்பர்.
''மே 16 வரை காத்திருங்க!'' என்றேன் நான்.
ஹூம்... ரொம்பத்தான் நப்பாசை!