Published:Updated:

ஆலயம் தேடுவோம்...

குணபரணீஸ்வரருக்கு நிதி தருவோம்!குணகரம்பாக்கம் - குணபரணீஸ்வரர்இ.லோகேஸ்வரி

ஆலயம் தேடுவோம்...

குணபரணீஸ்வரருக்கு நிதி தருவோம்!குணகரம்பாக்கம் - குணபரணீஸ்வரர்இ.லோகேஸ்வரி

Published:Updated:

லயங்கள் பக்திப் பயிர் வளர்க்கும் கேந்திரங்களாக மட்டுமல்லாமல், நம்முடைய கலாசாரம், பண்பாடு போன்றவற்றைப் பிரதிபலிப்பதாகவும் திகழ்கின்றன. அப்படிப்பட்ட கோயில் களை நிர்மாணித்ததில் மன்னர்களுக்கும் பங்கு உண்டு; குறிப்பாக, சோழ மன்னர்களுக்குப் பெரும் பங்கு உண்டு.

கி.பி. 871 - 907 காலகட்டத்தில் ஆட்சி செய்த ஆதித்ய சோழன், அவருடைய காலத்தில் 50-க்கும் மேற்பட்ட சிவாலயங்களைக் கட்டினார்.  ஆதித்ய சோழனின் காலத்தில்தான் சோழ அரசு, சிற்றரசு நிலையில் இருந்து விடுபட்டது.

மேற்கே சஹ்யாத்திரி மலை முதல், கிழக்கே வங்கக்கடல் வரை காவிரியின் இரு கரைகளிலும் எண்ணற்ற சிவாலயங்களைக் கட்டுவித்தான் ஆதித்தன் என்று, சுந்தரசோழன் காலத்து அன்பில் செப்பேடுகள் கூறுகின்றன. அதுமட்டுமின்றி, ஆதித்த சோழன் காலத்தில் செங்கல்லால் கட்டப்பட்டிருந்த பல கோயில்கள் கற்றளிகளாக மாற்றியமைக்கப்பட்டன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆலயம் தேடுவோம்...

ஆதித்ய சோழனால் கட்டப்பட்ட கோயில்களில், இதோ இப்போது நாம் தரிசித்துக்கொண்டிருக்கும் குணகரம்பாக்கம் ஸ்ரீகுணபரணீஸ்வரர் திருக்கோயிலும் ஒன்று.  

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அருகேயுள்ள குணகரம்பாக்கத்தில் எழுந்தருளி யிருக்கும் குணபரணீஸ்வரர் கோயில், கி.பி.883-ல் ஆதித்ய சோழனால் கற்றளிக் கோயிலாகக் கட்டப்பட்டது.  காலப் போக்கில், கவனிப்பார் இல்லாமல் சிதிலம் அடைந்தது அது. சில நூறு வருடங்களாகவே பாழ்பட்ட நிலையில் இருந்த அந்தக் கோயில், 18 ஆண்டுகளுக்கு முன்பிருந்துதான் கொஞ்சம் மாறத் தொடங்கியது. அப்போதிருந்துதான் குணபரணீஸ்வரருக்கு, ஒருவேளை பூஜையாகிலும் நடந்து வருகிறது. மூன்று வருடங்களுக்கு முன்னர் பாலாலயம் செய்யப்பட்டு, கோயில் திருப்பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

கோயிலுக்குச் சரியான பராமரிப்பு இல்லாததால், இந்தக் கோயிலில் இருந்த அம்பாள் சிலை காணாமல் போய்விட்டது. இங்கு உள்ள யாருக்கும் அது பற்றிய மேல் விவரங்கள் தெரியவில்லை. சிவலிங்கம் தவிர விநாயகர் மற்றும் சண்டிகேஸ்வரரின் சிலைகள் மட்டுமே உள்ளன. அந்தச் சிலைகளும் உடைந்திருப்பதால், சிவலிங்கத்துக்கு மட்டும் அருகிலுள்ள விநாயகர் கோயிலில்  பாலாலயம் செய்து வழிபட்டு வருகின்றனர்.

மூன்று வருடங்களுக்கு முன்னர், 'திருவண்ணாமலை கிரிவலக் குழு’ என்ற அமைப்பினரை இந்தக் கோயிலுக்கு அழைத்து வந்து, திருவாசகம் பாடவைத்தனர் குணகரம்பாக்கம் கிராமத்து மக்கள். அப்போது, திருவண்ணாமலை கிரிவலக் குழுவில் இருந்த பெண்மணி ஒருவர், தன் கைகளால் மண்ணைக் கிளறியபடியே இருந்தாராம். அப்போது, ஏதோ தட்டுப்படவே, எல்லோரும் சேர்ந்து அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தார்கள். அங்கே,  ஸ்ரீசோமசுந்தரர், ஸ்ரீஅம்பாள், ஸ்ரீமுருகப் பெருமான் ஆகியோரின் உற்ஸவ விக்கிரகங்களும், பூஜைப் பாத்திரங்களும், இரண்டு பாதுகைகளும் கிடைத்தனவாம்! தற்போது அவை ஸ்ரீபெரும்புதூர் தாலுகா அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.

''எங்கள் ஊரில் 400 குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஊரில் உள்ள எல்லையம்மன் கோயில், விநாயகர் கோயில் என எல்லா கோயில் களையும் பராமரித்து வருகிறோம். ஆனால், ஏனோ தெரியவில்லை... குணபரணீஸ்வரர் கோயிலை மட்டும் யாருமே கண்டுகொள்ளாமல் இருந்து விட்டோம். கோயில் ஊருக்கு வெளியே காட்டுப்பாதையில் இருந்ததால்  யாருமே அந்தக் கோயிலுக்கு அடிக்கடி செல்வதில்லை. ஆனால், 18 வருடங்களுக்கு முன்பு இந்தக் கோயிலை கடந்து செல்லும்போதுதான், இந்தக் கோயிலில் மீண்டும் பூஜைகள் நடைபெறச் செய்ய வேண்டும் என்ற உள்ளுணர்வு தோன்றியது.

அதுமுதல் ஊர் மக்கள் எல்லோரையும் ஒன்றிணைத்து, இங்கே தினமும் பூஜைகள் தொடர்ந்து நடக்க வழிவகை செய்தோம். மற்றும் பிரதோஷம், சிவராத்திரி நாள்களிலும்  பூஜைகள் செய்து வருகின்றோம்.  உழவாரப்பணியில் ஈடுபடும் நண்பர்கள் மூலமாகத்தான் குணபரணீஸ்வரர் கோயிலில் ஆரம்பக்கட்ட கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன'' என்று சொல்லும் கண்ணன், தொடர்ந்து ஊர் மக்களை ஒன்றிணைத்து, கோயில் கும்பாபிஷேகத்துக்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

கோயிலில் அம்பாள் சிலை இல்லாததால், புதிதாக ஒரு அம்பாள் சிலை செய்ய வேண்டும்; அதோடு சேர்த்து விநாயகர், முருகன் மற்றும் சண்டிகேஸ்வரர் சிலைகளையும் செய்து, குணபரணீஸ்வரருக்கு விரைவில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்; குணகரம்பாக்கம் மக்களின் ஒரே பிரார்த்தனை இதுதான்.

ஆலயம் தேடுவோம்...

கோயிலின் முதற்கட்டப் பணிகளின்போது கல்வெட்டு ஒன்று கிடைத்ததாம். விழுப்புரத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஆய்வாளர் வீரராகவனை அழைத்து வந்து அதைக் காட்டியபோது, ''இடைக்கால சோழ  அரசர்களில் கோ ராஜசேகரி பட்டமுடைய ஆதித்தனின் எட்டாவது ஆட்சியாண்டில் மனையிற்கோட்டத்துக் கனறூர் நாட்டுக்குட்பட்ட குணுக்கரனபாக்கம்...'' என்று  அதில் குறிப்பிடப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தார். அப்போதுதான், இது சோழர் காலத்திய கோயில் என்பதை அறிந்தார்களாம் ஊர்மக்கள்.

குணுக்கரனபாக்கம் என்பதே பின்னாளில் மருவி குணகரம்பாக்கம் என்றாகியுள்ளது.

கேட்டதைக் கொடுக்கும் குணபரணீஸ்வரருக்கு விரைவில் கும்பாபிஷேகம் நடந்திட வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்.

பழைமை வாய்ந்த இந்தக் கோயில், திருப்பணிக்குக் காத்திருக்கிறது. பழைமையைப் புதுப்பித்து, ஆலயத்தைச் சீர்படுத்தி, விரைவில் குணபரணீஸ்வரருக்குக் கும்பாபிஷேகம் நடைபெற நம்மால் ஆனதைச் செய்வோம்; சிவனருள் பெறுவோம்!

படங்கள்: க.பாலாஜி

எங்கே இருக்கிறது? எப்படிச் செல்வது?

சென்னைக்கு அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது குணகரம்பாக்கம். சுங்குவார்சத்திரத்தில் இருந்து குணகரம்பாக்கம் செல்ல ஆட்டோ வசதி உள்ளது..

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism