வாசகர் பக்கம்
Published:Updated:

விதைக்குள் விருட்சம் - 14

மனம் காக்கும் மாமருந்து!சேவாரத்னா டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி, ஓவியங்கள்: அரஸ்

ன்றாட வாழ்க்கையில் ஏற்படும் ஆயிரம் பிரச்னைகளுக்கு மூலகாரணம் தகுதிக்கு மீறிய பேராசையும், அது நிறைவேறாமல் போவதால் ஏற்படும் ஏமாற்றமும் துயரமும்தான். இந்தப் புதை மணலில் சிக்காமல் தப்பிக்க ஒரே வழி, மன நிறைவு அல்லது திருப்தி எனும் அற்புத சக்தியை வளர்த்துக் கொள்வதுதான்.

வ்வொரு மனிதனுக்குள்ளும் இறைவன் வைத்திருக்கும் பொக்கிஷமான சக்திகளில் திருப்தியும் ஒன்று. இது வெளியிலிருந்து வரும் இயல்பு அல்ல; நமக்குள்ளேயே இருக்கும் மகத்தான மானிட சக்தி! 'மனநிறைவு என்பது இயற்கையாக நம்மிடம் உள்ள செல்வம்; ஆடம்பரம் என்பது நாமே தேடிக்கொள்ளும் வறுமை’ என்று கிரேக்க ஞானி சாக்ரடீஸ் கூறியுள்ளார்.

நாம் நினைத்தது நினைத்தபடி நடக்கும்போதும், வாழ்க்கைச் சம்பவங்கள் நமக்குச் சாதகமாக அமையும்போதும் ஏற்படும் மகிழ்ச்சியின் பரிமாணம்தான் மனநிறைவைத் தருகிறது. 'எல்லாம் நல்லபடியாக நடக்கிறது. இதற்கு மேல் எதுவும் தேவையில்லை’ என்ற எண்ணம் வெளிப்படும்போது, மனநிறைவு அல்லது திருப்தி ஏற்படுகிறது.

விதைக்குள் விருட்சம் - 14

குறிக்கோள்

ஒவ்வொருவரும் அவரவர் சக்திக்கும் சாமர்த்தியத்துக்கும் பொருந்தும் உயரிய குறிக்கோள்களை நிர்ணயித்துக்கொண்டு, அதற்காகச் செயல்படும்போது, கண்டிப்பாக மனநிறைவு ஏற்படும். உதாரணமாக, மருத்துவம் படித்த ஒருவர், 'நான் மிகச் சிறந்த மருத்துவனாகி, மக்களுக்குச் சேவை செய்து, பெயரும் புகழும் அடைவேன்’ என்று உறுதிகொண்டால், அது நல்ல குறிக்கோளாக அமைகிறது. இது பேராசை ஆகாது. இந்தக் குறிக்கோளில், தன்னைத் திருப்திப்படுத்தும் சுயநலத்தோடு, பிறரைத் திருப்திப்படுத்தும் பொதுநலமும் கலந்துள்ளது.

செல்வம்

'செல்வம் பெருமளவில் சேர்ந்துவிட்டால், தேவைகளும் ஆடம்பர வாழ்க்கையின் ஆதாரங்களும் பூர்த்தி செய்யப்படும்.அதனால் பெருமகிழ்ச்சியும், மனநிறைவும் ஏற்படும்’ என்று பலரும் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இது ஓர் ஏழையின் சிந்தனையாகவே இருக்கும். ஆனால், பணக்காரர்களைக் கேட்டுப் பாருங்கள்... 'எல்லாம் இருக்கிறது. ஆனால், எதுவுமே இல்லை என்கிற விரக்தி உணர்வுதான் மேலோங்கி நிற்கிறது. பணம் பெருமளவில் இருப்பதால், அதைப் பாதுகாப்பது எப்படி என்ற சிந்தனையும் பயமுமே மனத்தை ஆக்கிரமித்துள்ளது’ என்று பதில் வரும்.

'பிரச்னோத்திர ரத்ன மாலிகா’ என்ற நூல் ஒன்று உண்டு. சீடர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஆதிசங்கரர் ஓரிரு வரிகளில் அளித்த பதில்களின் தொகுப்புதான் அது. 'யார் பணக்காரன்? யார் ஏழை?’ என்ற கேள்விக்கு, ''பொன்- பொருளை ஏராளமாக வைத்துக்கொண்டு, 'இது போதாது; இன்னும் வேண்டும்’ என்று எண்ணுபவர்களே பரம ஏழை. இருப்பதை வைத்துக்கொண்டு திருப்தியோடு வாழ்பவனே பணக்காரன்'' என்று பதில் சொல்லியிருக்கிறார் ஆதிசங்கரர்.

துன்புறுத்தும் உணர்ச்சிகள்

மனிதனைத் துன்புறுத்தும் ஆழமான உணர்வுகள் பல உண்டு. அவை கோபம், வெறுப்பு, பொறாமை, விரக்தி, ஏமாற்றம், வெட்கம், குற்ற உணர்வு, எரிச்சல், சலிப்பு, ஆத்திரம், ஆவேசம், எதிர்மறைச் சிந்தனைகள், சோம்பல், வலி, பயம், பீதி ஆகியவை முக்கியமானவை. பிரச்னைகளில் சிக்கிக்கொண்டவர்கள் அனைவருமே இந்தத் துயர உணர்வுகளால் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இந்த உணர்ச்சிகளுக்கு என்ன காரணம் என்று சிந்தித்தால், 'நமக்குத் திருப்தி அல்லது மன நிறைவு என்கிற உயர்ந்த சக்தியை இறைவன் கொடுத்திருந்தும், அதனைத் தெரிந்துகொள்ளாத, பயன்படுத்தாத நமது அறியாமைதான்’ என்பது தெளிவாகும்.

எது மன நிறைவு?

பொருளாதாரத்தை ஆதாரமாக வைத்தே தேசத்தின் வளர்ச்சியைக் கணக்கிடுகிறது அமெரிக்கா. தேவைகளையும் ஆடம்பரங்களையும் பூர்த்திசெய்த பிறகு, எஞ்சியிருக்கும் பணத்தைச் செலவிடக்கூடிய பணம் (disposable income) என்று அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த வகை பணம் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அதை வைத்தே பணக்காரர்களின் உலகத் தரம் நிர்ணயிக்கப்படுகிறது.

ஆனால், ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த உண்மைகள் வேறு! மிக அதிக அளவில் செலவழிக்கக்கூடிய பணத்தைச் சேர்த்து வைத்தவர்கள், வயதான காலத்தில் முதுமையின் தளர்ச்சி, நோய், தனிமை போன்ற துயரங்களால் தவிக்கும்போது, இந்தப் பணத்தின் மூலம் அவர்களால் மன இறுக்கத்தில் இருந்து வெளிவர முடிவதில்லை. அப்போது அவர்கள் தேடுவது நல்ல உறவை, நல்ல நண்பர்களை, பாசத்தை, நேசத்தை, ஆரோக்கியத்தை, மன அமைதியை, மன நிறைவை என்பது ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.

'திருப்தி அல்லது மனநிறைவு என்பது, உனது விருப்பங்கள் பூர்த்தியாவதால் ஏற்படும் உணர்வு அல்ல; உன்னிடம் என்ன இருக்கிறது என்பதை அறிந்து மகிழ்வதே திருப்தி!’ என்று ரஷ்ய பேரறிஞர் டால்ஸ்டாய் கூறியுள்ளார். நம்மிடம் இல்லாத பொருள்களுக்காக ஏங்குவதைவிட, இருக்கும் பொருள்களை எண்ணி மகிழ்வதே மன நிறைவாகும்.

அரிதான மானிடப் பிறவி

'இருப்பதைக் கொண்டு திருப்திப்படு’ என்றால், எதையும் விரும்பாதே, எதற்காகவும் முயற்சி செய்யாதே, வாழ்வை வளப்படுத்த ஆசைப்படாதே என்பது பொருளல்ல.

'மானிடப் பிறவி மிக அரியது. அதை முழுமையாகப் பயன்படுத்தி, வாழ்க்கையின் முன்னேற்றத்தைக் குறிக்கோளாகக் கொள். அயராது உழைக்க வேண்டும். இடையறாது முயற்சிக்க வேண்டும். வெற்றியின் சிகரங்களில் ஏறிக்கொண்டே இருக்க வேண்டும். இதில் தோற்றாலும் அது நல்ல படிப்பினை, பயிற்சி, அனுபவம் என்று திருப்திப்பட வேண்டும். 'திருப்தி’ என்ற மனித இயல்பு இதற்கு முரண்பாடானது அல்ல.

நம் தகுதி என்ன, திறமை என்ன என்பதைத் தெரிந்துகொண்டு குறிக்கோள்களை நிர்ணயித்துக் கொண்டு, அவற்றை அடைய முயற்சி செய்ய வேண்டும். இப்போது நாம் வெற்றி பெறும் வாய்ப்பு மிக அதிகம். அதில் கிடைக்கும் ஆனந்தமே மனநிறைவுக்கு ஆதாரம். 'உலகில் பெரும்பாலானவர்கள் மகிழ்ச்சியைத் தேடுகிறார் கள்; ஆனால், மனநிறைவைத் தேடுவதில்லை. மனநிறைவைத் தேடுங்கள்; மகிழ்ச்சி தானே வரும்!’ என்கிறார் ஸ்வாமி சிவானந்தா

போதுமென்ற மனம்

சாப்பிடும்போது சிலர் தன் தட்டைப் பார்க்காமல், அடுத்தவன் தட்டைப் பார்ப்பார்கள். அதில் என்னென்ன பதார்த்தங்கள் உள்ளன, அவையெல்லாம் தனது தட்டிலும் இருக்கிறதா என்று மனம் ஆராயும். சாப்பிடும் நோக்கமே அப்போது கெட்டுவிடும். ஒருவனுக்கு எவ்வளவு பணம் கொடுத்தாலும், இன்னும் கிடைத்தால் நன்றாயிருக்குமே என எண்ணுவான். துணி, ஆபரணம், அணிகலன்கள் எல்லாமே எவ்வளவு இருந்தாலும் திருப்தி தராது. 'இது போதும்’ என்று சொல்ல மனம் வராது. சாப்பாடு ஒன்றில் மட்டுமே இது போதும், இனி வேண்டாம் என்று சொல்வோம். சுவையான விருந்தில்கூட, எல்லாவற்றையும் சுவைத்துச் சாப்பிட்ட பின், 'இன்னும் கொஞ்சம் பாயசம் சாப்பிடுங்கள்’ என்று உபசரித்தால், 'போதும். வயிறு நிறைந்துவிட்டது. இனி ஒரு பருக்கைகூட சாப்பிட முடியாது’ என்று சொல்வோம். இங்கேதான் இறைவன் நமக்குக் கொடுத்துள்ள 'திருப்தி’ எனும் மகத்தான சக்தி வெளிப்படுகிறது.

'பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்’
என்று வள்ளுவர் கூறியுள்ளார்.

மெல்லிய மயிலிறகே ஆனாலும், அதை அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால், வண்டியின் அச்சு முறிந்துபோகும். அதுபோல், எந்தப் பொருளும், அது உணவானாலும், பணமானாலும், பொன்னானாலும், சொத்து- சுகமானாலும் அளவுக்கு மீறினால் துன்பமே! இந்தத் துன்பத்திலிருந்து நம்மைக் காக்கக்கூடிய உன்னத சக்தி, இது போதும் என்கிற மன நிறைவுதான்!

(விருட்சம் வளரும்)

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன

'ஏழு ஷாடிகள்’ கதை

ரு கிராமத்தில், கந்தன் என்ற வியாபாரி இருந்தான். பணம் சேர்ப்பதிலேயே குறிக்கோளாக இருந்து, நிறைய செல்வங்களைச் சேர்த்தான். இருந்தாலும் திருப்தி அடையாமல், மேலும் மேலும் பொன்னும் பொருளும் சேர்க்க ஆசைப்பட்டான்.

விதைக்குள் விருட்சம் - 14

ஒரு நாள், பக்கத்து ஊரில் வியாபாரம் செய்து விட்டு ஊர் திரும்புவதற்குள் இரவாகிவிட்டது. எனவே, வழியில் பாழடைந்த மண்டபம் ஒன்றில் தங்கினான். நள்ளிரவில் ஒரு பூதம் தோன்றியது. ''கந்தா! நீ அதிர்ஷ்டக்காரன். என்னிடம் ஏழு ஜாடிகளில் பொன்னும் பொருளும் உள்ளன. இவை உனக்குத்தான்! இவற்றை நீ எடுத்துச் செல். இதில், ஆறு ஜாடிகளில் பாதியளவே பொன்- பொருள் உள்ளன. ஏழாவது ஜாடியில் முக்கால் அளவு செல்வம் உள்ளது. இதை இப்படியே நீ உனதாக்கிக் கொண்டு செலவழித்து மகிழலாம்.

அல்லது, நீ இதுவரை சம்பாதித்த பொருளையெல்லாம் பணமாக்கி, ஏழாவது ஜாடியை நிரப்ப முயற்சி செய். அது நிரம்பியவுடன் மற்ற ஆறு ஜாடிகளிலும் தானாகவே பொன்- பொருள் நிரம்பி வழியும். ஆனால், அடுத்த மூன்று மாதங்களுக்குள் ஏழாவது ஜாடியை உன்னால் நிரப்ப முடியாவிட்டால், எல்லா ஜாடிகளும் மறைந்துவிடும்'' என்று கூறிவிட்டு அந்த பூதம் மறைந்துபோனது.

மறுநாள், அந்த ஏழு ஜாடிகளையும் வீட்டுக்கு எடுத்துச் சென்றான் கந்தன். ஒரு வார காலத்துக்குள் தனது வீடு, வாசல், தோட்டம் எல்லாவற்றையும் விற்றுப் பொன்னாக்கி, ஏழாவது ஜாடியில் போட்டான். ஜாடி நிரம்பவில்லை. மேலும் வியாபாரம் செய்து ஈட்டிய பொருள்களையெல்லாம் ஏழாவது ஜாடியில் போட்டான். அப்போதும் அது நிரம்பவில்லை. பூதம் சொன்ன காலக்கெடு முடிந்தது. அப்போதும் ஏழாவது ஜாடி நிரம்பாததால், பூதம் சொன்னதுபோல் ஏழு ஜாடிகளும் மறைந்துவிட்டன.

பாவம் கந்தன்... எப்போதுமே அந்த ஏழாவது ஜாடி நிரம்பாது என்பது அந்த பூதத்துக்குத் தெரியும். இவனுக்குத் தெரியாது!

'இருப்பதை மறந்து, பறப்பதைத் தேடாதே!’ என்பது பழமொழி. கிடைத்ததைக் கொண்டு திருப்திப்படாமல், பேராசை கொண்டு வாழ்ந்தால் இந்தக் கதிதான்!