றவுகள்! ஈடு இணை சொல்ல முடியாதவை. இதை நமக்கு உணர்த்து வதற்காகவே, உலகத்தில் வேறு எங்கும் இல்லாத முறையில், தெய்வங் களுக்கும் உறவு முறையைக் கற்பித்தார்கள் நமது முன்னோர்கள்.

சிவபெருமான், அவர் மனைவி பார்வதி. அவர்களுக்கு விநாயகர், முருகன் எனப் புத்திரர்கள். அந்த குழந்தைகளுக்கு ஸ்ரீமஹாவிஷ்ணு தாய் மாமன். அவரின் மனைவி ஸ்ரீமஹாலட்சுமி என நீண்டு கொண்டே போகிறது இந்த உறவு முறை. இவ்வாறு, தெய்வங்களுக்கும் உறவு முறைகளைக் கற்பித்த கலாசாரத்தை, உலகில் வேறெங்கும் காண முடியாது. இந்த நினைவிலேயே வாருங்கள்!  நமக்கு வாய்த்த உறவு முறைகளைப் பற்றிப் பார்க்கலாம்.

தாயோடு அறுசுவைபோம்
  தந்தையொடு கல்வி போம்
சேயோடு தான் பெற்ற
  செல்வம் போம்  மாய வாழ்வு
உற்றாருடன் போம் உடன் பிறப்பால்
  தோள் வலி போம்
பொற்றாலியோடு எவையும் போம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இப்பாடல் அறுசுவையில் தொடங்கி ஆறு விதமான தகவல்களை விவரித்து, ஆறு விதமான உறவு முறைகளையும் கூறுகிறது.

உறவுமுறைகளிலேயே மிக முக்கியமானது  தாயார். 'மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ;’, 'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்பவற்றில் எல்லாம், முதலில் தாயைத்தான் குறிப்பிடுவார்கள். நம்மை உலகத்துக்கு அறிமுகப்படுத்தியவர் தாய். நமக்கு, உலகத்தில் முதன் முதலில் அறிமுகமானவரும் தாய்தான். மகான்களாகிய ஆதிசங்கரரும், பட்டினத்தாரும் தாயாரின் பெருமைகளைப் பற்றிக் கூறிப் புலம்பிய புலம்பல்கள் உலகப் பிரசித்தம்.

பாடல் சொல்லும் பாடம்!

தாயாரைப் பற்றித் தனி நூலே எழுதலாம்.  அப்படி எழுதினாலும், அது முழுமை பெறாது. அந்த அளவிற்குத் தாயின் பெருமை, அளவில் அடங்காது. அதனால்தான், இப்பாடல் தொடங்கும்போதே, தாயைச் சொல்லித் தொடங்குகிறது.

நாம் பிறந்த உடனேயே நமக்குப் பாலூட்டிய தாய், அதன் பிறகு நமக்கு அறுசுவை உணவளித்துப் பராமரிக்கிறார்.

கைப்பு, தித்திப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு என்னும் ஆறு சுவைகளும் அடங்கியதே அறுசுவை உணவு. இவற்றில் ஒவ்வொரு சுவையும் ஒவ்வொரு விதத்தில் நமக்கு ஆரோக்கியத்தை அளிக்கும்.

அதுமட்டுமல்ல! குழந்தைக்கு எப்போது பசிக்கும் என்பது, தாய்க்கு மட்டுமே தெரியும். அந்த நேரத்தில் தாய்க்கு ஆயிரம் வேலைகள் இருந்தாலும், அவள் குழந்தையின் பசியை நினைத்துப் பாலூட்டப் போய்விடுவாள். 'பால் நினைந்தூட்டும் தாய்’ என மாணிக்கவாசகர் குறிப்பதும் இதுவே. இப்படி வளர்த்த தாய் போய்விட்டால், ஆரோக்கியமும் அன்பும் போய்விடும்.

ஆகவேதான், 'தாயோடு அறுசுவைபோம்...’ என்கிறார்.

அடுத்து தந்தை; தந்தை போய்விட்டால், கல்வியும் போய்விடும். தந்தை படிக்காதவராக இருந்தாலும், தன் பிள்ளை நன்கு படிக்க வேண்டும் என விரும்புவார். அதற்காகப் படாதபாடுபடுவார். கல்வி என்றால், நூல் படிப்பையோ பள்ளிப் படிப்பையோ மட்டும் உணர்த்தாது.  தந்தை  நம்மைப் பற்றி நன்கு தெரிந்தவர்; நம் நலனில் அக்கறை உள்ளவர். நமது செயல்பாடுகளின் நன்மை தீமை அறிந்து, பலாபலன்களைத் தன் அனுபவத்தின் மூலம் சொல்லி நமக்கு அறிவுறுத்துவார். குடும்பச் சூழ்நிலை, அதில் வரும் பிரச்னைகளைச்  சமாளித்து வெளியில் வரும் வழிவகைகள் ஆகியவற்றை, நம்மைப் பற்றி நன்கு அறிந்த தந்தையால் மட்டுமே கூற முடியும்.

கல்வி என்ற சொல்லுக்கே, அறியாமையைக் 'கல்லி’ நீக்குவது என்பது பொருள்.  அப்படிப்பட்ட 'கல்வி’, தந்தை போய்விட்டால் அவருடன் போய்விடும். ஆகையால்,  தந்தையொடு கல்வி போம்!

அடுத்து செல்வம்! என்னதான் இருந்தாலும், செல்வம் பொருள் என்பது இல்லையேல், என்ன பயன்? சரி! பொருள் என்றால், அது என்ன? காசு  பணம்  வீடு நிலம்  மற்ற சொத்து எனும் இவையே பொருள் என்பது நம் எண்ணம்.  ஆனால், வள்ளுவர் இதை மறுக்கிறார்; 'தம் பொருள் என்ப தம் மக்கள்’ (63) என்கிறார் அவர். அதாவது நம்முடைய பொருள் என்பது- நம் பிள்ளைகள், நம் குழந்தைகளே!

படாத பாடுபட்டு குடும்பத்தை ஓரளவுக்கு சற்று தூக்கி மேலே நிறுத்தும்போது, மேல் மாடியில் காற்று சற்று அதிகம் வீசுமே... அதுபோன்று  சில பிரச்னைகள் அதிகமாகவே வந்து பாதிக்கும். அப்போது, அனுபவ அறிவு இருந்தாலும், அதைப் பயன்படுத்தி அந்தப் பிரச்னைகளில் இருந்து மீண்டுவர, உடல் பலம் இடம்கொடுக்காது. அந்த நேரத்தில், நம்மையும் குடும்பத்தையும் செயல்படுத்தி, தூக்கி நிறுத்துவது நம் பிள்ளைகள்தான். அப்படிப்பட்ட குழந்தைகளுடன், நாம் பெற்ற செல்வமும் போய்விடும்- சேயோடு தான் பெற்ற செல்வம் போம்!

பாடல் சொல்லும் பாடம்!

இவை மட்டும்தானா? வேறெதுவும் இல்லையா?  இருக்கிறது...

'மாய வாழ்வு உற்றாருடன் போம்’

யாராவது முக்கியஸ்தர்களைச் சொல்லி, 'அவர் எனக்கு சொந்தக்காரர், இவர் எனக்கு உறவுக்காரர்’ என்றெல்லாம் பறைசாற்றுவோம். அவர்களால் நமக்குப் பலன் இருக்கிறதோ இல்லையோ, அது வேறு. ஆனால் அவர்களின் உறவு என்ற முறையில் நமக்கு, ஓரளவுக்காவது மதிப்பு-மரியாதை இருக்கும். அப்படிப்பட்ட அந்த உறவுகள் போய்விட்டால், பெருமை பாராட்டும் அந்த வாழ்வும் போய்விடும். அடுத்து... உடன்பிறப்பு.

'உடன்பிறப்பால் தோள்வலி போம்’  இதிகாச புராணங்கள் பலவும் சொல்லும் உண்மை இது.

ராமாயணத்தில் ராவணனுக்கு, கும்பகர்ணனும் விபீஷணனும். விபீஷணனாவது சாத்விகமான முறையில் அமைதியாக அறிவுரை - அறவுரை சொன்னான். ஆனால் கும்பகர்ணனோ, 'அண்ணா!  அவர்கள் என்னை வென்றுவிட்டால், அதன் பிறகு, ராம- லட்சுமணர்களுக்கு நீ ஒரு பொருட்டே அல்ல. ஆகையால், நான் இறந்த பிறகாவது சீதையை அவர்களிடம் விட்டு விட்டுத் திருந்தப் பார்!' என்கிறான்.  பலனில்லை.  விளைவு? கும்பகர்ணன் சொன்னபடியே ஆயிற்று.  அதே நேரம்... வனவாசம் வந்த ராமர், தன் சகோதரர்களை அரவணைத்துக் கொண்டது மட்டுமல்லாமல், குகன், சுக்ரீவன், விபீஷணன்... என, தன் சகோதர வட்டத்தை விரிவுபடுத்தினார்.

அவ்வாறு, நம்மால் சகோதர வட்டத்தை விரிவுபடுத்த முடியாவிட்டாலும், இருக்கும் வட்டத்துடனாவது ஒற்றுமையாக இருக்க முயலலாமே! சகோதர வட்டம் போய்விட்டால், நம் செயல்திறன், தோள் ஆற்றல் போய்விடும்.

இவ்வாறு, ஒவ்வோர் உறவு முறையாகச் சொல்லி, அவற்றின் இழப்பால் என்னென்ன இழப்பு நேரிடும் என்று சொல்லிக்கொண்டு வந்த பாடல், ஒட்டுமொத்தமாக ஒன்றைச் சொல்லி நிறைவு செய்கிறது.  உதாரணமாக... ஒவ்வொரு கடையில், ஒவ்வொன்று கிடைக்கும். 'சூப்பர் மார்க்கெட்’டில் எல்லாம் கிடைக்கும் அல்லவா..?  அது போல!

ஒவ்வோர் உறவையும் இழக்கும்போது, ஒவ்வொன்றை இழப்போம்.  ஆனால், மனைவி என்ற உறவை இழக்கும்போது, எல்லாவற்றையும் இழந்துபோய்விடுவோம். அறுசுவை, அனுபவக்கல்வி, செல்வம், பெருமை மிக்க வாழ்வு, ஆற்றல் என அனைத்தையும் இழப்போம்.

'பொற்றாலியொடு எவையும் போம்’

இத்தகவல், படித்தவர்கள் மத்தியில் பரவி இருக்கிறதோ இல்லையோ, தெரியாது. ஆனால், இன்றும் கிராமப்புறங்களில் யாராவது மிகுந்த சோகத்தில் இருக்கும்போது, 'என்னடா ஆச்சு!  பொண்டாட்டியப் பறி குடுத்த மாதிரி  இருக்க..?' என்பார்கள். மனைவி போய்விட்டால், அனைத்துமே போய்விடும் என்பதைப் பாமரர்கள்கூடப் புரிந்துகொண்டிருந்த காலம் அது.

தலை சிறந்த தமிழ் ஆராய்ச்சி அறிஞரான மு.ராகவையங்கார் அவர்களால் தொகுக்கப்பட்ட 'பெருந்தொகை’ எனும் நூலில் இடம் பெற்றுள்ளது இப்பாடல். உறவு முறைகளைச் சொல்லி, அவற்றின் இழப்பால் ஏற்படும் விளைவுகளைச் சொல்லி நம்மை எச்சரிக்கும் இப்பாடல், ஒளவையார் எழுதியதாகக் குறிப்பிடுகிறது நூல்.

புரிந்து நடந்து கொள்ள வேண்டியது நமது பொறுப்பு!

- இன்னும் படிப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism