Published:Updated:

ஆலயம் தேடுவோம்...

ஸ்ரீஐயனார் கோயிலுக்கு அள்ளித் தருவோம்! ஆத்திக்குளம்-ஐயனார் கோயில்எஸ்.கண்ணன்கோபாலன்

ஆலயம் தேடுவோம்...

ஸ்ரீஐயனார் கோயிலுக்கு அள்ளித் தருவோம்! ஆத்திக்குளம்-ஐயனார் கோயில்எஸ்.கண்ணன்கோபாலன்

Published:Updated:

காவிரியின் கிளை நதியான குடமுருட்டி ஆற்றின் கரையில் அமைந்துள்ள அழகிய கிராமம் ஆத்திக்குளம். ஊரின் மேற்கு எல்லையில் பூர்ணா, புஷ்கலா சமேத ஐயனாரும், கிழக்கு எல்லையில் பிடாரி அம்மனும் காவல் தெய்வமாகத் திகழும் ஆலயம் உள்ளது. இங்கே ஐயனார் சந்நிதிக்கு எதிரில் புதர்கள் மண்டி நிசப்தமாகக் காணப்பட்டதால், அந்தப் பக்கம் செல்லவே ஊர்மக்கள் அச்சம் கொண்டனர்.

இந்த நிலையில், பல ஆண்டுகளுக்கு முன்னால் ஐயனார் கோயில் திருவிழாவின்போது, அருள் வந்த அன்பர் ஒருவர், 'ஐயனார் கோயிலுக்கு எதிரில் மண்டிக்கிடக்கும் புதர்களுக்கு இடையில், ஆனந்தவல்லி சமேத கயிலாசநாதர் என்ற பெயர் கொண்ட சிவலிங்கம் ஒன்று இருக்கிறது. ஆனந்தவல்லி அம்பிகை சிலை கிடைத்தாலும் கிடைக்கலாம்’ என்று தெரிவித்தார். அதையடுத்து, ஊர்மக்கள் ஒன்றுசேர்ந்து புதர்களை எல்லாம் களைந்து அப்புறப்படுத்தினர். அங்கே அழகிய சிவலிங்கம் மட்டுமே தென்பட்டது. அந்தச் சிவலிங்கத்தை இருந்த இடத்திலேயே பிரதிஷ்டை செய்து, மேலே கீற்றுக் கொட்டகை அமைத்தனர்.

ஆலயம் தேடுவோம்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இது நடந்து சுமார் 7 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. தற்சமயம், ஊர் மக்கள் ஒத்துழைப்புடன் திருப்பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இதற்கிடையில் ஐயனார் ஆலயத்தின் அருகில், சாலையோரம் உள்ள அரசமரத்தடியில் கோயில் கொண்டிருந்த வழித்துணை விநாயகர் திருவுருவத்தை யாரோ பெயர்த்து எடுத்துச் சென்று விட்டார்கள்.

ஆத்திக்குளத்தில் பிறந்து வளர்ந்த வரும் தற்போது புதுடில்லியில் வசிப்பவருமான நாகராஜன் என்பவர், ஆத்திக்குளம் ஊரின் தொன்மை பற்றியும், அங்கு கோயில் கொண்டிருக்கும் பூர்ணா, புஷ்கலா சமேத ஐயனாரின் அருள்திறம் பற்றியும் நம்மிடம் விரிவாக எடுத்துரைத்தார்.

''இந்தக் கிராமம், எங்கள் மூதாதையர் காலத்தில், அதாவது தாய்வழி முப்பாட்டனாருக்கு, தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னரால் தானமாக வழங்கப்பட்டது. அவர் அந்த அரசரின் முதுகில் ஏற்பட்ட ராஜபிளவையை தன் தபோ வலிமையால் மூன்றே நாட்களில் குணப்படுத்தினார். இதில், அரசர் மனம் மகிழ்ந்து, ஆற்றோரம் உள்ள இந்த கிராமத்தை, வீடு உள்பட நிலபுலன்களுடன் தானமாகக் கொடுத்தார். வேதம் மட்டுமே வாழ்க்கை எனக் கொண்டிருந்த அவர்களுக்கு, முறையாக உரிய பத்திரம் வாங்கி எழுதி, கையெழுத்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது தெரியவில்லை.

தெற்குத் தெருவில் எங்கள் வீட்டுக்கு முன்புறம் பிரதான சாலையும், அதனை ஒட்டினாற்போல் ஒரு சிறிய கட்டுக்கரை என்கிற நடை பாதையும் உண்டு. அதன் ஓரமாக, மிக அருகில் ஓடுகிறது குடமுருட்டியாறு. இது காவிரியின் கிளைநதி. என்  பெரிய பாட்டனார், அதாவது எனது அம்மாவின் பெரிய தந்தையார், இரவில் வீட்டுத் திண்ணையில்தான் படுப்பார். அப்போது நடுநிசியில், மேற்கில் உள்ள  ஐயனார் ஆலயத்திலிருந்து ஸ்ரீஐயனார் தன் வாகனமான குதிரையில் இந்தக் கட்டுக்கரையின் வழியாக, ஊர்க்காவல் நிமித்தமாகப் பயணிப்பாராம். மிக வேகமாகச் செல்லும் குதிரையின்மீது பலவித வர்ணங்கள் மட்டும் தெரியுமே தவிர, ஆள் உட்கார்ந்திருப்பது கண்ணுக்குத் தெரியாதாம். மறுபடியும், ஒரு மணி நேரத்தில் அந்தக் குதிரை திரும்பி, அதே வழியில் கோயிலுக்குச் சென்றுவிடும். இந்தக் காட்சியைப் பலமுறை, பல இரவுகள் பார்த்துள்ளதாக  என்னிடம் கூறியுள்ளார் பாட்டனார்.

ஆலயம் தேடுவோம்...

ஆலயத்தின் பக்கத்தில் செல்லும் பிரதான சாலையின் ஓரத்தில்,  அரச மரம் ஒன்று உண்டு. அதன் அடியில் சுமார் 3 அடி உயரத்தில் ஸ்ரீவழித்துணை விநாயகர் என்னும் திருநாமத்துடன், பிள்ளையார் ஒரு பீடத்தில் இருப்பார். அப்போதெல்லாம் நாங்கள் அவ்வழியே செல்லும்போது, அந்தப் பிள்ளையார் சந்நிதியில் நின்று, அவர் எதிரில் உள்ள மண்ணை எடுத்து, நெற்றியில் இட்டுக்கொண்டு செல்வோம். கிராம மக்களும் இப்படி மண்ணை விபூதி போல் இட்டுக்கொண்டு செல்வார்கள். அத்தனை வரப்பிரசாதியான பிள்ளையார் அவர். ஆனால், காலப்போக்கில் அவரை யாரோ திருடிக்கொண்டு போய்விட்டார்கள்.  

ஊருக்கே காவல் தெய்வமான ஐயனார்தான் எங்கள் குடும்பத்துக்கும் காவல் தெய்வம். அப்போது எங்கள் குடும்பத்தில் பல இடையூறுகள் ஏற்பட்டன. ஒவ்வொரு முறையும் குலதெய்வமாக இருந்த ஸ்ரீஐயனார்தான் எங்கள் குடும்பத்தைக் காத்துவந்திருக்கிறார் என்று எங்கள் முன்னோர்கள் தெரிவித்துள்ளார்கள்'' என்று நெகிழ்ச்சியுடன் பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட நாகராஜன், இன்னொரு விஷயமும் சொன்னார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு, மிகச் சிறு வயதில் இந்த ஊருக்கு விஜயம் செய்த காஞ்சி பரமாசார்ய மகா சுவாமிகள், இங்கே சுமார் 5 நாட்கள் தங்கி, பூஜை செய்தாராம். பின்னாளில், அதாவது சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் ஹைதராபாத்துக்கு பிக்ஷ£வந்தனத்துக்குச் சென்ற நாகராஜனின்  தமையனார், மகா சுவாமிகளிடம் தாம் பிறந்த ஊர் ஆத்திக்குளம் என்று சொன்னதுமே, அவர் இந்த ஊரையும், ஐயனார் கோயிலையும் நினைவுகூர்ந்து விசாரித்தாராம்.

கும்பகோணம் தாலுகாவில் உள்ளது ஆத்திக்குளம். கும்பகோணத்தில் இருந்து குடவாசல் பேருந்து தடத்தில் வண்டுவாஞ்சேரிக்கு மேற்கில் 2 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு அழகான சிறிய கிராமம் இது.  அங்கு சுமார் 50 வீடுகள் கொண்ட நான்கு வீதிகளும், மற்றும் சில சிறிய தெருக்களும் உள்ளன. ஊருக்கு மேற்கில் ஸ்ரீபூர்ணா, புஷ்கலா ஸமேத ஐயனார் ஆலயமும், கிழக்கில் பிடாரி கோயிலும் இருக்கின்றன.

ஆலயம் தேடுவோம்...

காலப்போக்கில் சிதிலமடைந்துவிட்ட பூர்ணா புஷ்கலா சமேத ஐயனார் கோயில் திருப்பணியுடன், காணாமல்போன ஸ்ரீவழித்துணை விநாயகருக்கும், ஐயனார் உத்தரவின்பேரில் புதர்களுக்கிடையில் கண்டெடுக்கப்பட்ட ஸ்ரீகயிலாசநாதருக்கும் ஆனந்தவல்லி சமேதராக திருக்கோயில் நிர்மாணம் செய்யும்பொருட்டு திருப்பணிக் கமிட்டி அமைத்து, திருப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

ஊருக்கு மட்டும் இல்லாமல் ஒவ்வொரு குடும்பத்துக்குமே காவல் தெய்வமாக, காக்கும் கடவுளாகத் திகழும் ஐயனார், அவரின் திரு அவதாரம் நிகழக் காரணமான ஸ்ரீகயிலாசநாதர், செல்லும் வழியெங்கும் தோன்றாத்துணையாய் உடன் வரும் ஸ்ரீவழித்துணை விநாயகர் ஆகியோரின் கோயில் திருப்பணிகள் சீக்கிரமே நடந்து முடிந்து, ஆலயம் புதுப்பொலிவு பெற்றிட நம்மால் ஆன உதவிகளை நாமும் செய்யலாம். அந்தக் கடவுளர்களின் அருளுக்குப் பாத்திரராகலாம்!

படங்கள்: கு.கார்முகில்வண்ணன்

எங்கே இருக்கிறது? எப்படிச் செல்வது?

கும்பகோணம்- குடவாசல் வழியில் 5 கி.மீ. தொலைவில் உள்ள  வண்டுவாஞ்சேரிக்கு பேருந்து மூலம் சென்று, அங்கிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள ஆத்திக்குளம் ஐயனார் கோயிலுக்கு ஆட்டோ மூலம் செல்லலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism