Published:Updated:

சக்தி சங்கமம்

வானம் வசப்படும்!வாசகர்களுடன் கலந்துரையாடுகிறார் தவத்திரு குன்றக்குடி அடிகளார்

சக்தி சங்கமம்

வானம் வசப்படும்!வாசகர்களுடன் கலந்துரையாடுகிறார் தவத்திரு குன்றக்குடி அடிகளார்

Published:Updated:

விருந்துக்கும் மரியாதைக்கும் பெயர்பெற்ற நகரம் செட்டிநாடு. இதில் முக்கிய ஊரான காரைக்குடியில்,  தேர்ந்தெடுத்த வாசகர்களை வரச் சொல்லியிருந்தோம். அவர்களில், கல்லூரியில் படிக்கும் மாணவர்களும், படித்துவிட்டு அப்போதுதான் வேலைக்குச் சேர்ந்த இளைஞர்களும்கூட இருந்தனர்.

கார் கிளம்பியதும் பேச்சும் துவங்கிற்று. அரசியல், சினிமா, சமீபத்திய விபத்து, பக்தி, பாட்டு என விறுவிறுவென ஒவ்வொரு துறைக்குள்ளேயும் புகுந்து கலகலப்பாகப் பேசிக் கொண்டே வந்தவர்கள், ஊருக்குள் வந்து கார் நின்றதும், அமைதியானார்கள். அந்த ஊர்- குன்றக்குடி. இடம்- குன்றக்குடி ஆதீன மடம்.

அந்த மடத்தின் வாசலுக்கு வந்ததும், 'தென்னாடுடைய சிவனே போற்றி!’ என்று நம் வாசகர் ஒருவர் குரல் கொடுக்க, எல்லாரும் சேர்ந்து உரத்த குரலில், 'எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!’ என்று சொல்லி, வாசற்படியைத் தொட்டு, கண்களில் ஒற்றியபடி நுழைந்தார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆதீன மடம்... மடமாகவே தெரியவில்லை. சட்டென்று பார்க்க, பெரிய பெரிய தூண்களும் மர வேலைப்பாடுகளும் செட்டிநாட்டுக் கலைநுட்பத்தைப் பறைசாற்றும் வகையில், அந்தக் காலத்துப் பழைமையான வீடு போல் இருந்தது. இன்னொருபுறம் பார்த்தால், அது ஒரு கோயிலைப் போலவே திகழ்ந்தது.

இப்போது நவீனப்படுத்தப்பட்டுள்ள ஆஸ்ரமங்கள் போலவோ, மடங்களைப் போலவோ ஆடம்பரமாக இல்லாமல், ஆள், அம்பு, சேனை எனக் கூட்டமோ, பரபரப்போ இல்லாமல், எல்லா இடங்களிலும் ஓர் அமைதி தவழ்ந்தது. அந்த அமைதி, அனைவரின் மனசுக்குள்ளும் பரவி, ஓர் இதமான அனுபவத்தைத் தந்தது.

சக்தி சங்கமம்

சுவாமிகளின் நித்தியப்படி பூஜை நேரம் அது. 'பூஜை முடிந்ததும் தரிசிக்கலாம்’ என்று சொல்லப்பட்டது. அதேநேரம், சக்திவிகடன் வாசகர்கள் வந்திருக்கும் விவரமும் சுவாமிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. விறுவிறுவென மடத்துச் சிப்பந்தி ஒருவர் வந்து, 'எல்லாரும் பூஜைல கலந்துக்கலாம். சுவாமிகள் வரச் சொல்றாங்க’ என்று அழைக்க, பரவசமாகிப் போனார்கள் வாசகர்கள். இடப் பக்கம் நுழைந்து, பிறகு வலப் பக்க வாசலைக் கடந்தால்... அங்கே, சந்நிதிக்குள் பூஜையில் ஈடுபட்டிருந்தார், தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்.

இது, குன்றக்குடி ஆதீன கர்த்தாக்களின் நித்தியப்படி பூஜை! ஸ்ரீகாளத்திநாதர், ஸ்ரீசரபேஸ்வரர் ஆகியோரை வழிபட்ட பிறகே, மடாதிபதி அடுத்தடுத்த வேலைகளில் ஈடுபட வேண்டும் என்பது மரபு. தீபாராதனை காட்டப்பட்டது. சந்நிதிக்கு வெளியே வந்த சுவாமிகள், நெடுஞ்சாண்கிடையாக சந்நிதி நோக்கி, காளத்திநாதருக்கும் சரபேஸ்வரருக்குமாக விழுந்து நமஸ்கரித்தார்.

''சிவசிவா, சிவசிவா... எல்லாரும் வரணும். காலைச் சாப்பாடெல்லாம் ஆச்சுங்களா? முதல்ல சாப்பிடுங்க எல்லாரும்!'' என்று கரம் கூப்பி வணங்கி, நெஞ்சில் கை வைத்தபடி சொன்னார் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார். முகத்தில் வாஞ்சையும் பேரன்பும் பரவிக் கிடந்ததை உணர முடிந்தது.

உணவு முடித்துக்கொண்டு சுவாமிகளிடம் வந்ததும், ''வாங்க, வாங்க! சாப்பாடு நல்லாருந்துச்சுங்களா?'' என்று அன்போடு விசாரித்தவர், ''கற்றாரைக் கற்றாரே காமுறுவர்னு சொல்லியிருக்கார் அய்யன் வள்ளுவர். அதுமாதிரி, பாரம்பரியம் மிக்க விகடன் நிறுவனத்திலேருந்து வெளியாகிற சக்திவிகடன், பாரம்பரியம் மிக்க குன்றக்குடி ஆதீன மடத்துக்கு உங்களையெல்லாம் கூட்டிட்டு வந்திருக்கறதை நினைக்கும் போதே மகிழ்ச்சியா இருக்கு. சிவசிவா!'' என்றார்.

பிறகு இரண்டு நிமிடம் மௌனம். ''சரி... கொஞ்சம் மனம் விட்டுப் பேசுவோமா? எதுவா இருந்தாலும் தயங்காம கேளுங்க. ஒருத்தருக்கொருத்தர் கேட்டுத் தெரிஞ்சுக்கறதுதான், இந்த வாழ்க்கையோட இலக்கணம். நான் தயாரா இருக்கேன்'' என்றார் சிரித்துக்கொண்டே.

சக்தி சங்கமம்

''குன்றக்குடி ஆதீன மடம் உருவானது எப்படின்னு சொல்லுங்களேன் சுவாமி?'' என்று புவனேஸ்வரி கேட்டார். உடனே சுவாமிகள், ''அடடா... பரவாயில்லையே! சபைக் கூச்சம்னு ஒண்ணு நிறையப் பேருக்கு இருக்கும். ஆனா, சக்தி சங்கமத்தின் முதல் கேள்வியை, ஒரு பெண் கேட்டிருக்காங்க. அதுவும் இளைஞர் பட்டாளத்தைச் சேர்ந்தவங்கனு நினைக்கும்போதே பெருமையா இருக்கு.

நினைத்தாலே முக்தி தரும் புண்ணிய பூமி, திருவண்ணாமலை. அங்கே அவதரிச்சவர், தவத்திரு தெய்வசிகாமணி தேசிக பரமாச்சார்ய சுவாமிகள். அவர்தான், திருவண்ணாமலை ஆதீனத்தைத் தோற்றுவிச்சவர். கி.பி.1250-லேருந்து 1325-ம் வருஷம் வரை, இவரோட காலம்னு கணக்கிட்டிருக்காங்க. அதையடுத்து, இந்த மடம் சீரிய முறைல, சிறப்பா கட்டிக் காக்கப்பட்டு வந்துச்சு.

அதன்பிறகு, ஆதீனத்தோட 17-வது பட்டம் நாகலிங்க தேசிக சுவாமிகள், ராமேஸ்வரத்துக்கு யாத்திரையா வந்தார். அப்ப, ராமநாத புரத்தை ஆட்சி செய்த மன்னர், சுவாமிகளுக்கு உத்தரவுபோல ஒரு கோரிக்கையை வைச்சார். அதாவது, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிரான்மலையில தங்கி, மடத்தை உருவாக்கி, சேவை செய்யும்படி சொன்னார், மன்னர். சுவாமிகளும் சம்மதிச்சார். ஆக, இதோ, இந்தக் குன்றக்குடி ஆதீனம், முதன்முதலா பிரான்மலையில் இயங்க ஆரம்பிச்சிச்சு.

அதன்பிறகு, 21-வது பட்டம் தவத்திரு மருதநாயகம் தேசிக பரமாச்சார்ய சுவாமிகள், குன்றக்குடி ஸ்ரீசண்முகநாத ஸ்வாமியின் பேரருளால் ஈர்க்கப்பட்டு, குன்றக்குடியில் ஆதீன மடத்தை உருவாக்கினார். இன்னிக்குக் குன்றக்குடி ஆதீனம், குன்றக்குடி ஆதீனம்னு எல்லாரும் சொல்லிட்டிருக்காங்க. உண்மையிலயே, இந்த மடத்தோட பேரு... குன்றக்குடி- திருவண்ணாமலை ஆதீன மடம். அதுதான் சரி!

பிரான்மலைலேருந்து கொண்டு வந்த காளத்திநாதருக்கு, பூஜை செய்ததைத்தான், கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எல்லாரும் பார்த்தீங்களே! அன்னிக்கி, மன்னரோட விருப்பத்தின்படி ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆதீன மடம், இன்னிக்கு மக்களோட மக்களா இருந்து, அவங்களுக்கு சேவை பண்ணிட்டிருக்கு!'' என்று விவரித்தார் அடிகளார்.

''அடுத்த கேள்வியை நான் கேட்கட்டுமா?'' என்று பணிவுடன் கேட்டார் வாசகர் சொக்கையன். காரைக்குடி சிக்ரி நிறுவனத்தில் பணியாற்றி, ஓய்வு பெற்றவர் இவர்.அடிகளார் புன்னகைத்து, 'கேளுங்கள்’ என்பதாக சைகை செய்ய...  

''சுவாமி... சைவ சமயத்தை வளர்த்ததில், நமது மடாலயத்தின் பங்கு என்ன?'' என்று கேட்டார் சொக்கையன்.

''சைவத்தையோ சமயத்தையோ நாம் வளர்க்க வேண்டியதே இல்லை. சொல்லப்போனால், சைவ சமயம்தான் நம்மை வளர்த்து செம்மையாக்கியிருக்கிறது. தொண்டு செய்தல் என்று இந்தக் கேள்வியை லேசாக மாற்றிக்கொள்வோம். அருள்நெறித் திருக்கூட்டம், தெய்வீகப் பேரவை என மடத்தின் கீழ் ஆன்மிக அமைப்புகள் பல இருக்கின்றன. இவற்றின் மூலம், சைவ சமயம் குறித்து விளக்குவதும், சைவ அறிஞர்களை அடையாளம் கண்டு, அவர்களைப் பாராட்டி ஊக்குவிப்பதும் நடந்து வருகிறது. சைவ சித்தாந்தப் பேரறிஞர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ, அவர்களை மக்களுக்கும் உலகுக்கும் அடையாளம் காட்டி, கௌரவப்படுத்தினாலே போதும்... சைவ சமயம் கற்பகத்தரு போல தழைத்துக்கொண்டே இருக்கும்.

நமது குன்றக்குடி ஆதீனம், ஆறுமுகத் தம்பிரான் சுவாமிகள், பெரிய புராணத்துக்குப் பதவுரை எழுதி, அரும்பணி செய்தார். அதேபோல, நம் எல்லார் நெஞ்சங்களிலும் நிறைந்த மகா சந்நிதிதானம், தவத்திரு குன்றக்குடி அடிகள் பெருமான், சைவ சமயத்தை மிகவும் எளிமையாக, பல நூல்களின் வாயிலாகத் தந்துள்ளார்.

குறிப்பாக, சைவ சித்தாந்தத்தைக் கடைப்பிடித்தால் சமுதாயம் மேம்படும் எனும் நோக்கில், 'சைவ சித்தாந்தமும் சமுதாய மேம்பாடும்’ என்று ஒரு நூல் எழுதியிருக்கிறார். இன்றைய நவீன காலத்துக்குத் தக்கபடி, அறிவியல் கொள்கையுடன் இணைத்து, ஆய்வு போலத் தந்திருக்கிற நூல், மிக அரிய பொக்கிஷம் என்று எல்லோராலும் போற்றிச் சொல்லப்பட்டு வருகிறது.

மேலும், 63 நாயன்மார்களின் திருநட்சத்திர நாளில், அவர்கள் ஆற்றிய தொண்டுகளை இளைஞர்களுக்குப் புரியும்படியாக விளக்கிச் சொல்வதை முக்கிய கடனாகச் செய்து வருகிறோம். அப்பர் பெருமான் திருநட்சத்திர நாளில், அவர் செய்த உழவாரப் பணியை நம் மடத்தின் மூலமாக, சிவனடியார்களைக் கொண்டு செய்து வருகிறோம். மற்றபடி என் எழுத்து, பேச்சு, செயல் எல்லாவற்றிலும் எப்போதும் இருக்கிறது, சைவ சித்தாந்தம்!'' என்று சொல்லிவிட்டு, கண்களை மூடி, கழுத்து மாலையைத் தடவி, நெஞ்சில் கைவைத்து, 'சிவசிவா... சிவசிவா’ என்று சொல்லிவிட்டுக் கண் திறந்து, புன்னகைத்தார் அடிகளார்.

''குன்றக்குடி ஆதீனத்துக்கு உட்பட்ட கோயில்கள் என்னென்ன? அவற்றின் சிறப்புகளையும், பராமரிக்கும் விவரங்களையும் விளக்குங்கள், சுவாமி!'' என்று ஆர்வத்துடன் கேட்டார் வாசகர் சுப.நாகராஜன். பேங்க் ஆஃப் இந்தியாவில் பணிபுரிகிறார் இவர்.

உடனே சுவாமிகள், தம் வலக் கையை ஆசீர்வதிப்பதுபோல உயர்த்தினார். ''நம் குன்றக்குடி- திருவண்ணாமலை ஆதீன நிர்வாகத்தில் ஐந்து கோயில்கள் இருக்கின்றன. சிங்கம்புணரிக்கு அருகில் உள்ள பிரான்மலையில், ஸ்ரீமங்கைபாகநாதஸ்வாமி கோயில் உள்ளது. சாந்நித்தியமான ஆலயம். அதேபோல, திருப்பத்தூரில் ஸ்ரீதிருத்தளிநாதர் ஆலயம் உள்ளது. இந்த இரண்டு கோயில்களும் தேவாரப் பாடல் பெற்ற அற்புதமான தலங்கள்! இதில், திருத்தளிநாதர் கோயிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு, ஆலயத்தைப் பொலிவுபடுத்தி, திருக்குளமும் சுத்தம் செய்யப்பட்டு, சமீபத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

குன்றக்குடி ஸ்ரீசண்முகநாதரையும் அந்த அழகுக் கோயிலையும் எல்லாரும் அறிவீர்கள். இந்தக் கோயிலிலும் பல திருப்பணிகள் செய்யப்பட்டு, கடந்த மார்ச் மாதம் கும்பாபிஷேகம் செய்யப் பட்டது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், குழந்தை பிறந்தும் ஆரோக்கியம் இல்லையே என வருந்துபவர்கள், இங்கு வந்து 'பிள்ளை மாற்றுதல்’ எனும் தத்துக் கொடுத்தல் நேர்த்திக்கடனைச் செய்வார்கள். இதனால் பலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைத்துள்ளது. இங்கு வந்து நேர்த்திக் கடனைச் செய்து சென்றபின், தங்கள் குழந்தை ஆரோக்கியமாகவும் புத்திக்கூர்மையாகவும் இருப்பதாகச் சொல்லிப் பூரிக்கிறவர்களும் உண்டு.

குன்றக்குடி ஸ்ரீசண்முகநாதன், அழகன்; பேரழகன்னே சொல்லலாம். நம் குறைகளைச் சொன்னால், அதை உடனுக்குடன் தீர்த்து வைப்பான் வேலவன். அவனை தரிசித்துவிட்டு வீட்டுக்குச் சென்றால், நம்முடனே அவனுடைய சக்தி சூட்சுமமாக வந்து நம்மைக் காக்கும் காவல் தெய்வமாகத் திகழும் என்பது கண்கூடு!

அந்த பிரான்மலை மங்கைபாகநாதஸ்வாமி மிகச் சிறந்த வரப்பிரசாதி. இல்லறத்தை நல்லறமாக்கும் ஈசன் அவர். தம்பதி சமேதராக ஒவ்வொருவரும் இந்தக் கோயிலுக்கு ஒருமுறையேனும் வரவேண்டும். குடும்பம் ஒற்றுமையாகும். குலத்துக்குப் பலம் சேரும்.

அல்வாவை நானே சாப்பிட்டுவிட்டு, இனிக்கிறது, இனிக்கிறது என்று சொல்லிக் கொண்டு இருந்தால், எப்படி? இனிப்பென்றால் என்ன, அது எப்படிப்பட்ட இனிப்பு என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? எனவே, நீங்களே வந்து ஒருமுறை தரிசனம் பண்ணிவிட்டுச் செல்லுங்கள். அந்த இனிப்பின் மகத்துவத்தை நீங்களே அனுபவபூர்வமாக உணர்வீர்கள்'' என்று சொல்லிவிட்டு, 'என்ன... அல்வா சாப்பிடுவீங்கதானே? பிடிக்கும்தானே? ஓ... சாப்பிடப் பிடிக்கும்; யாராவது 'அல்வா’ கொடுத்தாதான் பிடிக்காதுங்கறீங்களா? சிவசிவா... சிவசிவா..!'' என்றார் சிரித்துக்கொண்டே. அதைக் கேட்டு, நம் வாசகர்களும் வெடிச்சிரிப்பென வாய்விட்டுச் சிரித்தார்கள்.

''இன்றைய உலகம், வணிக மயமான உலகமாகிவிட்டது, சுவாமி! இதற்கு அடிமையாகி விட்ட மனிதர்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?'' என்று திருவாடானை வாசகர் சுந்தரம் கேட்டார்.

சக்தி சங்கமம்

அதுவரை கலகலப்பாகப் பேசிக்கொண்டிருந்த அடிகளாரின் முகம், சட்டென்று இறுக்கமானது. இரண்டு நிமிடம் மௌனமாக இருந்தவர், ''திரை கடலோடியும் திரவியம் தேடு என்று அந்தக் காலத்திலேயே சொல்லி வைத்தார்கள். அப்போதெல்லாம் கடல் கடந்து வேலைக்குச் சென்றோ, வியாபாரம் செய்தோ பொருளீட்டி வருவார்கள். ஆனால், அவர்களின் ஆதாரம், தாய்மண்ணாகவே இருந்தது. இதைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள், இன்றைக்கு! பொருள் தேடுவதற்காக, வசதி வாய்ப்புககள் அனைத்தையும் பெறுவதற்காகக் கணவன் ஒருபக்கமும், மனைவி இன்னொரு பக்கமுமாக ஓடுகிறார்கள். ஒரே வீட்டில் இருந்துகொண்டு, விடுமுறை நாள்களில் மட்டுமே சந்தித்துப் பேசிக்கொள்ளும்படியான மோசமான நிலை உருவாகியிருக்கிறது. பொருளை மட்டும் தேடி அலைகிற பொருளற்ற (அர்த்தமற்ற) வாழ்க்கையாய்ப் போய்விட்டது, இன்றைய வாழ்வியல் முறை.

வாழ்க்கைக்குப் பொருள் தேவைதான்! அதேபோல், நாம் வாழ்வதிலும் 'பொருள்’ தேவை என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக, இன்றைய இளைஞர்களும் யுவதிகளும் புரிந்து, உணர்ந்து, செயல்படவேண்டும். இல்லையெனில், அடுத்தடுத்த தலைமுறையினர் பயத்துடனும் குழப்பத்துடனும், எவர் மீதும் இரக்கம் இல்லாமலும், பரந்த சிந்தனையுடன் யோசிக்கமுடியாமலும் இருப்பார்கள்'' என்று வருத்தமும் கோபமும் கலந்த குரலில் சொன்னார்.

'உணவு முறை மாறிவிட்டதை எப்படி எடுத்துக்கொள்வது? குறிப்பாக, குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் உணவு முறை மாறியிருக்கிறதே...?’ என்று வாசகர் நாகராஜன் கேட்டதும், ''ரொம்ப எளிமையான விஷயம் இது. நாவின் ருசிக்குக் கட்டுப்பட்டு, அடிமைப்பட்டுப் போய் விட்டால், ஆரோக்கியமற்ற சமுதாயமாக நாம் நோய்வாய்ப்பட்டுக் காட்சி தரும் அவலம் நீடிக்கும்!

உடலுக்குத் தீங்கு செய்யாத, வயிற்றுக்குச் சங்கடம் தராத, நம் குணத்தை எள்ளளவும் மாற்றாத உணவே ஆரோக்கியமானது. உடல் நலனுக்கு உகந்த சமச்சீரான சரிவிகித உணவை உட்கொள்வதே உத்தமம்.

கணவனும் மனைவியும் வேலைக்குச் செல்லும் நிலை இன்றைக்கு! தனிமையில் வளர்கிற குழந்தைகளை குஷிப்படுத்துவதற்காகவும்,  அவர்கள் மீது அதீத அக்கறை தங்களுக்கு உண்டு என்று காட்டிக் கொள்வதற்காகவும், அவர்கள் கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுப்பது என்கிற மனோபாவத்தில் பெற்றோர் இருக்கிறார்கள். இது தவறான மனோபாவம். குழந்தைகளுக்கு உணவுடன் அன்பையும் அரவணைப்பையும் சேர்த்துப் பரிமாறுவதே நல்ல தலைமுறையை உருவாக்கும். தனிமையைப் போக்கி, சத்தான உணவை வழங்கி, கொஞ்சம் பேசி, கொஞ்சம் காது கொடுத்தால் போதும்... நாளைய மன்னர்கள், நலமுடன் வளர்வார்கள்!'' என்றார்.

சக்தி சங்கமம்

'வானம் வசப்படும் எனும் தன்னம்பிக்கை வார்த்தை ரொம்பவே பிரபலம். வானத்தை வசப்படுத்த எப்படி, எவ்விதம், என்ன செய்ய வேண்டும் நாங்கள்?'' என்று கேட்டார் வாசகி ரேணுகா.

''வானத்தை வசப்படுத்த வேண்டும் என்று ஆசைப்பட்டு, ஆகாய விமானத்தில் பறந்து சென்றால், வானம் வசப்பட்டுவிடுமா? உயரமான, வானைத் தொடும் அளவில் இருக்கும் கட்டடத்தில் 60-வது மாடியில் வசிப்பது அல்ல உயர்ந்த வாழ்வு! உயர்ந்த எண்ணங்களே உண்மையான வாழ்க்கை. அந்த எண்ணத்தைச் செயல்படுத்தி வாழ்வதே சீரான, செம்மையான வாழ்க்கை. 'உள்ளத்தனையது உயர்வு’ என்று அதனால்தான் சொல்லிச் சென்றார்கள் நம் முன்னோர்.

அடர்ந்த காட்டில் கனமழை பொழிகிறது. இடி- மின்னல் என்று அச்சுறுத்துகிறது. வழியில் தெரிகிறது ஓர் ஓலைக்குடிசை. அதனுள், வயது முதிர்ந்த மூதாட்டி ஒருவர் படுத்திருக்கிறார். இரண்டு பேர் மட்டுமே இருக்கக்கூடிய மிகச் சிறிய இடம் அது! அங்கே, கதவைத் தள்ளிக் கொண்டு  முதியவர் ஒருவர் உள்ளே வருகிறார். சிறிது நேரத்தில், இன்னொரு சிறுவனும் வருகிறான். வெளியே தீவிரமாகிறது அடைமழை. மூன்று பேரும் அமர்ந்துகொள்ளும் அளவுக்கான இடமே இருக்கிறது இப்போது.

யாரோ கதவைத் தட்டுகிறார்கள். புதியவருக்கு இடமில்லை என்று பெரியவரும் மூதாட்டியும் நினைக்கிறார்கள். ஆனால், சிறுவன் எழுந்து கதவைத் திறக்கிறான். வெளியே, மாடு ஒன்று கதவைத் தள்ளிக்கொண்டு நின்றது. 'நாம் அனைவரும் எழுந்து நிற்போம். இப்போது மாட்டுக்கும் இடம் கிடைக்கும். மழையில் அதுவும் நனையாமல் இருக்கும்’ என்கிறான் சிறுவன். அதுதான் இறைமை குடிகொண்டிருக்கிற இதயம். குனிந்து செல்லும் குடிசையிலும் எல்லோருக்கும் இடம் தரும் விசால இதயம். அதுவே, வானத்தையே வசப்படுத்துகிற மனம்!'' என்று ஒரு உதாரணக் கதையின் மூலம், விட்டுக் கொடுத்தலின் அவசியத்தை உணர்த்துகிறார் அடிகளார்.

- சங்கமிப்போம்

படங்கள்:  எஸ்.சாய் தர்மராஜ்

எது ஆத்மார்த்தமான வழிபாடு?

வீட்டு வேலையையும் பார்த்துக்கொண்டு அலுவலகத்திலும் வேலை பார்க்கிற என்னைப் போன்ற பெண்கள் பலர், ஒருகட்டத்தில் மனஅழுத்தத்துக்கு ஆளாகித் தவிக்கிறோம். எங்களுக்குத் தங்களின் அறிவுரை என்ன?

- விஷ்ணுப்ரியா, பெங்களூரு

சக்தி சங்கமம்

வீட்டில் இருந்து கிளம்பும்போது, வீட்டுச் சுமைகளையும் கவலைகளையும் அலுவலகத்துக்குள் எடுத்துச் செல்லாதீர்கள். அதேபோல், ஆபீசில் இருந்து கிளம்பும்போது அலுவலகப் பணிகள், பிரச்னைகள், சண்டை சச்சரவுகள் எதையும் வீட்டுக்குக் கொண்டு வராதீர்கள். உங்கள் வீட்டுப் பிரச்னைகளை அலுவலகத்தில் சொன்னால், ஒருகட்டத்தில் அது கேலியாகவும் பேசப்படலாம். அதுமாதிரி, உங்கள் அலுவலகத்தில் நடப்பவற்றை வீட்டில் பகிர்ந்துகொள்ளும்போது, வீட்டில் உள்ளவர்கள் உங்களைப் பற்றிக் கவலைப்பட்டு, நிம்மதியை இழக்க நேரிடும். கூடுமானவரை, ஆபீஸ் வேலைகளை வீட்டுக்குக் கொண்டு வராதிருப்பது நல்லது, வீட்டுக்கு வந்ததும் தனிமையை நாடாமல், கணவன், குழந்தைகள், வீட்டுப் பெரியோர் என்று அனைவரிடமும் மனம் விட்டுப் பேசுங்கள். மகிழ்ச்சி எப்போதும் வீட்டிலும் மனத்திலும் தங்கியிருக்கும்.

வழிபாடுகள் இன்று அதிகரித்திருக்கின்றன. ஆனால், ஆத்மார்த்தமான வழிபாடு என்பது எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

- ஆர்.கணபதி, கோவை

வழிபாடு என்பது மனமானது ஒன்றிய நிலையில் இருக்க வேண்டும். மனம் உருகி வழிபட வேண்டும். 'வீடு வாங்க வேண்டும், கார் வேண்டும், பதவி உயர்வு கிடைக்க வேண்டும்’ என்கிற தனி மனித கோரிக்கைகளுக்கு வழிபாட்டில் முக்கியத்துவம் கொடுக்கவே கூடாது. உலகம் நலமாகவும் வளமாகவும் வாழப் பிரார்த்தனை செய்ய வேண்டும். அந்த வழிபாடே வலிமையானது. நமக்கும் வளம் சேர்ப்பது. மழை வேண்டும் என்று வேண்டுங்கள். நிச்சயம் மழை  பொழியும். விளைச்சல் அதிகரிக்க வேண்டும் எனப் பிரார்த்தியுங்கள். நாடு முழுவதும் விளைந்து, பஞ்சம் தீரும். உலகம் அமைதி பெற வேண்டும் எனக் கண்ணீருடன் பிரார்த்தனை செய்யுங்கள். உலகம் முழுவதும் அமைதியாகவும் சுபிட்சத்துடனும் ஒற்றுமையாக இருக்கும்.

சக்தி சங்கமம்

'அன்பே சிவம்’ - உங்கள் பாணியில் விளக்குங்களேன்?

சக்தி சங்கமம்

’ நாத்திகமும் நாத்திகவாத கோஷங்களும் தோற்றுவிட்டன. எனில், ஆத்திகம் ஜெயித்துவிட்டதாகச் சொல்லலாமா?''

சக்தி சங்கமம்

உண்மையான ஆன்மிகம் என்பது எது?''

சக்தி சங்கமம்

இவை போன்ற, வாசகர்களின் சுவாரஸ்யமான கேள்விகளும், அவற்றுக்குச் சுவாமிகளின் பதில்களும் அடுத்த இதழில்!

அடுத்த சங்கமம்...

வாசகர்களே! அடுத்த சக்தி சங்கமத்தில் உங்களுடன் கலந்துரையாடப் போகிறார்... கிரேஸி மோகன். ஆன்மிகம் தொடர்பான உங்கள் கேள்விகளை 3.6.14-க்குள் எங்களுக்குக் கிடைக்குமாறு அனுப்பி வையுங்கள். சிறந்த கேள்விகளை எழுதியனுப்பிய வாசகர்களில் சிலர், 'சக்தி சங்கமம்’ கலந்துரையாடலில்  கலந்துகொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism