Published:Updated:

வேழ மகளும் வேட மகளும்!

முருகா சரணம்... வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்

வேழ மகளும் வேட மகளும்!

முருகா சரணம்... வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்

Published:Updated:

'கோதை குறமாது குணதேவமடமாது இரு
பாலும் உற வீறிவரு குமரேசா’

(திருப்புகழ்)

சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து நெருப்புப் பொறிகளாக வெளிவந்து, ஆறு குழந்தைகளாக சரவணப் பொய்கையில் தவழ்ந்து, உமாதேவியார் எடுத்து அணைக்க, ஆறுமுகன் வடிவம் பெற்றான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அக்னி சொரூபனான முருகப்பெருமானிடம் மூன்று சக்திகள் உள்ளன. இச்சா சக்தி- வள்ளி (விழைவாற்றல்)- இகம் அளிப்பவள்; கிரியா சக்தி- தெய்வானை (செயலாற்றல்) பரம் கொடுப்பவள்; ஞான சக்தி- வேல் (அறிவாற்றல்) வீடுபேற்றை அருள்வது. இதில் வேலவனின் இச்சா சக்தியாகவும் கிரியா சக்தியாகவும் திகழும் வள்ளி- தெய்வானை குறித்த திருக்கதைகளும், தகவல்களும் தத்துவ ரஸம் மிகுந்தவை.

ருமுறை, சிவனாரின் ஆனந்த நடனத்தில் லயித்து இன்புற்றிருந்த திருமாலின் கண்களில் ஆனந்த நீர் பெருகியது. திருமகளின் திருவருளுடன் அந்தக் கண்ணீர்த் துளிகள் இரண்டு பெண்களாக வடிவம் கொண்டன. விஷ்ணுவும் லட்சுமியும் அவர்களைத் தங்களின் மகள்களாக ஏற்று அமுதவல்லி, சுந்தரவல்லி எனப் பெயர் சூட்டி வளர்த்து வந்தனர்.

தந்தை திருமாலின் மந்திர உபதேசப்படி, அந்தப் பெண்கள் திருமுருகனை நோக்கித் தவம் செய்தனர். அதனால் மகிழ்ந்த முருகன், அவர்கள் முன் தோன்றி ஆசியளித்து, அவர்களது விருப்பப்படி அவர்களைத் திருமணம் செய்துகொள்வதாக வரம் அளித்தார். அமுதவல்லியைத் தேவலோகத்திலும், சுந்தரவல்லியை மண்ணுலகிலும் பிறக்கும்படி கூறினார்.

வேழ மகளும் வேட மகளும்!

அழகன் முருகனை ஆள வந்த அமுதவல்லி!

முதவல்லி தேவ உலகில் நீலோற்பல மலர்ப் பொய் கையில் குழந்தையாய்த் தோன்றினாள். தேவேந்திரனும் இந்திராணியும் அந்தக் குழந்தையைக் கண்டெடுத்து, மகளாக வரித்தனர். அங்கு அவளைச் சீராட்டி வளர்த்தது,  தேவலோகத்து ஐராவதம் எனும் யானை. அதனால் தெய்வயானை (தெய்வானை)எனும் பெயர் பெற்றாள் அமுதவல்லி.

இந்த நிலையில், தேவர்களைத் துன்புறுத்திய சூரபத்மனை வென்று தேவர்களை சிறை விடுத்தார் முருகன். தேவேந்திரன் மகிழ்ந்து, தெய்வானையை முருகனுக்குத் திருமணம் செய்துகொடுத்தான்.

இடி, குலிசாயுதம், ஐராவதம் (வெள்ளை யானை), பொன்னுலகம் ஆகியவற்றுக்குச் சொந்தக்காரியானவள் தெய்வானை. இவள் 'முத்திமாது’- முத்தியைத் தருபவள். இவளுக்குக் 'கேவலி’ என்றும் பெயர் உண்டு. 'கேவலம்’ என்றால், கைவல்யத்தைத் தருபவள்; அதாவது, மேலான மோட்சத்தைத் தருபவள் என்று பொருள். முத்தியை அளிக்கவல்ல தெய்வானைக்கு முத்துமாலையும், இச்சையை நிறைவேற்றும் வள்ளிக்கு கடப்பமாலையும் அளிக்கிறான் முருகன் என்று போற்றுகிறார் அருணகிரியார்.

கிரியாசக்தியின் வடிவமானவள் தெய்வானை. செயலாற்றும் திறன்மிக்கவர்கள் புகழ் விரும்பாமல் அடக்கமாக இருத்தல்போல, தெய்வானையின் சிறப்பு, சான்றோர்களால் தனியாக நூல்களில் எடுத்துக் கூறப்பெறவில்லை. வடமொழியில் 'தேவசேனா’ என்றழைப்பர். 'சேனா’ என்ற சொல்லுக்குக் காப்பது என்பது பொருள். தேவர் குலத்தைக் காக்க வந்தவள் ஆதலால் தேவசேனா என்று பெயர் பெற்றாள்.  

தெய்வானையும் திருத்தலங்களும்

வேழ மகளும் வேட மகளும்!

திருப்பரங்குன்றம்: முருகன் தெய்வானையுடன் மணக்கோலத்தில் மூலவராகக் காட்சியளிக்கும் ஒரே தலம் திருப்பரங்குன்றம். இங்கு தெய்வானைக்கு மட்டுமே உலாத் திருமேனி (உற்சவ விக்ரஹம்) உண்டு. தெய்வானைத் திருக்கல்யாணம் பங்குனி உத்திர விழாவில் 11-ம் நாள் நடைபெறுகிறது. முருகனையும் தெய்வானையையும் பீடத்தில் அமர்த்திவைத்து நிகழும் பட்டாபிஷேகம், இங்கு மட்டுமே காணக்கூடிய நிகழ்ச்சியாகும். அதேபோல், கார்த்திகை மாதம் நடைபெறும் விழாவில் 8-ம் நாளன்றும் பட்டாபிஷேக விழா நடைபெறுகிறது. திருப்பரங்குன்றம் கோயில் ஆஸ்தான மண்டபத் தூணில் தெய்வானை கல்யாணக் காட்சியைக் கண்டு மகிழலாம். இந்திரன் கன்னிகாதானம் அளிக்கும் கோலத்தில் உள்ளார். இங்கு, மாசி மாதத்தில் தெய்வானை பிராட்டியாருக்கு எண்ணெய்க்காப்பு உற்சவம் ஐந்து நாட்கள் நடத்தப்படுகிறது.

திருச்செந்தூர்: முருகனை மணக்க திருச்செந்தூரில் தெய்வானை வழிபட்ட சக்தி லிங்கமே பின்னாளில் ஜகந்நாதர் என்று பெயர் பெற்றது. சூரனை வெல்ல முருகன் இங்கு வந்தபோது, இந்த லிங்கத்தை பூஜித்தார். திருச்செந்தூரில், ஐப்பசி மாத கந்த சஷ்டி விழாவில், குமாரவிடங்கர் (மாப்பிள்ளை சுவாமி) தனித் தெய்வானை அம்மையுடன் எழுந்தருள, தெய்வானை திருமணம் நடைபெறுகிறது.

பழநி: இங்கே, கந்த சஷ்டிக்கு மறுநாள் காலையில், மலைக்கோயிலில் ஆறுமுக சுவாமிக்கும் தெய்வானைக்கும் திருமண விழா நடைபெறும். மாலையில், ஊரில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில் முத்துக்குமார சுவாமியுடன் தெய்வானை கல்யாணம். இப்படி, ஒரே நாளில் இரண்டு முறை நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

திருவிடைக்கழி: திருக்கடவூரில் இருந்து சுமார் 6 கி.மீ தொலைவில் உள்ள இந்தத் தலத்தில், ஸ்ரீசுப்ரமண்யர் ஆலயத்தில் தெய்வானை பிராட் டிக்கு மட்டும் தனிச் சந்நிதி உள்ளது. இங்கே, சென்னை சிறுவாபுரி முருகன் அபிஷேகக் குழுவினர் பிரதிஷ்டை செய்துள்ள 'குஞ்சரி ரஞ்சித குமரன்’ (தேவசேனையை மகிழ்விக்கும் பெருமான்) பஞ்சலோக விக்ரஹம், வேறு எங்கும் காண இயலாத அற்புத வடிவம்.

கந்தன்குடி: திருநள்ளாறு செல்லும் வழியிலுள்ள இந்தத் தலத்திலுள்ள முருகன் கோயிலிலும் தெய்வானைக்கு முக மண்டபம், மகா மண்டபம், கருவறை ஆகிய அமைப்புகள் உள்ள தனிச் சந்நிதியைக் காண முடிகிறது.

திருப்போரூர்: சென்னை- மாமல்லபுரம் வழியில் உள்ள திருப்போரூரில் தெய்வானைக்கு மட்டுமே தனிச் சந்நிதி உண்டு. இங்கு தெய்வானை (மூலவர்) நான்கு திருக்கரங்களுடன் காட்சியளிக்கிறாள். மேல் வலக்கையில் நீலோற்பல மலரும், இடக் கையில் தாமரை மலரும் ஏந்தியிருக்க, வலது முன் கரம் அபய முத்திரையுடனும், இடக் கரம் இடுப்பில் வைத்த நிலையிலும் திகழ்கின்றன. இதேபோன்ற, நான்கு கரங்கள் கொண்ட தெய்வானை வடிவத்தை, சென்னை குயப்பேட்டை கந்தசாமி கோயில், கந்த கோட்டம் ஆகிய கோயில்களிலும் காணலாம். திருப்போரூரில் கந்த சஷ்டிக்கு மறுநாள் தெய்வானை திருமணம் நடத்தப்படுகிறது. இங்கு நடைபெறும் மயூரவர்கள் காட்சி விழாவில், தெய்வானை தங்க மயிலில் பவனி வருவாள். திருத்தணிகையில், சித்திரை விழாவில் தெய்வானை திருமணம் நடைபெறுகிறது.

வேழ மகளும் வேட மகளும்!

வள்ளிக்குறத்தி

முருகன் ஆணைப்படி மண்ணுலகம் வந்த சுந்தரவல்லி, மலைக் குகை ஒன்றில் தவம் இருந்தாள். அந்தப் பகுதியை ஆண்ட நம்பிராஜன் என்ற குறவர் குலத் தலைவன், பெண் குழந்தை இல்லையே என்று ஏக்கம் மேலிட, தமது குல தெய்வமான முருகனிடம் வேண்டி வழிபட்டான்.

அதே மலைச்சாரலில், யோகத்தில் எழுந்தருளியிருந்தார் திருமால். அங்கே, பெண் மான் வடிவில் வந்த மகாலட்சுமி, அவர் முன்னே துள்ளிக் கொண்டிருந்தாள். திருமால் அந்த மானை இச்சையுடன் நோக்க, அதனைத் தனது யோகத் தால் உணர்ந்த சுந்தரவல்லி, திருமாலின் கண் வழியாகப் புகுந்து, மான் வயிற்றில் உள்ள கருவை அடைந்தாள். மான் கருவுற்று, பெண் குழந்தையை ஈன்றது. தான் ஈன்ற குட்டி மான் குட்டியாக இல்லாமல், மனித வடிவில் இருப்பதைக் கண்ட அந்தப் பெண் மான், வள்ளிக் கிழங்கு அகழ்ந்த குழியொன்றில் அந்தக் குழந்தையை விட்டுச் சென்றது. அதே நேரம், யோகநிலை விட்டு திருமால் அங்கு வர, மகாலட்சுமியும் மான் வடிவம் நீங்கி வந்து, இருவரும் அந்தக் குழந்தையைத் தழுவி மகிழ்ந்து, வாழ்த்தினர். பின்னர், வள்ளிக் கிழங்கை அகழ்ந்த அந்தக் குழியிலேயே அந்தக் குழந்தையை அவர்கள் விட்டுச் சென்றனர். குழந்தையின் அழுகுரல் கேட்டு அங்கு வந்த நம்பிராஜன், தான் வேண்டிய படியே முருகன் அளித்த அந்தப் பெண் குழந்தையை எடுத்துக்கொண்டு தன் இல்லத்துக்குச் சென்று, 'வள்ளி’ என்று பெயர் சூட்டி அன்புடன் வளர்த்தான்.

வள்ளி வளர்ந்து, பருவமெய்தினாள். குல வழக்கப்படி, தினைப்புனம் காக்க, தோழியரோடு சென்றாள். அங்கு பறவைகளைக் கவண்கல் எறிந்து துரத்தி, ஆடிப்பாடி மகிழ்ந்திருந்தனர். அதே நேரம், மாயோன் மருகனை தியானித்துத் தவம் இருக்கவும் வள்ளி தவறவில்லை.

இந்த நிலையில், சூரனை வென்று தெய்வானையை மணந்தபின், திருத்தணிகை வந்து யோகத்தில் அமர்ந்தார் குமரவேள். நாரதர் அவரிடம் வந்து, தணிகைக்கு அருகில் வள்ளிமலையில் வாழ்ந்து வரும் வள்ளியின் பெருமைகளை விவரித்தார்.

அவளுக்கு அருள்புரிய, திருவுளம் கொண்ட முருகன் வள்ளிமலைக்குச் சென்றார். அங்கு தினைப் புனத்தில், வேடனாகவும், வேங்கை மரமாகவும், விருத்தனாகவும் வேடமிட்டு, லீலைகள் பல செய்து, அவளை மணம் புரிய விரும்பி, காதல் மொழிகளைப் பேசினார். வயோதிக உருவில் இருந்த அவரை இன்னார் என்று தெரியாமல் வள்ளி மிரண்டு விலக, அவளை மணக்க அண்ணனாகிய விநாயகரைத் துணைக்கு அழைத்தார். அவர் யானை வடிவில் வந்து, வள்ளியைத் துரத்தினார். யானையைக் கண்டு அஞ்சி, வயோதிகராக வந்த முருகனை அணைத்துக்கொண்டாள் வள்ளி.

இப்படி வள்ளியிடம் குறும்பு விளையாட்டு நடத்திய முருகன் ஞானவேல் ஏந்தி, மயில் மேல் ஆறுமுகனாகக் காட்சியளித்து, ஞான உபதேசம் செய்து வள்ளிக்கு அருள்பாலித்தார். வள்ளி- முருகன் திருமணம் சிறப்பாக நடந்தேறியது. பின்பு, வள்ளியுடன் ஞானமலையில் சிறிது காலம் தங்கி, திருத்தணியை அடைந்தார் திருமுருகன். வள்ளியம்மையை மணந்து முருகன் பெற்ற ஐந்து சீதனங்களாக ஊதுகொம்பு, சேவற்கொடி, வேலாயுதம், மயில்வாகனம், மலைஆட்சி என்று கந்தரந்தாதி 8-ம் பாடலில் நயம்படப் பாடுகிறார் அருணகிரியார்.

வேழ மகளும் வேட மகளும்!

தமிழில் வள்ளி என்றும், வடமொழியில் வல்லி என்றும் அழைப்பர். வள்ளல் தன்மை உடையவன் வள்ளல்; அவனது மனைவி வள்ளி. அவளும் அடியார்களுக்கு அருளை வாரி வழங்குபவள். வள்ளம் என்பதற்கு நீர் (தண்ணீர்) என்றும் பெயர். வள்ளத்துள் வந்த தேவியாதலின் அவள் வள்ளி எனப்பட்டாள். சிவபெருமான் செந்தீயாகவும், அவரது தேவியான பார்வதி தண்ணீராகவும் இருப்பது போல, முருகன் செந்தழற்பிழம்பாகவும் (அக்னி ஞாதன்), அவனது தேவியான வள்ளி தண்ணீராகவும் விளங்குகின்றனர் என்பர்.

வள்ளிதேவியை 'கவர் பூ வடிவாள்’ என்று அருணகிரி நாதர் திருப்புகழில் பாடுவார். போகியாய் இருந்து உயிர்க்கு போகத்தைப் புரிதல் இறைவனின் தன்மை.ஆதலின், உலகில் இல்வாழ்க்கை நடத்தற்பொருட்டு முருகன் தன்னுடைய ஒரு திருமுகத்தால் வள்ளியம்மை யுடன் பேசி மகிழ்ந்து அமர்ந்திருக்கின்றான்; இது உலக உயிர்கள் நன்மை அடைவதன் பொருட்டாகும் என்று நக்கீரர் குறிப்பிடுகின்றார்.

தினைப்புனம் என்பது உலகம்; தினைக் கொல்லை, ஞானப் பயிர் விளையும் இடம்; வள்ளி, பரிபக்குவம் அடைந்த நல்லுயிர். குறவர் குலமகளாகிய வள்ளியிடம் முருகன் தானே வலிந்து சென்று நயந்து மணந்து கொண்டது, இறைவனின் எளிமைத் தன்மையைக் காட்டுவதாகும். இது, அடியார்களை முருகப்பெருமான் 'வா... வா’ என்று வலிந்து ஆட்கொள்ளும் பேரருள் திறத்தைப் புலப்படுத்துகிறது. வள்ளி, பக்குவப்பட்ட

ஆன்மாவின் வடிவம். யான், எனது என்ற செருக் கற்று இறைவன் திருவடிகளில் சரணடைந்தது வள்ளியின் தன்மையாகும். இதனையே 'வள்ளி சன்மார்க்கம்’ என்றும், வள்ளி அனுஷ்டித்த நன்னெறி என்றும் போற்றுகிறார் அருணகிரிநாதர்.

வள்ளிக்குறத்தி அருளும் ஆலயங்கள்

திருச்செந்தூர்: இங்கு, பங்குனி உத்திர விழாவில் குமாரவிடங்கரை (உற்சவர்) தனி வள்ளியம்மனுடன் எழுந்தருளச் செய்து, வள்ளித் திருமணம் நடத்து வர். இங்கே, வள்ளியே பள்ளியறை நாச்சியாராக முருகனுடன் பள்ளியறைச் சேவை காண்கிறாள்.

பழநி: வைகாசி விசாகம், தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய மூன்று நாள்களிலும் மலைக் கோயிலில் வள்ளித் திருமணம் நடைபெறும். அதேபோல், பெரியநாயகி அம்மன் கோயிலிலும் மூன்று முறை நிகழ்த்துகிறார்கள். பழநிமலைக் கோயிலிலும், பள்ளியறையில் வள்ளி மட்டுமே முருகனுடன் எழுந்தருள்கிறாள்.

திருவலஞ்சுழி: இங்குள்ள சிவாலயத்தில் பங்குனி உத்திரத்தையொட்டி நடைபெறும் விழாவில், தினையைப் பயிர் செய்து, அதன் நடுவில் வள்ளியை ஆயல் ஓட்டும் கோலத்தில் அலங்காரம் செய்திருப்பர். எதிரில், முருகன் வேங்கை மரமாகவும், வேடனாகவும், விருத்தனா கவும் அடுத்தடுத்துக் காட்சியளிப்பார். விடியற் காலையில், அரசிலாற்றங்கரையில் வள்ளியை யானை விரட்டுவதும், அவள் முருகனை மணக்கச் சம்மதிப்பதும் அற்புதக் காட்சிகளாகும்.

சுவாமி மலை: இங்கு வேட ரூப வடிவில் முருகனும், கையில் கவண் ஏந்திய வள்ளியும் உற்சவ மூர்த்திகளாக உள்ளனர். வள்ளிக்கு முருகன் ஆறுமுகனாகக் காட்சியளித்ததையொட்டி, சுவாமி மலையில் பங்குனி உத்திரத்தன்று ஆறுமுகனுக்கும் வள்ளிக்கும் திருமணம் நடைபெறுகிறது. இத்தலத் தில் மட்டுமே ஸ்ரீஆறுமுகனுடன் வள்ளி கல்யாணம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

திருப்போரூர்: திருப்போரூரில், மாசி மாத விழாவில் வள்ளித் திருமணம் நடத்தப்படுகிறது. தணிகையிலும் அப்படியே! திருப்போரூர் கோயி லில் கொலுமண்டபத்தையொட்டி அமைந்துள்ள தனிச் சந்நிதியில் வள்ளி நான்கு கரங்களுடன் காட்சி அளிக்கிறாள். இப்படியான அமைப்பு வேறு எங்கும் இல்லை.

வள்ளிமலை, வள்ளியூர், திருச்செந்தூர், பழநி முதலிய தலங்களில் வள்ளிப்பிராட்டிக்கு தனிச் சிற்றாலயங்கள், கோயிலுக்கு வெளியே உள்ளன. வள்ளி மலையில், கையில் கவண் கொண்டுள்ள வள்ளியின் திருவுருவம் புடைப்புச் சிற்பமாக அமைந்துள்ளது.

குருந்த மலை: கோவைக்கு அருகில் குருந்த மலையில், வள்ளிமலை என்ற சிறு குன்றில் வள்ளிக் குகையும், வள்ளி வடிவமும் உள்ளன.

சிறுவாபுரி: வள்ளியும் முருகனும் மணவாளக் கோலத்தில், 'வள்ளி கல்யாண சுந்தரராக’ கரம் பற்றிய நிலையில், பஞ்சலோக வடிவில் அருள்கிறார். சிறுவாபுரி முருகன் அபிஷேகக் குழுவினர் பிரதிஷ்டை செய்துள்ள இந்த வடிவத்தை வேறெங்கும் காண்பது அரிது!

சோளிங்கர் அருகில் உள்ள ஞானமலையில் 'குறமகள் தழுவிய குமரன்’ உலாத் திருமேனி மிக அற்புத அமைப்பாகும். நாகர்கோவில் அருகிலுள்ள வேளிமலை (குமாரக்கோயில்), சிவன்மலை (காங்கேயம் அருகில்), கேரளாவில் திருவஞ்சைக்களம் அருகில் உள்ள எளந்துருத்தி ஆகிய கோயில்களில், மூலஸ்தானத்தில் முருகனும் வள்ளியும் மட்டுமே அருள்கின்றனர்.                                                            

தேவியருடன் திருமுருகன்..!

திருச்செந்தூரில் வில்லேந்திய கோலத்தில் அருளும் குமாரவிடங்கப் பெருமானை, மாப்பிள்ளை ஸ்வாமி என்பார்கள். பங்குனி முதல் புரட்டாசி வரையிலான விழாக்களில் வள்ளியம்மையும், ஐப்பசி முதல் மாசி வரையிலான திருவிழாக்களில் தெய்வானையும் குமாரவிடங்கருடன் எழுந்தருள் கிறார்கள். இத்தகைய நடைமுறையை திருச்செந்தூ ரில் மட்டுமே காண முடியும். இங்கே, வள்ளியம்மை அன்னப்பட்சி வாகனத்திலும், தெய்வானை மயில் வாகனத்திலும், முருகன் ஆட்டுக்கடா வாகனத்திலும் எழுந்தருள்வர்.

குன்றக்குடி, திருச்சி அருகில் உள்ள திண்ணியம் ஆகிய தலங்களில் மூலஸ்தானத்தில் ஆறுமுகன் மயில்மீது வீற்றிருக்க வள்ளி, தெய்வானை இருவரும் தனித்தனியே மயில் வாகனத்தில் அமர்ந்திருக்கக் காணலாம். திருமயம் தலத்தில் உள்ள தனிச்சந்நிதியிலும் இவ்வமைப்பு உள்ளது.

திருமயிலை கபாலீச்சரம் ஆலயத்தில் சிங்கார வேலர் (ஆறுமுகர்) மயில்மீது அமர்ந்திருப்பார். வள்ளி, தெய்வானை இருவரும் தனித்தனியே யானை வாகனத்தில் அமர்ந்திருப்பார்கள். இப்படி யான திருக்கோலத்தை வேறெங்கும் காண்பது அரிது!

காஞ்சி- குமரக்கோட்டத்தில் நாகசுப்ரமண்யர் (உற்ஸவர்) திருமுடிமீது ஐந்து தலை நாகம் படம் விரித்தாடுவதுபோல் அமைந்திருக்கும். இவருடன் அருளும் வள்ளி-தெய்வானை திருமுடிகளின்மீது மூன்று தலை நாகம் படமெடுத்துக் குடை பிடிப்பதுபோல் அமைக்கப்பட்டுள்ளது. இவர்களை நாக வள்ளி, நாக தேவசேனை என அழைப்பர்.

ர்நாடக மாநிலம், குக்கே சுப்ரமண்யா, கட்டே சுப்ரமண்யா ஆகிய தலங்களில் நாக வடிவில் விளங்கும் முருகனை சுப்புராயன் என்றழைப்பர். அவரோடு காட்சியளிக்கும் வள்ளி- தெய்வானையை சுப்புலட்சுமி என்றழைப்பார்கள்.

லங்கையில் நல்லூர் (யாழ்ப்பாணம்) கந்தசாமி கோயில் தேர்த் திருவிழாவை சகோபுரக் காட்சி என்பர். அதாவது, ராஜகோபுரத்தை ஒத்த வடிவுடையது சகோபுரம். ஓலையைக் கொண்டு கண்ணைக் கவரும் வடிவில் இதை நேர்த்தியாக வடிவமைத்திருப்பர். இந்த சகோபுரக் காட்சியில் வள்ளி, தேவயானை, முருகன் மூவரும் தனித்தனியே மூன்று ரிஷப வாகனங்களில் வீதி உலா வருவது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism