Published:Updated:

உடைந்த முதுகுத்தண்டு... நிமிரவைத்த முருகன் அருள்! - நெகிழும் `காவடி’ விநாயகம்

உடைந்த முதுகுத்தண்டு... நிமிரவைத்த முருகன் அருள்! - நெகிழும் `காவடி’ விநாயகம்
உடைந்த முதுகுத்தண்டு... நிமிரவைத்த முருகன் அருள்! - நெகிழும் `காவடி’ விநாயகம்

லகப் புகழ்பெற்ற பெரிய கோயில், பசுமை நிறைந்த விவசாய வயல்கள், கிராமியக் கலைகள்... இவை அனைத்தும் தஞ்சாவூரின் முக்கிய அடையாளங்களாகப் பார்க்கப்படுகின்றன. ஏராளமான கிராமியக் கலைஞர்கள் இங்கு நிறைந்திருக்கிறார்கள்.முருகப் பெருமானுக்கு உகந்த வழிபாடான, `காவடி எடுத்துச் செல்லுதல்’ என்பதுகூட ஓர் உன்னதமான கிராமியக் கலைதான். காவடி என்னும் கிராமியக் கலையைத் தன் தோளில் சுமந்து, தனக்கும் தான் சார்ந்த மண்ணுக்கும் புகழ் சேர்த்திருக்கிறார் விநாயகம். தன்னோடு இந்தக் கலை முடிந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் அந்தக் கலையை ஆர்வமுள்ளவர்களுக்கு நகர்த்தியும் கொண்டிருக்கிறார்.

கந்தனுக்கு உகந்த காவடி ஆட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளவும், அந்தக் கலை மறைந்துவிடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக ஆர்வமுள்ள மற்றவர்களுக்குக் கற்பித்தும் வரும் அவரைச் சந்தித்தோம்.

``எங்க அப்பா ஏகாம்பர பிள்ளை கோயில்ல பூசாரியா இருந்தவர். திருவிழாக்களின்போது `சக்தி கரகம்’ என்ற பெயரில் அவரே காவடி செஞ்சு ஆடுவார். அந்த ஆட்டத்தைப் பார்க்க ஏகப்பட்ட கூட்டம் கூடும். எனக்கு விவரம் தெரிய ஆரம்பித்ததும் காவடி ஆட்டத்தின் மேல் ஈர்ப்பு வந்துச்சு. அப்பா காவடி செய்வதைக் கூர்ந்து கவனிப்பேன். காவடி தூக்கி அவர் ஆடுவதை அப்படியே எனக்குள்ளும் இறக்கினேன். இதில் எனக்கு இருக்கும் ஆர்வத்தைப் பார்த்து, அவரும் சொல்லிக் கொடுத்து, அந்தக் கலைக்கு என்னையும் தயார்படுத்தினார்.

சரியாக பன்னிரண்டு வயதிலேயே என் தோளில் காவடி சுமந்து ஆட ஆரம்பித்துவிட்டேன்.ஆரம்பத்தில் உள்ளூர் திருவிழாக்களில் மட்டுமே ஆடி வந்தேன். அந்தச் சமயத்தில் கோயம்புத்தூரில் இருந்து பழனிக்குப் பாதயாத்திரை செல்லும் குழு போகும்போது காவடி ஆடுவதற்கு என்னையும், எனக்குப் போட்டியாக ஆட இன்னொருவரையும் அழைத்து வந்தனர். போகும் வழியில் நானும் அவரும் கடுமையான போட்டி ஆட்டம் ஆடினோம்'' என்றவர் அப்போது தனக்கு ஏற்பட்ட எண்ணம் பற்றியும், அதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகள் பற்றியும் தொடர்ந்து கூறினார்.

''இன்னொருவருடன் போட்டிப் போட்டு ஆடிக்கொண்டிருந்தபோதுதான், இந்தக் காவடி ஆட்டத்தை இன்னும் வித்தியாசப்படுத்தி ஆட வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டது. நானாகவே யோசித்து யோசித்து நிறைய கற்றுக்கொள்ளத் தொடங்கினேன். காவடியை தோளில் வைத்து ஆடியபடியே, கண்களைக் கட்டிக்கொண்டு தேங்காய் உடைப்பது, வாயால் கற்பூரம் கொளுத்துவது, கலர் பாட்டில்களை உடைப்பது, தீப்பந்தம் சுற்றுவது, பன்னிரண்டு அடி ஏணியின் உச்சியில் ஏறி பறவை பறப்பதுபோல் படுத்து சாகசங்கள் செய்வது, வாயில் ஊசியை வைத்துக்கொண்டு எலுமிச்சைப் பழங்களை மாலையாகக் கோப்பது, கண் இமைகளால் கீழே இருக்கும் ஊசி, பிளேடுகளை எடுப்பது என்று வித்தியாசப்படுத்தி, வேகமாக ஆட ஆரம்பித்தேன். அதனால் எனக்குக் கிடைத்த புகழ்தான் சாதாரண விநாயகமாக இருந்த என்னை, காவடி விநாயகமாக மாற்றியது'' என்றவர் காவடிச் சிந்து, அழகர் வர்ணிப்பு (சாமியை வருந்தி அழைப்பது), மகுடி, தெம்மாங்கு, நையாண்டி என்று காவடி ஆட்டத்தில் உள்ள வகைகளையும் கூறினார்.

தோளில் காவடியையும், கால்களில் சலங்கையும் கட்டிக்கொண்டு, காலில் சக்கரம் மாட்டாத குறையாக ஊர் ஊராகச் சுற்றி, இவருடைய காவடி ஆட்டம் நடக்காத ஊரே இருக்காது என்னுமளவுக்கு, காவடி ஆட்டமே தன்னுடைய உயிர்நாடியாகக் கொண்டிருந்த விநாயகத்தின் வாழ்க்கையில், அந்தக் காவடி ஆட்டமே பெருத்த சோதனையைத் தந்துவிட்டது.

அந்தச் சோதனை பற்றியும் அவர் அதில் இருந்து மீண்டு வந்த வழி பற்றியும் அவர் கூறியபோது, நாம் ஒருவருக்குத் தன்னம்பிக்கையை மட்டும் ஏற்படுத்திவிட்டால், அவர் படுபாதாளத்தில் இருந்தாலும் மீண்டும் மேலே வந்துவிடுவார் என்பதை நம்மால் நன்றாகப் புரிந்துகொள்ள முடிந்தது.

அவருக்கு ஏற்பட்ட சோதனை என்ன?

அவரே தொடர்ந்து விவரித்தார். ''ஒருமுறை திருத்துறைப்பூண்டி பக்கத்துல இருக்கற கிராமத்துல என்னோட காவடி ஆட்டம் நடந்துச்சி. என் ஆட்டத்தைப் பார்க்க ஊரே திரண்டு நின்னுச்சு. நான் தோளில் காவடியைச் சுமந்து ஏணியின் உச்சியில் ஏறி தீபம் கொளுத்தி சுற்றியபடியே ஆடினேன். மக்கள் கைதட்டி ரசித்து திரும்பவும் அதே மாதிரி ஆடச் சொன்னார்கள். அப்போதுதான் விதி விளையாடியது. நான் மெய்மறந்து ஆடிக்கொண்டிருக்கும்போது ஏணி முறிந்து தூக்கி வீசப்பட்டு தரையில் விழுந்தேன்.எனக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை கண்ணீரோடு என் மனைவி எனக்கு அருகில் நின்றுகொண்டிருந்தாள். எனக்கு உடம்பில் நடு முதுகுத்தண்டு உடைந்திருந்தது.

நான் நேசித்ததும் என்னோட உடம்புக்குள்ள உசுரா இருந்ததுமான கலையை - காவடி ஆட்டத்தை இனிமேல் ஆட முடியாதோ என்ற ஏக்கத்தோடு மூலையில் முடங்கினேன். வலி தாங்க முடியாமல் சிகிச்சையை வேறு பாதியில் நிறுத்தியதால், என் முதுகு கூன் விழுந்ததுபோல் ஆனது. கலையும் இல்லாமல் காவடியும் இல்லாமல் போன என் வாழ்கையின் கறுப்பு நாள்கள் அவை. என் காதுபடவே, 'இவர் இனிமேல் எழுந்து நடக்க மாட்டார். கைக் குழந்தையோடு நீ எப்படி இனி வாழப்போகிறாய்?' என்று என் மனைவியிடம் கேட்க ஆரம்பித்தனர் உறவினர்களும் அக்கம் பக்கத்தினரும். ஏணியில் பறந்த நான் குழந்தைபோல் தரையில் தவழ ஆரம்பித்தேன்.கால் வயிற்று கஞ்சி குடிப்பதற்காகக் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்தே கூலி வேலைக்குப் போக ஆரம்பித்தேன்.

இப்படியே மூன்று வருஷம் ஆனது. நான் வீட்டில் விட்டத்தைப் பார்த்தவாறே படுத்திருந்தேன். அப்போது எங்களுக்கு நிகழ்ச்சிகள் புக் செய்து கொடுக்கும் கறிவேப்பிலை கண்ணன் என்பவர் வந்தார். அவர் என்னிடம், 'இதப் பாரு காவடி, (அவர் என்னை காவடின்னுத்தான் கூப்பிடுவார்.) இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படியே இருக்கப் போற? திரும்பவும் காவடி ஆட ஆரம்பி. அப்பதான் எல்லாம் மாறும்' எனப் பரிவுகாட்டிப் பேசியதோடு, `சுவாமிமலை பக்கத்தில் ஒரு நிகழ்ச்சி புக் பண்ணியிருக்கேன். வந்து ஆடு’ என்று, கூன் விழுந்த முதுகோடு நிமிர்ந்து நடக்கவே முடியாத என் மீது நம்பிக்கைவைத்து அழைத்துச் சென்றார்.

அவர் அப்படிக் கூப்பிட்டதை அந்த முருகனே வந்து என்னை கூப்பிடறதா நினைச்சி நானும் கிளம்பினேன். இரண்டு கிலோமீட்டர் தூரம் என்னை நடக்கவைத்தே அழைத்துச் சென்றார். கூட்டத்துக்கு நடுவே, `சும்மா கொஞ்சமா ஆடு’ என உற்சாகமூட்டினார். ஆனாலும், ஆட முடியவில்லை. வலி பொறுக்காமல் கண்களில் கண்ணீர் வழிந்தது. வலியோட நான் துடிக்கறதைப் பார்த்து, 'சரி, கவலைப்படாத. அடுத்த திருவிழாவில் பார்த்துக்கலாம்' என்று சொல்லி, செலவுக்குப் பணம் கொடுத்து வீட்டுக்கு அழைத்து வந்தார்.

சில நாள்கள் கழித்து மீண்டும் வந்த அவர், `பழனிக்குப் பக்கத்துல ஒரு திருவிழா’ன்னு அழைச்சுகிட்டுப் போனார். மற்ற கலைஞர்கள் ஆடிக்கொண்டிருந்தனர். நான் மேக்கப் போட்டுக்கொண்டிருந்தேன் அப்போது விழா கமிட்டியினர், 'என்னங்க கூன் விழுந்தவரை அழைச்சுக்கிட்டு வந்திருக்கீங்க... நிகழ்ச்சி நடக்குமா?' என என்னை வைத்துக்கொண்டே கேட்டனர். அழுகையும் ஆத்திரமுமான நான், முருகனை நினைத்துக்கொண்டு ஆட ஆரம்பித்தேன். இரண்டு மணி நேரம் இடைவிடாமல் ஆடினேன். அப்போதுதான் உடைந்த என் முதுகெலும்பு முழுதாக இணைந்ததை நான் உணர்ந்தேன். முருகப் பெருமானின் அருள்தான் அப்படி ஓர் அதிசயம் நடத்தியது. விழாக் கமிட்டியினர் ஊர் மக்கள் முன்னிலையில் என்னிடம் மன்னிப்பு கேட்டனர்.அந்தச் சமயத்தில் எனக்குத் தோளாகவும் தோழியாகவும் இருந்தவள் என் மனைவி வசந்தி. வளைந்துகிடந்த என் முதுகும் வாழ்க்கையும் மெள்ள மெள்ள நிமிர ஆரம்பித்தது'' என்றவர் தொடர்ந்து சென்னையில் தனக்கு ஏற்பட்ட ஓர் ஆனந்த அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

''ஒருமுறை சென்னை ஆனந்தா தியேட்டரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நான் ஆடும் வாய்ப்புக் கிடைத்தது. அந்த நிகழ்ச்சிக்கு குன்னக்குடி வைத்தியநாதனும், டி.எம்.சௌந்தரராஜனும் வந்திருந்தனர். நான் ஆடிய ஆட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்த டிஎம்எஸ் திடீரென்று எழுந்து, 'முருகா, முருகா’ என்று அரங்கம் அதிர கத்த ஆரம்பித்தார். அதைப் பார்த்து எல்லோரும் எழுந்து நின்று, 'முருகா, முருகா...' என கோஷமிட அந்த இடமே பழனிமலை கோயில்போல் ஆனது. அன்னைக்கு நான் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை. அப்போது குன்னக்குடி என்னை பாராட்டியதோடு, `கலைமாமணி விருதுக்கு என் பேரை சிபாரிசு செய்கிறேன்’னு சொன்னார்.

அதன் பிறகு மீண்டும் எல்லையில்லாமல் பறக்கத் தொடங்கினேன் எல்லாம் காவடி மேல் இருந்த காதல்தான். இந்தியாவுல டெல்லி,மும்பை,கொல்கத்தா,ராஜஸ்தான்னு பல மாநிலங்களிலும், பிரான்ஸ்,ஜெர்மனி,ஜெனிவா,சிங்கப்பூர்,மலேசியா,மஸ்கட் மற்றும் பிற உலக நாடுகளிலும் காவடியோடு என் கால்கள் ஆட ஆரம்பித்தன.வெளிநாட்டுக்கு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தபோது ஒருநாள் என் மனைவி எனக்கு போன் செய்து நான் கலைமாமணி விருதுக்குத் தேர்வாகி இருக்கறதா சொன்னாங்க. இத்தனைக்கும் காரணமான முருகனை நான் மனதார நெனைச்சு வணங்கினேன். குன்னக்குடி சொன்னதுபோலவே விருதும் கிடைத்தது'' என்றவர், அடுத்து தனக்கு ஏற்பட்ட மற்றுமொரு சோதனையையும் விவரித்தார்.

''விருது கெடைச்சதுக்கப்புறமும் நான் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தேன். ஒரு நாள் ராத்திரி படுத்திருந்த எனக்கு வலது கை மற்றும் காலை அசைக்க முடியவில்லை. டாக்டரிடம் சென்றால், பக்கவாதம் வந்திருக்கு என்றார். காவடியைப் பின்பக்கம் தோளில் வைத்துக்கொண்டு சுற்றிச் சுற்றி ஆடும்போது அதன் கட்டை இடது பக்கத்தில் அடிக்கும். அதனால் மூளைக்குக் கீழே ரத்தம் கசிந்து தேங்கியதால்தான் இந்தப் பாதிப்பு ஏற்பட்டது என்றதும், எதற்கும் கலங்காத என் மனைவி கதறிவிட்டாள். ஆனால் டாக்டர், `உடனே அழைச்சிக்கிட்டு வந்ததால குணப்படுத்திடலாம்’ என்று நம்பிக்கை ஊட்டினார்.

டாக்டர் சொன்னதுபோலவே குணமும் ஆனது. ஆனால் என்னால் இனிமேல் காவடி ஆட முடியாது என்ற நிலை உருவானது. பன்னிரண்டு வயதில் தொடங்கிய என் காவடிப் பயணம் அறுபத்தி இரண்டு வயதில் முடிவுக்கு வந்தது.இப்போது எனக்கு அறுபத்தி ஆறு வயசாகுது. என்னோடு இந்தக் கலை மறைஞ்சி போயிடக் கூடாது. இது காலம் காலமா இருக்கணும்னு நெனைச்சி ஆர்வமாக இருந்த சிலருக்குக் கற்றுக் கொடுத்தேன். அப்படிக் கத்துக்கிட்ட மகாலிங்கம், சிவா, அன்பரசன் எல்லாம் இப்பக் காவடி ஆட்டத்துல பிரமாதப்படுத்துறாங்க. அதோட நிற்காம பச்சை காளி, பவள காளி, மானாட மயிலாட, பொய்க்கால் குதிரை, கரடியாட்டம் எனக் கிராமியக் கலைகள் பலவற்றையும் கற்றுக் கொடுக்கிறேன்'' என்று தன் காவடியையும் கால்களையும் பார்த்தவாறே சொல்லி முடித்த விநாயகத்தின் கண்களில் கலை மறைந்துபோகாமல் மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதால் ஏற்பட்ட பெருமிதமும், தன்னால் காவடி ஆட முடியவில்லையே என்ற ஏக்கமும் ஒருசேர பிரதிபலித்தன.

`காவடி’ விநாயகத்துக்கு மூன்று பிள்ளைகள். ஒருவரைத் தவிர மற்ற இருவரும் பொய்க்கால் குதிரை, காளியாட்டம் என்று கிராமியக் கலைகளிலேயே தங்களை ஈடுபடுத்திக்கொண்டிருக்கின்றனர். காவடிக்காக மட்டுமல்லாமல், மற்ற கிராமியக் கலைகளுக்காகவும் தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்ட விநாயகம், மனைவி, மகன்கள், மருமகள்கள், பேரக் குழந்தைகள் என்று ஆனந்தமாகவும் அமைதியாகவும் வாழ்ந்துகொண்டிருந்தாலும், அவரைப் பற்றி அறிந்தவர்களுக்கு ஓர் ஏக்கம் இருக்கத்தான் செய்கிறது. கிராமியக் கலைகளுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்ட விநாயகத்துக்கு இன்னும் சரியான அங்கீகாரம் அரசாங்கத்தின் தரப்பில் இருந்து கிடைக்கவில்லையே என்பதுதான் அந்த ஏக்கம். கிராமியக் கலைகளைக் காக்க வேண்டும் என நினைக்கும் விநாயகத்தைப் பாதுகாக்கவேண்டிய அரசாங்கம், முதியோர் உதவித் தொகை வழங்குவதற்காக கடந்த நான்கு வருடங்களாக அலையவைத்துக்கொண்டிருக்கும் வேதனையை என்னவென்று சொல்வது?

காவடியுடன் இன்னும் பிற கிராமியக் கலைகள் மூலம் தமிழகத்தையும், தஞ்சாவூரின் புகழையும் உலக நாடுகளுக்கும் பரவச் செய்ததுடன், இவரைப்போலவே இன்னும் பல திறமைமிக்க கலைஞர்களை உருவாக்கியும் வரும் இவரை இந்த அரசாங்கம் போற்றிக் கொண்டாடும் நாள் என்று வருகிறதோ, அன்றுதான் தொன்மையான நம் கிராமியக் கலைகளுக்கும், விநாயகம் போன்ற கிராமியக் கலைஞர்களுக்கும் உன்னதமான நாள்.