Published:Updated:

ஆடி மாதத்துக்கு மட்டும் அப்படி என்ன விசேஷம்?

ஆடி மாதத்துக்கு மட்டும் அப்படி என்ன விசேஷம்?
ஆடி மாதத்துக்கு மட்டும் அப்படி என்ன விசேஷம்?

ஆடி மாதத்துக்கு மட்டும் அப்படி என்ன விசேஷம்?

வானவெளியில் சஞ்சரிக்கும் சூரியனே நம்முடைய முதற்கடவுளாகத் திகழ்கின்றார். பிரபஞ்சத்தை மூடி இருந்த இருளில் இருந்து, 'ஓம்' என்னும் பிரணவ ஒலியுடன் தோன்றிய சுடர்க் கடவுள்தான் சூரியன் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.

வானவெளியில் சஞ்சரிக்கும் சூரியனின் இயக்கத்தைப் பொறுத்தே பூமியின் இயக்கமும் அமைகின்றது. சூரியனின் சஞ்சாரப் பயணத்தை இரண்டு வகையாகப் பிரித்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள ஆறு மாதங்களை உத்தராயண புண்ணிய காலம்  என்றும், ஆடி மாதம் முதல் மார்கழி வரை உள்ள ஆறு மாதங்களை தட்சிணாயண புண்ணிய காலம் என்றும் சொல்வார்கள். உத்தராயணம் தேவர்களின் பகல் பொழுதாகவும், தட்சிணாயணம் தேவர்களின் இரவுப் பொழுதாகவும் அமைந்திருப்பதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன. 

ஆடி மாதத்தில் இருந்து மார்கழி மாதம் வரை இரவுப் பொழுது அதிகமாக இருக்கும். நாளெல்லாம் ஓடியாடி விளையாடும் குழந்தை, அந்தி மயங்கி இருள் கவியும் இரவுப் பொழுதில் அம்மாவின் மடியில்தான் தஞ்சம் அடையும். அதேபோல், வரப்போகும் மழைக் காலத்தில் அம்பிகையின் குழந்தைகளாகிய நமக்கு எந்த விதமான நோய்களும் ஏற்படாமல் இருப்பதற்காக, நாம் அம்பிகையின் திருவடிகளில் அடைக்கலம் ஆகிறோம். அதனால்தான் ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கு விழா எடுத்துக் கொண்டாடி, அவளிடம் அடைக்கலம் ஆகிவிடுகிறோம்.

பன்னிரண்டு மாதங்களில் தட்சிணாயணத்தின் தொடக்கமான ஆடியும் சரி, முடிவான மார்கழியும் சரி தெய்வ வழிபாட்டுக்கென்றே நம் முன்னோர்களால் விதிக்கப்பட்டிருக்கின்றன. அது மட்டுமல்ல இந்த ஆடி மாதத்தில் பல முக்கியமான வைபவங்கள் நடைபெறுகின்றன. ஆடிப் பூரம், ஆடித் தபசு, ஆடிப் பெருக்கு என்று விழாக்கள் மட்டுமல்லாமல், ஆடி மாதம் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளும் அம்மன் வழிபாட்டுக்கு மிகவும் விசேஷமாகச் சொல்லப்படுகிறது. அனைத்து சக்தி தலங்களிலும் மிகவும் விசேஷமான முறையில் பூஜைகளும் திருவிழாக்களும் நடைபெறும்.

நம் நாட்டில் திருமணமான பெண்கள் பலரும் கடைப்பிடிக்கும் ஒரு விரதம் ஆடிச் செவ்வாய் விரதம் ஆகும். 'ஆடிச் செவ்வாய் தேடிக் குளி' என்று ஒரு வழக்கு மொழியும் இருக்கிறது. ஆடி மாதம் வரும் செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் எண்ணெய் ஸ்நானம் செய்து விட்டு, விரதம் இருந்து அம்மனை வழிபட்டால்,கணவருக்கு தீர்க்காயுள் ஏற்படும் என்பது ஐதீகம் மட்டுமல்ல, பெண்களின் ஆழ்ந்த நம்பிக்கையும்கூட. அதேபோல் ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மனுக்கான தங்களுடைய வேண்டுதல்களைச் செலுத்தும் நாளாகக் கொண்டாடுகிறார்கள். பால்குடம் எடுத்தல், கூழ் வார்த்தல், பொங்கல் வைத்து வழிபடுதல் என்று பக்தர்களின் வேண்டுதல்கள் பலவாறாக அமைந்திருக்கும்.

இந்த ஆடி மாதத்தில்தான் ஆண்டாளின் அவதாரம் நிகழ்ந்தது. பூமிதேவியின் அம்சமாகத் தோன்றிய ஆண்டாள், பக்தியின் மூலமாக நாம் எப்படி இறைவனை அடைய முடியும் என்பதை வாழ்ந்து காட்டி உணர்த்தினாள். 

இந்த மாதத்தில்தான் மக்களிடையே எந்த ஒரு பேதமும் இருக்கக்கூடாது என்பதற்காகவும், குறிப்பாக, அரியும் சிவனும் ஒன்று என்னும் உயரிய படிப்பினையை நமக்குத் தருவதற்காக, அம்பிகையே மண்ணில் அவதரித்து, தவமிருந்து சங்கர நாராயண தரிசனம் தானும் பெற்று, நமக்கும் காட்டி, நம்முடைய பேதங்களை அகற்றிய திருநாள்தான் ஆடித் தபசு திருநாள்.

ஆடி மாதக் கிருத்திகை முருகப் பெருமானுக்கு மிகவும் உகந்த நாள் ஆகும். மேலும் இந்த மாத சதுர்த்தி நாக சதுர்த்தி என்றும், பஞ்சமி கருட பஞ்சமி என்றும் கொண்டாடப்படுகிறது. அனைத்துக்கும் மேலாக ஆடி அமாவாசை முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் உகந்த நாளாகும். அன்றைய தினம் சமுத்திரம், ஆறு, தீர்த்தக் குளங்கள் என்று புண்ணிய நதிகளில் நீராடி முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்து வழிபடுவது அளவற்ற நன்மைகளைத் தரும்.

ஆடிப் பதினெட்டு என்பதும் பெண்களால் உற்சாகமாகக் கொண்டாடப்படும் பக்தி விழா ஆகும். இந்த நாளில் பெண்கள் ஆறு மற்றும் நீர்நிலைகள் உள்ள இடங்களுக்குக் கணவருடனும் உறவினர்களுடனும் சென்று  தாலிச் சரடு மாற்றி, புதிய சரடு அணிந்துகொண்டு சித்ரான்னங்களை உண்டு மகிழ்வார்கள். திருமணம் ஆகாத கன்னிப் பெண்களும் திருமணம் கூடி வர அம்மனை வேண்டிக்கொண்டு கழுத்தில் மஞ்சள் சரடு கட்டிக் கொள்வார்கள்.

இப்படியாக தெய்வ வழிபாட்டுக்காக குறிப்பாக பெண் தெய்வங்களின் வழிபாட்டுக்காக விதிக்கப்பட்ட மாதம் என்பதாலேயே இந்த மாதத்துக்கு விசேஷ சிறப்பு ஏற்பட்டிருக்கிறது. மார்கழியைப் போலவே ஆடியும் பீடுடைய - பெருமைகள் கொண்ட மாதம்தான்.

ஆடியைக் கொண்டாடி ஆனந்தமாக வாழ்வோம்.

அடுத்த கட்டுரைக்கு