அருட்களஞ்சியம்
ஸ்ரீராம... சீதாராம...
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான மகான் ஸ்ரீதியாகையர், காவிய நாயகனான ஸ்ரீராமனைக் குறித்துத் துதித்த கிருதிகள் பலப் பல. 'மா ஜானகி செட்ட பட்டக’ என்ற கிருதியில் நம்மை ஜனக மகாராஜனாகவும், ஜானகியைத் தமது அருமைப் பெண்ணாகவும் வைத்துக்கொண்டு பெருமைப்படுகிறார்.
'தாமரைக் கண்ணனான ஹே ராமனே, கேள்... உனக்கு ராவண வதத்தினால் உண்டான கீர்த்தி உண்மையில் உன்னால் அடையப் பெற்றதல்ல. என் மகள் ஜானகியை கைப்பிடித்ததாலேயே கிடைத்தது. கற்புக் கனலாகிய அவளை நீ மனைவியாக அடைந்ததால், உன்னை மகாராஜன் என்றும், சக்ரவர்த்தித் திருமகன் என்றும், அவதார புருஷன் என்றும் உலகம் புகழ்கிறது. இத்தனைக்கும் காரணம் என் பெண் ஜானகி. இதை நீ தெரிந்து கொள்வாயாக!’ என்று ராமனுக்கு உணர்த்துகிறார்.

இந்தக் கிருதியைப் பாடும்போது, பாடுபவருக்கு மனதுள் ஓர் உற்சாகமும், பெருமையும் பொங்கும். பாட்டின் பல்லவி அத்தனை அழகுடன் காம்பீர்யத்துடன் அமைந்திருக்கிறது. ஒரு தந்தை தன் அருமைப் புதல்வியை தக்க இடத்தில் மணம் செய்து கொடுத்த பிறகு, மாப்பிள்ளைக்கு உயர்வு, புகழ் இவையெல்லாம் வந்து சேர்ந்தால், ''எல்லாம் என் பெண் கைப்பிடித்த முகூர்த்தம். பானை பிடித்தவள் பாக்கியசாலி'' என்று பெருமைகொள்வது இயல்பு. அப்படியொரு ஸ்தானத்தில் தியாகையர் இருந்துகொண்டு, தெய்வப் பிறவியான ஜனகபுத்திரியின் பெருமையைப் பாடுகிறார்.
மகான் ஸ்ரீதியாகையரின் இந்த மனமகிழ்ச்சியே இங்கு படமாகத் திகழ்கிறது.
ஓவியம்: மாயா
(1967-ம் ஆண்டு விகடன் தீபாவளி மலரில் இருந்து...)
ஆதித்யர்கள்!
உலகமெங்கும் எல்லோராலும் இயற்கைத் தெய்வமாக வழிபடப் பெறும் சூரிய பகவான், ஞான மலர்கள் பூத்த புண்ணிய பரத பூமியில் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இறைவனே வகுத்துக் கொடுத்த வேதங்களிலும் போற்றப் பெறுகிறான் என்றால் வியப்பில்லை. ஒளி தேவனுக்கு ஸ்வர்ணன், சரண்யு, உஷஸ் என்ற திவ்விய நாமங்களைச் சூட்டுகிறது ரிக்வேதம்.
வேதங்களில் சூரிய பகவானின் வரலாறு, வடிவ அழகு, மங்கல குணங்கள் ஆகியவை கூறப்பட்டுள்ளன. தைத்ரீயத்தில் காசியப முனிவருக்கும் அதிதி என்பாளுக்கும் எட்டுப் புதல்வர்கள் பிறந்தார்கள் என்றும், அவர்களுள் முதல் எழுவர்களும் வானத்தில் ஒளி வீசிப் பிரகாசிக்கின்றனர் என்றும், எட்டாவது புதல்வனே மண்ணுயிர்களை வாழ வைக்கும் சூரியன் என்றும் சொல்லியிருக் கிறது.
வேதங்களில் சூரிய பகவானின் அம்சமாகச் சில தேவர்கள் குறிப்பிடப் பெறுகிறார்கள்: சவிதிர், பூஷா, பகன், விவஸ்வான், மித்ரா, அர்யமா, விஷ்ணு என்ற நாமங்களைக் கொண்ட அத்தேவர்கள் ஆதித்யர்கள் எனப்படுகின்றனர்.
சூரியனின் கிரணங்களிலும் ஏழு கிரணங்கள் முக்கியமாகக் குறிப்பிடப் பெறுகின்றன. அவை ஸுஷ§ம்னா, ஹரிகேச, விச்வகர்மா, விச்வ வ்யாச, ஸம்யத்வஸு, அர்வாக்வஸு, ஸ்வராட்: என்னும் வேதப் பிரசித்தமான நாமங்களைக் கொண்டவை.
சூரியன், வருஷத்தின் பன்னிரண்டு மாதங்களிலும் பன்னிரண்டு ஆதித்யர்கள் அம்சத்தில் உலகங்களுக்கெல்லாம் ஒளி கொடுத்து அருள்பாலிக்கிறார். சூரியனின் இந்த பன்னிரண்டு ஆதித்யர்கள் விவஸ்வான், அர்யமா, பூஷா, த்வஷ்டா, ஸவிதா, பகன், தாதா, விதாதா, வருணன், சக்கரன், உருக்கிரமன், சூரியன் எனப்படுவர்.

'சூரியபகவான் ஒளியில் மிதக்கும் அன்னம், பெரு வானத்தில் அமர்ந்த தலைவன், யாக முனிவன், மெய்வடிவினன், மாந்தரிடையே வாழ்பவன், அகலமான வானில் உலவுவோன், புனலன், அனலன், மெய்யன், வெற்ப, அறவோன்’ என்று பலவாறு அருணனைப் போற்றிப் புகழ்ப்பாடுகிறது ரிக் வேதம்.
மேலும் சூரிய தேவனின் உதய யாத்திரையைப் பலமுறை வருணிக்கிறது ரிக்வேதம். 'அசுவினிகளே! இருளின் முடிவைக் கண்டுவிட்டோம். தேவயானம் தெரிகிறது’, 'அசுவினி தேவதைகள், புதைந்திருந்த தங்கத்தைப் போலச் சூரியனை வெளிப்படுத்தினர்’ என்ற துதிகள் அருணோதய அழகைக் கூறுகின்றன.
(1967-ம் ஆண்டு விகடன் தீபாவளி மலரில் இருந்து...)
சௌரவ மண்டலம்
சூரிய பகவான் உறையும் இடம் சௌரவ மண்டலம் எனப்படும். இந்த மண்டலத்தில் பதினாயிரம் யோஜனை நீளமும் அகலமும் உள்ளதும் ஒரு சக்கரமும் ஐந்து ஆரங்களும் ஆறு வட்டங்களும் மூன்று மேகலையும் ஒரு குடமும் ஏழு குதிரைகளும் உள்ளதுமான ரத்டத்தில் அமர்ந்து உலகுக்கெல்லாம் ஒளியைப் பொழிகிறான் சூரியன். காயத்ரி, உஷ்ணிக், அனுஷ்டுப், ப்ருஹதீ, பங்தீ, த்ரிஷ்டூப், ஜகதீ என்ற ஏழு சந்தஸுக்களும் சூரியதேவனின் ரதத்துக்கு ஏழு குதிரைகளாகப் பணிபுரிகின்றன.

கங்கையை தலையில் மறைத்து வைத்துக்கொண்டிருக்கும் நதிப் பிரியனான சிவபிரான், கண்களை மகிழ்விக்கும் பிரவாகத்தோடு கூடினவளும், அழகிய தோட்டங்களை மாலையாக அணிந்தவளும், பிரியமான குணங்கள் நிறைந்தவளுமான காவேரியையும் காதல் கொள்வானோ என்று சந்தேகம் உண்டாகி, பார்வதி தன் பிறப்பிடமாகிய இமயமலையை விட்டு திருச்சிராப்பள்ளி மலை மேல் எப்போதும் நின்றுகொண்டிருக்கும் தன் கணவனிடம் 'காவேரி பல்லவராஜன் மனைவி (தயிதா)’ என்று கூறுகிறாள்.
சிவபிரான் குணத்தையும், பல்லவ ராஜன் மகிமையையும், கற்புள்ள ஸ்திரீகளுக்கு கணவன் மேல் ஏற்படக்கூடிய சந்தேகத்தையும் காவேரியின் அழகையும் எடுத்துக்காட்டும் வண்ணம், திருச்சிராப்பள்ளி குன்றின் மேல் உள்ள கங்காதரேஸ்வரர் கோயில் தூண் ஒன்றில் கல்வெட்டாகக் காட்சியளிக்கும் ஒரு வடமொழி ஸ்லோகத்தின் பொருளும் சித்திரமுமே இப்பக்கத்தில் பிரசுரமாகியுள்ளன.
-எம்.கே.ஆர்-
(1963 விகடன் தீபாவளி மலரில் இருந்து...)