Published:Updated:

காவடிப் பிரியனுக்கு அரோகரா!

என் கடன் இறைப் பணி செய்து கிடப்பதே! இ.லோகேஸ்வரி, மா.அ.மோகன் பிரபாகரன்

காவடிப் பிரியனுக்கு அரோகரா!

என் கடன் இறைப் பணி செய்து கிடப்பதே! இ.லோகேஸ்வரி, மா.அ.மோகன் பிரபாகரன்

Published:Updated:

''செய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள் பெரியோர்கள். அப்படியிருக்க, நாம் செய்யும் தொழிலே தெய்வத்துக்கானது என்றால், அது எத்தகைய கொடுப்பினை?! அந்த வகையில், நானும் என் குடும்பமும் மிகவும் கொடுத்துவைத்தவர்கள் என்றே சொல்லலாம்..!'' - சிலிர்ப்பும் சந்தோஷமுமாகப் பேசுகிறார் செந்தில்.

பஞ்சலோகத்தாலான ஸ்வாமி விக்கிரகங்கள், அந்த விக்கிரகங்களுக்கு உரிய கவசங்கள், கிரீடம் மற்றும் பூஜைக்கு உரிய தட்டு, மணிகள் முதலானவற்றைத் தயாரிப்பதுதான் செந்திலின் குடும்பத் தொழில்.  ஈரோட்டில், 45 வருடங்களுக்கு மேலாக இந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் செந்தில், கடந்த 10 வருடங்களாக காவடி தயாரிப்பிலும் ஈடுபட்டிருக்கிறார்.

வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், தைப்பூசம் போன்ற விழாக் காலங்களில் பக்தியும் நேர்த்தியுமாக இவர் தயாரித்துத் தரும் காவடிகளுக்கு, ஈரோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள முருக பக்தர்களிடையே ஏக வரவேற்பு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''முருக பக்தனான எனக்கு, முருகனே தந்த அரிய பணி இது’!’ என்று சிலாகித்துச் சொல்லும் செந்திலை, ஈரோட்டில் உள்ள முருக பக்தர்கள் நன்றாகவே அறிவார்கள்.  

காவடிப் பிரியனுக்கு அரோகரா!

''45 வருஷத்துக்கு முன்னாடி, என் அப்பா வெங்கடாசல செட்டியார், இந்தப் பணிகளை செவ்வனே செஞ்சுக்கிட்டிருந்தார். கடந்த 15 வருஷமா, நானும் அப்பாவோடு சேர்ந்து இதுல முழுசா, ஆத்மார்த்தமா ஈடுபட்டு செஞ்சுக்கிட்டிருக்கேன். கடவுள் பணியில் என்னை முழுமையா ஒப்படைச்சிருக்கேங்கறதை நினைக்கும்போதே மனசுக்கு நிறைவா இருக்கு. விக்கிரகங்களும் ஸ்வாமிக்கான மற்ற விஷயங்களும் பண்ணிட்டிருந்த நாங்க, கடந்த 10 வருஷமா காவடிகள் தயாரிக்கிற பணியிலயும் ஈடுபட்டிருக்கோம்.

என் தாத்தா பூபதி, ரொம்பப் பிரமாதமா காவடி ஆட்டம் ஆடுவார். அவர் காவடி எடுத்து ஆடுறதை, ஜனங்க சுத்தி நின்னு, வெச்ச கண்ணு வாங்காம பார்த்துக்கிட்டே இருப்பாங்க. ஈரோட்டுல ஸ்ரீசுப்ரமணிய ஸ்வாமி கோயில் இருக்கு. தாத்தாவைப் பார்த்து வளர்ந்ததால, எனக்கும் காவடி எடுக்கணும்னு ஆசை வந்துச்சு. காவடி எடுத்துக்கிட்டு கோயிலுக்குப் போற வழியில, என்னையும் அறியாம கால்கள் ஆட ஆரம்பிச்சிடுச்சு. தாத்தாவைப் போல பேரனும் காவடியாட்டம் பிரமாதமா ஆடுறானேன்னு எல்லாரும் சொன்னப்ப, நெகிழ்ந்து போயிட்டேன். அப்புறம் ஸ்ரீசுப்ரமணிய ஸ்வாமிக்குக் காவடி எடுக்கறது வருஷம் தவறாம தொடர்ந்துச்சு.

அந்த நேரத்துலதான் அன்பர் ஒருவர், 'எனக்கு ஒரு காவடி செஞ்சு தரமுடியுமா?’னு வந்து கேட்டார். இதை அந்த முருகக் கடவுளே வந்து கேக்கறதா நினைச்சு, சந்தோஷமா அவருக்கு ஒரு காவடி செய்து தந்தேன். காவடி செய்யறதுங்கறது, கொஞ்சம் கடினமான வேலை. காவடில சின்னச் சின்னதா சிற்பங்கள் பண்ணணும். நெட்டி வேலை. கொஞ்சம் கவனம் பிசகினாலும், முகமும் உருவமும் சீராக வராம போயிடும். அந்த மரமே வேஸ்ட்டாயிடும்!'' என்கிறார் செந்தில்.

காவடிப் பிரியனுக்கு அரோகரா!

''ஆரம்ப காலத்தில், பொருள்களை ஒரு நீண்ட கழியில் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக வைத்து, உறி மாதிரி கட்டிச் சுமந்து வருவதையே காவடி என்றார்கள். பிறகு, கந்தபிரானை வழிபடுவதற்கு உரிய விஷயமாக காவடி பார்க்கப்பட்டது. பக்தர்கள், 'காவடி ஏந்தி உன் சந்நிதிக்கு வரோம்’ என்று பிரார்த்தனை செய்து கொண்டார்கள். நேர்த்திக்கடனாக காவடி ஏந்திச் சென்று வழிபட்டார்கள். அதனால்தான் 'காவடிப் பிரியனுக்கு அரோகரா’ என்ற கோஷம் விண்ணைப் பிளக்கிறது!'' என்கிறார் செந்தில்.

தொடர்ந்து, ''காவடியில் பால் காவடி, பன்னீர்க் காவடி, சர்க்கரைக் காவடி, பூக்காவடி, சந்தனக்காவடி, பழக்காவடி, தீர்த்தக் காவடி, அக்கினிக் காவடி, நெய்க் காவடி, தைலக் காவடி, விலங்குக் காவடி, வேல் காவடி, கற்பூரக் காவடி, விபூதிக் காவடி, அன்னக் காவடி, இளநீர்க் காவடி, செருப்புக் காவடி, தேன் காவடி, சொர்ணக் காவடி, ரத்தினக் காவடி, தானியக் காவடி, மஞ்சள் காவடி, மாப்பொடிக் காவடி, அவல் காவடி, பானகக் காவடி, விளக்குக் காவடி, பாவைக் காவடி, பச்சிலைக் காவடி, பாண்டக் காவடி, ஆயுதக் காவடி, பஞ்சவாசகக் காவடி, மச்சக் காவடி, சர்ப்பக் காவடி, சேவல் காவடி, சோதனைக் காவடி, முத்திரைக் காவடி என 36 வகை காவடிகள் உள்ளன.

எந்தக் காவடியாக இருந்தாலும், அதைச் செய்வதற்கு வேங்கை மரம்தான் உகந்தது. நன்றாகக் காய்ந்த மரத்தில் காவடி செய்தால், அது நீண்ட காலம் உறுதியுடன் இருக்கும். அதுமட்டுமில்லை... வேங்கை மரத்துக்கும் ஆன்மிகத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இறைவனின் பேரருளை உள்வாங்கிக்கொள்ளும் தன்மை இந்த மரத்துக்கு உண்டு. எத்தனையோ முனிவர்களும் ஞானிகளும் வேங்கை மரத்தடியில் இருந்தபடி, தவம் செய்திருக்கிறார்கள். அதேபோல், இந்த மரத்தால் செய்த காவடியை தூக்கிக்கொண்டு ஆடும்போது, நிறைய பேர் அருள் வந்து ஆடுவதைப் பார்த்திருப்பீர்கள்.

காவடிப் பிரியனுக்கு அரோகரா!

ஆக, இத்தனை சக்திமிக்க வேங்கை மரத்தைக் கொண்டு ஒரு காவடியைச் செய்வதற்குக் குறைந்தது 30 நாள்களாகும். ஒரு முகூர்த்த நாளில் பூஜை போட்டு, சுவாமியைக் கும்பிட்ட பிறகே, வேலையைத் துவக்குவோம். அந்த 30 நாள்களும் கிட்டத்தட்ட விரதம் மேற்கொள்வது மாதிரி சிரத்தையாக இருந்து, காவடி தயாரிப்பில் ஈடுபடுவோம். மயில் கால் காவடி, கிளிக் கால் காவடி, சேவல் கால் காவடி என காவடி அமைப்பில் நிறைய வகைகள் உள்ளன. இதில், மயில் கால் காவடியையே அதிக பக்தர்கள் விரும்புகிறார்கள். காவடியில், முருகன் திருவுருவத்தையும், விநாயகரின் திருவுருவத்தையும் வடித்துத் தரச் சொல்லிக் கேட்பார்கள். அவற்றைக் காவடியில் சிற்பமாக வடிப்பது பெரிய கலை. அதையடுத்து, உறுதியான கீழ் அமைப்பு வந்ததும், மேலே வளைவான அமைப்பை, மூங்கில் கொண்டு உருவாக்குவோம். அதன் மேல் பட்டுத்துணி, குஞ்ச மெல்லாம் வைத்து, காவடியின் நான்கு மூலைகளிலும் மயிலிறகை வைத்துக் கட்டுவோம். நீளமான தடியின் இரண்டு முனைகளிலும் பால், தேன் அல்லது இளநீர் நிரப்பிய குடங்களைத் தொங்கவிட்டுக் காவடி எடுக்கும் வழக்கம் உண்டு. பூக்கள், வெட்டிவேர், பட்டுத்துணி ஆகியவற்றால் காவடிகள் அழகு செய்யப்படுகின்றன'' என விவரித்தார் செந்தில்.  

''ஒரு காவடியானது சுமார் மூன்றடி அகலத்துடன் இருக்கும். சுமார் 5 கிலோ முதல் 7 கிலோ வரை எடை கொண்டதாக இருக்கும். சிறுவர்களும் காவடி எடுப்பதைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்காக இலகுவான, அதிக கனம் இல்லாத சிறிய காவடிகளும் செய்து தருகிறோம். ஒவ்வொரு பக்தருக்கும் தக்கபடி சரியாகச் செய்து தருவதுதானே உண்மையான இறைத்  தொண்டு!'' என்று நெகிழ்ந்து சொல்கிறார் செந்தில்.

''காவடிகளை மரத்தால் செய்து வந்த நான், முதல்முறையாக ஈரோடு சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு, இரண்டு வெள்ளிக் காவடிகள் செய்து தந்தேன். ஒவ்வொன்றும் 6 கிலோ எடை கொண்டது. அதுமட்டுமல்ல... இங்கே உள்ள ஸ்ரீமகிமாலீஸ்வரர் கோயிலுக்கு நாகாபரணம் செய்து தந்துள்ளேன். பஞ்சலோக விக்கிரகங்கள் சுமார் 40-க்கும் மேல் செய்திருக்கிறேன்.தமிழகம் தவிர, இந்தியாவில் உள்ள பல முருகன் கோயில்களுக்கும் காவடிகள் செய்து கொடுத்துள் ளேன். எல்லாம் முருகனருள்!'' என்று கையெடுத்து மானசிகமாகக் கும்பிட்டு, நா தழுதழுக்கச் சொல்கிறார் செந்தில்.

இறைப் பணிகளுடன் , கடந்த 30 வருடங்களாக ரத்த தானமும் செய்து வருகிறாராம் இவர். வருடந்தோறும் 50 மரக்கன்றுகளை நடுகிறாராம். தவிர, நாமக்கல்- பரமத்தி அங்காளம்மன் கோயில் விழாவில், அன்னதானம் செய்து வருகிறார்.

செந்திலாண்டவரின் மீதான செந்திலின் பக்தியும், அதையொட்டிய இவரது இறைத் தொண்டும் தொடரத் தொடர, இவர் இன்னும் இன்னும் உயர்வார் என்பதில் ஐயமில்லை.

படங்கள்: ரமேஷ் கந்தசாமி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism