Published:Updated:

கலகல கடைசிப் பக்கம்

சீதா கல்யாணத்தில் அனுமன்?! வீயெஸ்வி, ஓவியம்: சசி

கலகல கடைசிப் பக்கம்

சீதா கல்யாணத்தில் அனுமன்?! வீயெஸ்வி, ஓவியம்: சசி

Published:Updated:

மக்குக் கொஞ்சம் ஓய்வு கிடைத்து, வேலை வெட்டி எதுவும் இல்லாமல், ரொம்பவும் பொழுது போகவில்லை என்றால், நம்மில் பெரும்பாலோர் பழைய போட்டோ ஆல்பங்களைத் தூசி தட்டி எடுத்துத் தரையில் பரப்பி வைத்துக்கொள்வது வழக்கம். முக்கியமாக, பழைய கல்யாண ஆல்பத்தைப் புரட்டிப் பார்ப்பதில் அனைவருக்குமே அதீத ஆர்வம். அதுவும், கோடை விடுமுறையில் ஊரிலிருந்து உறவுகள் வந்து டேரா போட்டிருந்தால், மெகா சீரியல்கள் இல்லாத அனல் வீசும் பகல் வேளைகளில், கல்யாண ஆல்பம்தான் சிறந்த பொழுதுபோக்கு விளையாட்டு!

கலகல கடைசிப் பக்கம்

அப்படித்தான், 40 வருடங்களுக்கு முன் நடந்த தன் கல்யாணத்தை ஏதோ நேற்றுதான் நடந்தது மாதிரி கறுப்பு- வெள்ளை ஆல்பம் கண்முன் நிறுத்த, நண்பரின் முகத்தில் அப்படியொரு மலர்ச்சி! சில போட்டோக்கள் பழுத்துப் போய் மங்கலாகத் தெரிந்தன. வேறு சில, ஓரங்களில் கிழிந்திருந்தன. போட்டோவில் பதிவாகியிருந்த இஷ்ட மித்ர பந்து ஜனங்களை நண்பர் மறக்கவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''இது என் சித்தப்பாவின் சின்ன மாமனார். என்னை அவருக்கு ரொம்பப் பிடிக்கும். இது என்னோட பெரிய அத்தை. இப்ப ஓல்டு ஏஜ் ஹோம்ல இருக்கா. ஒவ்வொரு தீபாவளிக்கும் அங்கே போய் அவகிட்ட வாழ்த்து வாங்கிண்டு வருவேன். சுருக்குப் பைலேர்ந்து பத்து ரூபா எடுத்துக் கொடுப்பா. அவளைப் பொறுத்தவரை விலைவாசி ஏற்றமெல்லாம் கிடையவே கிடையாது! இதோ, ஊஞ்சல் ஓரத்துல சீட்டிப் பாவாடையும் ரெட்டை ஜடைப் பின்னலுமா ஆழாக்கு சைஸ்ல உட்கார்ந்து இருக்கு பார், இது என் மச்சினன் பொண்ணு. அப்போ அதுக்கு மூன்றரை வயசு. இப்போ ஐ.டி. கம்பெனில பெரிய வேலைல இருக்கா. கை நிறையச் சம்பளம்...''

பக்கங்களைப் புரட்டப் புரட்ட, கண்ணில் படுபவர்களையெல்லாம் எனக்கு அறிமுகப்படுத்திக்கொண்டே வந்தார் நண்பர்.

''இந்த போட்டோவைப் பார்... மாமிகளுக்குச் சமமா நின்னுண்டு இந்தப் பொண்ணு பெரிய மனுஷியாட்டம் ஊஞ்சல் பாட்டுப் பாடறதை! இது என் ஷட்டகரோட பெரியப்பா பேத்தி. இப்ப அவ பெரிய பாடகி. ப்ரியம்வதான்னு கேள்விப்பட்டு இருப்பியே... அகாடமில சாயந்திரம் ஸ்லாட்ல பாடறா..!'' என்று நண்பர் பெருமைப்பட்டுக்கொண்டு இருந்தபோது, பூனாவிலிருந்து வந்திருந்த அவருடைய நாலரை வயது பேத்தி குறுக்கிட்டுக் கேட்டாள்...

''நான் மட்டும் ஏன் தாத்தா ஒரு போட்டோவுலகூட இல்லை?''

''போடி வாண்டு! உங்கப்பனே இந்த ஆல்பத்துல இல்லை. அப்புறம் நீ எப்படி இருப்பே? கேட்க வந்துட்டா கேள்வி!'' என, நண்பர் அந்தச் சுட்டியைச் சமாளித்துக் கொண்டிருந்தபோது, எனக்கு தியாகராஜரின் 'சீதா கல்யாணம் வைபோகமே...’ பாடல் நினைவுக்கு வந்தது.

மிதிலையில் ராமனுக்கும் சீதைக்கும் நடந்த திருமணத்தை தியாகராஜர் வர்ணிக்கும் இந்தப் பாடலில், 'பவநஜ ஸ்துதிபாத்ர..’ என்று ஓர் இடத்தில் வரும். அதாவது, 'அனுமனால் துதிக்கப் பெறுபவனே’ என்று பொருள்.

சீதா கல்யாணத்தின்போது அனுமன் அறிமுகமாகவே இல்லையே! பின், எப்படி தியாகராஜர் இந்த பாடலில் அனுமனை நுழைத்தார்?

''அது ரொம்ப சிம்பிள்! வால்மீகி ராமாயணத்தை முழுசா கரைச்சுக் குடிச்சவர் தியாகராஜர். ஸோ, கல்யாணத்துக்கு தன்னுடைய கெஸ்ட் மாதிரி ஆஞ்சநேயரை அழைச்சுட்டு வந்திருப்பாராயிருக்கும்'' என்றார் நண்பர்.

பேத்தியையே சமாளித்தவராயிற்றே... அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism