ஒரு காலத்தில் வில்வ வனமாக இருந்த அந்தச் சின்னஞ்சிறிய கிராமத்தில், அழகிய கோயிலில் குடிகொண்டிருக்கிறார் ஸ்ரீவரதராஜ பெருமாள். கொரக்கை, கொருக்கை, கொற்கை என்றெல்லாம் அழைக்கப்பட்ட அந்தக் கிராமத்தில், ஐந்து ஏக்கர் பரப்பளவில் இருந்த ஆலயம், முழுவதும் சிதிலம் அடைந்த நிலையில் இருப்பதை, 11.12.12 சக்தி விகடன் இதழில், 'ஆலயம் தேடுவோம்’ பகுதியில் எழுதியிருந்தோம்.

விழா- வைபவங்கள் என அமர்க்களப்பட்ட இந்த ஆலயம், சுமார் 100 வருடங்களுக்கும் மேலாக திருப்பணிகளோ கும்பாபிஷேகமோ செய்யப்படாமல் சிதிலமுற்றிருக்கிறது என்பதை அதில் தெரிவித் திருந்தோம். ''ஸ்ரீவரதராஜ பெருமாளை வணங்கிட்டுத்தான், சுத்துப்பட்டு கிராமத்துக்காரங்க எல்லாம் விவசாய வேலையை ஆரம்பிப்பாங்க. யாருக்காவது ஏதாவது நோய் நொடின்னா, இங்கே வந்து தயிர் சாதமோ வெண்பொங்கலோ நைவேத்தியம் செஞ்சு, பெருமாளுக்கு வஸ்திரம் சார்த்தி வேண்டிக்குவாங்க. உடனே, அவங்க பூரணமா குணமாயிடுவாங்க. ஆனா இன்னிக்கு, நைவேத்தியம் இல்லாம, புது வஸ்திரங்கள் அணியாம, மின்விளக்குகூட இல்லாம வரதராஜ பெருமாள் கோயில் இருக்குது'' என்று ஸ்ரீவரதராஜ ஸ்வாமி கைங்கர்ய டிரஸ்ட் நிர்வாகிகள் ஆதங்கத்துடன் கூறியதையும் அந்தக் கட்டுரையில் பதிவு செய்திருந்தோம். 'சக்தி மிக்க வாசகர்கள் மனம் வைப்பீர்கள்; கொரக்கை ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயிலுக்கு சீக்கிரமே ஸ்ம்ப்ரோக்ஷணம் நடைபெறும்’ என்றும் கட்டுரையின் நிறைவில் நம்பிக்கையோடு குறிப்பிட்டிருந்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நம் நம்பிக்கை வீண்போகவில்லை. சக்திவிகடன் வாசகர்களிடம் இருந்து கொரக்கை கோயிலுக்கு நிதியுதவிகள் வந்து குவிந்தன. திருப்பணி வேலைகள் மளமளவென நடந்து, புதுப்பொலிவு பெற்றது ஆலயம். அதையடுத்து, கடந்த 12.5.14 அன்று ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயிலுக்குக் கும்பாபிஷேகம் சீரும் சிறப்புமாக நடைபெற்றது.
''சக்திவிகடன் வாசகர்களின் பேருதவியையும், சக்திவிகடனின் அருட்பணியையும் நாங்கள் மறக்கவேமாட்டோம்'' என்று பார்த்த சாரதி பட்டாச்சார்யரும், ரமேஷ் பட்டாச்சார்யரும் நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்கள்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ள கொரக்கை ஸ்ரீவரதராஜரைத் தரிசியுங்கள். வரப்பிரசாதியான பெருமாள், உங்கள் வாழ்விலும் வளம் சேர்ப்பார்.
- வி.ராம்ஜி