Published:Updated:

நாவக்குறிச்சி கோயிலில் பொக்கிஷங்கள் இருக்கின்றனவா?

நாவக்குறிச்சி கோயிலில் பொக்கிஷங்கள் இருக்கின்றனவா?
நாவக்குறிச்சி கோயிலில் பொக்கிஷங்கள் இருக்கின்றனவா?

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே தலைவாசலில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, நாவக்குறிச்சி. இங்குள்ள ஶ்ரீதேவி பூதேவி சமேத பூரணப் பெருமாள்கோயில் மற்றும் தையல்நாயகி உடனுறை வைத்தீஸ்வரன் கோயில் மிகவும் பழைமை வாய்ந்த கோயில். நாவக்குறிச்சி கோயிலில் ஆஞ்சநேயர் சிலையைக் கோயிலின் உள்ளேயே வேறு இடத்துக்கு மாற்றிவைக்க முடிவுசெய்து, குழி தோண்டியபோது ஐந்தடி ஆழத்தில் நிலவறை இருப்பது தெரியவந்தது. உடனே ஊர் மக்கள் இந்து அறநிலையத் துறை, வருவாய்த் துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க, அரசு அதிகாரிகள் முன்னிலையில் அந்த நிலவறையைத் திறந்து பார்த்தார்கள். அங்குள்ள நிலவறையில் பெருமாள், ஶ்ரீதேவி, பூதேவி, சக்கரத்தாழ்வார், உள்பட 9 ஐம்பொன் சிலைகள் கிடைத்துள்ளன. இந்தக் கோயில் பற்றி அறிந்துகொள்ள ஆர்வமாகப் புறப்பட்டுப் போனோம்.

பூரணப்பெருமாள் கோயிலுக்கு 1917-ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடத்தியிருக்கிறார்கள். அதன் பிறகு கோயில் பெரிதாகப் பராமரிக்கப்படாமலே இருந்துவந்தது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஊர்மக்கள் கூடி, சிதிலமடைந்திருந்த கோயிலைச் சீர்செய்து, முறையாகப் பராமரித்து வந்தனர். ஐந்து கொத்துக்குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கோயிலைப் பராமரித்துவருகின்றனர்.  

இந்தக் கோயிலின் சிறப்பம்சம் சிவன் கோயிலும் விஷ்ணு கோயிலும் சேர்ந்தே இருப்பதுதான். சிவன் கோயில் கிழக்குப் பார்த்தும், பெருமாள் கோயில் மேற்குப் பார்த்தும் தனித்தனி சந்நிதிகளில் இருக்கின்றன. சைவ, வைணவ ஒற்றுமையின் அடையாளமாகத் திகழும் இந்தக் கோயிலைப்போல் கோயில் அரிதினும் அரிதான ஒன்று. 

சிவன் கோயிலில் சிவன், அம்மன், விநாயகர், முருகன் எனத் தனித்தனி சந்நிதிகள் உள்ளன. பொதுவாக, பெருமாள் கோயிலில் ராமானுஜர் சந்நிதி இருக்கும். ஆனால், அதற்குப் பதிலாக இந்தக் கோயிலில் ஆஞ்சநேயர், ஆழ்வார்கள் ஆகியோரின் சிலைகள் உள்ளன. கோயிலினுள் அரச மரமும் வேப்ப மரமும் உள்ளன. நவக்கிரகச் சிலைகள் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. வார விடுமுறை நாள்களிலும் செவ்வாய், வெள்ளியிலும் பொதுமக்கள் வந்து வழிபாடுசெய்கின்றனர். பிரதோஷம், கிருத்திகை போன்ற விசேஷ நாள்களில் பெருமளவில் பக்தர்கள் வருகின்றனர். 

பொங்கல், சித்ராபௌர்ணமி நாள்களில் சிவன் கோயிலில் மக்கள் கூடி, விசேஷ வழிபாடுகள் செய்கின்றனர். பெருமாள் கோயிலுக்கு புரட்டாசி, மார்கழி மாதங்களில் பக்தர்கள் திரளாக வருகைபுரிகிறார்கள். நாவக்குறிச்சி தவிர தலைவாசல், பட்டுத்துறை, சிறுவாச்சூர் (திருச்சி பெரம்பலூர் சாலையில் இருப்பதுபோல் இங்கும் ஒரு சிறுவாச்சூர் உள்ளது) ஆகிய கிராமத்தைச் சேர்ந்த மக்களும் வருகிறார்கள். 
இந்த நிலையில்தான் அங்குள்ள நிலவறையில் ஐம்பொன் சிலைகள் கண்டறியப்பட்டுள்ளன. இவை 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த விஜய நகரப் பேரரசின் காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இங்குள்ள எட்டுக் கால் மண்டபத்துக்கு அருகே ஒரு சுரங்கப்பாதையும் இருந்திருக்கலாம். ஆனால், காலப்போக்கில் அது தூர்ந்துபோய்விட்டது. கோயிலின் நிலவறையைத் தொடர்ந்து, மேலும் ஆய்வுகளை மேற்கொண்டால், வேறு பல அறைகளும் இருக்கலாம் என்கிறார்கள் இந்தப் பகுதி மக்கள். இது பற்றி மேலும் தகவல்களை அறிந்துகொள்ள முற்பட்டோம்.

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்திருக்கும் ஆறகழூரைச் சேர்ந்தவர் பொன்.வெங்கடேசன். வரலாறு, பத்திரிகையியல் மற்றும் பொது நிர்வாகம் என மூன்று  முதுகலைப் பட்டங்களைப் பெற்றவர். ஆனால், மருந்தாளுநராக மெடிக்கல் ஷாப் வைத்து 30 ஆண்டுகளாக நடத்திவருகிறார். கூடவே வரலாற்று ஆய்வு மையம் ஒன்றையும் இவரும் இவரது நண்பர்களுமாக நடத்திவருகின்றனர். தீராத தாகத்துடன் வரலாற்றின் சுவடுகளைத் தேடித் தேடிப் பதிவுசெய்து வருபவர். இவரது வழிகாட்டியும் நண்பனுமானவர் வீரராகவன். இந்த நண்பர்கள் இருவரும் தமிழ்ப் பண்பாட்டுக் கோயில்கள், கலாசாரச் சின்னங்களைத் தேடி ஆய்வுசெய்ய அடிக்கடிப் புறப்பட்டுவிடுவார்கள். அப்படி சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளுக்குப் பயணித்துப் போய் கிட்டத்தட்ட 35 கல்வெட்டு ஆவணங்களைத் தேடிப்பிடித்து, தமிழக தொல்பொருள் துறையிடமும் தஞ்சை ஆவணக் காப்பகத்திடமும் ஒப்படைத்துள்ளனர்.

பொன்.வெங்கடேசனிடம் பேசினோம். ''நாங்க எங்களோட ஓய்வு நேரங்கள்ல சிதிலமடைந்த கோயில்கள், வரலாற்றுச்சின்னங்களைத் தேடிக் கிளம்பிப் போய்விடுவோம். எங்களுக்கெல்லாம் விழுப்புரம் வீரராகவன் சார்தான் வழிகாட்டி. அப்படி நாங்க மூணு வருஷத்துக்கு முன்னாடியே இந்த நாவக்குறிச்சிக்கு வந்து ஆய்வு பண்ணி இருக்கோம். ஆனா, அப்போ எங்களுக்கு எந்தக் கல்வெட்டும் கிடைக்கலை. அதனால திரும்பி வந்துட்டோம். 

நாவக்குறிச்சி கோயிலில் ஆஞ்சநேயர் சிலையைக் கோயிலின் உள்ளேயே வேறு இடத்துக்கு மாற்றிவைக்க முடிவுசெய்து, குழி தோண்டியபோது எடுக்கப்பட்ட வீடியோ... 

இப்போ ஆஞ்சநேயர் சிலையைக் கோயில் வடக்குப் பக்கமா மாற்றி வைக்கலாம்னு முடிவு பண்ணி ஊர் மக்கள் கூடி குழிதோண்டுனாங்க. அப்போ கருங்கல் பலகைகள் இருந்ததைப் பார்த்துட்டு, அப்படியே வேலையை நிறுத்திவெச்சாங்க. அப்போ எங்க

ஞாபகம் வந்து, எங்களுக்கு போன் பண்ணி சொன்னாங்க. என்னான்னு பார்க்கிறதுக்காகப் போனப்பதான் இந்த ஐம்பொன்சிலைகள் இருக்கிறது தெரிஞ்சுது. பலகைக் கற்களை நகர்த்தி, தோண்டும்போது சுவத்துல ஒரு கல் வட்டமா இருந்தது. அதை உள்ளுக்குள்ள தள்ளிவிட்டுட்டோம். ஒரு கை உள்ளே போகிற அளவு ஒரு துளை இருந்துச்சு. அதுக்குள்ள இருந்து வௌவால்கள் இருக்கிற வாடை வீசியது. உள்ளே என்ன இருக்குனு பார்க்கலாம்னு நினைச்சேன். எல்லாரும் `வேணாம் சார்... கதண்டுங்கிற விஷ வண்டு இருக்கும். அது கடிச்சுதுனா ரொம்ப கஷ்டமாப் போயிடும். வேணாம்'னாங்க. எனக்கு எப்பவுமே இந்த மாதிரி விஷயங்களைத் தெரிஞ்சிக்கிறதுல ஒரு ஆர்வம் இருக்கும். 

என் கை கேமரா ஃப்ளாஷை ஆன் பண்ணி, ஒரு கையை துவாரத்துக்குள்ளவிட்டு சில போட்டோ ஸ்நாப்ஸ்களை எடுத்தேன். வெளியே எடுத்துப் பார்த்தா, உள்ளே சிலைங்க இருக்கிறது தெரிஞ்சுது. உடனே அரசு அதிகாரிங்களுக்குத் தகவல் சொல்லி, வரச் சொன்னோம். அதன் பிறகு ஜேசிபி இயந்திரத்தை வரவழைச்சு, சிலைகளை வெளியில எடுத்தாங்க.  

இந்தச் சிலைகளைப் பார்க்கும்போது, பிற்காலச் சோழர்களில் ஒருவரான மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தைச் சேர்ந்தவைபோலத் தெரிகின்றன. விருத்தாசலத்திலிருந்து சேலம் வரை உள்ள பகுதியை 'மகதை நாடு' என்று அப்போது அழைத்தனர். அதன் தலைநகராக ஆறகழூர் இருந்து வந்தது. பொன்பரப்பி வானகோவரையர்கள் சோழர்களின் படைத் தளபதிகளாக மகதை நாட்டை ஆண்டுவந்தனர். அவர்களுக்குப் பின்னர் பாண்டியர்களின் ஆளுமைக்கு இந்தப் பகுதி வந்தது.

நாவக்குறிச்சி கோயில் கி.பி 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டு இருக்கலாம். 14-ம் நூற்றாண்டுக்குப் பின்னர் விஜய நகரப் பேரரசின் கீழ் இது வந்திருக்கிறது. விஜய நகரப் பேரரசின் அரசர்கள், தமிழகத்தின் பல கோயில்களைப் புனர் நிர்மாணம் செய்தனர். அந்த வகையில் இந்தக் கோயிலையும் அவர்கள் புனர் நிர்மாணம் செய்திருக்கலாம். 

போர்கள் வரும்போது, கோயில் சாமி சிலைகளை நிலவறையில்வைத்துப் பாதுகாப்பது வழக்கம். அப்படித்தான் இந்தச் சிலைகளைப் பாதுகாத்துள்ளனர். இப்போ கிடைச்சிருக்கிற சிலைகள் எல்லாமே பெருமாள் கோயில் சிலைகளாக இருக்கின்றன. இன்னும் தொடர்ந்து அகழ்வாய்வில் ஈடுபாட்டால், வேறு சில அறைகள் இருப்பதை அறியலாம். ஏனென்றால், சிவன் கோயிலின் உற்சவச் சிலைகள் பாதுகாத்துவைக்கப்பட்டிருக்கும் வாய்ப்புள்ளது. 

அரசு கஜானாவின் தங்கம், வெள்ளி போன்ற பொக்கிஷங்களை இது போன்ற நிலவறைகளில் பாதுகாத்துவைப்பது வழக்கம். திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலின் பாதாள அறைகள்போல, அவற்றில் பொக்கிஷ அறைகள் இருக்கவும் வாய்ப்புள்ளது. நிலவறையின் கட்டுமான நேர்த்தி மிகச் சிறப்பாக இருப்பதால், இந்த ஐயப்பாடுகள் எழுந்துள்ளன. அப்படி எதுவும் இருக்கிறதா என்று தமிழக அரசு ஆய்வு மேற்கொண்டால், மேலும் பல தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளது’’ என்கிறார் பொன்.வெங்கடேசன்.

அடுத்த கட்டுரைக்கு