Published:Updated:

கேள்வி - பதில்

புராணங்கள் தருவது கதையா? கருத்தா? சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி - பதில்

புராணங்கள் தருவது கதையா? கருத்தா? சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:

? புராணச் சம்பவங்களில் சில நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. வேறு சில சம்பவங்களைப் படிக்கும்போது, மிகைப்படுத்தப்பட்டவையாகத் தோன்றுகின்றன. நண்பர்கள் சிலர், ''அவை வெறும் கதைகளே! உண்மையல்ல! கதைகளைக் கதைகளாக எடுத்துக்கொண்டால் பிரச்னையே இல்லை'' என்கிறார்கள். புராணக் கதைகள் வெறும் கதைகள்தானா? அவற்றை எப்படி எடுத்துக்கொள்வது? உங்களின் மேலான விளக்கம் தேவை!

முதலில், உதாரணமாக சில புராணச் சம்பவங்களைப் பார்ப் போம். அவற்றைக் கொண்டு உங்களுக்குத் தேவையான விளக்கம் குறித்து ஆராய்வோம்.

1. தர்ப்பையில் சிதறி விழுந்த அமிர்தத்தைப் பாம்புகள் நக்கின. தர்ப்பையின் கூர்மையால் பாம்புகளின் நாக்கு இரண்டாகப் பிளந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

2. மகாபாரதத்தைத் தடையின்றி எழுதுவதற்காக, தனது தந்தத்தை ஒடித்துப் பயன்படுத்திய கணபதி, ஏகதந்தர் ஆனார்.

3. அமிர்தம் பருக நினைத்த அசுரன், மோஹினியின் கரண்டியால் அடிபட்டு, இரு துண்டுகளாகி ராகு- கேதுக்களாக மாறினான்.

4. தனது மனைவிகளிடம் பாரபட்சம் காட்டிய சந்திரன், அந்தப் பெண்களின் தகப்பனான பிரஜாபதியின் சாபத்தால் பிணியில் அகப்பட்டு,

வளர்ந்தும் தேய்ந்தும் தென்படுகிறான்.

5. பொய் சொன்ன பிரம்மனின் ஒரு தலையைக் கிள்ளி எறிந்தார் பரமேஸ்வரன். நான்முகன் மூன்றுமுகன் ஆனான்.

கேள்வி - பதில்

6. சீதையைத் துன்புறுத்திய காகாசுரன், ராமர் அனுப்பிய 'புல்’ அஸ்திரத்தின் தாக்குதலில், ஒரு கண்ணை இழந்தான்.

7. சூரியனைப் பிடிக்க வந்த அனுமனை, இந்திரனின் வஜ்ராயுதம் தாக்கியது. அதன் தாக்கத்தில் ஒரு கன்னமும், அவன் அடிபட்டுக் கீழே விழுந்தபோது பூமியின் தாக்கத்தால் மறு கன்னமும் ஒட்டிப்போய், குரங்கு முகம் தோன்றியது அனுமனுக்கு.

8. அகல்யையை சீண்ட வந்த இந்திரனுக்கு கௌதமரின் சாபத்தால் உடல் முழுக்கப் பெண்குறிகள் தென்பட்டன. மற்றவர்களுக்கு அவை கண்கள் போன்று காணப்பட்டதால், ஸஹஸ்ர நயனன் (ஆயிரம் கண்கள் உடையவன்) என்று பெயர் பெற்றான் இந்திரன்.

9. தட்ச யாகத்தில் பங்குபெற்ற சூரியனின் கன்னத்தில் விழுந்த அடி, அவனது அத்தனைப் பற்களையும் உதிர வைத்தது. பற்களை இழந்த சூரியன் தந்தஹீனன் என்ற பெயர் பெற்று, ஊனமுற்றவன் ஆனான்.

10. அன்னை ஒரு பாலகனைப் படைத்து, தனது அறைக்குக் காவலாளியாக நியமித்தாள். அங்கு வந்த பரமேஸ்வரனுக்கு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்ட வேளையில், பாலகனின் சிரம் துண்டிக்கப்பட்டது.  அன்னையின் பரிந்துரையின்பேரில், யானை முகத்தை இணைத்து உயர்ப்பித்தார். அவனை 'யானை முகன்’ என்கிறோம். அவரே விநாயகர்.

இனி, விளக்கங்களை ஆராய்வோம்!

முதல் கோணம்...

1. அமுதத்தைப் பருகும் வேளையில் பாம்புகளின் நாக்கு தர்ப்பையின் கூரான பகுதியைச் சந்தித்து இரண்டுபட்டது எனும் விளக்கம், தர்ப்பையின் பெருமையைச் சொல்ல வந்தது. ஆரம்பத்தில் ஒன்றாக இருந்த நாக்கு, பிற்பாடு இரண்டாக மாறியது என்ற தகவலை விளக்க வரவில்லை.

2. தந்தம் ஒடித்த கதை, எடுத்த காரியத்தில் இடையூறு முளைத்த வேளையில், சந்தர்ப்பத்துக்கு ஏற்ப சாமர்த்திய மாகச் செயல்படும் திறனைப் புகழ வந்தது. தந்தம் ஒடிந்த விதத்தைச் சொல்லவரவில்லை.

3. ராகு- கேது கதையில்... சட்டத்தை மதிக்காமல் செயல்பட்டவனுக்கு

உகந்த தண்டனை அளிக்கப்பட்டது. நேரில் பார்த்து அசுரனின் குற்றம் தெள்ளத்தெளிவான நிலையில், விசாரணையின்றி தண்டனை செயல்பட்டது என்பது அதன் பொருள். இங்கே ராகு- கேதுக்களின் உதயத்தைச் சொல்லவரவில்லை.

4. பிரம்மனின் விஷயம்.. பொய் சொன்ன முகம் வேதத்தை உச்சரிக்கும் தகுதியை இழந்துவிட்டது. ஆகவே, அது தேவையற்றது என்பதை விளக்க முற்பட்டது. நான்கு முகம் மூன்று முகமானதை விளக்கவரவில்லை.

5. வாக்குறுதியை மீறிச் செயல்படுபவன் தண்டிக்கப்பட வேண்டும்; அதில் மென்மையான அணுகுமுறை கூடாது என்பதை, சந்திரனின் கதை விளக்கும். அது, வளர்பிறை- தேய்பிறைக்குக் காரணம் சொல்ல வரவில்லை.

6. ஸ்ரீராமன் காகாசுரனைத் தண்டித்த சம்பவம், வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பதை வலியுறுத்த வந்தது; காகத்தின் கண் இழக்கப் பட்டதை உணர்த்த வரவில்லை.

7. உயிரோடும் உடலோடும் தேவலோகம் செல்லும் நடைமுறை இயற்கைக்கு மாறானது; சாதாரண மனிதனில், இயல்புக்கு மாறான பெருமையை மிகைப்படுத்தி கூறக்கூடாது என்பதை விளக்க வந்தது அனுமன் குறித்த கதை. அது, வஜ்ராயுதத் தாக்குதலால் அனுமன் உருமாறினான் என்பதை விளக்க வரவில்லை.

8. பிறர் மனைவியைச் சீண்டியவனுக்கு என்றும்

அழியாத அடையாளத்தை (பெண்குறி) அதாவது தண்டனையை விளக்க வந்தது, இந்திரனின் கதை. அவனுக்கு 1000 கண்கள் எப்படி வந்தது என்பதை விளக்குவது அதன் நோக்கமல்ல!

9. தவறான செயலுக்குத் துணை போனால், துணை போனவனுக்கும் தண்டனை உண்டு என்பதால், சூரியனுக்கு அடி விழுந்தது.அவனுக்குப் பற்கள் இல்லை என்பதை விளக்குவது அந்தப் புராணக் கதையின் நோக்கமல்ல!

10. அன்னையும் ஈசனும், நினைத்ததைச் செயல் வடிவம் பெறச் செய்பவர்கள். இயற்கையின் சட்டதிட்டம் அவர்களுக்கு இடையூறு அல்ல என்பதை விநாயகரின் கதை விளக்குமே ஒழிய, மனித முகம் அறுபட்ட நிலையில் யானை முகம் இணைக்கப்பட்டது என்பதற்கு அது முக்கியத்துவம் தராது.

? எனில், புராணங்களில் கதைகளை விட கருத்துக்கே முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்கிறீர்களா?

ஆமாம்! புராண விளக்கங்கள் அத்தனையும் கருத்துக்கு முன்னுரிமை அளிக்குமே தவிர, சொல்லுக்கு அல்ல என்பதை தர்மசாஸ்திரம் விளக்கும். 'வேதம் சொல்லுக்கு முன்னுரிமை; புராணம் கருத்துக்கு முன்னுரிமை’ என்பார் வித்யானாதன் (யச்சாத்தப்ரவணாத் புராண வசனாத் இஷ்டம் சுஹ்ரத்ஸம்மிதாத). எஜமானனின் கட்டளை போன்றது வேதம். நண்பனின் பரிந்துரை போன்றது புராணம். பரிந்துரையானது கருத்துக்கு முதலிடம் அளிக்கும்.

'அவள் வீட்டுக்குப் போய்ச் சாப்பிடுவதைவிட, விஷத்தைச் சாப்பிடலாம்’, 'அத்தனை வசவுகளை யும் கேட்டுக்கொண்டு மரம் மாதிரி நிற்பதைவிட, நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகலாம்’... இந்த வரிகள் எல்லாம் விஷம் அருந்தச் சொல்லவில்லை; நாக்கைப் பிடுங்கிச் சாகவும் சொல்லவில்லை என்பதை அனைவரும் அறிவார்கள். அதுபோல், கருத்தை விளக்க வரும் புராணங்களின் அணுகுமுறை தெரிந்திருக்க வேண்டும்; தகவலை ஆராய்ந்து அறிய வேண்டும்.

புராணங்கள் தத்துவ விளக்கத்தை அளிக்க வந்தவை; கதை சொல்ல வரவில்லை. கதை அம்சத்தை மட்டும் ஏற்றுக்கொண்டு தத்துவ விளக்கத்தை விலக்கியதால், உண்மையை உணர்த்த முற்பட்டும், அவற்றின் பெருமையைத் தெரிந்து கொள்ளாமல் அறியாமையை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள், பாமரர்கள்.

இரண்டாவது கோணம்...

புராணத்துக்குப் புது விளக்கம் அளிக்க முற்படாதீர்கள். அத்தனை பேரும் கதை அம்சத்தை ஏற்று மகிழ்ந்தவர்கள். முனிவர்களது விளக்கங்களில் சிலதை ஏற்று, சிலதை விலக்குவதற் கான சான்று இல்லை. காலம் காலமாக ஏற்றுக் கொண்ட விஷயங்களைக் களையெடுப்பது போல் சீர்திருத்தம் செய்வது சரியல்ல!

பாம்பின் நாக்கு பிளவுபட்டது குறித்தே புராணம் அறிமுகம் செய்கிறது; இன்றைக்கும் நாகங்கள் பிளவுபட்ட நாக்குடன்தான் திகழ்கின்றன. கணபதி ஏகதந்தனாகவே காட்சி தருகிறார், இரண்டாகத் துண்டிக்கப்பட்டாலும், அமிர்தம் பருகியதால் உயிர் பிரியாமல், ராகு-கேது வடிவில் நவகிரகங்களில் இணைந்து பெருமை பெற்றிருக்கிறார்கள். மனைவியரில் ஒருத்தியுடன் மட்டும் அடிக்கடி உடலால் இணைந்து, அதனால் க்ஷயரோகம் ஏற்பட்டு சந்திரன் தேய்ந்து வளர்ந்து துன்புறுவதையும் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

? ஆக, புராணங்கள் கதைகள் அல்ல; நிகழ்வுகள் என்கிறீர்களா?

ம். அதுதான் உண்மையும்கூட!

பிரம்மன் கதையை எடுத்துக்கொள்ளுங்கள். நான்முகன் எப்படி மும்முகன் ஆனான் என்பதை விளக்குவதே கதையின் நோக்கம். தற்போதும் மூன்று முகத்தோடு அவரை அடையாளம் காட்டுவது உண்டு. காகாசுரனுக்கு அளிக்கப்பட்ட தண்டனை (ஒரு கண் இழப்பு) இன்றும் அத்தனை காகங்களிலும் தென்படுகிறது. காகத்துக்கு இருபுறமும் கண் இருக்கும் இடத்தில் துவாரம் இருக்கும்; ஆனால், விழிக்கோளம் ஒன்றுதான்!

வஜ்ராயுதத்தின் தாக்கத்தில் ஒரு கன்னமும், பூமியில் வீழ்ந்ததும் அதன் தாக்கத்தில் மறுகன்னமும் பாதிப்படைவது பொருத்தமாகும். ஒட்டிய இரு கன்னங்கள் குரங்கு வடிவம் பெற்றதைப் பொருத்தமாக விளக்குகிறது புராணம். இந்திரனின் சீண்டலால் விளைந்த சாபம், அவன் உடல் முழுவதும் பெண்குறிகளைத் தோற்றுவித்தன; மற்றவர்களுக்கு அவை கண் போன்று தெரிந்ததால், ஆயிரம் கண் உடையவன்

ஆனான் இந்திரன் என்பதைச் சொல்ல அந்த விளக்கம் தேவைப்படுகிறது. இரண்டாவது முறை முளைத்த பற்கள் உதிர்ந்தால் மீண்டும் முளைக்காது. ஆகையால், அவனுக்குப் படைக்கும் உணவு கூழாக மாறியிருக்க வேண்டும். கூழாகப் படைக்கும்போது, விழுங்கினாலே போதும் என்ற தகவலை சூரியனின் கதை மூலம் அளிப்பது தகும்.

யானை முகமும், மனித உடலுமாக ஓர் உருவத்தைப் பார்த்தது இல்லை. ஆக, எப்படி யானை முகம் வந்தது என்பதை விளக்கும் கதை பொருத்தமானதே! நாமும் யானை முகத்துக்கு உகந்த வகையில் கரும்பும் அருகம்புல்லும் விளாம்பழமும் தழையும்தான் சமர்ப்பிக்கிறோம். பிள்ளையாரும் துதிக்கையை வைத்து நம்மைத் தூக்கிவிடுகிறார்.

கேள்வி - பதில்

? நிகழ்வுகளைத் தகவல்களாகப் பதிந்து வைக்காமல், விரிவான கதைகளாக விவரித்ததன் காரணம் என்ன?

தை வடிவில் விளக்கம் அளிப்பது புராணத்தின் தனிச் சிறப்பம்சம். விளக்க இயலாத தத்துவங்களை பாமரர்களும் மனத்தில் வாங்கிக்கொள்ளும் அளவுக்கு, அவர்களைக்

குழந்தைகள் போன்று பாவித்து, எளிய கதை வடிவில் விளக்குகிறது புராணம்.

குழந்தைகளுக்குக் கதை சொல்பவர்கள், புராணக் கதைகளைக் கையாண்டு விளக்குவர். சொற்பொழிவாளர்களும் கதையைச் சொல்லிப் புரியவைக்கிறார்கள். அணிலின் முதுகில் மூன்று வெள்ளைக் கோடுகள் இருப்பதைக் காட்டி, ஸ்ரீராமனுடைய கைகளின் தடவலால் உண்டானவை அவை என்று சான்றுரைப்பார்கள்.

வாழையிலையில் நடுக்கோடு (மையக் காம்பு) பார்த்திருப்பீர்கள்! ஸ்ரீராமன் உணவருந்தும் வேளையில், தன் பக்தனுக்கு உணவளிக்க இலையில் இடமளித்ததை வரையிட்டுக் காட்டியதாக அதற்குக் காரணம் சொல்வார்கள். அதாவது, இலையில் சமபங்கு அளவை உணர்த்துவதாகத் தென்படும் வாழையிலைக் கோட்டின் வரலாற்றைத் தெளிவு படுத்துவார்கள்!

இப்படி, பல தகவல்களுக்குச் சான்றளிக்கும் கதைப் பகுதிகளைத் துறந்து, 'கருத்துக்கே முன்னுரிமை’ என்ற வாதத்தை வைத்து, கதைகள் பொருளற்றவை என்று புது விளக்கம் அளிப்பது ஏற்கத்தக்கது அல்ல!

மூன்றாவது கோணம்...

'புராணங்கள் புளுகுமூட்டை’ என்ற பகுத்தறிவாளர்களின் அறியாமைக்கு அடிமையாக் கக்கூடிய தங்களின் சிந்தனை, நேர்வழியை விட்டு கோணல் வழியில் செல்வதை உணர்த்துகிறது. இந்த நிலை பரிதாபத்துக்கு உரியது.

ராமாயணம் 'ராமரைப் போல் அறத்தில் செயல்படு’ என்று சொல்ல வந்தது. மகாபாரதம் 'கண்ணனின் உரையை உள்வாங்கி முன்னேறு’ என்று சொல்ல வந்தது. ராமாயணத்தின் 24 ஆயிரம் செய்யுள்களும், மகாபாரதத்தின் லட்சம் செய்யுள்களும் இந்த இரு கருத்துக்களையும் நிலைநிறுத்தத் துணைபுரிகின்றன.

? கருத்துக்களை நிலைநிறுத்துவதே புராணங் களின் பணி எனில், பாம்புகளின் கதையிலும், கணபதி ஏகதந்தன் ஆன கதை மூலமும் புராணம் சொல்ல வருவது என்ன?

கருத்துக்களை மட்டுமல்ல; அற்புதமான தகவல்களையும் புராணங்கள் நம்முள் பதிய வைக்கும். பாம்பின் நாக்கு பிறப்பிலேயே இரண்டாகப் பிளந்து இருக்கும். 'இரண்டு நாக்கு களை உடையது பாம்பினம்’ என்று அமர கோசத்தில், அமர சிம்ஹன் விளக்கம் அளிப்பார் (லேலிஹானேத்விரஸனோ...). பாமரர்களின் மனம் ஏற்றுக்கொள்வதற்கு இந்தக் கதை உதவியது.

கணபதி ஏகதந்தன்தான். ஆனாலும், அவரை முழுமுதற் கடவுளாகவே பார்க்கிறோம்; யானை யாகப் பார்ப்பதில்லை. அவரது ஆற்றலை யானையின் வடிவில் காண்கிறோம். ஒற்றைத் தந்தத்தின் மூலம்... தமக்கு ஒரு கொம்பு முறிந்தா லும் பக்தர்களுக்கு முறியாத செல்வம், முறியாத அறிவு அத்தனையையும் அருளும் கருணையைப் பார்க்கிறோம்.

? புராணங்களில் கருத்துக்கே முதலிடம் தர வேண்டும் என்கிறீர்கள். ஆனால், ராகு- கேது தோற்றம் குறித்து புராணக் கதை மூலம்தானே அறிய முடிகிறது?!

ராகுவை அறிமுகம் செய்தது வேதம் (சன்னோக்ரஹா: சாந்த்ர மஸ: சமாதிக்ய: சராஹுணா). வானவியலை ஆராய்ந்த ஜோதிடம் ராகுவையும் கேதுவையும் இருண்ட இடைவெளியாகச் சுட்டிக்காட்டியது. ஆக, கணிதத் தகவல்களில் ராகு-கேது விஷயமும் ஒன்று. அவர்களை அறிமுகப்படுத்த புராணம் முற்பட வேண்டிய அவசியம் இல்லை.

சந்திரனை எடுத்துக்கொள்ளுங்கள். அது, இருண்ட கிரகம். சூரியனின் கிரணங்கள் பட்டு அவன் ஒளி பெறுகிறான். ஒவ்வொரு நாளும் சிறுசிறு அளவு பெற்றுப் படிப்படியாக ஒளி வளர்ந்து பௌர்ணமியில், 15 நாட்களில் முழு ஒளியை எட்டிவிடுகிறான். பிறகு, சூரியன் தனது கிரணத்தை ஒவ்வொரு நாளும் சிறு சிறு பங்காகத் திரும்பப் பெறுகிறான். ஆக, அமாவாசையில், 15 நாட்களில் சந்திரன் இருண்டுவிடுகிறான். இதையே வளர்பிறை, தேய்பிறை என்கிறோம். இந்த வானவியல் விளக்கத்தை பிருஹத் ஸம்ஹிதையில் விளக்குகிறார் வராஹமிஹிரர். ஆக, உலகம் உதயமான காலத்திலிருந்து சந்திரனுக்கு வளர்தலும் தேய்தலும் இருக்கும்போது, முனிவரின் சாபம் குறித்த கதை அதை விளக்கவேண்டியது இல்லை.

? நீங்கள் சொல்வது போன்று ஒருசில தகவல்கள் வேண்டுமானால் வேதத்திலும் சாஸ்திரத்திலும் சொல்லப்பட்டிருக்கலாம். பெரும்பாலான தகவல்களைப் புராணங்களில் இருந்துதானே தெரிந்துகொள்ள முடிகிறது? அப்படியிருக்க, தத்துவத்தை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள் என்பதை எப்படி ஏற்கமுடியும்?

பாமரர்கள் புரிந்துகொள்வதற்கு வசதியாக, கதைகளின் மூலம் ஏற்கெனவே இருக்கும் தத்துவமானது மாற்றுக் கோணத்தில் விளக்கப் படுகிறது. இந்த உண்மையை மறுத்து, புராணங் களே முதல் தகவலை அளித்தன என்பது தவறு.

'பொய் சொன்ன தலை கொய்யப்பட்டது’ என்று சொன்னாலும் இன்றும் பிரம்மனை நான்முகனாகவே பார்க்கிறோம். நான்கு வேதங்களையும் நான்கு முகங்களால் இன்றும் உச்சரித்துக்கொண்டு இருக்கிறார் அவர். உலகம் உய்வதற்கு நான்முகனின் உச்சரிப்பு உதவிக்கொண்டிருக்கிறது. அமரசிம்ஹன் பிரம்மனை குறிப்பிட 'நான்முகன்’ எனும் பதத்தையே பயன்படுத்துவார் (சதுர்முக:). நாமும் வழிபாடுகளில், ஹரிரண்ய கர்பர், பரமேஷ்டி, ப்ரஜாபதி, சதுர்முகன் என்றே நான்முகனை சுட்டிக்காட்டுவோம்.

கேள்வி - பதில்

முட்டையில் இருந்து வெளிவந்த காகத்துக்கு கண்கள் இருக்கும் இடத்தில் இரு ஓட்டைகள் இருக்கும். ஆனால் விழி ஒன்றுதான். பார்க்கும் வேளையில் அந்தந்த ஓட்டைக்கு விழிக்கோளம் நகர்ந்து வந்து பார்த்து மகிழும் என்கிறது சாஸ்திரம் (காகாக்ஷி கோளகள் யாயம்).

அதேபோல், அஞ்சனைக்கும் வாயுவுக்கும் பிறந்தவன் ஆஞ்சநேயன். வாயுவுக்கு உருவம் கிடையாது. அஞ்சனையின் உருவத்தில், குரங்கு வடிவாக உதித்தான் ஆஞ்சநேயன் எனும் விளக்கம் இருக்கும்போது, இந்திரனிடம் அடிபட்டு வந்தான் எனும் விளக்கம் தேவையற்றது.

அகல்யையை சீண்டியதால் ஏற்பட்ட சாபத்தால் உடல் முழுவதும் பெண்குறிகளை ஏற்றுக் கொண்டிருக்கும் இந்திரன், அவற்றைப் பார்த்துப் பார்த்து வெட்கி, துன்பத்தை நுகர்ந்து கொண்டிருக்கிறான். 'மற்றவர்களுக் குக் கண்களாகத் தென்படும்’ என்ற விஷயம், அவனது வெட்கத்துக்கு முதலுதவி அளித்தாலும், அவனு டைய மனத்தால் வெட்கத்தை முழுமையாக விடமுடியாது. ஏனெனில் அவன் பார்வையில் அவை கண்களாகத் தென்படாது. ஆகவே, ஸகஸ்ர நயனன் என்கிற விளக்கம் எடுபடாது.

தேவர்கள் நாம் படைக்கும் உணவை நம்மைப் போல் உண்ண மாட்டார்கள் அவர்கள் கண்ணால் பார்த்துத் திருப்தி அடைவர் (தேவா: த்ருஷ்டவர்த்ருப்யந்தி). ஆகவே, பற்களை இழந்ததற்காக, கூழாகத்தான் நிவேதனம் செய்ய வேண்டும் என்கிற அவசியம் இல்லை. கூழையும் அன்னத்தையும் பார்த்துத் திருப்தி கொண்டு மகிழ்பவனுக்கு, பற்களுக்கு வேலை இல்லை. அதற்காக, ஒரு கதையைச் சொல்லிப் புரியவைக்க வேண்டிய அவசியமும் இல்லை.

பாலகனின் சிரசை துண்டித்து யானை முகம் இணைந்த தகவலை சொல்ல வரவில்லை; 'எந்த முகமானாலும் உன்னை உய்யவைக்கும்’ என்று தமது படைப்பின் தகுதியை விளக்குகிறது புராணம். அணில் உதயமாகும்போதே முதுகில் மூன்று கோடுகள் இருக்கும். வாழை இலைக்கும், தோன்றும்போதே நடுக்கோடு இருக்கும். இதையெல்லாம் தனியே விளக்குவதற்கு புராணக் கதைகள் தேவைப்படாது.

எண்ணிலடங்கா உயிரினங்களின் வடிவங்கள், இயல்புகள் அத்தனையும் படைப்பிலேயே தென்படும்போது, புராண விளக்கங்கள் வாயிலாக அந்த வடிவங்களுக்குப் புதுச்சான்று அளிப்பது, அறியாமையின் பிரதிபலிப்பே!

முதல் படைப்பு நீர், பிறகு தாவர இனங்கள், அதன் பிறகும் படிப்படியாக மனிதன் வரையிலும் படைப்பு தொடர்ந்தது என்று விளக்குகின்றன புராணங்கள். ஆக, படைப்பில் தென்படும் விசித்திரங்களுக்கு, பிற்பாடு வந்த புராண விளக்கத்தைச் சான்றாக உரைப்பது, ஏற்கத்தக்கதல்ல.

புராணங்களின் கருத்தை ஏற்கும் தகுதி மக்களுக்கு ஏற்பட வேண்டும். அதன் அணுகு முறையை உணர்ந்து ஆழமாகச் செயல்பட்டால் புராண விளக்கத்தை நன்கு தெரிந்துகொள்ளலாம். கதையைத் துறந்து, கருத்தை ஏற்கும் பக்குவம் வந்துவிடும்.

தங்கள் சிந்தனைக்கு ஒரு வார்த்தை...

புதிய பகுத்தறிவாளர்கள், 'உயர்ந்த இனம், தாழ்ந்த இனம் என்ற வேறுபாடு கிடையாது; எல்லோரும் ஓரினம்’ என்று சொல்வர். 'தாழ்ந்த இனத்தில் பிறந்த விச்வாமித்திரர் காயத்ரியைக் கண்டறிந்து உயர்ந்த இனத்தவனுக்கு உபதேசம் செய்தார் (காயத்ர்யா ரிஷி: விச்வாமித்ர:). இங்கு தாழ்ந்த இனமே உயர்ந்த இனத்துக்கு உயர்வு ஊட்டியது’ என்று விளக்குவார்கள். அதாவது, 'காயத்ரியைக் கண்டறிந்தவர் விச்வாமித்திரர்’ என்ற கருத்து இன்றும் சொல்லப்படுவது உண்டு.

'நான்கு வேதங்களின் சாரம் காயத்ரியாக உருவெடுத்தது’ என்று வேதம் அறிமுகம் செய்தது. அப்படியிருக்க, விச்வாமித்திரர் உதித்த பிறகு காயத்ரி உருவானது என்றால், அதுவரை உயர்ந்த இனம் காயத்ரியைக் கையாளவில்லை என்றாகிவிடுமே! விச்வாமித்திரரின் தந்தை காதி, விச்வாமித்திரருக்கு பூணூல் போட்டு, காயத்ரியை உபதேசித்தார் என்கிறது புராணம்.

விச்வாமித்திரர்தான் காயத்ரியைக் கண்டறிந் தது என்பதை ஏற்பதாக இருந்தால், அவர் பிறக்கும் முன்பே காதிக்கு காயத்ரி தெரிந்தது எப்படி என்று கேள்வி எழும் அல்லவா?

பிள்ளை கண்டுபிடிக்க வேண்டிய காயத்ரியை தகப்பன் எப்படிச் சொன்னான்? அதற்கு விடை தேட, மற்றொரு கதையை உருவாக்க நேரிடும். ஆகையால், புராண விளக்கங்களை முதல் தகவலாகச் சித்திரிக்கும் முயற்சியானது, உள்ளதை உள்ளபடி புரியவைக்கத் தடங்கலாக மாறிவிடும்.

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஆன்மிகம் சம்பந்தமான எல்லா சந்தேகங்களுக்கும் பதில் தருகிறார் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள். கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: 'கேள்வி பதில்', சக்தி விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.