Published:Updated:

துங்கா நதி தீரத்தில்... - 6

குரு தரிசனம்!பாரதி காவலர் டாக்டர் கே.ராமமூர்த்தி, ஓவியம் ஸ்யாம்

துங்கா நதி தீரத்தில்... - 6

குரு தரிசனம்!பாரதி காவலர் டாக்டர் கே.ராமமூர்த்தி, ஓவியம் ஸ்யாம்

Published:Updated:

ஸ்ரீநரசிம்ம பாரதி சுவாமிகளின் அழைப்பின் பேரில், ராம சாஸ்திரிகளின் புத்திரனான, ஒன்பது வயதே ஆகியிருந்த சிவஸ்வாமி, தன் தமையனார் லக்ஷ்மிநரசிம்ம சாஸ்திரிகளுடன் மைசூர் அரண்மனைக்குச் சென்றார். சுவாமிகளைத் தரிசித்தார்.பால்மணம் மாறாத அந்த பாலகனிடம், ''உனக்கு என்ன வேண்டும் குழந்தாய்?'' என்று வாஞ்சையுடன் கேட்டார் சுவாமிகள். அதற்கு, பாலகனான சிவஸ்வாமி...

'அயம்தான கலஸ்த்வஹம் தானபாத்ரம்
பவானேவ தாதா த்வதன்யம் ந யாசே
பவத்பக்திமேவ ஸ்திராம் தேஹி மஹ்யம்
க்ருபாஷீல சம்போ க்ருதோர் தாஸ்மின் தஸ்மாத்’

என்று, ஸ்ரீஆதிசங்கரர் அருளிய சிவபுஜங்க ஸ்தோத்திரத்தின் 11-வது ஸ்லோகத்தைக் கூறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதன் பொருள்: 'ஹே, சிவபெருமானே! இது தானம் கொடுக்கக் கூடிய காலம். நான் தானம் வாங்கிக்கொள்ளும் பாத்திரம். கொடுப்பவர் நீங்கள். உங்களைத் தவிர, உங்களிடம் பக்தி செலுத்தவேண்டும் என்பதைத் தவிர, வேறு எதையும் நான் பி¬க்ஷயாகக் கேட்கமாட்டேன். கருணையையே நெறியாகக் கொண்டவரே! சர்வ மங்களங்களையும் அருள்பவரே! நான் தங்களிடம் கேட்கும் இந்த பி¬க்ஷயைத் தாங்கள் கொடுத்து அருள் புரிந்தால், நான் கிருதார்த்தனாக ஆவேன்!’

வேண்டுவது என்ன என்று கேட்ட ஸ்ரீநரசிம்ம பாரதி சுவாமிகளிடம், தான் வேண்டுவது என்ன என்பதை சிவபுஜங்க ஸ்தோத்திரத்தின் ஒரு ஸ்லோகத்தைக் கொண்டே தெரியப்படுத்திய சிவஸ்வாமியின் மதிநுட்பமும், ஆன்மிக நாட்டமும் கண்டு, அங்கிருந்த சிவஸ்வாமியின் தமையனாரும், மன்னரும், மற்றுமுள்ள அமைச்சர்களும் மெய்சிலிர்த்துப் போனார்கள்.

துங்கா நதி தீரத்தில்... - 6

ஸ்ரீநரசிம்ம பாரதி சுவாமிகள் மட்டும் திகைக்கவில்லை. காரணம், சிவஸ்வாமிதான் ஸ்ரீசாரதா பீடத்தின் அடுத்த பீடாதிபதி என்பதையும், உண்மையில் அவர் யாருடைய அம்சமாகத் தோன்றி இருக்கிறார் என்பதையும் அவர் தம் யோக ஸித்தியினால் ஏற்கெனவே தெரிந்துவைத்திருந்தார்.

தாம் கேட்ட கேள்விக்கு, தாம் எதிர்பார்த்திருந்த பதிலையே சிவஸ்வாமி கூறியது கேட்டுச் சந்தோஷம் அடைந்த சுவாமிகள், மன்னரைப் பார்த்துத் தம் கண்களால் ஏதோ சமிக்ஞை செய்தார். அதைக் கொண்டு, சிவஸ்வாமிதான் அடுத்த பீடாதிபதி என்பதை மன்னர் புரிந்து கொண்டார்.

மறுநாள், லக்ஷ்மிநரசிம்ம சாஸ்திரிகளை அழைத்து வரும்படி சேவகர்களை அனுப்பி வைத்தார் மன்னர். அரண்மனைக்குச் சென்று மன்னரைக் கண்ட சாஸ்திரிகளிடம், சிவ ஸ்வாமிதான் ஸ்ரீ சாரதாபீடத்தின் அடுத்த பீடாதிபதியாக வரவேண்டும் என்ற சுவாமிகளின் விருப்பத்தைத் தெரிவித்தார். ஆனால், சாஸ்திரிகளுக்கு அதில் துளியும் விருப்பம் இல்லை. அதைப் புரிந்துகொண்ட மன்னர், அவரை சுவாமிகளின் சந்நிதானத்துக்கு அழைத்துச் சென்றார்.

சாஸ்திரிகளின் மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட சுவாமிகள், சிவஸ்வாமிக்கு 16-வது வயதில் ஒரு கண்டம் இருப்பதாகவும், சந்நியாசம் பெற்றுக்கொண்டால், ஸ்ரீ சாரதையின் அருளால் அந்த கண்டம் நிவர்த்தியாகும் என்றும் சாஸ்திரிகளிடம் தெரிவித்தார்.

அதைக் கேட்டு சாஸ்திரிகள் சற்றே அச்சம் கொண்டாலும், சிவஸ்வாமியை சந்நியாசம் மேற்கொள்ளச் செய்ய அவருடைய மனம் சம்மதிக்கவில்லை. ஸ்ரீ சாரதையின் அருளாலும் சுவாமிகளின் சங்கல்பத்தினாலும்தான் சிவஸ்வாமியின் ஜனனமே நிகழ்ந்தது என்பது அவருக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லைதானே?

அரசருக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. அதேநேரம், சுவாமிகளின் விருப்பத்தை நிறைவேற்றவேண்டும் என்பதிலும் தீர்மானமாக இருந்தார். மறுநாள், லக்ஷ்மிநரசிம்ம சாஸ்திரிகளை அரண்மனைக்கு வரவழைத்த அரசர், ''சிவஸ்வாமிதான் ஸ்ரீ சாரதாபீடத்தின் அடுத்த பீடாதிபதி என்பது சுவாமிகளின் தீர்மானமான சங்கல்பம். அதை எப்படியும் நான் நிறைவேற்றத்தான் வேண்டும். எனவே, சாஸ்திரிகள் சம்மதித்துதான் ஆகவேண்டும்'' என்று சற்றே கடுமையான வார்த்தைகளால் நிர்பந்தப்படுத்தினார்.

இத்தனைக்குப் பிறகும் தான் மறுப்பு தெரிவித்தால், அது தங்கள் குடும்பத்தைப் பராமரித்து வரும் அரசரை அவமதித்ததுபோல் ஆகிவிடும் என்பதுடன், ஸ்ரீ சுவாமிகளுக்கும் அதிருப்தியை ஏற்படுத்திவிடும் என்று நினைத்த சாஸ்திரிகள், சிவஸ்வாமி சந்நியாசம் பெற்றுக் கொள்ளவேண்டும் என்பது பகவத் சங்கல்பம்தான் என்று நினைத்தவராக, தம்மைச் சமாதானம் செய்துகொண்டு சம்மதித்தார்.

சிவஸ்வாமி சந்நியாசம் பெற்றுக்கொள்ள லக்ஷ்மிநரசிம்ம சாஸ்திரிகள் சம்மதித்துவிட்ட செய்தியை அரசரின் மூலம் தெரிந்துகொண்ட சுவாமிகள், மேற்கொண்டு என்ன ஏற்பாடுகளைச் செய்யவேண்டும் என்பதை அரசருக்குத் தெரிவித்தார்.

துங்கா நதி தீரத்தில்... - 6

ஸ்ரீ நரசிம்ம பாரதி சுவாமிகள் என்ன சங்கல்பம் கொண்டிருந்தாரோ, அது நிறைவேறிவிட்டது. தீவிர வைராக்கியமும் யோக ஸித்தியும் கொண்டிருந்த சுவாமிகள், ஒன்றைச் சங்கல்பம்  செய்துகொண்டால் அது எப்படி நிறைவேறாமல் போகும்?

21-வது வயதிலேயே ஸ்ரீ சாரதா பீடாதிபதி என்கிற பெரிய பொறுப்புக்கு வந்துவிட்டவர் சுவாமிகள். அவர் பீடத்துக்கு வந்த உடனேயே அவரின் குரு ஸித்தி அடைந்துவிட்டபடியால், பீடத்துக்கு உரிய சம்பிரதாயங்களை குருவின் மூலம் நன்கு தெரிந்துகொள்ள வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. இருந்தும்கூட விவரம் தெரிந்தவர்களிடமிருந்து விரைவிலேயே கேட்டுத் தெரிந்துகொண்டார் அவர். வேத சாஸ்திரங்களில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்த பண்டிதர்களை வரவழைத்து, அவர்களுக்கு வேண்டிய சௌகரியங்களைச் செய்துகொடுத்து, அவர்களிடமிருந்து சாஸ்திர ஞானத்தையும் விருத்தி செய்துகொண்டார்.

சாஸ்திர ஞானம் மட்டும் இருந்தால் போதாது என்று நினைத்த சுவாமிகள், சாஸ்திரம் போதிக்கும் நெறிமுறைகளை தம் அனுபவத்திலும் கொண்டுவரவேண்டும் என்று நினைத்தவராக, கடுமையான யோகமும், தவமும் புரிந்து சித்தியும் பெற்றார். அதேபோல், அவருடைய மந்திர ஸித்தியும் எல்லையற்றதாக இருந்தது. தம்முடைய 40-வது வயதின் தொடக்கத்தில் வெறும் காய் மற்றும் கிழங்கு வகைகளையே ஆகாரமாகக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். காலப்போக்கில் ஒரு கைப்பிடி பாகற்காய்களை மட்டுமே ஆகாரமாகக் கொள்ளப் பழகிவிட்டார். அதனாலேயே அவருக்குப் 'பாகற்காய் சுவாமிகள்’ என்ற பெயர் பிரசித்தமாகிவிட்டது.

சுவாமிகள், ஒருநாளின் பெரும்பொழுதை பூஜைகள் செய்வதிலும் தியானம் செய்வதிலுமே செலவிட்டு வந்தார். நள்ளிரவுப் பொழுதுகளில் கூட ஆழ்ந்த தியானத்திலேயே மூழ்கி இருப்பது அவருடைய அன்றாட வழக்கமாகவே ஆகிப்போனது.

ஒருமுறை, சுவாமிகள் பெங்களூரில் முகாமிட்டு இருந்தார். அச்சமயம் மைசூர் சமஸ்தானத் துக்கான ஆணையராக இருந்தவர் பௌரிங் என்ற ஆங்கிலேயர். நாளின் பெரும்பொழுதை ஜபத்திலும் தியானத்திலுமே தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் சுவாமிகளைப் பற்றிக் கேள்விப்பட்ட பௌரிங், 'அது எப்படி ஒருவரால் தூங்காமல் கொள்ளாமல் சதா காலம் தியானத்தில் இருக்கமுடியும்?’ என்று நினைத்து, சுவாமிகளின்பேரில் அவநம்பிக்கை கொண்டார்.

ஒருநாள், தானே நேரில் சென்று சோதித்துப் பார்க்க நினைத்தவராக, நள்ளிரவில் சுவாமிகளின் முகாமுக்குச் சென்றார். அன்றைய இரவு பூஜைகளை முடித்துக்கொண்டு, சிப்பந்திகளை ஓய்வு எடுத்துக்கொள்ள அனுப்பிவிட்டு, ஏகாந்தமாக தியானத்தில் மூழ்கிவிட்டார் சுவாமிகள். நிசப்தமான அந்த இரவுப் பொழுதில் சுவாமிகளின் முகாமுக்கு வந்த பௌரிங், சுவாமிகள் தியானத்தில் இருந்த அறைப் பக்கமாகச் சென்று ஒளிந்திருந்து பார்த்தார்.

சுவாமிகளிடம் எந்தச் சலனமும் இல்லை. அகமும் புறமும் தெரியாதபடி ஆழ்ந்த தியானத்தில் திளைத்திருந்தார். அவருடைய திருமுகத்தில் மட்டும் அப்படி ஒரு தேஜஸ்! சுவாமிகளின் திருமுகத்தில் சிறிதளவேனும் சலனம் ஏற்படுமா என்று எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தார் பௌரிங். சுவாமிகளிடம் ஒருதுளி சலனமும் இல்லை. சுவாமிகளைச் சோதித்துப் பார்க்க வந்தவர் சோர்ந்துபோனதுதான் மிச்சம். வந்த சுவடு தெரியாமலே தன் இருப்பிடம் திரும்பிவிட்டார். அன்றிலிருந்து அவருக்கு, சுவாமிகளிடம் விநயத்துடன் கூடிய பக்தியே ஏற்பட்டுவிட்டது. அதுபற்றிப் பின்னாள்களில் அவர் எழுதி இருந்த குறிப்புகளில் இருந்து நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது.

சிவஸ்வாமி சந்நியாசம் பெற்றுக்கொள்ள லக்ஷ்மிநரசிம்ம சாஸ்திரிகள் சம்மதம் தெரிவித்து விடவே, அரசர் தக்க பரிவாரங்களுடன் பல்லக்கையும் அனுப்பி, சிவஸ்வாமியை அரண்மனைக்கு வரவழைத்தார்.

அரண்மனையை அடைந்த சிவ ஸ்வாமியை தன் சொந்தபந்தங்களிடம் அறிமுகப்படுத்தி வைத்ததுடன், அவர்தான் ஸ்ரீ சாரதா பீடத்தின் அடுத்த பீடாதிபதி என்றும், அவரே இனி தங்களுக்கெல்லாம் அடுத்த குருவாகவும் திகழப்போகிறவர் என்றும் கூறினார். எல்லோரையும் அவருக்கு நமஸ்காரம் செய்ய வைத்து, திரும்பவும் அவருடைய இல்லத்துக்கு அனுப்பிவைத்தார்.

சிவஸ்வாமிதான் ஸ்ரீ சாரதாபீடத்தின் அடுத்த பீடாதிபதியாக வரவேண்டும் என்ற சுவாமிகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் மைசூர் அரசர் மும்முடை கிருஷ்ணராஜ உடையார் இத்தனை மும்முரமாக இருக்கக் காரணம், ஸ்ரீ நரசிம்ம பாரதி சுவாமிகளிடம் அவர் கொண்டிருந்த அன்பும் பக்தியும்தான்! சுவாமிகளிடம் தாம் கொண்டிருந்த பக்தியின் அடையாளமாக, சுவாமிகளின் பேரில் அஷ்டோத்திர சத நாமாவளி ஒன்றை எழுதினார் அவர். அதை சுவாமிகளிடம் படித்துக் காட்டி, அவருடைய அபிப்பிராயத்தைத் தெரிந்துகொள்ள விரும்பினார்.

ஒருநாள், சுவாமிகளின் சந்நிதானத்துக்கு வருகை தந்த அரசர், சுவாமிகளைப் பற்றித் தாம் இயற்றிய அஷ்டோத்திர சத நாமாவளியைப் பக்திபூர்வமாகப் படித்துக் காட்டினார்.

சுவாமிகளின் திருமுகத்தில் சற்றும் சலனமே இல்லை. அதற்கான காரணம், முதலில் அரசருக்குப் புரியவில்லை.

காரணம் புரிந்தபோது..?

- தொடரும்...

தொகுப்பு: க.புவனேஸ்வரி

படம்: ஜெ.வேங்கடராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism