தாம்பூலம் வைத்து அழைக்கும் பெருமாள்! எஸ்.கண்ணன்கோபாலன்
திருமணம், வளைகாப்பு போன்ற சுபநிகழ்ச்சிகள் நம் வீட்டில் நடைபெறும் போது, ஒவ்வொரு வீடாகச் சென்று தாம்பூலம் வைத்து அழைப்பது நம் வழக்கம். அதுபோல், ஒரு சுப வைபவத்துக்காக பெருமாளே வீடு வீடாகச் சென்று தாம்பூலம் வைத்து அழைப்பது பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? அந்த வைபவத்தை நேரில் சென்று தரிசித்து, அந்த அனுபவத்தை வாசகர்களோடு பகிர்ந்துகொள்ளலாமே என்று தோன்றியது.
இந்த நிகழ்ச்சி எங்கே, எப்போது நடைபெறுகிறது தெரியுமா?
'நகரேஷ§ காஞ்சி’ என்று கவி காளிதாசனும், 'முக்தி தரும் நகரேழில் முக்கியமாம் கச்சிதனில்’ என்று ஸ்ரீ வேதாந்த தேசிகரும் போற்றிப் பாடிய காஞ்சி மாநகரத்தில்தான் இந்த உன்னத நிகழ்ச்சி நடைபெறுகிறது.
காஞ்சி என்பது காஞ்சலி என்ற சொல்லில் இருந்து தோன்றியது. கா அஞ்சலி என்பதே காஞ்சலி என்றாகி, அதுவே காஞ்சி என்று அழைக்கப் பெறுகிறது. 'கா’ என்பது பிரம்மாவைக் குறிக்கும். பிரம்மா, ஸ்ரீமன் நாராயணனை அஞ்சலி செய்து வழிபட்டுப் பெருமாளின் அருள் பெற்றதால் இப்பெயர் ஏற்பட்டது.

தன் பிரார்த்தனைக்கு இரங்கி தரிசனம் தந்த பெருமாளுக்கு பிரம்மதேவரே ஆகம முறைப்படி உற்சவம் நடைபெறச் செய்தார். அதனால், பிரம்மோற்சவம் என்றாலே அது காஞ்சி ஸ்ரீ தேவாதிராஜர், ஸ்ரீ தேவராஜர் என்றெல்லாம் அழைக்கப்பெறும் ஸ்ரீவரதராஜ பெருமாள் ஆலயத்தில் நடைபெறும் பிரம்மோற்சவம்தான்.
ஆண்டுதோறும் வைகாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் திருவிழாவில்தான், பெருமாள் வீதி வீதியாகச் சென்று அனைவரையும் தாம்பூலம் வைத்து அழைக்கும் அந்த அற்புத நிகழ்ச்சி நடைபெறுகிறது.
காஞ்சி வரதராஜ பெருமாள் ஆலயத்தில் கடந்த 12-ம் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கிய பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான 14-ம் தேதி அதிகாலை 4 மணிக்கே நாம் கோயிலுக்குச் சென்றுவிட்டோம். சந்நிதி தெருவெங்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அந்த அதிகாலைப் பொழுதிலேயே திரண்டிருந்தனர். இத்தனை குழுக்கள் என்று எண்ணிச் சொல்லமுடியாதபடி நூற்றுக்கணக்கான பஜனைக் குழுக்கள் அகண்ட தீபம் ஏற்றிவைத்து, பஜனைப் பாடல்கள் பாடிக்கொண்டிருந்ததையும் நம்மால் காணமுடிந்தது. கூட்டத்தின் இடையில் தட்டுத்தடுமாறி நடந்து, ஒருவழியாக கோயிலுக்குள் சென்றுவிட்டோம். நாம் சென்றபோது பெருமாள் கருட வாகனத்தில் அமர்ந்த கோலத்தில் மண்டபத்
தில் எழுந்தருளி இருந்தார். அந்த வைபவத்தை தரிசிக்க ஸ்ரீபெரும்புதூர் எம்பார் ஜீயர் மடத்தின் ஸ்ரீமத் பரமஹம்ச அப்பன் பரகால ராமாநுஜ எம்பார் ஜீயர் சுவாமிகளும் வருகை புரிந்திருந்தார். பெருமாளை மனம்குளிர சேவித்து முடிக்கவும், அதிர்வேட்டு முழங்கவும் சரியாக இருந்தது. அதிர்வேட்டு முழக்கமானது பெருமாள் புறப்பாட்டுக்குத் தயாராகிவிட்டார் என்பதற்கான அறிவிப்பு!
சற்றைக்கெல்லாம், பெருமாள் எழுந்தருளி இருக்கும் கருட வாகனத்தை முன்னும் பின்னுமாக அறுபது பேர் சுமந்து, கருடன் பறப்பதுபோலவே அசைந்து அசைந்து ஆடி வரும் அந்தக் கண் கொள்ளாக் காட்சியைக் காணும் உத்தேசத்தில், நாம் உடனே வேக வேகமாக கோயிலுக்கு வெளியே வந்தோம்.
ஆனால், கோபுர வாசலைக் கடந்ததும், அந்த அழகுக் காட்சி ஓரிரு விநாடிகள் நம் கண்களை விட்டு மறைந்துவிடுகிறது. பெருமாள் கோபுர வாசலைக் கடந்ததுதான் தாமதம்... பெருமாளுடன் வாகனத்தில் வரும் பட்டர்களில் ஒருவர், குடையால் பெருமாளின் திருவுருவத்தை முற்றிலுமாக மறைத்துவிடுகிறார். தங்க கருடனின் மீதமர்ந்து பெருமாள் ஒய்யாரமாக பவனி வரும் திருக்காட்சியைத் தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருக்கையில், அவர்கள் பேரில் அந்த பட்டருக்கு அப்படி என்ன கோபம்?
கோபமெல்லாம் ஒன்றும் இல்லை; பக்தர் ஒருவரிடம் பெருமாள் கொண்டிருந்த அன்பை வெளிப்படுத்தும் உன்னத நிகழ்ச்சியே அது. அன்பின் நெகிழ்ச்சி!
அதுபற்றி இடைவழியில் பார்ப்போம்.

இதோ, பெருமாளை மறைத்துப் பிடிக்கப் பட்டிருந்த குடை நிமிர்கிறது. முன்னைவிடவும் அதிகப் பொலிவோடு மின்ன, பெருமாளின் திவ்விய தரிசனம் திரும்பவும் காணக் கிடைக்கிறது.
அதிர்வேட்டு மறுபடியும் முழங்குகிறது. ஆஹா..! பெருமாளின் புறப்பாடு தொடங்கிவிட்டது.
கூடியிருந்த பக்தர்களில் பெரும்பாலானோர் தாங்கள் எடுத்து வந்திருந்த தாம்பாளத் தட்டில் தேங்காய், பழம் வைத்து, கற்பூரம் ஏற்றி, பெருமாளுக்கு தீபாராதனை செய்கிறார்கள். இதனால் ஏற்பட்ட புகைமண்டலத்தால், பெருமாளின் திவ்விய தரிசனம் தெளிவாகத் தெரியாத நிலை!
விடிந்தும் விடியாத அந்த அதிகாலைப் பொழுதில், சந்நிதித் தெருவில் இருந்து புறப்பட்ட பெருமாள், ஸ்ரீதேசிகரின் அவதார ஸ்தலமான தூப்புல் விளக்கொளி பெருமாள் கோயில் தெருவை அடைவதற்கு முன்னதாக, காஞ்சியில் நடைபெறும் கருடசேவை தாத்பர்யம் பற்றித் தெரிந்துக்கொள்வோமே!
காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் வருடம்தோறும் மூன்று கருட சேவை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. வைகாசி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் நடைபெறும் கருடசேவை; ஆனி மாதம் சுவாதி நட்சத்திர நாளில் வரும் ஸ்ரீ வைனதேய ஜெயந்தி எனப்படும் கருட ஜயந்தி அன்று நடைபெறும் கருடசேவை; ஆடி மாதம் பௌர்ணமி அன்று கஜேந்திர மோட்சத்தை முன்னிட்டு நடைபெறும் கருடசேவை என மூன்று கருடசேவை உற்சவங்கள் நடைபெறும் தலம் காஞ்சிபுரமாகத்தான் இருக்கமுடியும்.
வைகாசி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் நடைபெறும் கருடசேவை விழாவின்போதுதான் பெருமாள் குறுக்கும் நெடுக்குமாக சுமார் 270 வீதிகளில் உள்ள பக்தர்களுக்கு தரிசனம் அருள்கிறார். பிரம்மோற்சவத்தின் மற்ற நாள்களில், நான்கு ராஜ வீதிகளுடன் தன் வீதி உலாவை முடித்துக்கொள்ளும் பெருமாள், கருடசேவை அன்று மட்டும் ஏன் இத்தனை வீதிகள் வழியாக வருகிறார் தெரியுமா? பிரம்மோற்சவத்தின் 7-ம் நாள் நடைபெறும் தேர்த் திருவிழாவுக்கு வந்திருந்து, தேர்வடம் பிடித்துத் தேர் இழுக்கவேண்டும் என்று பக்தர்களைத் தாம்பூலம் வைத்து அழைப்பதற்குத்தானாம்!
பெருமாளே தாம்பூலம் வைத்து அழைக்கும் பாக்கியம் பெற்றவர்கள், காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள்தான். காஞ்சிபுரத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதி பிள்ளை யார்பாளையம் பகுதி என்கிறார்கள்.
கோயிலில் இருந்து புறப்பட்ட பெருமாள், தூப்புல் ஸ்ரீ தேசிகரின் அவதார ஸ்தலத்தை அடையவும், தங்க கருடனின் மேல் அமர்ந்து பெருமாள் சேவை சாதிப்பதைத் தரிசிக்க, கீழ்வானில் காலைக் கதிரவன் தோன்றவும் சரியாக இருந்தது.
காலைக் கதிரொளி பட்டு, தங்க கருடனின் மேல் அமர்ந்து தகத்தகாயமாகப் பிரகாசித்த பெருமாளின் எழில்திருக்கோலத்தைத் தரிசித்த பக்தர்களின் முகத்தில்தான் என்னவொரு பரவசம்!
ஸ்ரீ தேசிகரின் அவதார ஸ்தலத்தில் சற்று நேரம் சேவை சாதித்த பெருமாள், அங்கிருந்து புறப்பட்டு சற்றுத் தொலைவில் உள்ள கீரை மண்டபத்துக்கு எழுந்தருளி, மண்டகப்படியை ஏற்றுக்கொண்டு, பிள்ளையார் பாளையத்து மக்களைத் தேரோட்டம் காணவும் தேர் வடம் பிடிக்கவும் தாம்பூலம் வைத்து அழைக்கக் கிளம்புகிறார்.
அவரைத் தொடர்ந்து செல்லும் நம் மனத்தில், அதிகாலையில் பெருமாள் கோபுர வாசலில் எழுந்தருளியபோது, குடையால் ஓரிரு விநாடிகள் பெருமாளின் திருக்கோலத்தை மறைத்ததற்கான காரணம் பற்றிய சிந்தனையே நிறைந்திருந்தது. லக்ஷ்மிநரசிம்மன் என்கிற கிட்டு பட்டர், அந்தக் காரணத்தை நமக்குத் தெரிவித்தார்.
பக்தரின்பொருட்டு பரந்தாமன் இரங்கி அருள்புரிந்த அந்தச் சம்பவம்... யோக நரசிம்மரின் அருளாட்சி நடைபெறும் சோளிங்கபுரத்தில் தொட்டையாச்சார் என்றொரு பக்தர் இருந்தார். அவருக்கு காஞ்சி வரதராஜ பெருமாளிடம் அளப்பரிய பக்தி! ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் நடைபெறும் கருடசேவை நிகழ்ச்சியைத் தரிசிக்க அவர் காஞ்சிக்கு வருவது வழக்கம்
அவரும் மனிதர்தானே? அவருக்கும் முதுமை உண்டுதானே? முதுமை காரணமாக அந்த வருடம் அவரால் காஞ்சிக்குச் சென்று பெருமாளின் கருடசேவை வைபவத்தைத் தரிசிக்க இயலவில்லை. காஞ்சியில் கருடசேவை நடைபெறும் தினத்தன்று அதிகாலை யிலேயே சோளிங்கரில் உள்ள தக்கான் தீர்த்தத்தில் நீராடிய அவர், 'காஞ்சியில் நடைபெறும் கருடசேவை வைபவத்தை இம்முறை தரிசிக்க இயலவில்லையே’ என்று ஏங்கித் தவித்தார். பக்தரின் இயலாமையில் விளைந்த அந்த ஏக்கத்தையும், தவிப்பையும் கண்டு பகவான் பொறுப்பானா, என்ன?
தொட்டையாச்சார் என்ற அந்த பக்தர் ஏங்கிய அக்கணமே, அங்கேயே பெருமாள் தம் கருடசேவை வைபவத்தை அந்த பக்தருக்குக் காட்டி அருளினார்.
அந்த உன்னத நிகழ்ச்சியை நினைவுகூரும் வகையில்தான் ஒவ்வோர் ஆண்டும் கருடசேவை நாளில் பெருமாள் கோபுர வாசலை அடைந்ததும், குடையால் பெருமாளை மறைக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. காலை 8:30 மணிக்கெல்லாம் பிள்ளையார் பாளையத்து மக்களைத் தம் தேர்த் திருவிழாவுக்குத் தாம்பூலம் வைத்து அழைத்து விட்டு, கச்சபேஸ்வரர் கோயிலுக்கு எதிரில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளுகிறார் பெருமாள்.அங்கே அவர் மண்டகப்படியை ஏற்றுக்கொள்ளும் நேரத்தில், கருடசேவை நிகழ்ச்சி மட்டும் தனிச்சிறப்பு பெற்றிருப்பதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்வோம்.

பிரம்மோற்சவ நாள்களில், காலையும் இரவும் பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்தாலும், கருடசேவை மட்டும் பிரத்யேக சிறப்பு பெற்றுத் திகழ்கிறது. காரணம் கருடன் பகவானின் வாகனம் என்பதால் மட்டுமல்ல, பகவானே கேட்டுப் பெற்ற வாகனம் என்பதாலும்பெருமாள் கோயில்களில் கருடசேவை தனிச் சிறப்பு பெற்றுத் திகழ்கிறது.
கச்சபேஸ்வரர் கோயில் எதிரில் உள்ள மண்டபத்தில் பெருமாள் மண்டகப்படியை ஏற்றுக்கொண்டு புறப்படும் நேரத்தில் மறுபடியும் அதிர்வேட்டு முழங்க, அந்த ராஜவீதியில் திரண்டிருந்த பக்தர்கள் தேங்காய் உடைத்து, கற்பூர ஆரத்தி காட்டுகின்றனர்.
அங்கிருந்து புறப்பட்ட பெருமாள் அசைந்து அசைந்து ஆடியபடி வந்து, அந்த ராஜவீதியின் மற்றொரு கோடியில் உள்ள கங்கை கொண்டான் மண்டபத்தில் எழுந்தருளுகிறார்.
அங்கே சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக எழுந்தருளும் பெருமாளுக்கு, சங்கரமடம் சார்பில் மண்டகப்படி நடைபெறுகின்றது. அங்கிருந்து புறப்படும் பெருமாள் பூக்கடைச் சத்திரம், கிழக்கு ராஜ வீதி வழியாக நெல்லுக்காரத் தெரு என்று அழைக்கப்படும் தெற்கு ராஜ வீதியில் உள்ள இரட்டை மண்டபத்தில் எழுந்தருளி, மண்டகப்படியை ஏற்றுக்கொண்டு புறப்படுகிறார்.
பெருமாள் எழுந்தருளி இருக்கும் கருட வாகனத்தை இடமும் வலமுமாக முன்னும் பின்னுமாக 60 தொண்டர்கள் தங்கள் தோள்களில் சுமந்துவருகிறார்கள். குறிப்பிட்ட தூரம் சென்றதும், பின்னால் தொடர்ந்து வரும் 60 தொண்டர்கள் தங்கள் தோள்களுக்கு மாற்றிக்கொள்கிறார்கள். இப்படியாக மாறி மாறி பெருமாளைத் தங்கள் தோள்களில் சுமந்துசெல்லும் அவர்கள் கோடிக்காரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் முகங்களில் அப்படியொரு பெருமித உணர்ச்சி!
பெருமாள் செல்லும் வழிகளிலும் சரி, எழுந்தருளும் மண்டபங்களிலும் சரி... பக்தர்கள் அவருக்கு ஆரத்தி மட்டும்தானா எடுக்கிறார்கள்? மல்லிகை, முல்லை மலர்ச்சரங்களையும், உதிரிப்பூக்களையும் பெருமாளின் திருவடியிலும் திருமுடியிலும் படும்படியாகத் தூவுகிறார்கள். அத்தனையையும் புன்னகை மாறாத திரு முகத்துடன் ஏற்றுக்கொள்ளும் பெருமாளின் திருமேனி நாளெல்லாம் மணம் வீசிக் கொண்டிருக்குமோ என்று பிரமிப்பு ஏற்படுகிறது!

தாங்கள் அர்ப்பணித்த பூச்சரங்கள் பெருமாளின் திருமேனியைத் தழுவியது கண்டு, பக்தர்களின் முகங்களில் அப்படியோர் ஆனந்தப் பரவசம்! அவர்களின் அந்தப் பரவசமானது போர்க்களத்தே வெற்றிவாகை சூடி உலா வரும் தங்கள் மன்னனை வரவேற்கும்போது இருப்பதைவிடவும் ஆயிரம் மடங்கு அதிகம் என்றே தோன்றியது.
இருக்காதா பின்னே? தணலெனத் தகிக்கும் அக்கினி வெயிலின் கடுமையைச் சற்றும் பொருட்படுத்தாமல் அகமும் முகமும் பரவசத்தில் திளைக்க, அவர்கள் வரவேற்று பாடிப் பணிந்து வணங்குவது, தேவர்களுக்கெல்லாம் ராஜாவான அந்த தேவராஜப் பெருமாளை அல்லவா!
கிருதயுகத்தில் பிரம்மதேவராலும், திரேதாயுகத்தில் கஜேந்திர யானையாலும், துவாபரயுகத்தில் தேவகுரு பிரகஸ்பதியாலும், கலியுகத்தில் ஆதிசேஷனாலும் வழிபடப்பெற்று, அவர்களுக்கெல்லாம் பேரருள் புரிந்த கலியுக வரதனை அல்லவா அவர்கள் வரவேற்று வணங்குகிறார்கள்! அதனால்தான் அவர்களின் முகங்களில் அப்படியொரு மலர்ச்சி! உள்ளங்களில் அப்படியொரு மகிழ்ச்சி!
அதிகாலை 4 மணிக்கு தம் யதாஸ்தானத்தை விட்டுப் புறப்பாடு கண்ட பெருமாள், பிள்ளையார்பாளையத்து பக்தர்களுக்கு தாம்பூலம் வைத்துத் தம் தேரோட்டத்துக்கு அழைத்துவிட்டு, காஞ்சி மாநகர வீதிகளில் எல்லாம் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்குத் தரிசனம் தந்து, திரும்பவும் தம் யதாஸ்தானத்தை அடைய 12 மணி ஆகிவிட்டது.
இறைவனின் பேரருளை நாமெல்லாம் பெற்றிடச் செய்யும் மகத்தான விழாவான, கலியுக தெய்வமாம் காஞ்சி வரதராஜ பெருமாளின் கருடசேவை வைபவத்தை தரிசித்த மனநிறைவுடன் திரும்புகிறோம். அத்திகிரி அருளாளன் திருவடிக்கே சரணம் நாமே!
படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்