ல்லோருமே ஓடிக் கொண்டிருக்கிறோம்; எதை நோக்கி ஓடுகிறோம், ஏன் ஓடுகிறோம் என்பதே தெரியாமல் ஓடிக் கொண்டிருக்கிறோம்!

'இந்தச் சாமியாரிடம் போனால், இது நடக்கும், அந்த ஜோசியரிடம் போனால், அது நடக்கும்’ என்று ஒரு கூட்டம்; இந்தத் தலத்துக்குப் போனால், இன்ன நல்லது நடக்கும், அந்தத் தலத்துக்குப் போனால் அந்த நோய் தீரும் என்று ஒரு கூட்டம்...

இப்படிப் பலவிதமான கூட்டங்கள் பலவிதமான நம்பிக்கைகளோடு ஓடிக்கொண்டு இருந்தாலும், வேறுபட்ட விசித்திரமான கூட்டமும் ஒன்று உண்டு. அது...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'சித்த புருஷர்கள் இன்றும் இருக்கிறார்களாமே! அவர்கள் எங்கு இருக்கிறார்கள்?’ என்று, காடு- மலையெல்லாம் சுற்றி, அலைந்துதிரிந்து தேடிக்கொண்டிருக்கிறது. 'உலகில் எங்கு பார்த்தாலும் வறுமையும் ஏழ்மையும் தாண்டவமாடுகிறது. சித்த புருஷர்களைப் பார்த்து, அவர்களின் மூலம் ஏராளமான தங்கம் செய்யச் சொல்லி, இந்த உலகத்தை வறுமையற்றதாகச் செய்துவிடலாமே..!’ என்பது அவர்களின் எண்ணம்.

இவர்களின் மனத்தில் உள்ள உண்மையை உணர்ந்த சித்த புருஷர்களோ, இவர்களின் பார்வையிலேயே படாதவாறு மறைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட மறைந்து வாழும் சித்தர் கூட்டம் ஒன்றை, ஒருவர் பார்த்துவிட்டார்.

பாடல் சொல்லும் பாடம்!

நல்லவர்களின், பற்றற்றவர்களின் பார்வையில் மட்டுமே தங்களை வெளிப்படுத்திக்கொள்ளும் சித்தர் கூட்டம், அவர் பார்வையில் பட்டிருக்கிறது என்றால், அவர் நல்லவர், பற்றற்றவர் என்பது சொல்லாமலேயே விளங்குகிறதல்லவா?

அனைத்தும் அறிந்தவர், ஞான நூல்களில் கரை கண்டவரான அவர், சித்தர் கூட்டத்திடம் எப்படிப் பேச்சைத் துவக்குகிறார் பாருங்கள்!

''படிக்காதவர்கள்தான் மிகவும் நல்லவர்கள். எவ்வளவு படித்தும் அறிவில்லாத என் கர்மத்தை (செயலை) என்ன சொல்வேன்? என் அறிவைத்தான் என்ன சொல்வேன்?'' என்றவர் தொடர்ந்து தன் செயல்களைப் பட்டியல் இடுகிறார்.

''அனுபவசாலிகளான ஞானவான்கள் வந்தால், அவர்களிடம் 'ஞானத்தையும் நீதியையும் வைத்துக்கொண்டு வாழ முடியுமா? கர்மம் (செயல்)தான் முக்கியம். உழைக்காமல் உயிர் வாழவே முடியாதே! என்ன பேசுகிறீர்கள்?’ என்பேன். அந்த ஞானிகள் வாயடைத்துப் போய் விடுவார்கள்.

கர்மவாதி ஒருவன் வந்து, 'அப்படிச் சொல்லு! கர்மம்தான் முக்கியம்’ என்று பேசினால், அவனையும் மறுப்பேன்.

'ஏனப்பா! உழைப்பு உழைப்பு என்று எவ்வளவு நாட்கள்தான் உழைப்பாய்? அதிலிருந்து விடுபடும் ஞான வழியைத் தேட வேண்டாமா?’ என்று கேட்டு, அந்தக் கர்மவாதியின் வாயையும் அடைப்பேன்.

சம்ஸ்கிருதத்தில் பாண்டித்யம் பெற்ற ஒருவன் வந்து என்னிடம் ஏதாவது சொன்னால், 'என்னய்யா இது! இதெல்லாம் ஏற்கெனவே தமிழில் உள்ளதே! இதைப்போய் இப்போது வந்து சொல்கிறீரே!’ என்று ஒரு போடு போடுவேன். வடமொழி வல்லவர் வாய்திறப்பாரா என்ன?

அதேபோல, தமிழ் அறிஞர் யாராவது வந்து என்னிடம் பேசத் தொடங்கினால், 'சம்ஸ்கிருத வியாகரணத்தைக் (இலக்கணத்தை) கரைத்துக் குடித்தவன் நான்.

காளிதாச கவி எழுதிய உத்தர காலாமிர்தம் தெரியுமா? வேதங்களும் உபநிடதங்களும்  சம்ஸ்கிருதத்தில்தான் உள்ளன. ராமாயணம், பாரதம், ஸ்காந்தம் என்று எவ்வளவு ஞான நூல்கள்?! பகவத் கீதை ஒன்று போதுமே! சம்ஸ்கிருதத்துக்கு முன்னால நிக்க முடியுமா?’ என்று அடுக்குவேன். தமிழறிஞர் தலைகுனிந்து போவார்.

இப்படியாக அனைவரையும் பயப்படுத்தி விரட்டுவதற்குத்தான் நான் கற்ற கல்வியும் என் வித்தைகளும் பயன்பட்டனவே தவிர, முக்திக்கான வழி தெரியவில்லை. என் படிப்பும் வித்தைகளும் எனக்கு முக்தியைத் தருமா?'' என்று கேட்கிறார், அந்த ஞானவான்.

யார் என்கிறீர்களா? தாயுமானவ ஸ்வாமிகள்தான்! அவர்தான் இவ்வாறு கேட்கிறார் சித்த புருஷர்களிடம்.

பாடல் சொல்லும் பாடம்!

காரணம்? வேதங்கள், உபநிடதங்கள், சாஸ்திர நூல்கள் என அனைத்தும் அறிந்தவர்கள் சித்த புருஷர்கள்; சமரச நிலைபெற்ற நல்லவர்கள்; தங்களை உணர்ந்தவர்கள். முக்தி நிலை அடையும் வழியை அனைவருக்கும் உபதேசிப்பவர்கள். அதனால்தான், அனுபவசாலிகளான அந்த சித்த புருஷர்களிடம் சென்று, தனக்கும் நல்வழி காட்டுமாறு வேண்டுகிறார் தாயுமானவர் - நம் சார்பாக!

நாம் கற்ற கல்வியும் அறிந்த வித்தைகளும். அடுத்தவர்களிடம் குறை கண்டுபிடித்துக் குற்றம் சொல்வதற்குப் பயன்படக்கூடாது; அமைதி, நிம்மதி முதலானவற்றை அடைய முயல வேண்டும்.

அதற்கான வழியை, அனுபவசாலிகளிடமிருந்து அறிந்துகொள்ள வேண்டும் என்று

தன்னுடைய பாடலின் மூலம் அறிவுறுத்துகிறார்,

தாயுமான ஸ்வாமிகள்.

இதோ அவரது பாடல்...

கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள்
கற்றும் அறிவிலாத என்
கர்மத்தை என் சொல்கேன்? மதியை என் சொல்லுகேன்?
கைவல்ய ஞானநீதி
நல்லோர் உரைக்கிலோ கர்ம முக்கியமென்று
நாட்டுவேன் கர்மம் ஒருவன்
நாட்டினாலோ பழைய ஞானம் முக்கியம் என்று
நவிலுவேன் வடமொழியிலே
வல்லான் ஒருத்தன் வரவும் த்ராவிடத்திலே
வந்ததா விவகரிப்பேன்
வல்ல தமிழ் அறிஞர் வரின் அங்ஙனே வடமொழியின்

வசனங்கள் சிறிது புகல்வேன்
வெல்லாமல் எவரையும் மருட்டி விட வகைவந்த
வித்தையென் முத்தி தருமோ?
வேதாந்த சித்தாந்த சமரச நன்னிலை பெற்ற
வித்தகச் சித்தர் கணமே!

மிக அற்புதமான பாடல்தான் இல்லையா?!

- இன்னும் படிப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism