Published:Updated:

‘ஆத்திகம் ஜெயித்ததா?!’

சக்தி சங்கமம் தொடர்கிறது... 2வாசகர்களுடன் கலந்துரையாடுகிறார் தவத்திரு குன்றக்குடி அடிகளார்

‘ஆத்திகம் ஜெயித்ததா?!’

சக்தி சங்கமம் தொடர்கிறது... 2வாசகர்களுடன் கலந்துரையாடுகிறார் தவத்திரு குன்றக்குடி அடிகளார்

Published:Updated:

சிறிய குன்றின் மேலே கோயில். கோயிலைச் சுற்றிலும் தார்ச்சாலை. அதில் சரசரவென வந்து செல்கின்றன வாகனங்கள். கூட்டம் கூட்டமாக, குடும்பம் குடும்பமாக, 'வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!’ எனும் கோஷத்துடன் மக்கள் வேக வேகமாக நடந்து, கோயில் படிகளில் சரசரவென ஏறுகிறார்கள். ஆனால், இவற்றுக்கு நடுவே அமைந்துள்ள குன்றக்குடி ஆதீன மடத்தில் அப்படியொரு நிசப்தம்! மடத்தின் எல்லா இடங்களிலும் பரவியிருக்கிறது, பேரமைதி.

உரையாடலுக்கு நடுவே, அடிகளார் பெருமானின் அருளா லயத்துக்கு (சமாதி அமைந்துள்ள இடம்) வாசகர்களை அழைத்துச் செல்கிறார் குன்றக்குடி அடிகளார். மடத்துக்கு எதிரில், பச்சைப் பசேலென இருக்கிற புல் வெளிகளும், சிமென்ட் தரைகளும் கொண்ட மிகப் பெரிய இடத்தில் அமைந்துள்ளது குன்றக்குடி அடிகளார் பெருமானின் அருளாலயம். குருவுக்கு சீடர் பூஜை செய்ய, அதைத் தரிசித்த பூரிப்பில் நம் வாசகர்கள்.

''அன்பே சிவம் - உங்கள் பாணியில் விளக்குங்களேன்?'' என்று, சில நிமிட இடைவெளிக்குப் பின்னர் வாசகர் சுந்தரம் மீண்டும் உரையாடலைத் துவக்கினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''வாங்களேன், மடத்துக்குப் போய்ப் பேசுவோம்'' என்று சொல்லி விட்டுச் சாலையைக் கடக்கிறார் அடிகளார். ''சுட்டுப் பொசுக்குதே வெயிலு! செருப்புப் போட்டுட்டு வந்திருக்கலாம்ல? வேகமா வாங்க!'' என்று வாசகர்களிடம் அக்கறையோடு சொல்லிவிட்டு முன்னதாக நடக்கிறார். அப்போதுதான் கவனிக்கிறோம்... அவர் காலணி அணிந்திருக்கவில்லை.

(இந்த நேரத்தில் சின்னதான நினைவுகூரல். குன்றக்குடி அடிகளார் பெருமான் குறித்த கட்டுரை ஒன்று ஆனந்த விகடன் 2.8.92 இதழில் வெளியானது. 'ஒரு துறவியின் சாதனை’ எனும் தலைப்பில் வந்த அந்தக் கட்டுரையில்... குன்றக்குடிக்கு அருகில், பாரதியார் பெயரில் அமைந்து உள்ள பொட்டாசியம் குளோரைடு தொழிற்சாலையைப் பார்வையிட்டார் அடிகளார். சுவாமிகளைக் கண்டதும் தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் தங்கள் காலில் இருந்த மிதியடிகளைக் கழற்றிவிட்டு, அவருக்கு வணக்கம் செலுத்தினார்கள். அதைக் கவனித்த அடிகளார், ''உங்களுக்கு நூறு முறை சொல்லியிருக்கிறேன். மரியாதை மனதில் இருந்தால் போதும். கெமிக்கல் பகுதியில் வேலை செய்யும்போது, காலில் கண்டிப்பாகச் செருப்பு இருக்க வேண்டும். இல்லையேல், ஆறாத புண் ஏற்பட்டு விடும். மிதியடியைப் போட்டுக் கொள்ளுங்கள்'' என அறிவுறுத்தினார். ஆனால் அவர் வெறும் காலுடனே நடந்து வந்தார் என பதிவு செய்யப் பட்டிருந்ததைப் படித்தது நினைவுக்கு வந்தது.)

‘ஆத்திகம் ஜெயித்ததா?!’

உள்ளே நுழைந்து ஜமுக்காளத்தில் அமர்ந்து, அனைவரையும் உட்காரச் சொல்கிறார். ''ம்... என்ன கேட்டீங்க! அன்பே சிவம் பத்தி என் பாணியில விளக்கணுமா? அன்பைச் சொல்ல, என் பாணி என்ன, உங்கள் பாணி என்ன? அன்புதான் சிவம்; சிவம்தான் அன்பு!  

'அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பு சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பு சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே!
’ என்பது சத்திய வாக்கு.

காசிக்குப் போனோம்; கங்கையில் குளித்தோம்; பாவங்களைத் தொலைத்தோம்; சொந்த ஊருக்குத் திரும்பிய பின், பக்கத்து வீட்டுக் காரனைப் பார்த்து, 'இவன் இன்னமும் நன்றாகவா இருக்கிறான்’ என்று நினைத்தால், நம் இதயத்தில் உண்மையான இறைத் தேடல் இல்லை என்றுதான் அர்த்தம். பிறர் துன்பம் கண்டு சிந்துகின்ற விழிநீரும், பிறர் துயரில் வழியும் கண்ணீரைத் துடைக்கும் விரல்களும் புனிதமானவை.

அன்பே சிவம்; சிவமே அன்பு!''

கல்லூரி மாணவி விஜயலட்சுமி, ''சுவாமி, செட்டிநாட்டுப் பகுதியில் உள்ளது குன்றக்குடி ஆதீன மடம். ஆதீனத்தின் வளர்ச்சியில், செட்டி நாட்டு மக்களின் பங்கு என்ன சுவாமி?'' என்று கேள்வி எழுப்பினார்.

''பக்தி, தான- தருமம், அறப்பணிகள் என சகலத்திலும் செட்டி மக்கள், எப்பவுமே கெட்டி மக்கள்தான். எதிலும் உறுதியாக இருப்பார்கள். 'செட்டிக் கப்பலுக்கு செந்தூரன் துணை’ என்று ஒரு சொலவடை, இந்தப் பக்கத்தில் பிரபலம். ஒருகாலத்தில், குன்றக்குடியை மையமாகக் கொண்டுதான், செட்டிநாட்டு நகரத்தின் ஊர்கள் அமைந்திருக்கின்றன. அவரவருக்கென்று கோயில்கள் எனப் பிரிந்து இருந்தாலும், குன்றக்குடி சண்முகநாதர்தான் செட்டிநாட்டு மக்களுக்கு இஷ்ட தெய்வம், கண்கண்ட தெய்வம், குலதெய்வம் எல்லாமே! முருகக் கடவுளுக்கும் சிவனாருக்கும் அள்ளி அள்ளித் தந்திருக்கிறார்கள் செட்டி மக்கள்.  

இன்றைக்குப் பழநிக்கு மட்டுமின்றி, நிறைய ஊர்களுக்கு இங்கிருந்து பாதயாத்திரை செல்கிறார்கள் ஜனங்கள். இவற்றுக்கு அஸ்திவாரமிட்டதே செட்டிநாட்டு மக்கள்தான்'' என்று அடிகளார் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, சுமார் 20-க்கும் மேற்பட்ட அன்பர்கள் தபதபவென உள்ளே வந்தார்கள். 'வணக்கம் சாமி, நமஸ்காரம் சாமி, நமசிவாயம் சாமி’ என்றெல்லாம் சொல்லி, தடதடவென விழுந்து நமஸ்கரித்தார்கள்.

''எல்லாரும் எந்த ஊரு?'' என்றார் சுவாமிகள். ''கடலூர்லேருந்து வந்திருக்கோம், சாமி'' என்றார்கள். செய்யும் வேலை, அந்த நேரம் போக மீதமுள்ள நேரங்களில் உழவாரப் பணி, பிரதோஷ பூஜை என்று தாங்கள் செய்வதையெல்லாம் விவரமாகச் சொன்னார்கள்.

''மன்னிக்கணும். அவ்ளோ தொலைவிலேருந்து வந்திருக்காங்க. ஒரு ரெண்டு நிமிஷம் அவங் களோடு பேசி, அனுப்பிட்டு வந்துடறேனே!'' என்று வாசகர்களிடம் அனுமதி கேட்டுக்கொண்டு, அவர்களிடம் பேசினார் அடிகளார். ஏதேதோ விவரங்கள் கேட்டார். சொன்னார்கள். எல்லாருக் கும் பையில் இருந்து எடுத்து, விபூதிப் பிரசாதம் வழங்கி, ஆசீர்வதித்தார். அனைவரும் சுவாமியுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். பின்பு, மகிழ்ச்சியும் உற்சாகமுமாக விடைபெற்றுக் கிளம்பிச் சென்றார்கள்.

‘ஆத்திகம் ஜெயித்ததா?!’

நம் வாசகர்களிடம் சுவாமிகள், ''இப்படிப்பட்ட மனிதர்கள் கிடைக்கறதும், அவங்களைப் பார்க்கறதும் ரொம்ப அபூர்வம்! ஒரு பக்கம், வேலை; இன்னொரு பக்கம் இறைப்பணின்னு இவங்க ஆத்மார்த்தமா ஈடுபடுறதைப் பார்க்கவே நிறைவா இருக்கு. பார்த்தீங்களா... அங்கேயும் இளைஞர்கள்தான் அதிகமா இருக்காங்க'' என்று சொல்லிவிட்டு, ஒரு குழந்தையைப்போல வெள்ளந்தியாகக் குலுங்கிச் சிரித்தார் அடிகளார்.

''சுவாமி... நாத்திகமும் நாத்திகவாத கோஷங்களும் தோற்றுவிட்டன. அப்படியெனில், ஆத்திகம் ஜெயித்துவிட்டதாகச் சொல்லலாமா?'' என்று வாசகர் கணேசன் கேட்டார்.

''வெற்றி தோல்வி எல்லாம் ஆத்திகத்துக்கு ஏது? எவரையோ அல்லது எதையோ தோற்கடிப்பதோ, ஆக்கிரமிப்பு செய்வதோ ஆத்திகத்தின் நோக்கம் அல்ல. மனித குலத்தை நெறிப்படுத்துவதுதான் ஆன்மிகத்தின் நோக்கம். மாறாக, மனிதர்களை வெறிப்படுத்தி, அதில் சுகம் காண்கிற அரசியல் குணங்கள் எதுவும் ஆன்மிகத்தில் ஒருபோதும் இல்லை. நாத்திகமும் ஆத்திகமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டு நிற்கலாம். தர்க்கங்கள் செய்யலாம். ஆனால், இவை இரண்டின் பயணமும் தெளிவை நோக்கியதாக இருந்தால், வேற்றுமையிலும் ஒற்றுமையை இந்த நாத்திகத்திலும் ஆத்திகத்திலும் பார்க்க முடியும். மனித குல முன்னேற்றத்துக்காக நாத்திகம் ஒரு பாதையிலும், ஆத்திகம் மற்றொரு பாதையிலும் பயணிக்க வேண்டும். அப்படிப் பயணிப்பதே ஆரோக்கியமான செயல்பாடு!'' என்றார் அடிகளார்.

''சரி... அப்படியென்றால், எதுதான் உண்மையான ஆன்மிகம்?'' என்று கணேசனே மீண்டும் தன் சந்தேகத்தைக் கேட்டார்.

''நம் எல்லார் மனங்களிலும் கொஞ்சம் கொஞ்சம் மிருக குணமும் ஒட்டிக்கொண்டிருக்கிறது. அதை ஒடுக்கி ஆளுகிற திறன் மனித மனத்துக்கு இருக்க வேண்டும். உள்ளே இருக்கும் மிருக குணத்தை அடியோடு ஒழிக்க முடிந்தவன் ஞானியாவான். அப்படி இல்லையெனினும், தன்னுள் இருக்கும் மிருக உணர்வைத் தலையெடுக்க ஒட்டாமல் அழுத்தி, மனித நேயத்தை மலரச் செய்ய வேண்டும். அதுவே, மனிதனை வாழ்வாங்கு வாழச் செய்யும். இப்படியான ஆனந்தமான நிலையே, வானிலும் உயர்ந்த தெய்வ நிலைக்கு நம்மை அழைத்துச் செல்லும். இதுதான் உண்மையான ஆன்மிகம்!'' என்று விளக்கினார் குன்றக்குடி அடிகளார்.

'தலைமுறை இடைவெளி என்பது ரொம்பவே இடைவெளியுடன், திசை மாறி இருக்கிறதோ என்று தோன்றுகிறது. இந்த இடைவெளியையும் மாறுபாட்டையும் எப்படிப் பார்க்கிறீர்கள் சுவாமி?’ - இது சொக்கையனின் கேள்வி.

''தலைமுறை இடைவெளி என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும் தோன்றிக்கொண்டே இருப்பதுதான். இது ஏதோ இன்றைக்கு நேற்றைக்கு ஏற்பட்ட மாற்றம் போலவும், அதிபயங்கரமான நிகழ்வு போலவும் சித்திரிக்க வேண்டாம். பழைமை இருக்கும்போது நவீனங்கள் முளைப் பதும், புதுமை என்று வருகிற போது பழைமையும் கம்பீரம் குலையாமல் இருப்பதும் தொன்றுதொட்டு இருந்து வருவதுதான்! நீங்கள் சொல்கிற நவீனம், உடை ரீதியானதாகவும் உணவு ரீதியானதாகவும் பார்க்கப்படுகிறது. இதையே புதுமை என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அதேநேரம், நம்மைப் புதுப்பித்துக்கொள்வதற்கு, வயது ஒரு தடையே இல்லை. மேம்போக்கான விஷயங்களை மாற்றுவதைவிட, உள்மன சிந்தனைகளில் இருந்து விடுதலையும், பேரன்பும் எங்கே இருக்கிறதோ, அதையே நவீனம் என்பேன். எண்பது வயதிலும் புதுமையான உபகரணமான கணினியை இயக்குகிற கரங்களும், இளமையின் விளிம்பில் வாழ்வின் ஜீவ ஆதாரமாகத் திகழ்கிற வயலில், சேற்றில் நாற்று நடும் கரங்களும் தலைமுறை இடைவெளியைத் தகர்க்க வல்லவை! சொல்லப் போனால், இந்தத் தலைமுறை இடைவெளிக்குள் பெரியவராகவோ சிறியவராகவோ நாம்தான் இருக்கிறோம். ஆகவே, இடைவெளியைக் குறைப் பதும் இடைவெளியே இல்லாமல் செய்வதும், நம் கைகளில்தான் இருக்கிறது!'' என்று உறுதியுடன் தெரிவித்தார் அடிகளார்.

‘ஆத்திகம் ஜெயித்ததா?!’

'நல்லவனாக இருப்பது, வல்லவனாக இருப்பது... இன்றைய உலகில் எது ரொம்பவே முக்கியம், சுவாமி?’ என்று வாசகி புவனேஸ்வரி கேட்டார்.

''வல்லவராக இருப்பதும் முக்கியம்தான். ஆனால், எவர் வேண்டுமானாலும் வல்லவராக இருக்க முடியும். அதற்கு உடல் பராக்கிரமமோ, புத்திக் கூர்மையோ இருந்தால் போதுமானது. ஆனால், நல்லவராக இருப்பது என்பது சுய ஒழுக்கத்தின் மிகச் சிறந்த இலக்கணம். ஒருவர் ஒழுக்கத்துடன் இருந்தால், எவருக்கும் தீங்கு செய்யமாட்டார். மற்றவரின் நலனில் அக்கறை கொள்வார். மனித நேயமும், கருணையுடன் கூடிய பேரன்பும், தீங்கு செய்யாத மனமும்தான் இந்த உலகுக்குத் தேவை. எந்தவொரு தாயும் தன் பிள்ளை நல்லவன் என்று பேரெடுப்பதையே விரும்புவாள். எனவே, நல்லவராக இருப்பதே உயர்வானது. அது தனிப்பட்ட முறையிலும் ஒருவரை உயர்த்தும். அவர்களால் இந்தச் சமூகமும் மேம்படும். நல்லதைக் கேட்டு, நல்லதைப் பார்த்து, நல்லதையே செய்து, சிறப்புற வாழ்வோம்'' என்றார்.

''இளைஞர்களுக்கு உங்களின் அறிவுரை என்ன, சுவாமி?'' என்று சுப.பாஸ்கர் கேட்டார்.

''அதிகமாகப் பேசினால், அறிவுரை சொன் னால் இன்றைய இளைஞர்களுக்குப் பிடிக்காது. ஏனென்றால், இன்றைய இளைஞர்கள் எப்போதும் வேகத்துடன், பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். கற்றுக்கொள்வதிலும், கற்றுக்கொண்டதை வெளிப்படுத்துவதிலும், வெளிப்படுத்தியதில் வெற்றி காண்பதிலும் துடிப்பாக, ஆர்வமாக இருக்கிறார்கள். காசு- பணம், வீடு- வாசல், வசதி- வாய்ப்பு எல்லாவற்றிலும் அப்பா- பெரியப்பாக்களைவிட, அண்ணா, அக்காக்களைவிட ஒரு படி உயர்ந்த நிலையில் தான் இருக்கிறார்கள். அவர்களுக்குப் புதிதாக எந்த அறிவுரையும் சொல்லத் தேவையில்லை.

ஆனால், இன்றைய இளைஞர்களுக்கு நாலே நாலு விஷயங்களை மட்டும் நினைவூட்ட விரும்புகிறேன். அந்த நான்கு விஷயங்கள்.... உண்மை, நேர்மை, உழைப்பு, அன்பு. இந்த நான்கில் எந்த ஒன்று இல்லையென்றாலும், அங்கே வெற்றியும் சந்தோஷமும் ருசிக்காது. இந்த நான்கு விஷயங்களையும் நான்கு வேதங்களெனக் கொண்டு செயல்படுங்கள். சத்தியமான, அமைதியான வாழ்க்கையை நீங்கள் பெறுவீர்கள்! இதைவிட வேறென்ன வெற்றி வேண்டும், சொல்லுங்கள்?'' என்று, 'தம்ஸ் அப்’ சின்னம் காட்டிச் சிரிக்கிறார் குன்றக்குடி அடிகளார்.

அவரே தொடர்ந்து... ''குடும்பத் தேவைகளுக்காகத் தன் ஆசாபாசங்களையெல்லாம் துறந்து, வெளி நாட்டில் வேலைக்குச் செல்கிறார்கள், இளைஞர்கள் பலர். அதில் தவறில்லை. ஆனால், வெளிநாட்டில் வேலை பார்ப்பதையே லட்சியமாகக் கொண்டு மேலை நாடு களுக்குச் செல்கிறார்கள் பலர். ஆனால், ஒருகட்டத்தில் அவர்கள் வாழ்க்கையைத் தொலைத் தவர்களாக, நிம்மதி இழந்து தடுமாறுகிறார்கள்.

‘ஆத்திகம் ஜெயித்ததா?!’

ஆகவே, இளைஞர்களே! அந்நிய நாட்டில் எந்தப் பணியை பணத் துக்காகச் செய்கிறோமோ, அதே பணியை, நம் சொந்த மண்ணில், நமக்காகவும் நம் நாட்டுக்காகவும் செய்தால், வீடும் நலமாகும்; நாடும் வளமாகும்!'' என்று உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னார் அடிகளார்.

'அமைதி, நிம்மதி, சந்தோஷம், கருணை, மனிதநேயம், முக்கியமாக தனிமனித ஒழுக்கம்... இவற்றைக் கடைப்பிடித்து வாழ, நாங்கள் என்ன செய்யவேண்டும்?’ என்றார் வாசகி விஜயலட்சுமி.

எதிரில், சந்நிதியில் உள்ள காளத்திநாத ஸ்வாமியைப் பார்த்தார் அடிகளார். இரண்டு நிமிடம் கண்கள் மூடி, கைகளைக் கோத்துக் கொண்டார். சிறிது நேரத்துக்குப் பின், கண்கள் மூடியபடியே இருக்க... ''அமைதி, நிம்மதி, சந்தோஷம் இவையெல்லாம் கடையிலா கிடைக்கின்றன? விற்கவோ வாங்கவோ முடியாதவை அல்லவா இவை! இவை, நமக்குள்ளேயே இருக்கின்றன. நம் எண்ணங்களாலும் செயல்களாலும் நமக்குக் கிடைத்து, நம்முள்ளேயே இருப்பவை. 'நன்றும் தீதும் பிறர்தர வாரா!’ என்பது புறநானூற்றுச் சொல். மண்ணில் நெல்லை விதைத்தவன், நெல்லை அறுப்பான். நற்செயல்களை விதைப்பவன், நன்மையையே பெறு வான். சிந்தனையில், எண்ணத்தில், சொல்லில், செயலில் நல்லவற்றை விதைப்போம்; நல்லதையே அறுவடை செய்வோம்!

கருணை, மனித நேயம், ஒழுக்கம் இவை மூன்றும், அன்பு, அமைதி, நிம்மதி, சந்தோஷம் ஆகியவற்றை அடைவதற்கான பாதைக்கு நம்மை அழைத்துச் செல்லும்! வாழ்க்கைப் பயணம், இனிதாக, குருவருளும் திருவருளும் துணை நிற்கும்!'' என்று சொல்லி முடித்து, முகம் மலரச் சிரித்தபடி, அனைவரையும் பார்த்தார் குன்றக்குடி அடிகளார்.

அது, இந்த சமூகத்துக்கான ஆசீர்வாதமாகவும் வாழ்த்தாகவும் அனைவராலும் உணரப்பட்டது.

தொகுப்பு: வி.ராம்ஜி

படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ்

குருநாதருடனான உங்கள் அனுபவங்களைச் சொல்லுங்கள். அவரிடமிருந்து நீங்கள் கற்றுக்கொண்டு, கடைப்பிடித்து வரும் விஷயங்கள் என்னென்ன? எங்களைப் போன்றவர்கள் அவரிடம் இருந்து கற்க வேண்டிய விஷயங்களையும் சொல்லுங்கள்!

- முனைவர். இராம.முத்துக்குமரன், கடலூர்  

எல்லா நிலைகளிலும் என்னைப் பயிற்றுவித்தார் குருநாதர். அவருடன் அடியேன் இருந்த ஒவ்வொரு நாளும் என் வாழ்வில் கிடைத்த பெரும் பேறு. ஒரு சிறிய சம்பவம் சொல்கிறேன். நான் துறவறம் ஏற்றுச் சில நாட்களே ஆகியிருந்த நிலை. அந்தக் காலத்தில் 108 ஆம்புலன்ஸ் இல்லை. செல்போன் என்ன... போன் வசதிகூட பெரிய அளவில் கிடையாது. குறிப்பாக, குன்றக்குடி

‘ஆத்திகம் ஜெயித்ததா?!’

கிராமத்தில் எந்த நவீன வசதியும் இல்லை. அப்போது, ஊரில் ஒருவர் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார் என்றும், அவரை உடனே காரைக்குடிக்கோ மதுரைக்கோ சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் சொன்னார்கள். வேறு எந்த வாகன வசதியும் அங்கில்லை. நான் சற்றும் யோசிக்காமல், குருநாதரிடம் அனுமதி பெறாமல், உடனடியாக குரு மகா சந்நிதானத்தின் காரை அவர்களிடம் கொடுத்து, அந்த நபரை உடனடியாக அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்க்குமாறு சொல்லி அனுப்பி வைத்தேன்.

பிறகு, சுவாமிகளிடம் வந்து தயங்கித் தயங்கி விஷயத்தைச் சொன்னேன். சந்நிதானம் திட்டுவாரா, கோபித்துக் கொள்வாரா, என்ன சொல்வார், ஏது செய்வார் என்று எதுவுமே புரியாமல், குழம்பியபடி அவர் முன் நின்றேன். 'மன்னிக்க வேண்டும், சுவாமி! நேர நெருக்கடி காரணமாக, உங்களிடம் முன்அனுமதி பெறாமல் நானாகவே முடிவெடுத்து, காரை கொடுத்து அனுப்பிவிட்டேன்’ என்றேன். உடனே அவர், 'இதற்கு ஏன் இத்தனை தயக்கம்? இது அனுமதி கேட்டுச் செய்யும் செயல் அல்ல! பிறருக்கு உதவுவதற்கு எவரிடமும் அனுமதி கேட்கத் தேவையில்லை. ஆபத்தான நிலையில், துரிதமாக முடிவெடுத்து, உடனே செயல்படுவதுதான் முக்கியம்.  நீ மிகச் சரியாகவே செயல்பட்டிருக்கிறாய். உன் இடத்தில் நான் இருந்தாலும் உன்னைப் போலத்தான் செயல்பட்டிருப்பேன்’ என்று மனதாரப் பாராட்டினார். குரு மகா சந்நிதானம் எப்போதுமே அப்படித்தான்! அவரைச் சுற்றியுள்ளவர்கள் சிறிய அளவில் நல்லது செய்தாலும், அதைப் பெரிய அளவில் மனம் திறந்து பாராட்டுவார்; ஊக்குவிப்பார்.

துறவற வாழ்வில், இப்படி எத்தனையோ சம்பவங்கள் மூலமும், தமது செயல்பாடுகள் மூலமும் என்னைச் செம்மைப் படுத்தியிருக்கிறார் குருநாதர். அவரிடம் இருந்து நான் கற்றுக் கொண்டவை ஏராளம். உழைப்பே தாரக மந்திரமெனக் கொண்டு, ஓய்வின்றி உழைத்தவர் குருநாதர். வாசிப்பதையே தன் சுவாசமாக்கிக் கொண்டவர் அவர். ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்தோம், படித்தோம் என்றில்லாமல், அந்த எழுத்தும் அதில் சொல்லப்பட்டுள்ள கருத்தும் வாழ்க்கையில்

‘ஆத்திகம் ஜெயித்ததா?!’

மனிதர்களுக்கு எந்த வகையில் உதவும் என ஆராய்ந்து, அதை மக்களுக்கு எடுத்துச்சொன்ன கருணாமூர்த்தி அவர். படித்தவற்றைச் செயல்படுத்தி வாழ்ந்து காட்டி, எங்களுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்தார் அவர். அவரை அடியொற்றியே அடியேனின் பாதையும் பயணமும் தொடர்கிறது.

பிறப்பு என்பது, பிறருக்கு உதவுவதற்காகவே என வாழ்ந்தவர் அடிகளார் பெருமான். முடிந்த அளவுக்கு நீங்களும் பிறருக்காக வாழுங்கள். அவர்களின் நலனுக்காக வாழுங்கள். நீங்கள் வளமுடனும் நலமுடனும் மனோதிடத்திடனும் அமைதியுடனும் நிம்மதியாக வாழ்வீர்கள்.  

மக்கள் அனைவரும் தவறாமல் படிக்க வேண்டிய பத்துப் புத்தகங்களை எங்களுக்கு அறிமுகப்படுத்துங்களேன்?

- மா.பாண்டியன், கோவை

திருக்குறள், திருவாசகம், பெரியபுராணம், கம்ப ராமாயணம், மகாத்மா காந்தி எழுதிய சத்திய சோதனை, பாரதியார் கவிதைகள், ஆலயங்கள் சமுதாய மையங்கள், அப்பர் விருந்து, திருவாசகத் தேன் (இந்த மூன்றும் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அருளியவை), தமிழருவி மணியனின் 'ஊருக்கு நல்லது சொல்வேன்’... இந்தப் புத்தகங்களைத் தவறாமல் படியுங்கள். இவை, உங்கள் வீட்டு அலமாரியில் எப்போதும் இருக்கட்டும். எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் எடுத்துப் படியுங்கள். எப்போதெல்லாம் மனத்தில் குழப்பம் அலையடிக்கிறதோ, அப்போதெல்லாம் அவசியம் படியுங்கள். அவை உங்கள் குழப்பத்தைப் போக்கும்; உங்களை இன்னும் தெளிவாக்கும்; பக்குவப்படுத்தும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism