Published:Updated:

சமய இலக்கியத்தில் ஒரு சாதனை!

சிந்தை மகிழ... ஒரு சைவக் களஞ்சியம் சாருகேசி

சமய இலக்கியத்தில் ஒரு சாதனை!

சிந்தை மகிழ... ஒரு சைவக் களஞ்சியம் சாருகேசி

Published:Updated:

சைவ சமயக் கலைக்களஞ்சியம். 7,200 பக்கங்களுடன், 10 புத்தகங்களாக, 200-க்கும் மேற்பட்ட அறிஞர்களின் பங்களிப்புடன், சைவ சமயம் குறித்த அத்தனைத் தகவல்களோடும் வெளியாகியிருக்கும் இந்தத் தொகுப்பு, நம்மை பிரமிக்கவைக்கிறது. 'கடலை எடுத்துக் குடத்தில் அடைக்க முடியாது’ என்பார்கள். ஆனால், தமது சீரிய முயற்சியால் அதைச் சாதித்துக் காட்டியிருக்கிறார் பேராசிரியர் இரா. செல்வக்கணபதி.

'சமீப காலத்தில், தனி மனிதர் ஒருவர் பொறுப்பேற்றுக்கொண்டு, இத்தனைப் பெரிய அளவுக்கு இதுமாதிரியான ஒரு தொகுப்பை வெளிக்கொண்டு வந்தது இல்லை என்று சொல்வது துளியும் மிகையல்ல’ என்று, இந்தத் தொகுப்பு நூலுக்கான அறிமுக உரையில், கு.ஆளுடையாபிள்ளை சொல்லியிருப்பது, ஒட்டுமொத்த தமிழர்களின் சார்பாகச் சொன்ன கருத்தாகவே படுகிறது.

காலத்தே பின்னோக்கிச் சென்று ஆவணங்களைக் கண்டறிந்து, எழுதி, தொகுத்து, சரி¢பார்த்து ஒரு தொகுதியை உருவாக்குவது...அதிலும் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், ஆசிய நாடுகள், கடல்கடந்த தேசங்களில் எல்லாம் சைவம் வளர்ந்த வரலாற்றைத் திரட்டிக்கொடுப்பது என்பது சாதாரணமானது அல்ல.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சமய இலக்கியத்தில் ஒரு சாதனை!

துறை சார்ந்த அறிஞர்கள் பலரின் உழைப்பும் பங்களிப்பும் இந்த நூலுக்குச் சிறப்பு சேர்த்திருக்கின்றன.

அறுபத்து மூவர் பற்றிய தகவல் என்றால், சிதம்பரம் டாக்டர் பத்மினி கபாலி மூர்த்தி, குறவஞ்சி இலக்கியம் என்றால் ஜி.மேகலா, ஓதுவாமூர்த்திகள் குறித்து முத்து கந்தசாமி தேசிகர், சைவம் குறித்த இதழ்கள் பற்றி அ.மா.சாமி, கவிஞர் கண்ணதாசனின் பங்களிப்பு குறித்து சரசுவதி ராமநாதன், சைவம் வளர்த்த கர்னாடக இசை பற்றி நெய்வேலி சந்தானகோபாலன், அருணகிரிநாதர் குறித்து கு.வெ.பாலசுப்பிரமணியன், நடனத்தில் கரணா பற்றி ராம ஆவுடையப்பன் என, யார் யார் எந்தத் துறையில் முத்திரை பதித்திருக்கிறார்களோ, அவர்களிடமிருந்து கட்டுரையைப் பெற்று அதை ஆய்வுக்குள்ளாக்கி, பின்னர் கலைக் களஞ்சியத்தில் இணைத்திருக்கிறார், பேராசிரியர் இரா.செல்வக்கணபதி. 'இதுதான் இறுதி; இதனன்றி எதுவும் இல்லை’ என்று அறுதியிட்டுச் சொல்லும் அளவுக்கு இந்தக் களஞ்சியத்தை மிகச் சிறப்பாக வெளிக்கொணர்ந்திருக்கிறார் அவர்.

'இது ஒரு முன்னோடி நூல் என்பது மட்டுமல்ல; வரும் தலைமுறைக்கு ஒரு தகவல் பொக்கிஷமாகவும் அமையும் அளவுக்கு இது தொகுக்கப்பட்டிருக்கிறது!’ என்று டாக்டர் சுதா சேஷய்யன் வாழ்த்தியிருப்பது முற்றிலும் பொருத்தமானது.

சமய இலக்கியத்தில் ஒரு சாதனை!

திருவாதிரையிலும் அஷ்டமி நாள்களிலும், ஞாயிறு- வியாழக் கிழமைகளிலும், உச்சிக்காலத்திலும், அர்த்தசாமத்திலும் பைரவரை  வணங்கச் சொல்வது ஏன்? திருநீற்றின் மகிமை என்ன தெரியுமா? கஞ்சனூர் அரதத்த சிவாச்சார்யர், பிறப்பால் வைணவர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? காயத்ரி மந்திரம் பற்றிய விவரங்கள் என்னென்ன? சைவத்தில் உ.வே.சா அவர்களின் பங்களிப்பு என்ன? ஆசார்யர், ஆசிரம வாழ்க்கை, ஆலய நிர்மாணம் பற்றி அறிய வேண்டுமா? கங்கைக் கரையும் காராம்பசுவும் தெரிவிப்பது என்ன?

இவை போன்ற எண்ணற்ற கேள்விகளுக்குத் தெளிவான பதில்களும் விளக்கங்களும் உண்டு இந்தத் தொகுப்பில்.

பத்து நூல்களும் முறையே... புதுவை உட்பட தமிழகத்தில் சைவம், தமிழகத்துக்கு அப்பால் சைவம் வளர்ந்த வகை, சைவத் திருமுறைகள், திருமுறைத் தலங்கள், பிற்காலத் தலங்கள், சைவ சமய அருளாளர்கள், சைவ சமய அருள் நூல்கள், சைவ சித்தாந்தம், சைவ சமய அமைப்புகள் மற்றும் தோரண வாயில் (இண்டெக்ஸ்) என்று தொகுக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொன்றுக்குள்ளும் புகுந்து வெளிவந்தால், சைவ சமய அருவியில் ஆனந்தமாகக் குளித்து வெளியேறிய அனுபவம் உண்டாகிறது.

ஒவ்வொரு தொகுப்புக்கும் ஓர் ஆதீனத்தின் அருளாசி உரை, நீதித் துறையில் அங்கம் வகிக்கும் நீதியரசர் ஒருவரின் வாழ்த்து உரை, எந்தெந்த நூல்கள், இதழ்கள் அடிப்படையாக உதவின என்பது குறித்த குறிப்புகள், நன்றி அறிவிப்புகள் என எதையும் விட்டுவிடாமல் சேர்த்திருப்பது சிறப்பு. குறிப்பாக, 4-ம் தொகுப்பில், 'பாடல் பெற்ற தலங்கள்’ என்று 476 தலங்களைப் பட்டியலிடுகிறார். 9-ம் நூற்றாண்டு முதலாக அமைந்த 4,500 கோயில்கள், அகத்தியர், அருணகிரிநாதர் என 700 சைவ முனிவர்கள், தமிழ்நாட்டின் 300 சித்தர் சமாதிகள் குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியவை.

7-ம் தொகுதி, கடந்த 2000 ஆண்டுகளின் சைவம் குறித்த அத்தனை நூல்கள் பற்றியும் பேசுகிறது. சைவ சித்தாந்தம் பற்றிய 800 பக்கத் தொகுப்புதான் 8-ம் தொகுதி. 9-ல் சைவ மடாலயங்கள், அமைப்புகள் குறித்தும், அவற்றுக்குக் காரணமான பெரியோர்கள் குறித்துமான தகவல்கள். 10-ல் நன்றியுரைகளும், பொருளடக்கமும்.

ஒற்றுப் பிழை என்று ஒன்றைக்கூடச் சுட்டிக்காட்ட முடியாத அளவுக்குத் திருத்தமான பதிப்பு, ஆங்காங்கே வண்ணப் படங்கள், சித்திரங்கள், கண்களை உறுத்தாத, பெரிய அளவிலான வடிவமைப்பு, ஒவ்வொரு தொகுப்புக்கும் அழகிய சிற்பத்தைத் தாங்கிய அட்டைப் படம் என வெளிவந்திருக்கும் சைவ சமயக் கலைக்களஞ்சியம், உண்மையிலேயே ஓர் அற்புதமான ஆன்மிகப் பொக்கிஷம்!

சமய இலக்கியத்தில் ஒரு சாதனை!

தமிழின் தாகமும் தேடலும் சமயத்துடன் இணைந்து, இந்தத் தமிழறிஞரைத் தூண்டிவிட்டு, அசாதாரணமாக ஒளிரச் செய்திருக்கிறது என்றே சொல்லவேண்டும். பொருளாதார அடிப்படையில் தனிப்பட்ட அன்பர்கள் சிலரும், மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம் மற்றும் மாங்காடு ஸ்ரீகாமாட்சி அம்மன் ஆலய நிர்வாகத்தினரும் இந்த நூல் வெளிவர ஆரம்ப கால உதவிகளைச் செய்திருக்கிறார்கள். ரூ.15,000/-க்கு ஒரு மாபெரும் பொக்கிஷம் கிடைக்கிறது என்றால், அது சைவ சமயக் கலைக்களஞ்சியம் எனும் இந்த நூலைத் தவிர வேறொன்றாக இருக்கமுடியாது. இந்தப் புத்தகத்தை வாங்குவோருக்கு வரிவிலக்கும் உண்டு என்கிறது, இந்த நூலை வெளியிட்டுள்ள 'தெய்வச் சேக்கிழார் மனிதவள மேம்பாட்டு அறக்கட்டளை’.

'எமது கடமையை யார் ஆற்றுவார்?’ என்று மறையும் கதிரவன் கேட்டபோது, 'என்னால் ஆனதைச் செய்வேன், தலைவ’ என்றதாம் அகல் விளக்கு. பேராசிரியர் இரா.செல்வக்கணபதி ஏற்றி வைத்திருப்பதோ, சாதாரண அகல் விளக்கல்ல; திருவண்ணாமலை ஜோதி! அந்த ஜோதி மேன்மேலும் சுடர்விட்டுப் பிரகாசிக்க நமது பங்களிப்பும் தேவை. இதுபோன்று இன்னும் பல ஆன்மிகப் பொக்கிஷங்கள் உருவாக ஊக்கமளிப்பது நமது கடமை!

படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்

'இறைவன் தந்த பணி இது..!’

'இந்து சமயத்தைவிடவும் சிறிய சமயங்கள் குறித்த கலைக்களஞ்சியங்கள் எல்லாம் மிகச் சிறப்பாக வெளிவந்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். ஜைன சமயம் குறித்தும் விரிவான தொகுப்பு நூல் உண்டு. ஆனால், நமது மதத்துக்கு அப்படியான நூல் ஒன்று இல்லையே என்பது பெரும் குறையாகப்பட்டது. தமிழக அரசு தொகுத்த கலைக் களஞ்சியத்திலும்கூட சைவ சமயத் தகவல்களுக்கு அதிக இடம் அளிக்கப்பட்டிருக்கவில்லை.

ஸ்ரீலங்காவில் இருந்து வெளியான இந்து சமயக் கலைக்களஞ்சியம் பார்த்தேன். மிகச் சிறிய நாடான அவர்களே நமது சமயம் குறித்த கலைக்களஞ்சியத்தைச் சிறப்பாகக் கொண்டுவந்திருக்கும்போது, நாம் நம் சமயத்துக்கு ஏதாவது செய்ய வேண்டாமா என்று தோன்றியது. அவ்வகையில், பத்து ஆண்டுகளாக நான் கண்ட கனவுதான் நனவாகியிருக்கிறது'' என்கிறார் பேராசிரியர் இரா.செல்வக்கணபதி.

சமய இலக்கியத்தில் ஒரு சாதனை!

''2006-ல் விநாயக சதுர்த்தி அன்று இந்தப் பணிக்குப் பிள்ளையார் சுழி போட்டோம். மெள்ள மெள்ள தொகுப்புப் பணி வளர்ந்தது. இடையே இதய நோய் தாக்கி, மருத்துவமனையில் சில காலம் இருந்தேன். மீண்டு வரும்வரையிலும் இதுதான் என் ஒரே சிந்தனையாக இருந்தது. அந்தத் தருணத்தில், என் மனைவி மிகத் துணையாக இருந்து, என் பணி தடங்கல் இல்லாமல் தொடர உதவினார்'' என்கிறார் இரா.செல்வக்கணபதி.

தன் மனைவி புலவர் சந்திரா மட்டுமின்றி, தொகுப்புக்கு உதவிய அத்தனை அன்பர்களின் புகைப்படங்களையும், அவர்களது பங்களிப்பை யும் நூலில் பதிவு செய்திருப்பது சிறப்பம்சம்.

''மகேசன் தந்த பெரிய பணி இது! தடைகள் வரும் போதெல்லாம் தமிழ்த் தாத்தா உ.வே.சா., தமிழில் கலைக்களஞ்சியம் தொகுத்து அளித்த பெ.தூரன் போன்ற பெரியோர்களின் பணிகளை நினைத்துப் பார்ப்பேன். புதிய உத்வேகம் கிடைக்கும்; உற்சாகமாகப் பணி தொடரும்'' என்று புன்னகைக்கும் இரா.செல்வக் கணபதிக்கு சொந்த ஊர் மயிலாடுதுறை.

மலேஷியா, சிங்கப்பூர், இலங்கை என்று இவர் சொற்பொழிவு ஆற்றாத மேடைகள் இல்லை. திருவாசகப் பேருரை (10 மணி நேரம்), பன்னிரு திருமுறைகள் (பாடல்களோடு 30 மணி நேரம்), கம்ப ராமாயணப் பேருரை (20 மணி நேரம்), பெரிய புராணப் பேருரை (52 மணி நேரம்) ஆகிய தலைப்புகளில் வெளியாகியுள்ள குறுந்தகடுகள் மூலம், உலகத் தமிழர்கள் வசிக்கும் இடங்கள் எல்லாம் இவர் குரல் ஒலிக்கிறது. யாழ்ப்பாண நல்லூர் ஆதீனம் இவருக்கு 'செந்தமிழ் வாரிதி’  என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. லண்டன் முருகன் கோயில், 'சிவஞான கலாநிதி’ என்ற அடைச்சொல்லால் பாராட்டியிருக்கிறது. மேலும் டர்பன், டெல்லி, உஸ்மானியா என்று 18 பல்கலைக் கழகங்கள் இவருடைய திறனை அங்கீகரித்திருக்கின்றன.ஆனாலும், ''சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் வித்துவான் படிப்பில் முதலாவதாக வந்து (1965-ல்) 1,000 ரூபாய் பரிசு பெற்றதையே பெரிதாகக் கருதுகிறேன்'' என்கிறார் பேராசிரியர் இரா.செல்வக்கணபதி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism