செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில், சுமார் 21 கி.மீ. தொலைவில் உள்ளது வாலாஜாபாத். இங்கிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள அவளூர் கிராமத்தில், பாலாற்றங்கரைக்கு அருகில் அழகுறக் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீசிங்கேஸ்வரர் குறித்து, 6.8.13 சக்திவிகடன் இதழில், 'ஆலயம் தேடுவோம்’ பகுதியில் எழுதியிருந்தோமே, நினைவிருக்கிறதா?

ஸ்ரீநரசிம்மரின் கோபம் தணித்த தலங்களில் இந்தத் தலமும் ஒன்று என்பர். பொதுவாக, பல்லவ மன்னர்களின் பெயர்களிலும் சிம்மம் இடம்பெற்றிருக்கும். எனவே, பல்லவ மன்னர் கட்டிய

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கோயில் என்பதால் இந்த இறைவனுக்கு சிங்கேஸ்வரர் எனத் திருநாமம் அமைந்ததாகவும் சொல்வார்கள். இங்கு வந்து கடும் தவம் இருந்த நந்திதேவருக்காக, சிவனார் திருநடனம் அருளிய தலம் என்கிறது ஸ்தல புராணம்.
'ஆலயம் தேடுவோம்’ கட்டுரையில் இந்தத் தகவல்களைச் சொன்னதோடு, இந்தத் தலத்துக்கு வந்து ஸ்வாமியையும் அம்பாளையும் வழிபட்ட காஞ்சி பெரியவா, 'கோயில்ல தினமும் விளக்கேத்துங்கோ! இன்னிக்கி இல்லேன்னாலும் என்னிக்காவது ஒருநாள், புண்ணியம் பண்ணினவா காசும் பணமுமா கொடுத்து, இந்தக் கோயிலுக்கு திருப்பணி பண்ண உதவி செய்வா'' என அருளிச் சென்ற தகவலையும் எழுதியிருந்தோம். அதையடுத்து, அவளூர் ஆலயத்துக்கு மளமளவெனக் குவிந்தன உதவிகள்; மந்தமாக நடந்த வேலைகள் அதன்பின் துரிதமாக நடைபெறத் தொடங்கின.
''இதோ... திருப்பணி முடிஞ்சு, வரும் 22.6.14-ம் தேதி காலை 8.45 முதல் 9.45 மணிக்குள், வெகு விமரிசையாக கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. சக்திவிகடன் வாசகர்களின் பேருதவியாலும், சிவபெருமானின் பேரருளாலும்தான் ஆலயம் இன்றைக்குப் பொலிவுடன் அழகாகக் காட்சி தருகிறது. கிராம மக்கள் சார்பில் நன்றியைத் தவிர, வாசகர்களுக்கு வேறென்ன கைம்மாறு செய்ய முடியும்?'' எனக் கண்ணீர் மல்கச் சொல்கிறார் மனோகர்.
அவளூர் ஸ்ரீசிங்கேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ளுங்கள். சந்தோஷமும் அமைதியும் நிரம்பிய வாழ்வை பெறுவீர்கள்!
- வி.ராம்ஜி
படங்கள்: ரா.மூகாம்பிகை