Published:Updated:

ஸ்ரீரமண மகரிஷி

ஸ்ரீரமண மகரிஷி

ஸ்ரீரமண மகரிஷி

ஸ்ரீரமண மகரிஷி

Published:Updated:
ஸ்ரீரமண மகரிஷி
ஸ்ரீரமண மகரிஷி
ஸ்ரீரமண மகரிஷி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நோயையும் நீக்கி, உள்பார்வையையும் கொடுத்தவரை, குரு என்று அழைக்காமல் வேறு என்னவென்று அழைப்பது? இருட்டிலிருந்து ஒளிக்கு அழைத்து வந்தவரை, குரு என்று அழைக்காமல் வேறு என்ன சொல்லி அழைப்பது? ராமசாமி ஐயர் மனம் கனிந்து விதம் விதமான பாடல்கள் எழுதினார். நேரம் கிடைத்தபோதெல்லாம், திருவண்ணா மலை வந்து ஸ்ரீரமணரைத் தரிசித்தார். இரண்டு மூன்று நாட்கள் அவருடன் இருப்பார். பொதுப்பணி வேலையாக ஒரிஸாவில் இருந்தபோது, கால் எல்லாம் கொப்புளங்களாகிவிட்டன. நடக்க முடியவில்லை. கடுமையான வலி இருந்தது. ''ரமணரே! நீரே சரணம்... நீரே சரணம்'' என்று மனதுக்குள் புலம்பி, அவரைச் சரணமடைந்ததாக ஒரு பாட்டு எழுதினார்.

மறுநாள், திருவண்ணாமலையில் இருந்து நண்பர்கள் சிலர் வந்தனர். அவர்கள் காசிக்குப் போகிறவர்கள். 'வழியில் ராமசாமி ஐயரைப் பார்த்து விட்டு போங்கள்’ என்று பகவான் கட்டளையிட, அதனால் இவரைப் பார்க்க வந்திருந்தனர். இவர் படும் துன்பத்தைப் பார்த்து, கையிலிருந்த ஒரு களிம்பை எடுத்து, இவருடைய காலில் தடவினர். களிம்பைக் கொடுத்துவிட்டுப் போனார்கள். மறுநாளே, கொப்புளங் கள் அடங்கிவிட்டன.

##~##
குருவுக்கும் சீடனுக்கும் இடையே தூரம் என்பதே இல்லை. சீடன் மனதால் நினைக்க, குரு அங்கு தோன்று வார்; நிச்சயம் உதவி செய்வார். ''உனக்குக் கொடுக்கிற நூற்றைம்பது ரூபாய் சம்பளமே தண்டம் என்று உன் மேலதிகாரி சொன்னதாகச் சொன் னாயே, இப்போ இருநூறு ரூபாய் சம்பளம் வந்தால் என்ன சொல்வார்?''. இருநூறு ரூபாய் சம்பளம் வந்தது. உடல் குறை நீக்கி, மனக் குறை நீக்கி, பொருளாதாரக் குறை நீக்கி, சீடரை உள்முகப்படுத்துவது குருவின் வேலை. இருட்டில் இருந்து ஒளிக்கு அழைத்துச் செல்லுதல் என்பது இதுதான்.

இது மட்டும்தானா? லௌகீக வாழ்வில் ஏற்படுகிற சின்னச் சின்ன இடைஞ்சல்களைக் கூட, குரு மிக அழகாக விலக்குவார். பி.கே.சுந்தரம் ஐயர் என்பவரின் மகள் லக்னோவில் அடுக்குமாடிக் குடியிருப்பில், தன் புருஷனுடன் குடியிருந்தாள். 3-வது மாடியில் தண்ணீர் வருவது அரிதாக இருந்தது. அவள் கணவர், பல படிகள் கீழே இறங்கிப் போய், தண்ணீரைச் சுமந்தபடி ஏறி வருவார். அவளுக்குத் தண்ணீர்க் குடத்தைச் சுமந்து வருகின்ற வலிவு இல்லை என்பதால், அத்தனை குடங்களிலும் அவரே நீர் நிரப்பி வைப்பார்; பார்க்கவே பரிதாபமாக இருந்தது.

ஸ்ரீரமண மகரிஷி

புருஷன் படும் வேதனையைக் காணச் சகிக்காதவளாய், அவள் உள்ளுக்குள் குமுறினாள். இந்தப் பிரச்னைக்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை. ராமசாமி ஐயர் எழுதிய சரணாகதிப் பாடலை, குழாய்க்கு முன் உட்கார்ந்து பாடினாள் ஸ்ரீரமணரின் அன்பர்களிடையே பிரபலமாகி இருந்த பாடல் அது. அவள் மனமொன்றிப் பாட, திடீரென்று குழாயிலிருந்து பெருத்த சத்தத்துடன் காற்று வந்து, பிறகு  நீரும் பொங்கி வந்தது. எல்லாக் குடங்களிலும் மகிழ்ச்சியோடு நீர் சேமித்து வைத்தாள்.

'எப்படி இது’ என்று கணவர் வியக்க, தான் ஸ்ரீரமணரை நினைத்துச் சரணாகதிப் பாடல் பாடியதாகவும், குழாயிலிருந்து நீர் வந்ததாகவும் சொன்னாள். 'மறுபடியும் பாடு’ என்று அவள் கணவர் கேட்க, மறுபடியும் பாடினாள். அப்போதும் குழாயில் நீர் வந்தது. ஆனால், வேறு பாடல்கள் பாடியபோது குழாயில் நீர் வரவில்லை. இந்த அதிசயத்தை விருபாக்ஷி குகையில், அந்தப் பெண் குதூகலத்துடன் சொன்னபோது, எல்லோரும் முழுமனதாக நம்பினார்கள்.

சரணாகதிப் பாடல் எழுதிய ராமசாமி ஐயரின் புதல்வி, வரலட்சுமி படம் ஒன்றை வரைந்து பகவா னிடம் காட்டினாள். 'இதை ஏன் அச்சடிக்கக் கூடாது?’

என்று பகவான் கேட்க, பலரிடம் அங்கே இங்கே கடன் வாங்கி, அதை அச்சடித்துப் பலருக்கும் கொடுத்தாள். அந்தக் குழந்தை, பகவானுக்கு நெருக்கமாகப் பழகி வந்தாலும், ஸ்ரீரமணர் கடவுளைப் போன்றவர் என்ற தன்மை அவளிடம் தெளிவாக இருந்தது. அந்த மரியாதையோடே பழகினாள். ராமசாமி ஐயரை குணப்படுத்தியது மட்டுமல்ல, அவரின் பொருளாதாரச் சுமையை நீக்கியது மட்டுமல்ல, அவர் மனதை ஒருமுகப்படுத்தியது மட்டுமல்ல... அவரின் குழந்தைகளையும் பகவான் ஸ்ரீரமணர்தான் காப்பாற்றி வந்தார். தன்னை அண்டிய அன்பர்களின் குடும்பத்தையும் அணைத்துக்கொள்வது மகான்களின் இயல்பு.

தத்துவ விளக்கம் பெற, வாழ்வில் தெளிவு பெற, மகான்களுடன் பேச வேண்டுமா? உரையாடலை கவனித்துத்தான் உள்ளுக்குள் பக்குவப்பட வேண் டுமா? அப்படி ஒன்றும் இல்லை. அரசாங்கத்தில் மேலாளராக வேலை பார்த்த ராகவாச்சாரி என்பவர், தன் மனதுக்குள் மூன்று கேள்விகளுடன் பகவான் எதிரே அமர்ந்திருந்தார். வேலை நேரம் போக, மற்ற நேரங்களில் எல்லாம், அவர் ஸ்ரீரமணரைத்  தேடி வருவது வழக்கம். அங்கே கூட்டத்துக்கு நடுவில், எதுவும் பேசாது மௌனமாய் இருப்பார். ஆனால், மனதுக்குள் கேள்விகள் இருக்கும்.

ஒரு முறை, 'இந்தக் கேள்விகளுக்கு, தயவுசெய்து நீங்கள் விடை அளிக்க வேண்டும்’ என்ற எண்ணத் துடன் பகவான் எதிரே அமர்ந்திருந்தார். ''உங்களைச் சில நிமிடங்கள் நான் தனியாகச் சந்திக்க இயலுமா? தியஸாஃபிகல் சொஸைட்டியைப் பற்றி பகவான் என்ன நினைக்கிறார்? எனக்கு தகுதியிருந்தால், தங்களுடைய உண்மை யான ரூபத்தை எனக்கு காண்பிப்பீர் களா?'' என்கிற வினாக்களோடு உட்கார்ந் திருந்தார். அதுவரை சுற்றியிருந்த கூட்டம் எதனாலேயோ சட்டென்று கலைந்து போயிற்று. ஒவ்வொருவராய் வெவ்வேறு காரணங்களை முன்னிட்டு, அந்த இடம் விட்டு நகர்ந்தனர். ஸ்ரீரமணரும் ராகவாச்சாரியும் தனியே அமரும் நிலை வந்தது. ''உங்கள் கையிலிருக்கும் புத்தகம் என்ன? பகவத் கீதையா? நீங்கள் அதில் உறுப்பினரா? அந்த சொஸைட்டி நல்ல விஷயங்களைச் செய்து வருகிறது'' என்று யாரும் எதுவும் கேட்காமலேயே தானாகப் பேசினார், ரமணர். 'ஆஹா, இரண்டு கேள்விகளுக்குப் பதில் கிடைத்துவிட்டது. அப்படியானால், மூன்றாவது கேள்விக் கும் பதில் கிடைக்கும் அல்லவா? பகவானின் உண்மையான சொரூபம் என்னவென்று காண ஆவலாக இருக்கிறேன்’ என்று குதூகலத்துடன், பகவான் கண்களையே உற்றுப் பார்த்தார், ராகவாச்சாரி.

அப்போது பகவான், சுவரோடு ஒட்டியதொரு மேடையில் அமர்ந்திருந் தார். அவருக்கு அருகே தட்சிணாமூர்த்தி படம் மாட்டப்பட்டிருந்தது. பகவானைப் பார்க்கும் போது, தட்சிணாமூர்த்தி படம் கண்ணில் படாமல் இருக்காது. ஆனால், உற்றுப் பார்க்கப் பார்க்க, உள்ளுக்குள் ஒரு மாற்றம் ஏற்பட்டது. ராகவாச்சாரியின் கண்களிலிருந்து பகவான் மெள்ள மறைந்தார். எதிரே இருந்த சுவர்கூட இல்லாமல், வெறும் வெட்டவெளியாக இருந்தது. பிறகு, ஒரு வெளிச்சம் தோன்றியது. வெளிச்சம் வந்த பிறகு தட்சிணாமூர்த்தி படம், பகவான் உருவம் எல்லாம் தோன்றின. மறுபடியும் கண்களுக்கு எல்லாம் புலப்பட்டன. அதேநேரம் தட்சிணாமூர்த்தி திருவுருவ மும் பகவானின் திருவுருவமும் மிகப் பெரிய பிரகாசத்தோடு ஒளி மயமாகக் காட்சியளித்தன.  இந்தக் காட்சியை வெகு நேரம் காணமுடியாமல் ராகவாச்சாரி கண்களை மூடிக்கொண்டார். சிறிது நேரம் கழித்து எழுந்து, பகவானை நமஸ்கரித்து, மலையை விட்டு அகன்று, வீட்டுக்குச் சென்றார். அடுத்த ஒரு மாதம் வரை, பகவானை அவர் சந்திக்கவில்லை. அன்று கண்ட காட்சியே மனதில் மிகப் பிரமாதமாக ஆக்கிரமித்துக் கொண்டு இருந்தது. அந்தக் காட்சி கலைந்துவிடுமோ என்று பகவா னைச் சந்திக்காமல் இருந்தார். பிறகு, மெள்ள மனம் தேறி, மறுபடியும் பகவானைத் தரிசிக்கச் சென்றார். ''நான் உங்களிடம் சில விஷயங்களைக் கேட்டேன். கேட்டது எனக்குக் கிடைத்தது'' என்று பணிவாகச் சொன்னார்.

ஸ்ரீரமண மகரிஷி

பகவான் மறைந்து வெட்டவெளி தோன்றியதையும், பிறகு மெள்ள தட்சிணாமூர்த்தி படமும் பகவா னும் தோன்றியதையும், பிரகாசமாய் இருந்ததையும் விவரித்தார்; 'இது என்ன?’ என்று வினவினார். 'நீ என் உண்மை உருவத்தைக் காண விரும்பினாய். நான் அரூபி. எனக்கு உருவமில்லை. நீ பகவத் கீதை படிப்பவன். அந்தத் தூண்டுதலால் தட்சிணாமூர்த்தி ஒளியாகவும், நான் ஒருவித ஒளியாகவும் உன் கண்ணுக்குத் தோன்றியிருக்கலாம். இதுபற்றி நீ கணபதி முனிவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்’ என்றார் பகவான். ஆனால், மேற்கொண்டு இதை விசாரிக்க ராகவாச்சாரி விரும்ப வில்லை. இந்த அற்புதக் காட்சியே, அவருக்குள் மிகப் பெரிய நிறைவைக் கொடுத்துவிட்டது. குருவின் கருணை மிகப் பெரியது. எந்த உரையாடலும் இல்லாமல், எந்தப் பெரிய விவாதமும் இல்லாமல், மிக அமைதியாக, வந்தவரைத் தனிமைப்படுத்தி, தான் யார் என்று அவருக்குக் காட்டிக்கொடுத்து, அது பற்றிய விளக்கத்தையும் மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். எது கேட்டாலும் கிடைக் கின்ற இடம்தான், குருவின் சந்நிதி.

உத்தியோகம் பார்த்துக்கொண்டு, அந்த உத்தி யோக இடைவெளியில் ஓடி வந்து, பகவானைத் தரிசிப்பவர் சிலர் இருக்க, உத்தியோகத்தை உதறிவிட்டு ஒட்டுமொத்தமாய் பகவானிடம் சரணடைந்த அன்பர்களும் உண்டு.

ஐயாசாமி என்பவர், தென் ஆப்பிரிக்காவில் ஐரோப்பியரின் கீழ் பணியாற்றி, நன்றாகச் சம்பாதித்து, சம்பாதித்த பொருளுடன் நேரே பகவானிடம் வந்து சரணடைந்துவிட்டார். பணம் இருப்பினும், மலையிலிருந்து கீழே இறங்கி, யாசகம் கேட்டு உண்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தார். யாசகம் கேட்கும்போது, பகவானுடைய அன்பர்கள் ஏதேனும் பாட்டு பாடிக்கொண்டு போவது உண்டு. ஆனால், ஐயா சாமிக்குப் பாட்டுகள் தெரியாது.

ஒரு வீட்டில் பெண்மணி ஒருத்தி, சிவபுராணம் சொல்லச் சொன்னார். ஐயாசாமிக்குத் தெரியவில்லை.

பிறகு, அந்தப் பெண்மணியே சிவ புராணம் சொல்லி, அவருக்கு உணவு பரிமாறினார். ஐயாசாமிக்கு வெட்கம் வந்து விட்டது. சிவ புராணத்தை கவனமாகக் கற்றார். 'ஐயாசாமி எதற்கு யாசகத்துக்கு போக வேண்டும்? அவரிடம் இல் லாத பொருளா!’ என்று பகவான் வேடிக்கையாகச் சொன்னார்.

இது ஒருவகையான பாராட்டு. கையில் காசு இருந்தாலும், யாசகம் எடுத்துச் சாப்பிடும் மனப் பக்குவம் வந்து விட்டது என அங்கீகரிக்கும் சொல். 'நீ சரியான வழியில்தான் போகிறாய்’ என்று உணர்த்தும் விதம். மரக்கிளைகளை அளவாக உடைத்துக் கைத்தடிகளும், தேங்காய் சிரட்டையை உலர வைத்துத் தேய்த்துக் கிண்ணங்களும் செய்வதில் வல்லவர் ஐயாசாமி. கவனத்துடன் கிண்ணங்களைப் பளபளவென்று செய்து, பல சாதுக்களுக்குக் கொடுப்பது அவருக்குச் சந்தோஷமான விஷயமாக இருந்தது. எந்தவித எதிர்ப்பார்ப்பும் இன்றி, 10 வருடம் பகவானுடைய அண்மையில் இருந்து, பிறகு தன் கிராமத்துக்குப் போய், அங்கே காலமானார் ஐயாசாமி. தென் ஆப்பிரிக்காவில் உழைத்துச் சேமித்ததைவிட மிகப் பெரிய சேமிப்பு, ஐயாசாமிக்குப் பகவான் சந்நிதியில் கிடைத்தது.

குரு தன்னைப் பற்றி மற்றவரிடம் பேச மாட்டார். ஆனால் அந்த உத்தம குருவின் சீடர்கள் பேசுவார்கள். ஸ்ரீரமணரின் வாழ்வும் வாக்கும் அவரின் அற்புதமான சீடர்களாலேயே உலகுக்கு அறிவிக்கப்பட்டன. பூவை தொட்டுவந்த தென்றலே பூவின் நறுமணம் சொல்லும்; அந்தப் பூ எங்கே என்று தேடவைக்கும்.

- தரிசிப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism